'அண்ணா உங்களுக்கு அன்பளிப்பு கொடுக்கணும்...யார் கொடுத்துவிட்டாங்கன்னு சொல்ல மாட்டேன்' என்று மைவிழி சொன்ன போது குழப்பம்தான். பிறந்தநாள் அன்பளிப்பாக இருக்கும் என நினைத்தேன். நான்கு தும்பி இதழ்கள். இதழின் ஆசிரியர் சிவராஜ் கொடுத்து அனுப்பியிருக்கிறார். சிறு கூழாங்கல்லையும் கொடுத்து அனுப்பி இருந்தார். அவர் எல்லோருக்குமே கூழாங்கல்லைக் கொடுப்பாராம். 'குக்கூ' காட்டுப்பள்ளி பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். சூழலியல் சார்ந்து இயங்கும் பள்ளி அது. அதை நிறுவியவர் சிவராஜ். குக்கூ பற்றியும் சிவராஜ் பற்றியும் நிறைய எழுத வேண்டும். தனியாக எழுத வேண்டும்.
கடைசியாக வெளியான இதழில் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். குரங்கணி தீ விபத்து சமயத்தில் சென்னை ட்ரெக்கிங் க்ளப் பீட்டர் வான் ஹெய்ட் பற்றி எழுதி இருந்ததற்கான நன்றி. அந்தக் கட்டுரை மிகப் பரவலான கவனம் பெற்றிருந்தது. நிறையப் பேர் அது பற்றிப் பேசினார்கள்.
பீட்டர் மாதிரியான ஆட்களைப் பார்ப்பது அபூர்வம். பெங்களூரில் அவரைச் சந்திக்கையில் - பீட்டர் தலைமறைவாக இருந்த போது ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது பெங்களூரிலும் இருந்தார். காலைச் சிற்றுண்டிக்கு வந்திருந்தவரைப் பார்த்தேன். மிகச் சோர்வாக இருந்தார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
'நீங்க ஒரு விளக்கம் எழுதுங்க' என்றேன். சிரித்தார்.
'உங்களைப் பத்தி நிறைய தப்பா பேசறாங்க' என்றேன்.
'சரிதான்..ஆனா என்னைத் தெரிஞ்சவங்க தப்பா பேச மாட்டாங்க' என்றார். சத்தியவாக்கு அது.
எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. விளக்கம் கொடுத்தால் மட்டும் இந்த உலகம் நம்பவா போகிறது? அவர் எந்த வெளிச்சத்தையும் விரும்புவதில்லை. கடந்த வாரம்தான் ஜாமீன் கிடைத்தது. இப்பொழுதும் கூட அவர் வாயே திறக்கவில்லை. அதற்கான அவசியம் இருப்பதாக அவர் நினைக்கவில்லை போலிருக்கிறது.
இந்த உலகம் சில சமயங்களில் மனிதர்களைக் கொண்டாடித் தள்ளிவிடும். மறறொரு சமயத்தில் கண்டு கொள்ளவே கண்டு கொள்ளாது. பீட்டர் இப்பொழுது மீண்டும் காடு மேடு என்று சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். தம் இருப்பைக் காட்டிக் கொள்ளாத மனிதர்களை உலகம் மறந்துவிட்டு அது பாட்டுக்கு பரபரத்துக் கொண்டிருக்கிறது.
அப்பொழுதே எழுதியிருக்கலாம். அவருக்கு பிணை கிடைத்திருக்கவில்லை. விவகாரத்தை பெரிதுபடுத்தியிருப்பார்கள். பீட்டருக்கு தாம் விரும்பும் வாழ்க்கை அமையட்டும்.
***
தும்பி அட்டகாசமான சிறுவர் மாத இதழ். இதுவரை பதினான்கு இதழ்கள் வந்திருக்கின்றன. இதழின் உள்ளடக்கம் மிக எளிமையானது. சிறார்களுக்கான ஒரு கதை- குறைந்தது பதினைந்து பக்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் கதைக்கு ஏற்ற ஓவியங்களால் நிரப்பியிருக்கிறார்கள். அந்தக் கதையின் ஆங்கில வடிவம் அடுத்த நான்கைந்து பக்கங்கள். பிறகு ஜெயமோகன், வண்ணதாசன் மாதிரியானவர்களின் சிறு கட்டுரையொன்று. அவ்வளவுதான் தும்பியின் உள்ளடக்கம். ஆனால் செதுக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வடிவமைப்பு, அச்சாக்கம், காகிதத்தின் தரம் என அட்டகாசம்.
வாசிக்கப் பழகிய குழந்தைகளுக்கும் சரிப்பட்டு வரும். நாம் வாசித்துக் குழந்தைகளுக்குச் சொல்வதென்றாலும் பொருத்தமான இதழாக இருக்கும்.
இதழ் ஐம்பது ரூபாய். சற்று விலை அதிகம் என்பது போலத்தான் தெரியும். ஆனால் விலைக்கு ஏற்ற பணியாரம். ஒன்று அல்லது இரண்டு இதழ்கள் அனுப்புவார்களா என்று தெரியவில்லை. அழைத்துக் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால், அவர்களிடம் கைவசமிருந்தால் பழைய இதழ்களையும் வாங்கிவிடலாம். கோடை விடுமுறையில் இரண்டு நாட்களுக்கு ஓர் இதழ் என்று வாசித்தாலும் கூட உருப்படியான வேலையாக இருக்கும்.
'எந்நேரமும் டிவியை பார்க்கிறாங்க' என்பதுதான் குற்றச்சாட்டு. எப்படியாவது தொலைக்காட்சியை தொலைத்துவிடுங்கள். நாம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளுக்கு அதுதான் மிகப்பெரிய விடுதலை. வானத்தைப் பார்க்கவும், பூமியில் விளையாடவும் அது மட்டும்தான் ஒரே வழி. இல்லையென்றால் கார்ட்டூன்களை மட்டுமே பார்த்து இந்த இரண்டு மாதங்களையும் வீணடித்துவிடுவார்கள்.
குழந்தைகள் வாசிப்பது மிக அவசியம். ஒவ்வொரு சொல்லும் அவர்களை யோசிக்கச் செய்யும். 'பெங்குவின் ஓடியது' என்று கண்கள் படிக்க பெங்குவின் எப்படி ஓடும் என்று மூளை கற்பனையான சித்திரத்தை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளும். ஒரு குழந்தையின் பெங்குவின் தங்க நிறத்தில் இருக்கக் கூடும். இன்னொரு குழந்தையின் பெங்குவின் பச்சை நிறத்தில் இருக்கக் கூடும். இப்படியான கட்டற்ற கற்பனை குழந்தைகளுக்கு வெகு தேவை. இதுதான் குழந்தைகளின் வளர்ச்சியில் மிக அவசியமானதும். தொலைக்காட்சி, கணினி போன்றவை அப்படியில்லை. 'பெங்குவின் இப்படித்தான் இருக்கும்...இப்படித்தான் நடக்கும்' என அறுதியிட்டுக் காட்டிவிடுகிறார்கள். குழந்தைகள் கற்பனைக் கொடி கட்டுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்துவிடுகிறது.
குழந்தைகள் வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. வாசித்த கதையை நமக்கோ அல்லது சக குழந்தைகளுக்கோ சொல்லிக் காட்ட வேண்டும். 'நீ படிச்ச கதையைப் பத்தி ஒரு குறிப்பை எழுது' என்று சொல்லி அவர்களிடம் எழுதி வாங்கினால் இன்னமும் அருமை. இயலுமெனில் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து வார இறுதி நாட்களில் நாடகமாக்கலாம். கதையை அப்படியே நாடகமாக நடத்த வேண்டும் என்பதில்லை. பட்டி பார்த்து டிங்கரிங் செய்து நம் திறமையையும் காட்டலாம். கதையின் கதாபாத்திரங்களாக மாறி குழந்தைகள் நடிக்கும் போது அவர்களின் பன்முக ஆளுமை வலுப்பெறும். கதாபாத்திரங்களை உள்வாங்குவார்கள். வசனம் பேசுவதற்கான நினைவாற்றலைப் பயன்படுத்துவார்கள். நடிக்கும் போது மேடை பயம் குறையும். நிறையச் சொல்லலாம்.
ஒரு நாடகத்துக்கு நாம் உதவினால் அடுத்த நாடகத்தை அவர்களையே தயாரிக்கச் சொல்லி மேடையேற்றலாம். தும்பிகளை வாசித்த போது இதுதான் தோன்றியது. நான்கு குழந்தைகள் இருந்தால் போதும். உருப்படியாகச் செய்துவிடலாம்.
தும்பி அதற்கு நிச்சயமாக உதவக் கூடும்.
தும்பி சிறுவர் மாத இதழ்,
60/85. அய்யங்குளம் தெரு, திருவண்ணாமலை - 606601
மொபைல்: 9843870059
மின்னஞ்சல்: thumbigal@gmail.com
3 எதிர் சப்தங்கள்:
We lost all the good old books like Ambuli Mama, Rani Comics. They are no more available now. Reading enhance the imagination and the kids now getting into all virtual media becoming more addicted into it. The one good thing we can give to a kid is, bring some reading habit in them.
Thanks for the details for the book. The price looks little high. But with less number of copies, it will be difficult for them to manage as well.
Will check with them.
Anbalippu vaangia annan mani eppothu venaalum kaithu seiyyappadalaam endru ulavutthirai thagaval..
√
Post a Comment