கசாப்புக் கடையில் பிராய்லர் கோழிகளைக் கொல்வது குரூரமாக இருக்கும். முதலில் அவற்றை உயிருள்ளவையாகவே கருதமாட்டார்கள். ஜடப் பொருள்தான். பண்ணையிலிருந்து கோழிகளை ஏற்றி வந்திருக்கும் வண்டியிலிருந்து ஒருவன் ஒவ்வொன்றாக எடுத்து பந்து வீசுவது போல வீச இன்னொருத்தன் இலாவகமாகப் பிடித்து கசாப்புக் கடை கூட்டுக்குள் வீசுவான். அடைத்து வைத்திருப்பார்கள். இரண்டொரு நாட்களில் அவற்றை அறுக்கும் போதும் அப்படிதான். கதுமையான கத்தியை வைத்து கழுத்தில் இரு இழுப்பு இழுப்பு. பிறகு மூலையில் வீசிவிடுவார்கள். ரத்தம் முழுமையாக வெளியேறி உயிர் அடங்கும் வரை அவை துள்ளிக் கொண்டிருக்கும்.
'வித் ஸ்கின்னா? ஸ்கின் அவுட்டா?' என்பார்கள். வித் ஸ்கின் என்றால் தீயில் வாட்டி வெட்டித் துண்டாக்கிக்தருவார்கள். ஸ்கின் அவுட் என்றால் கொதிக்கும் தண்ணீருக்குள் முக்கியெடுத்து தோலை உரித்து வெட்டித் துண்டாக்குவார்கள். பெங்களூரில் ஒரு மனிதர் தனது குழந்தையைக் கசாப்புக் கடைக்கு அழைத்து வந்திருந்தார். 'இங்க பாரு' 'அங்க பாரு' என்று கோழி கொல்லப்படுவதை அணு அணுவாக ரசிக்கச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கக் கூடும்.
'சார்..குழந்தைக்கு ஏன் காட்டுறீங்க' என்று கேட்டு விட்டேன். அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. ;இவனுக ஒரு இம்சை..நல்லவனுகளாமா' என்று அவர் மனதுக்குள் நினைத்திருக்க வேண்டும். 'இந்தக் காலத்தில் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்..தப்பில்ல' என்றார். அந்தக் குழந்தை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தது. நான் அதற்கு மேல் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
'நல்லவனாகவெல்லாம் இருக்க வேண்டியதில்லை. பொழைக்கத் தெரிஞ்சவனா இருந்தா போதும்' என்கிற மனநிலைக்கு வந்துவிட்டோம். வன்மம், குரூரம் என்பதெல்லாம் வாழ்க்கையின் அடிப்படையான அம்சங்கள் என்று நம்புகிறவர்கள் அதிகம். ஏமாற்றுதல், கொலை செய்தல் என்பதெல்லாம் சாதாரணக் காரியங்களாகியிருக்கின்றன. யோசிக்காமல் ஓடிக் கொண்டேயிருக்கும் வரை பயமில்லை. யோசிக்கத் தொடங்கினால் நடுங்கும்.
சமீபத்தில் கரூர் பக்கத்தில் ஒரு பெண்மணி தோட்டத்துக் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்திருக்கிறார். வீட்டில் தனியாக இருந்த பெண்மணி அவர். தவறுதலாக விழுந்திருக்கக் கூடும் என்று ஊர்க்காரர்கள் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்கள். பிணத்தை எடுத்து படுக்க வைக்கும் போது தலையைப் பிடித்தவரின் கைகளில் ரத்தம் பிசுபிசுக்க அவர் உள்ளூர் போலீஸ் அதிகாரிக்குத் தகவல் கொடுக்கிறார். தேவையில்லாமல் போஸ்ட்மார்ட்டம் என்றெல்லாம் போனால் உறவுக்காரர்கள் சங்கடப்படக் கூடும். அதனால் 'நான் ஒரு காவலரை மஃப்டியில் அனுப்பி வைக்கிறேன்' என்று அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. பிறகு அது கொலைதான் என்று முடிவாகிவிட்டது. கடைசியில் விசாரித்தால் ஒரு சொந்தக்காரப் பையன் ஒரு சங்கிலிக்கு வேண்டி கழுத்தை அறுத்து கிணற்றில் தள்ளியிருக்கிறான். மீறிப் போனால் பத்தாயிரம் ரூபாய் மதிப்பு இருக்குமாம்.
இப்படியான செய்திகள் இன்றைக்கு சலித்துப் போய்விட்டன. அற்பமான காரணங்களுக்காகவும், சொற்பமான பணத்துக்காகவும் கொலை செய்யப்படுவது சகஜமாகியிருக்கிறது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
நர்சரிகளில் சில சில சொற்களைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவார்கள். கோல்டன் வேர்ட்ஸ் என்பார்கள். 'ஸாரி' 'தேங்க்யூ' 'ப்ளீஸ்' மாதிரியான சில அடிப்படையான சொற்கள். சக மனிதர்களிடம் பழகும் போது அடிப்படையான நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்ற தத்துவம் இந்தச் சொற்களைச் சொல்லித் தருவதில் அடங்கி இருக்கும். நர்சரி என்றில்லை- எந்தவொரு நீதி நூலும் இதைத்தானே காலம் காலமாகச் சொல்லித் தருகின்றன? ஸாரியைத் தொலைத்துவிட்டோம். தவறே நம்முடையதாக இருந்தாலும் 'த்தா உனக்கு எதுக்குடா ஸாரி சொல்லணும்' என்றுதான் தோன்றுகிறது. ப்ளீசையும் பல இடங்களில் காணவில்லை. பேருந்தில் தள்ளி அமரச் சொன்னால் கூட ஒரு முறைப்போடுதான் சொல்கிறார்கள்.
மனிதாபிமானத்தை எல்லாம் விடுங்கள். நன்றி என்ற சொல்லும்தான் மரத்துப் போனதாகிவிட்டது.
அம்மா அப்பா இருவருமே இல்லை. பெண் எம்.ஏ., பி.எட் முடித்திவிட்டாள். ஒவ்வொரு செமஸ்டரும் தவறாமல் உதவி கேட்பாள். ஒவ்வொரு முறையும் சொல்லித்தான் கொடுத்திருக்கிறேன். 'எத்தனையோ பேர் அனுப்பின பணம்...நல்லபடியா படிச்சு இன்னும் நாலு பேருக்கு உதவிகரமா இருக்கணும்' என்று சொல்லும் போதெல்லாம் 'கண்டிப்பா சார்' என்பாள். இத்தனைக்கும் அவள் படித்தது தனியார் கல்லூரி. தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவுவதில்லை. அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை என்பதால் இந்தப் பெண்ணை விதிவிலக்காக எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் உதவினோம். கடந்த வாரம் அவளது தம்பியைச் சந்தித்தேன். அவனும் அறக்கட்டளையின் உதவியோடு படித்தவன்தான்.
'அக்கா படிச்சு முடிச்சுட்டு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சர் ஆகிட்டாங்க' என்றான்.
'சந்தோசம் தம்பி..ஒரு வார்த்தை சொல்லி இருந்தா சந்தோஷப்பட்டிருப்பேனே' என்றால் 'உங்க நெம்பர் இல்ல சார்' என்கிறான். ஒருவேளை எண் தொலைந்திருந்தாலும் கூட கண்டறிவது பெரிய காரியமில்லை. ஒரு செமஸ்டர் தவறாமல் தொடர்பு கொண்டு உதவி வாங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் சொல்லிக் காட்டக் கூடாது என்றுதான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். ஆனால் வருத்தமடையைச் செய்கிறார்கள்.
வேறு இரண்டு பெண்கள். கிராமப்புற பெண்கள். வெளிமாநிலம் சென்று பயிற்சி பெற்று வர அங்கேயொரு நிறுவனத்தில் பேசி அனுமதி வாங்கிக் கொடுத்து தங்குவதற்கான விடுதி ஏற்பாடு செய்து, போக்குவரத்து செலவு உட்பட அத்தனை செலவையும் செய்து கொடுத்திருந்தோம். இப்பொழுது இரண்டு பேரும் பெங்களூரு நிறுவனமொன்றில் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் அவர்கள் பெற்ற பயிற்சிதான் வேலை கிடைக்கக் காரணம் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் அலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கலாம் என்று மனம் நினைக்கும் அல்லவா? என்னிடம் வேண்டாம். வெளிமாநிலத்தில் அந்த இரண்டு பெண்களும் பயிற்சி பெற்ற போது தமது தங்கைகளை போல பொறுப்பெடுத்து பார்த்துக் கொண்ட அந்த நண்பரிடமாவது சொல்லியிருக்க வேண்டும். ம்ஹும். அந்தப் பெண்களுக்கு பெங்களூரில் வேலை வாங்கிக் கொடுத்தவர் சொன்ன பிறகு அவரிடம் 'என்கிட்டே சொல்லவே இல்லைங்க' என்றேன். அவர் சொல்லியிருக்கக் கூடும்.
நேற்று அழைத்து 'தப்பா நினைச்சுக்காதீங்க' என்கிறார்கள்.
'தயவு செஞ்சு அவர்கிட்ட பேசுங்க..ஒரு நன்றி சொல்லுங்க' என்றேன். சொல்வார்களா என்று தெரியவில்லை.
Confirmationக்குப் பிறகு சொல்லலாம் என்று நினைத்திருக்கலாம். தவறில்லை. ஆனால் ஒரு அழைப்புதானே? உடனடியாகச் சொல்லியிருந்தால் அவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும். இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கப் போகிறோம். நன்றியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவர்கள் மேலே வரும் போது அடிப்படையான மனிதப் பண்புகள் இருக்க வேண்டும் என விரும்புவதில் தவறில்லை. தம்மைப் போன்ற இன்னும் நான்கு பேர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்கிற வெறி அவர்களுக்குள் ஊறி இருக்க வேண்டும். 'நான் இனி ரெண்டு பசங்களை பார்த்துக்கிறேன்..அப்படி யாராச்சும் இருந்தா சொல்லுங்க' என்று கேட்க வேண்டும் என ஆசை இல்லாமல் இல்லை. அப்படியொரு உணர்வை உருவாக்கவில்லையென்றால் எங்கயோ தவறு நடக்கிறது என்று அர்த்தம்.
சொல்லக் கூடாது என யாரும் நினைப்பதில்லை. ஆனால் சொல்ல வேண்டும் என்றும் நினைப்பதில்லை. அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்தி அதில் ஓர் இன்பத்தை உணர்தல் என்கிற பழக்கமே நம்மிடமில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. இந்தத் தலைமுறையின் பெரும்பாலான மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். சத்தியமாகச் சொன்னால் எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. இப்படியானதொரு சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
Confirmationக்குப் பிறகு சொல்லலாம் என்று நினைத்திருக்கலாம். தவறில்லை. ஆனால் ஒரு அழைப்புதானே? உடனடியாகச் சொல்லியிருந்தால் அவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும். இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கப் போகிறோம். நன்றியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவர்கள் மேலே வரும் போது அடிப்படையான மனிதப் பண்புகள் இருக்க வேண்டும் என விரும்புவதில் தவறில்லை. தம்மைப் போன்ற இன்னும் நான்கு பேர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்கிற வெறி அவர்களுக்குள் ஊறி இருக்க வேண்டும். 'நான் இனி ரெண்டு பசங்களை பார்த்துக்கிறேன்..அப்படி யாராச்சும் இருந்தா சொல்லுங்க' என்று கேட்க வேண்டும் என ஆசை இல்லாமல் இல்லை. அப்படியொரு உணர்வை உருவாக்கவில்லையென்றால் எங்கயோ தவறு நடக்கிறது என்று அர்த்தம்.
சொல்லக் கூடாது என யாரும் நினைப்பதில்லை. ஆனால் சொல்ல வேண்டும் என்றும் நினைப்பதில்லை. அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்தி அதில் ஓர் இன்பத்தை உணர்தல் என்கிற பழக்கமே நம்மிடமில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. இந்தத் தலைமுறையின் பெரும்பாலான மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். சத்தியமாகச் சொன்னால் எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. இப்படியானதொரு சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம் குழந்தைகளுக்கு நாம் எதையாவது உடனடியாகச் சொல்லித் தருவதாக இருந்தால் அவை கோல்டன் வேர்ட்ஸாக இருக்கட்டும்.
வெறுமனே சுயநலம் நிறைந்த, அடிப்படையான நாகரிகம் கூட இல்லாத ஒரு பெரும் சமூகமாக உருவாகிக் கொண்டிருக்கிறோம் என்று பயமாக இருக்கிறது. புலம்புவதால் ஒரு வகையிலான நெகட்டிவிட்டிதான் பரவும். சமூகத்தின் குணநலன்கள் சார்ந்த எதிர்மறையான விஷயங்களைப் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்க்க வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால் சகலமும் நல்லபடியாக இருப்பதில்லை. கசகசப்புகள் நிறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் எதிர்கொள்வது பெரும் சிரமம். நினைத்த மாத்திரத்தில் இங்கு எந்த மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது. சினிமாவிலும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களிலும்தான் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட முடியும். நிதர்சனம் கசப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டித்தான் தொடர்ந்து இயங்க வேண்டியிருக்கிறது.
9 எதிர் சப்தங்கள்:
// அப்படியொரு உணர்வை உருவாக்கவில்லையென்றால் எங்கயோ தவறு நடக்கிறது என்று அர்த்தம்.//
இதெல்லாம் புதுசு இல்லை. அதனால் தான் தேர் கொடுத்த பாரியையும், போர்வை கொடுத்த பேகனையும் அப்போதே புகழ்ந்திருக்கிறார்கள்.எனவே உதவுதலில் வறட்சி காலங்காலமாக இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ஆனாலும் காலம் உதவுபவர்களை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறது.
//அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்தி அதில் ஓர் இன்பத்தை உணர்தல் என்கிற பழக்கமே//
அதெல்லாம் ராசபோதை.
ராசாக்களுக்கு மட்டுமே வாய்க்கும்.
"On Saying Please" எனற ஏ.ஜி கர்டினரின் கட்டுரை ஒன்று உண்டு. அக்கட்டுரை சாரி தேங்க் யு என்ற வார்த்தைகளின் முக்கியத்துவத்தை சொல்லும்
True sir. People become selfish after their need is done. They would easily forget the giver. http://slvinoth.blogspot.com/2018/03/blog-post.html
கசாப்புக்கடைக்காரருக்கு கவித்துவமான பாடலைக் கற்றுத்தர முனைந்தாலும், நின்னுக்க்கோஓரீஈ வர்னம் என்றுதான் பாடுவார்.
Dear மணி தங்கள் வலி புரிந்தேன். இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியதுதான். உம்மைப்போலவே உலகமும் உண்மையாய் இருந்தால் மகிழ்ச்சிதான் ஆனால், சுவாரஸ்யமிருக்காதே!.
//வெறுமனே சுயநலம் நிறைந்த, அடிப்படையான நாகரிகம் கூட இல்லாத ஒரு பெரும் சமூகமாக உருவாகிக் கொண்டிருக்கிறோம் என்று பயமாக இருக்கிறது.// உருவாக்கி ஏற்கனவே சமுதாயத்தில் உலவ விட்டாச்சு. இதில் இருந்து இந்த சமுதாயம் சரியாக வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது.
சக மனிதனிடம் முகம் கொடுத்து கூட பேச யாருக்கும் தெரியவில்லை. சம்மந்தமே இல்லாமல் தப்பாய் பைக்கில் வந்து மோதுவது போல வந்து 'போடா.. உன் வேலைய பார்த்துட்டு' என்று நம்மையே திட்டும் கூட்டம் பெருகி கொண்டே வருகிறது. இதில் என்ன கொடுமை என்றால், நிறைய சமயங்களில் அவன் அப்படி திட்டும் போது, அவன் பைக்கில் அவன் குழந்தையும் உட்க்கார்ந்து கொண்டிருக்கும். ஒரு பெற்றோராய் அவன் குழந்தைக்கு என்ன சொல்லி கொடுப்பான்.. நினைக்கவே பயமாக இருக்கும்.
பைசா பெறாத விஷயங்களுக்கு முறைத்து கொண்டு நிற்கும் நிறைய பேரிடம், என் மேல் தப்பில்லை என்றாலும் இறங்கி போய் பேசி நான் வாங்கி கட்டி கொண்டிருக்கிறேன்.. சரி வந்து பேசறான்.. சரி.. விடுங்க என்று யாருக்கும் பேச தெரியவில்லை.. போடா.. பெரிய இவரு.. என்னும் மனா நிலை தான் எல்லோருக்கும் வருகிறது.. அப்படி தான் பேசுவார்கள் என்று தெரிந்தே பேசி வந்திருக்கிறேன்.. நம்ம மனசுக்காவது ஒரு திருப்தி இருக்கும்..
இன்னொரு கொடுமை, இப்போது தான் கோவில்களில் கூடடம் அலை மோதுகிறது..அப்படி என்றால் சமுதாயத்தில் நல்ல விஷயங்களும், நல்லெண்ணங்கள் கொட்டி கிடைக்க வேண்டுமே.. இப்படி ஒரு முரண்பாடான சமுதாயம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை..
இப்படிப்பட்ட சமூகத்தைதான் லெனின் நிம்பன்களின் கூட்டம் என்றார்
//அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்தி அதில் ஓர் இன்பத்தை உணர்தல் என்கிற பழக்கமே நம்மிடமில்லாமல் போய்விடும் போலிருக்கிறது.//
சத்திய வார்த்தைகள் .. அப்புறம் வர வர உங்கள் எழுத்தில் மெருகு கூடி கொண்டே போகிறது. மகிழ்ச்சி.. அருமை..
உண்மை, இந்த சங்கடத்திற்கான மருந்தாக சொல்லப்பட்டதே வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாதென்பது.
Post a Comment