Apr 2, 2018

புரையோடும் வெறுப்பு

மாநிலத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இந்திய தேசியம் என்ற அமைப்பிலிருந்தபடியே கண்டடைய வேண்டும் என்பதுதான் சரியான நிலைப்பாடாகவும் அணுகுமுறையாகவும் இருக்கும். ஆனால் அது எப்பொழுது சாத்தியம் என்றால் உறுதியான மாநிலத் தலைமை இருக்க வேண்டும். தம் மாநில மக்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் என்றாலும், உரிமைகள் பாதிக்கப்படும் போதும் துணிந்து குரல் எழுப்புகிற மாநில ஆட்சியாளர்கள் இருந்தால் முதலில் சொன்ன வரி பொருத்தமானதாக இருக்கும். 'நமக்காகப் போராட நம் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்' என்று சாவகாசமாக இருக்கலாம்.  ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது? 

மாநில ஆட்சியாளர்கள் வெறுமனே ஒத்து ஊதுகிற ஆட்சியாளர்களாக அல்லவா இருக்கிறார்கள்? மத்திய அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப குட்டிக்கரணம் அடிக்கிறார்கள். மத்திய அரசை எதிர்த்து தெலுங்குக்காரன் நம்பிக்கையில்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்தால் 'மாநில மக்களுக்கு குரல் கொடுக்கிறோம்' என்ற பெயரில் சலசலப்பை உண்டாக்கி அந்த தீர்மானத்தை நசநசத்துப் போகச் செய்கிறார்கள். 'ராஜினாமா செய்வோம்' 'தற்கொலை செய்வோம்' என்று நடிக்கிறார்கள். நாடகமியற்றுகிறார்கள். ஆனால் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மக்கள் எல்லாக் காலத்திலும் முட்டாள்களாகவே இருப்பதில்லை. ஆனால் ஆட்சியாளர்கள் அப்படிதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆளுங்கட்சி இந்த இந்த லட்சணம் என்றால் எதிர்க்கட்சியும் உருப்படியில்லை. 'அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்க..அப்புறம் நாங்க செய்யறோம்' என்கிறார்கள். இவ்வளவு வலுவான எதிர்க்கட்சி இந்நேரம் மாநிலத்தையே கலகலகச் செய்திருக்க வேண்டும். காவிரி என்பது தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை இல்லையா?  தடியும் முறியாமல் பாம்பும் சாகாமல் அசை காட்டிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி மிகப்பெரிய சாபம். 'நாங்க பக்குவமானவர்கள்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பக்குவத்தைக் காட்டுவது நல்லதுதான். ஆனால் ஒரு மாநிலத்தின் உரிமை பறிபோகும் போது, நிர்வாகம் சீரழிந்து கொண்டிருக்கும் போது பக்குவமாவது, பருத்திக் கொட்டையாவது.  

இன்னோர் எம்.பி இருக்கிறார். பா.ம.கவின் அனுப்புமணி. எப்படியாவது பா.ஜ.கவின் கருணைப் பார்வை கிட்டிவிடாதா என்று தவம் கிடைக்கிறார். வீட்டில் கருப்புக் கொடியைக் கட்டி காமெடி செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நேரமிருக்கும் போது தேடித் பார்த்தல் தமிழக எம்.பிக்களில் மிக மோசமான செயல்பாடு என்றால் அன்புமணிதான். வெறும் நாற்பத்தெட்டு சதவீத வருகைப் பதிவு, நான்காண்டுகளில் வெறும் பதினோரு விவாதங்களில் மட்டுமே பங்கேற்பு என நாற்பது போர்களிலும் படு மட்டமாகச் செயல்பட்டிருக்கிறார். பிறகு யார்தான் தமிழக மக்களின் உரிமைகளை உரக்கப் பேசுவது?

வெற்றுக் கோஷவாதிகள் என்று யாரை நோக்கி விரல் நீட்டுகிறீர்களோ அவர்கள்தான் பேசுவார்கள். உணர்ச்சிகளைத் தூண்டி காய்கிறார்கள் என யார் மீது குற்றம் சாட்டுகிறீர்களோ அவர்கள்தான் களமிறங்குவார்கள். இன்றைக்கு ஆளுகிற மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்கள் குறித்து மக்களிடையே ஆழமான வெறுப்பு ஊடுருவிக் கிடக்கிறது. தமிழகம் எல்லாவிதத்திலும் வஞ்சிக்கப்படுவதாக மக்கள் நம்புவது நல்ல அடையாளமில்லை. ஆனால் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் போது 'அப்படியெல்லாம் இல்லை' என்று மறுத்துப் பேச தேசியம் பேசுகிற யாரிடமும் தரவுகள் இல்லை. அப்படியே கொடுத்தாலும் காவி பூசித் தருகிறார்கள். மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் தமிழகத்திற்கு எதிரானதாகவும், தமிழக மக்களின் நலன்கள் பற்றிய சிரத்தையற்று மற்ற மாநிலங்களின் நலன்களுக்காக இயற்றப்படுகின்றன என்பது மெல்ல உருவேறும் போது வெறுமனே 'பாரத் மாதாகீ' கோஷம் எந்தவொரு பலனையும் தராது. அந்தவொரு மனநிலைக்கு சாதாரண மக்களில் பெரும்பாலானவர்கள் வந்திருக்கிறார்கள். 

தேசியம் என்பது 'இன்க்ளூஸிவ்'. நாம் ஒவ்வொருவரும் வளர்கிறோம் என்கிற உணர்வை உண்டாக்க வேண்டும். அப்படியில்லாமல் மக்களின் நம்பகத்தைப் பெறாத எந்தவொரு திட்டமும் தேசிய சிந்தனைக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும். இன்றைய இந்திய தேசிய அரசு அப்படியானதொரு ஆபத்தைத்தான் தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நம்மைச் சுரண்டுகிறார்கள் என்ற புள்ளியை நோக்கி மக்களை நகரச் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு பெரும் திட்டத்தையும் மக்களிடம் புரிய வைக்கிற முனைப்பு இல்லை. எல்லாவற்றையும் வலுவான கரங்கள் கொண்டு அமுல்படுத்த முயற்சிக்கிறார்கள். சாமானியனை எரிச்சல் அடையச் செய்வது இதுதான். 

மக்கள் அத்தனை பேரும் வன்முறையாளர்கள் இல்லை. ஆனால் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கும் போது மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் அடித்து நொறுக்குபவர்கள் அப்படியொன்றும் செல்வாக்குப் பெற்றவர்கள் இல்லை. ஆனால் அவர்களையும் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் இது வேல்முருகன் அணியினர் மீதான ஆதரவு இல்லை. மத்திய மாநில அரசுகளின் மீதான வெறுப்புணர்ச்சி இது. ஸ்டாலினும், அன்புமணியும் செய்யாததை வேல்முருகன் செய்யட்டும் என்று ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.  'இப்படி எல்லாம் ஏதாச்சும் செஞ்சாத்தான் ஆகும்' என்று சாமானியர்களை பேச வைத்திருக்கிறார்கள். இதை எப்படி நல்ல சூழல் என்று சொல்ல முடியும்?

வன்முறை தவறானதுதான். ஆனால் அதை மக்கள் ஆதரிக்கிறார்கள் எனில் எந்தச் சூழல் மக்களை அப்படியொரு நிலமைக்குத் தள்ளுகிறது  என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் குறித்து இவ்வளவு வன்மமும் வெறுப்பும் ஏன் தமிழகத்தில் புரையோடுகிறது என்றுதான் ஆலோசிக்க வேண்டுமே தவிர மக்கள் காட்டுமிராண்டிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. நீங்கள் மக்களிடம் 'வன்முறை தீர்வாகாது' என்று பாடம் நடத்தலாம். 'முரட்டுப் பசங்க' என்று பகடி செய்யலாம். ஆனால் எவ்வளவுதான் முட்டுக் கொடுத்தாலும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து அரும்பி வேரோடிக் கிடந்த 'நாம் இந்தியர்' என்கிற தேசியவாத உணர்வை தமிழகத்தில் வெகு வேகமாகக் கருகச் செய்வதன் முழுப் பொறுப்பும் இன்றைய ஆட்சியாளர்களைத்தான் சேரும்.

ஜெய் ஹிந்த்.

11 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

well written!! Last para very impressive !!
//வன்முறை தவறானதுதான். ஆனால் அதை மக்கள் ஆதரிக்கிறார்கள் எனில் எந்தச் சூழல் மக்களை அப்படியொரு நிலமைக்குத் தள்ளுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் குறித்து இவ்வளவு வன்மமும் வெறுப்பும் ஏன் தமிழகத்தில் புரையோடுகிறது என்றுதான் ஆலோசிக்க வேண்டுமே தவிர மக்கள் காட்டுமிராண்டிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. நீங்கள் மக்களிடம் 'வன்முறை தீர்வாகாது' என்று பாடம் நடத்தலாம். 'முரட்டுப் பசங்க' என்று பகடி செய்யலாம்.//

சேக்காளி said...

//தவிர மக்கள் காட்டுமிராண்டிகள்//
சரி இருந்துட்டு போறோம். காட்டுமிராண்டிகள் வாழுற இடத்துக்கு எதுக்கு நியூட்ரினோவை யும்.ஸ்டெர்லைட்டையும், ஹைட்ரோகார்பனையும் தூக்கிட்டு வர்றானுவளாம்?.

சேக்காளி said...

//ஆனால் ஆட்சியாளர்கள் அப்படிதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.//
மூனாவதா ஒருத்தன கூட வர உடாம குத்துனோம்லா அம்மா இலையை யும் அய்யா சூரியனையும் பாத்து.
பெறவு நம்பத்தான் செய்வானுக.

சேக்காளி said...

//மக்கள் அத்தனை பேரும் வன்முறையாளர்கள் இல்லை. ஆனால் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கும் போது மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.//
இம்புட்டு நாளும் சினிமா வுல தான பாத்தோம்.
அதை நேருல பாத்தா ஆதரிக்கத்தான் செய்யுவோம்.

Thirumalai Kandasami said...

அனுப்புமணி .??? குறியீடா .??

Anonymous said...

இன்றைய இந்திய தேசிய அரசு அப்படியானதொரு ஆபத்தைத்தான் தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
BJP IS DOING THIS FOR THE ENTIRE COUNTRY.
MODY'S WRONG ECONOMIC POLICIES HAVE TAKEN THE COUNTRY BACKWARD. BJP HAS UNDONE ALL GOOD DEEDS OF MANMOHANSINH/NARASIMHA RAO. THE BEST COMBINATION EVER.
NARASIMHA RAO WAS A SILENT KILLER.
ALL ATTEMPTS OF SONIA/ CHIDAMBARAM TO UNDO/SPOIL WERE NOT EFFECTIVE. MODY SUCCEEDED WHERE SONIA/ CHIDAMBARAM FAILED SINCE MODY WAS WORSE THAN SONIA.
MODY'S UNDEMOCRATIC ATTITUDE HAS TAKEN THE COUNTRY BACKWARDS BY MORE THAN 60/70
YEARS.
INDIA RESEMBLES 'NAZI' GERMANY OF 1930S. HITLER WAS ONLY ANTI JEW.
MODY IS ANTI PEOPLE.
'HINDUTAVA' WILL DIE A NATURAL DEATH ONCE MODY LEAVES.
OPPOSING HINDUTAVA' WILL ONLY STRENGTHEN MODY.
LET US ALL IGNORE HINDUTAVA'.
IT OUR DUTY TO DEFEAT MODY. IT IS LIKE A WAR OF INDEPENDANCE.
LET US ALL JOIN HANDS AND WIN.
ANBUDAN,
M.NAGESWARAN.


அன்பே சிவம் said...

மேடைகளில் கோமாளிகள் போல் காட்சி தருகிறவர்கள், உண்மையில் கோமாளிகளல்ல. நம்மை திசை திருப்பி அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தனை களேபரங்களுக்கு இடையிலும் கூட்டுறவு?! சங்க தேர்தலில் மிக சாதுர்யமாய் எதிராளிகளை அமுக்கவும் தங்கள் நோக்கம் வெற்றி பெறவும் அவர்கள் செய்து கொண்டிருக்கும் களப்பணி அடேயப்பா!. உண்மையில் வேடிக்கைப் பார்ப்பவர்களை கோமாளிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
---ன் ஆசியோடு.

அன்பே சிவம் said...

கண்ணகி எத்தகைய மனநிலையில் சாபம் விட்டிருப்பாள் என்பதை உணர முடிகிறது. வாக்கை விற்பதை விட்டொழிக்காதவரை நமக்கு விமோசனமில்லை. இதில் பெரியார் மண், சுய மரியாதை பூமி, பகுத்தறிவாளர்கள் என நம்மை நாமே பாராட்டிக் கொள்ளும் பீற்றல்கள் வேறு.

Anonymous said...

காவிரி தாய்க்கு துரோகம் செய்த
திருடர் கழகமும் இன்று போராட்டம்
செய்வதுதான் வெந்த புண்னில்
வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது.

Murugan R.D. said...

வச்ச குறி தப்பாது கார்ப்பரேட்களுக்கு,,

1987 லேயே மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு நோட்டம் விட்டு திட்டமும் போட்டுவிட்டார்கள் எனபதே உண்மை,,

மக்களுக்கு இந்த எளிய புரிதல் கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மக்கள் எழுச்சி நடைபெறும் சமையங்களில் எல்லாம் பல சூழ்ச்சிகளை செய்து பல்வேறு இயக்கங்களையும் கட்சிகளையும் பத்திரிக்கை உலகையும் தூண்டிவிட்டு அவ்வப்போது அந்தந்த காலகட்டங்களில் அமைந்திருக்கும் மத்திய அரசாங்கம் தான் இத்திட்டத்திற்கு காரணம் என்பதுபோல ஒரு பொது கருத்தை திணித்துவிடும், அந்த நேரங்களில் நம் மக்களின் ஒரே குறிக்கோள் அப்போதிருக்கும் மத்திய அரசை வீழ்த்துவதே,, அப்படி வீழ்த்திவிட்டால் இத்திட்டங்கள் வராது என்ற ஒரு பொய்யான நம்பிக்கையை மனதிற்குள் சூழ்நிலை விதைத்துவிடும்,

ஆனாலும் அப்போரட்டஙகளின் இடையேயும் கார்ப்பரேட்கள் இங்கு கொண்டுவர துடிக்கும் திட்டங்களுக்கனா வேலைகள் மெதுவாகவோ திரைமறைவாகவோ நடந்து கொண்டுதானிருக்கும்,,, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிது காலம் அமைதியாய் இருக்கும் இப்பிரச்சனை மீண்டும் வெடிக்கும்,,, இப்படி தான் 30 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் கார்ப்பரேட்களின் அழிவு திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,,,,

இம்முறை மிகப்பெரிய அளவில் பதற்றம் போராட்டம் வெடிக்க காரணம் இளைஞர்களின் விழிப்புணர்வு,,, நிச்சயமாய் இதற்கு காரணம் சமூக வலைதள ஊடகங்கள்தான்,,,, கார்ப்பரேட் கூலி பெறும் இங்குள்ள செய்தி ஊடகங்கள் இல்லை,, தவிர கார்ப்பரேட்களிடம் அரசியல் காண்டராக்ட் வேலை பெற்று அரசியலையும் அதிகாரத்தையும் நடத்திக்கொண்டிருக்கும் பிஜேபியின் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான படுவேகமான விசுவாச செயல்பாடு,,,, கண்மூடிதனமான பணவெறி.. இனவெறி,, ஆம் இனவெறியும் இங்கு பிஜேபியின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாய் விளங்குகிறது என்பதை மறுப்பது முட்டாள்தனம் அயாேக்கியதனம்,

Murugan R.D. said...

இம்மாபெரும் அழிவு அச்சுறுத்தல் திட்டங்களுக்கு இன்னொரு முக்கிய சூத்திரதாரி அறிந்தோ அறியாமலே திராவிட கட்சிகள்தான், ரோமசாமியின் சீடர்கள்தான்,,,, அவர்களுக்கு பணத்தின் மீதிருந்த வெறி அறிவு இத்திட்டங்களின் பின்னால் இருக்கும் சதியை உணர முடியாமல் போயிருந்திருக்க கூடும்,, அது சதிதிட்டமில்லை,,, விழிப்புணர்வு இன்மையே,, ஆனாலும் தன் கல்லாப்பெட்டியை நிரப்பு பி(ப)ண ஆசை அவர்களையும் அறியாமல் இவ்வளவு பெரிய சிக்கலில் தமிழ்நாட்டை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது,,,,

சரி அப்படியென்றால் இத்திட்டங்களுக்கு இங்கு தேசியம் பேசி தேசியகட்சிகளின் பின்னால் ஆதரவு நிலைப்பாடு கொண்டு உலகப்பொருளாதாரம் முன்னேற்றம் பேசும் படித்த தமிழர்களும் ஆதரவு தருகிறார்களே என்றால் ஆம் தருவார்கள்,,, எல்லா இனத்திலும் கருப்பாடுகளும் சுயநல பண முதலைகளும் இருக்கவே செய்வார்கள்,, அந்த வகையில் மேலே சொன்னவர்கள்,,

ஒரு மேப்பை எடுத்து பிஜேபியால் புதிதாக கொண்டுவரப்பட்ட அழிவுதிட்டங்களின் இடத்தையும் ஏற்கன‌வே திட்டம் போட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கம் இடங்களையும் அடையாளப்படுத்தி பார்த்தால் எல்லா மாவட்டங்களும் இத்திட்டங்களுக்குள் அடைபட்டுக்கொண்டிருக்கும் விசயம் ‌புரியும்,,, அப்படியென்றால் தடுக்க முடியாதா என்றால் நிச்சயமாய் வாய்ப்பே இல்லை,,,, தமிழ்நாடு தன் வளத்தையெல்லாம் இழந்து பாலைவனம் ஆவது உறுதி,,, அப்போது மேற்சொன்ன மேதாவிக்கூட்டமும் நீருக்கும் உணவுக்கும் பிச்சைஎடுத்துக்கொண்டு இருக்கும்,, ஒரு வேளை இத்தலைமுறை தப்பித்தாலும் அடுத்த தலைமுறை (அனைத்து தமிழர்களையும் சேர்த்துதான்) நிச்சயமாய் நல்ல நீருக்கும் உணவுக்கும் காற்றுக்கும் பரிதவிப்பது நிச்சயம்,,, தமிழ்நாடு கேட்ட வெள்ள நிவாரணம் புயல் நிவாரணம் போன்றவற்றிற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியையும் இப்போது சேலம் சென்னை 8 வழி சாலைக்கு ஒதுக்கப்பட்ட பத்தாயிரம் கோடி பணத்தையும் ஒப்பீடு செய்து பாருங்கள,

சைத்தான்கள் அகோர பண பசியில் இருக்கிறார்கள், ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடித்துகுதறி ரத்தத்தை உறிஞ்சி எலும்பு துண்டுகளாய் வீசி எறியும் நாள் வெகுதொலைவில் இல்லை,,,, பண்ணிய பாவத்திற்கு திராவிட கட்சிகள் ஏதாவது செய்ய வேண்டும்,, அவர்களுக்கு அவர்களின் போராட்டங்களுக்கு விமர்சனம் செய்யாமல் ஆதரவு கொடுப்பதும் அவசியம்,, ஏனென்றால் அவர்கள் இம்மண்ணில் வாழ்பவர்கள்,, ஏமாற்றிபிழைத்தாலும் இம்மண்ணின் மீது நம்மைபோலவே அவர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கவே செய்கிறது,, நம் கலாச்சாரத்தையும் மண்ணையும் இழக்க அழிக்க ‌தேசிய கட்சிகளின் கைகூலிகள் போல அவர்கள் விரும்பமாட்டார்கள்,,,

இம்மண்ணை நேசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய காலகட்டம் இது,,,, ஆனால் போராட்டதின் விடை என்ன என்பது நம் கையில் இல்லை,,,