Apr 20, 2018

நீதான் காரணம்

வணக்கம். என் பெயர் கிரிதரன். ஒராண்டுக்கு முன்பாகப் பொறியியல் படிப்பை முடித்த வேலையுள்ள பட்டதாரி. 'மசால் தோசை 38 ரூபாய்' எனும் உங்கள் புத்தகத்தை, “யாரோ மணிகண்டன்னு எழுத்திருக்காருடா. படிச்சுப் பாரு, நல்லா இருக்கு இயல்பா” என்று என் தந்தை கொடுத்தபோதுதான் உங்களது மானசீக அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு ‘நிசப்தம்’ தளத்தைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். தங்களது கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் ('தங்களது' என்று சொன்னால் நீங்கள் “ஊர்கூடி இழுத்துத்தான் நிசப்தம் எனும் தேர் நகர்கிறது” என்று சொல்லிவிடுவீர்கள்) என்னை ஆச்சரியப்படவைக்கத் தவறியதேயில்லை.

'லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்' வாசித்த பின்னர் நான் உங்களுக்கு அனுப்பிய பத்தியைப் படித்துவிட்டு நீங்கள் பதில் மின்னஞ்சல் அனுப்பியது இன்னமும் நினைவிலிருக்கிறது. “ஜீவகரிகாலனுக்கும் இதை அனுப்பி வைக்கிரேன். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்” என்று சொல்லியிருந்தீர்கள்.

கிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக்கழகம் என்று சொன்னால் தான் பலருக்குத் தெரியும்) இயந்திரப் பொறியியல் படித்துப் பின் ஒரு மென்பொருள் ஸ்டார்ட்-அப்பில் ஒரு வருடம் ‘சேல்ஸ்’ வேலை பார்த்துவிட்டு இப்போது வேலையை விட்டுவிட்டேன் (பதற வேண்டாம். வேலை கேட்டு இதை எழுதவில்லை. தயவுகூர்ந்து மேலே படிக்கவும்).

கல்லூரியில் படிக்கும்போதே சூர்யா நகர் எனும் பிற்படுத்தப்பட்ட பகுதியின் குழந்தைகளிடம் உரையாடவும், அவர்களுக்கு மாலை வகுப்பெடுக்கவும் வாய்ப்பு கிட்டியது. அது கல்வி, கற்றல் தொடர்பான சில மாற்றங்களை என்னுள் விதைத்ததோடு, அது தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டும், களப்பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலையும் தந்தது. எனினும், நடுத்தர வர்க்கத்திற்கே உரிய குழப்ப மனநிலையுடன் நிறுவன வேலையைத் தேர்ந்தெடுத்தேன்.

அங்கு மேலாளரின் குடைச்சல்கள் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது என்பது ஒருபுறம் உண்மை எனினும், அது ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தியது. குடிமைப்பணித் தேர்வுகள் எழுதலாம் என்ற முடிவுடன் இருந்த (இருக்கும்) எனக்கு ‘பப்ளிக் பாலிசி’ குறித்த சில தகவல்கள் நண்பர் ஒருவர் மூலமாகக் கிடைத்தது. அது தொடர்பான சில ‘ஃபெல்லொஷிப்’களுக்கு விண்ணப்பித்தேன்.

தற்போது ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்புடன் இரு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வேறு சில விண்ணப்பங்கள் தொடர்பான இறுதி முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

இவ்வளவு பீற்றலும் உங்களுக்கு நன்றி சொல்லத்தான். மதில் மேல் பூனையாய்த் தைரியமான முடிவெடுக்கத் திராணியற்று இருந்த எனக்குத் தங்களது பல பதிவுகள் நிதர்சனத்தை வெளிக்காட்டியிருகின்றன. கல்வித்துறை, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றத்தையேனும் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்தின.

நல்ல காசு சம்பாதித்துக்கொண்டு ஏ.சி. அலுவலகத்தில், மூன்று வேளை உணவுடன், மகிழுந்தில் சொகுசான பயண வசதிகளுடன் இருந்திருக்கலாம்தான். ஆனால், நான் கற்ற கல்விக்கான அர்த்தம் அதுவாக இருக்காது என்று முழுமையாக நம்புகிறேன். அந்நம்பிக்கைக்கு நீங்களும் ஒரு காரணம். வீட்டில் சொன்னபோது சற்றே தயங்கிய பெற்றோர், “சரி ஒரு ரெண்டு வருஷம் பாப்போம் என்னதான் பண்றான்னு” என்ற ரீதியில் விட்டிருக்கிறார்கள். அதற்குள், குடிமைப்பணித் தேர்வுகளையோ அல்லது இந்த ‘ஃபெல்லொஷிப்’ முடிந்து அது தொடர்பான பிற வாய்ப்புகளையோ ஒரு கை பார்த்து விட முடியும் என்ற ஒரு அனாமத்தான தைரியம் வந்திருக்கிறது.

அனைத்திற்கும் நன்றி. பெங்களூருகு வந்து உங்களை நேரில் பார்ப்பதாகத்தான் திட்டம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அதனால் இம்மின்னஞ்சல். கூடிய விரைவில் உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற ஆவலாக உள்ளேன்.

நன்றி.

அன்புடன்,
கிரிதரன்.

உற்சாகமூட்டும்படியாகவோ அல்லது பதற்றம் அடையச் செய்யும்படியாகவோ மின்னஞ்சல் எதுவும் வந்தால் அதை வேணிக்கு அனுப்பி வைப்பேன். இந்தக் கடிதம் இரண்டுமானது. என்னைவிடவும் நீங்கள் பத்து அல்லது பனிரெண்டு வயது குறைவானவராக இருக்கக் கூடும். உங்கள் வயதில் எனக்கொரு தம்பி இருந்து அவன் இந்த முடிவை எடுத்திருந்தால் என்னுடைய எதிர்வினை என்னவாக இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன். 

நீங்கள் குறிப்பிடும் ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு, மூன்று வேளை உணவை உண்டு, நல்ல காசு சம்பாதித்தபடியேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஓரளவுக்கு நிலையான வாழ்க்கை அமைந்திருக்கிறது. கிடைக்கும் நேரத்தில்தான் சமூகத்துக்கு, அடுத்தவர்களுக்கு என்று ஒதுக்குகிறேன். 'உங்களை பின் தொடர்கிறேன்' என்று யார் சொன்னாலும் இதைத்தான் தெளிவாகச் சொல்கிறேன். நாம் நிலையான இடத்தில் இருக்க வேண்டும். ஓரளவுக்கேனும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்பம் வலுவானதாக இருக்க வேண்டும். அதன் பிறகு நாம் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம். 

இந்தச் சமூகம் மிகுந்த சுயநலமிக்கது. 'அவனாகவே  தேடி வரட்டும்' என்றுதான் எதிர்பார்க்கும். திருப்பித் தரும் என்றெல்லாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. நாம் வீழ்ந்துகிடந்தாலும் கண்டுகொள்ளாமல் அது தன் போக்கில் நடப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதே சமூகத்தில்தான் எந்தவிதமான ஆதரவுமில்லாத பல்லாயிரம் மனிதர்கள் வாழ்கிறார்கள். வாழ்வு தரும் உச்சபட்ச வலியுடன் இதே சமூகத்தில் எண்ணற்றவர்கள் நைந்து கொண்டிருக்கிறார்கள். யாரிடம் கேட்பது என்பது கூடாது தெரியாத எளியவர்களை அறிந்து அறியாமலும் நாம் தினசரி கடந்து கொண்டேயிருக்கிறோம். இவர்களுக்கு நாம் கை நீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் அதற்குமுன் நம் கால்களை வலுவாக பதித்துக் கொள்ள வேண்டும். 

எதற்காகச் சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 

சமீபத்தில் மட்டும் மூன்றாவது ஆள் நீங்கள். மணிவண்ணன் என்றொரு தம்பி வீட்டில் வந்து சந்தித்துவிட்டு 'இனி சிவில் சர்வீஸ் படிக்கப் போறேண்ணா..இந்த முடிவுக்கு உங்க எழுத்து ஒரு காரணம்..' என்று ஐடி வேலையை விட்டுவிட்டுச் சென்றிருந்தார். அவரைப் பற்றி எழுதி இருந்தேன். அதன் பிறகு ஒரு பெண் இதை சொன்னார். இப்பொழுது நீங்கள். 

நாம் இன்னொருவருக்கு உந்துசக்தியாக இருப்பது மிகப்பெரிய உற்சாகம். எந்தக் கணத்தில் எந்த வரி யாரைத் தூண்டும் என்று தெரியாது. தங்களின் இந்தக் கடிதத்தை பிரசுரம் செய்ய விரும்புகிறேன். இதன் வழியாக பொதுவாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டும்.

படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிற தருணம். உங்களை போலவே உங்கள் குடும்பத்துக்கும் சில கனவுகள் இருக்கும். இந்தத் தருணத்தில் எடுக்கும் முடிவுதான் மிச்சமிருக்கும் மொத்த வாழ்க்கைக்குமான அடிநாதமாக இருக்கும். இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்துவிட்டு 'எல்லாவற்றுக்கும் காரணம் நீதான்' என்று சொல்லும் போது பதற்றப்படுவது இயல்புதானே?

என்னுடைய பதற்றம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

என் தம்பியாக இருந்தாலும் இதைத்தான் சொல்வேன்-
சரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறீர்கள். சமூகம் என்பதை ஒதுக்கி வையுங்கள். அது மனதின் ஒரு மூலையில் ஓய்வில் இருக்கட்டும். முதலில் வெற்றியடைந்துவிடுங்கள். வேறு எதிலும் கவனம் இருக்க வேண்டாம். 'இது இல்லைன்னா அது' என்ற அலைவுறுதல்தான் நம்முடைய மிகப்பெரிய எதிரி. இருபது அல்லது முப்பது வயதுகளில் நாம் நிர்ணயிக்கும் இலக்கு என்பது  'இது மட்டும்தான்' என்றிருக்க வேண்டும். ஒற்றை இலக்கு. அப்பொழுதான் வெறியெடுத்து ஓடுவோம். இது கிடைக்காவிட்டால் இன்னொன்று இருக்கிறது என்ற சூழல் அமைந்தால் நம்முடைய வேகம் மட்டுப்பட்டுவிடும். அதற்கு வாய்ப்பே உருவாகக் கூடாது. வேகம் மட்டும் குறையவே கூடாது. 

குடிமைப்பணித் தேர்வுகளையோ அல்லது இந்த ‘ஃபெல்லொஷிப்’ முடிந்து அது தொடர்பான பிற வாய்ப்புகளையோ - என்ற வரியை நீங்கள் திருத்த வேண்டும். ஒற்றை இலக்கை நிர்ணயிப்பது மிக அவசியம். அப்படி நிர்ணயித்துக் கொள்ளுங்கள். 

அதன் பிறகு திரும்பிப் பார்க்க எதுவுமில்லை. கடுமையான உழைப்பைச் செலுத்துங்கள். நம்முடன் போட்டியிடும் அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். யாரும் நம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை. அது நினைவில் இருக்கட்டும். கவனத்தைக் குவித்து இலக்கை நோக்கி வெறியெடுத்து ஓடுங்கள். பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய குறியாக இருக்கட்டும். உங்களின் வெற்றி அவர்களை பெருமையடைச் செய்ய வேண்டும். அவர்கள் பூரிக்கட்டும்.  

நீங்கள் வெற்றியடைவீர்கள். அதன் பிறகு சொல்லுங்கள் 'நீதான் காரணம்' என. அந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். 

மனப்பூர்வமான வாழ்த்துக்கள் கிரி. 

12 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Awesome response, Mani. However, no surprises as this is what is expected from you. Wishing Giri tons of good luck. Regards, Radha Bala

Anonymous said...

Dear Mani,

You are just beyond social activist. you are influencing others and in the right way. This is what needed for the moment.

Wow! Amazing!!

Its great to see your matured reply to Mr.Giri. All the best to Giridharan and I am proud to be your follower Mr.Mani!

Giridharan said...

Mikka nandri, Thiru. Manikandan!

As far as the "Fellowship" is concerned, it is not a charity work. Am doing what interests me while getting paid for it (although the pay is not equal to what I used to earn in the previous organization).

Having said that, this was a selfish decision; I chose this because the earlier job didn't give me satisfaction.

Also, since this the right time for me to try opportunities before deciding to settle down with other commitments, this seems to work fine for me at this point in time.

Thanks a ton for your response, and I'll look forward to emailing with some big accomplishments in the coming years :)

Thanks,
Giri

Madhan said...

People will appreciate you more and more, so I don’t want to repeat that again. But I am REALLY amazed with Giri’s maturity in this age. Lot of people including me doesn’t have that maturity after 12 years...Hats off to him. His letter is golden..

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அன்பின் மணி, நல்லதொரு உளவியல் வல்லுநர் ஆகவும் பரிணமித்து விட்டீர்கள். கிரிதரன் ஒற்றை இலக்கை நோக்கி சென்று வெற்றி பெற வேண்டும். வாழ்க வளமுடன்

Selvaraj said...

கிரிதரனுக்கு வாழ்த்துக்கள். இவை அனைவருக்குமான வரிகள் 'நாம் நிலையான இடத்தில் இருக்க வேண்டும். ஓரளவுக்கேனும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்பம் வலுவானதாக இருக்க வேண்டும். அதன் பிறகு நாம் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம்'.

Anonymous said...

"கடுமையான உழைப்பைச் செலுத்துங்கள். நம்முடன் போட்டியிடும் அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். யாரும் நம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை. அது நினைவில் இருக்கட்டும். கவனத்தைக் குவித்து இலக்கை நோக்கி வெறியெடுத்து ஓடுங்கள். பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய குறியாக இருக்கட்டும். உங்களின் வெற்றி அவர்களை பெருமையடைச் செய்ய வேண்டும். அவர்கள் பூரிக்கட்டும்."


Super response.

சேக்காளி said...

// “யாரோ மணிகண்டன்னு எழுத்திருக்காருடா. படிச்சுப் பாரு, நல்லா இருக்கு இயல்பா” என்று என் தந்தை கொடுத்தபோதுதான்//
என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் பெரிய கொடுப்பினை தான்.
ஏனென்றால் இது போன்றெல்லாம் (இன்றுவரை கூட) எனக்கு வாய்த்ததே இல்லை.
வாழ்த்துக்கள் கிரிதரன்.
கிரிதரன் உங்களால் கல்வித்துறை, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றமாவது நிகழ்ந்தே தீரும்.

சேக்காளி said...

//உற்சாகமூட்டும்படியாகவோ அல்லது பதற்றம் அடையச் செய்யும்படியாகவோ மின்னஞ்சல் எதுவும் வந்தால் அதை வேணிக்கு அனுப்பி வைப்பேன்//
எடிட்டரம்மா உங்களுக்காவது சம்பளம் ஒழுங்கா குடுக்காரா.இல்ல பேசியே சமாளிச்சிருதாரா?

Amanullah said...

வாழ்த்துக்கள் கிரி, ஒற்றை இலக்கு , அதை அடைய 'Blast the bridge rules' பின்பற்றுங்கள்.

Yarlpavanan said...

கிரிதரன் அவர்களுக்குப் பாராட்டுகள்
https://plus.google.com/u/0/communities/110989462720435185590

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...


//சேக்காளி -எடிட்டரம்மா உங்களுக்காவது சம்பளம் ஒழுங்கா குடுக்காரா.இல்ல பேசியே சமாளிச்சிருதாரா?//
பேசாம சமாளிச்சிடறார்