Apr 23, 2018

வர்றீங்களா பாஸ்?

ஒட்டன்சத்திரத்தில் இருபத்தெட்டாம் தேதி சந்திக்கிறோம். 

சிறப்பு கவனம் கோரும் குழந்தைகளுக்கான நிகழ்வை ஒட்டன்சத்திரத்தில் நடத்த விரும்புகிறோம் என்றும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் கோரி கடந்த வாரம் அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு ஒரு சந்தேகம். கடந்த வருடம் இப்படித்தான் யாரோ வந்து கேட்டார்களாம். அனுமதி கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளின் விவரங்களை எல்லாம் சேகரித்து எங்கயோ அனுப்பியிருக்கிறார்கள். 'அவங்க காசு வசூலிக்க எங்க குழந்தைகளைப் பயன்படுத்திட்டாங்க' என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படியான என்.ஜி.ஓக்கள் நிறைய இருக்கின்றன.

பெங்களூரில் ஒருவர் இருக்கிறார். ஸ்கார்பியோவில்தான் சுற்றுவார். பின்பக்கமாக தமது அறக்கட்டளையின் பெயரை எழுதி வைத்திருப்பார். வருமானத்துக்கு என்று தனியாக வேலை எதுவுமில்லை. இதுதான் வருமானமே. வருடம் ஒரு முறை படம் எடுத்து அனுப்பினால் போதும் அந்த வருடத்துக்கான பணம் வந்துவிடும்' என்று சொன்னார்கள். நீதானா அது என்று கேட்காதீர்கள். அறக்கட்டளைக்கு லெட்டர் பேடே இப்பொழுதுதான் அடித்து வைத்தேன்.  அப்புறம் சந்தேகப்படாமல் என்ன செய்வார்கள்? நம்மையும் சேர்த்துதான் சந்தேகப்படுவார்கள். 

பள்ளிக் கல்வித்துறையில் அனுமதியளித்துவிட்டார்கள். திருமண மண்டபத்துக்கு வாடகை, உணவு, ஐஸ்கிரீம், குழந்தைகளுக்கு  என எல்லா ஏற்பாடுகளையும் விக்னேஷ்வரனும் அவரது குழுவினரும் செய்திருக்கிறார்கள். 'இந்த முறை உணவுக்கான தொகையை நான் தரட்டுமா' என்று சிலர் கேட்டார்கள். இப்படி கேட்கிற மனிதர்கள் இருக்கும் வரைக்கும் எவ்வளவு பெரிய காரியத்தையும் செய்யலாம். ஆனால் உள்ளூர்வாசிகள் ஆளாளுக்கு ஒரு செலவினை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பணம் எதுவும் தேவைப்படாது. 

கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் நிகழ்ச்சியில் குழந்தைகளை ஏதேனும் வகையில் மகிழ்ச்சிப்படுத்த இயலுமா என்று மட்டும் யோசித்தால் போதும். உணவு பரிமாறலாம், குழந்தைகளை அமர வைப்பதில், ஒருங்கிணைப்பதில் உதவலாம் அல்லது வெறுமனே ரசிக்கலாம்.

நன்கொடை எதுவும் வேண்டாம். வெறும் கையை வீசிக் கொண்டு வரலாம். 

பூபதிராஜ் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறார். ராமராஜ் கோவையிலிருந்து வருகிறார். இருவரும் கதை சொல்லிகள். தம்பிச்சோழனும் சென்னையிலிருந்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவரும் கதை சொல்லித்தான். 'அடுத்த முறை நான் செய்யறேன்..இந்த முறை சும்மா வேடிக்கை பார்க்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார். முடிந்தால் கையைப் பிடித்து உள்ளே இழுத்துவிடலாம் என்றிருக்கிறேன். 

'குழந்தைகளின் சந்தோஷத்தில் பங்கெடுக்க வேண்டும்' என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை. மூன்று மணி நேரம் அந்தக் குழந்தைகளை உற்சாகமூட்டினால் போதும். சில பெற்றோர்கள் தமது குழந்தைகளின் சேட்டைகளால் கோபமடைவார்கள். அவர்களை 'அடிக்காதீங்க' என்று தடுத்தால் போதும். 'எங்க சிரி பார்க்கலாம்' என்று அந்தக் குழந்தையைச் சிரிக்க வைத்தால் போதும். இப்படியாக குட்டி குட்டி போதும்.

கடந்த முறை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்கள். கூடுதல் செலவு அவர்களுக்கு. ஒட்டன்சத்திரத்தில்  நிகழ்ச்சி நடக்கும் இடமானது திருமண மண்டபம்.  'அங்கேயே நான் குளித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டேன். சரி என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு அது போதும். பிரச்சினையில்லை. இரவில் பெங்களூரில் பேருந்து பிடித்தால் நேராக சேலம். அங்கே கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு ஐந்து மணிவாக்கில் திண்டுக்கல் வந்து இறங்கும்படி திட்டமிட்டுக் கொள்வேன். பையில் எப்பொழுதும் ஒரு நீளமான துண்டு இருக்கும். விரித்துப் போட்டால் அசதிக்கு அருமையாகத் தூக்கம் வரும். மற்றவர்களை இதையே செய்யச் சொல்ல முடியாது. ஆனால் அறை வசதி இருக்கிறது. குளிக்கும் இடவசதியும் இருக்கிறது. செளகரியப்படி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.  

வரவு செலவு உட்பட எதிலும் நான் தலையிடவில்லை. உள்ளூர் அணிதான் மொத்த ஒருங்கிணைப்பையும் செய்கின்றனர். விக்னேஸ்வரன் அவ்வப்பொழுது அலைபேசியில் ஆலோசனை கேட்கிறார். சொல்வதோடு சரி. 'அவங்ககிட்ட நீங்க பேசறீங்களா?' என்பார். இத்தகைய செயல்களைச் செய்யும் பொது ஒற்றை தொடர்புப் புள்ளி இருக்க வேண்டும். அனைத்து தகவல்களும் அவர் வழியாகவே பரிமாறினால்தான் குழப்பங்கள் வராது. நம்பியூர் நிகழ்ச்சிக்கு ஆசிரியர் இளங்கோ போல. ஒட்டன்சத்திரத்துக்கு விக்னேஷ். 

மேலதிக விவரங்களுக்கு அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். 

அங்கேயிருந்து பழனி மலை முப்பது கிலோமீட்டர்தான். அந்தக் காலத்தில் கொங்கு நாட்டின் தென் எல்லை அது. வடக்கே பெரும்பாலை. மேற்கே வெள்ளியங்கிரி. கிழக்கில் குளித்தலை. தெற்கில் பொதினி- பழனி. மதியம் நிகழ்ச்சி முடிந்தவுடன் முப்பாட்டன் முருகனை பார்த்து வரலாம் என்று திட்டம். 


நாள் : 28-04-2018 (காலை 9 மணி) 

இடம்:
K T திருமண மஹால்,
குழந்தை வேலப்பர் கோயில் அருகில்,
பழனி ரோடு,
ஒட்டன்சத்திரம்.

விக்னேஷ்வரன் - 9994644558/7667744558

ஒட்டன்சத்திரத்தில் சந்திப்போம்!

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

அன்பே சிவம் said...

ஏனுங் கொ.ப.செ. இப்பதான்
LETTER 'PAY'DAY அடிச்சாராமாம், இதுல பெரும வேற. எப்டித்தான் இவுரு பின்னால நிக்கிறது. நம்ம பெருமைய எப்ப மத்தவங்களுக்கு புரிய வைக்குறது.எரநூறு ஓவாக் குடுக்கவே மனசு வராத கஞ்சப் பிசுனாறி இவ்LOVEதான் சொல்ல முடியும். மத்ததெல்லாம் நீரே பாத்துக்கவும். நடு நடுவுல மானத் தமிழா, Tunglish தமிழா, funநாக்கு தமிழான்னு நீரே போட்டுக்கும்.

சேக்காளி said...

//எரநூறு ஓவாக் குடுக்கவே மனசு வராத கஞ்சப் பிசுனாறி இவ்LOVEதான் சொல்ல முடியும்//
அந்த கஞ்சப் பிசுனாறிக்கு இவ் LOVE மட்டும் போதுமாம்.
அது இருக்கட்டும். ஒமக்கு ஒடம்பு குணமாயிடுச்சா?