Apr 14, 2018

விதிவிலக்குகள்

பிறந்தநாளன்று சில்கூர்  கோவிலுக்குச் சென்றிருந்த போது ரங்கராஜனைப் பார்த்தேன். பெரும்பாலான நாட்களில் அவரை அங்கு பார்க்க முடியும். தமிழில் பேசுவார். ஓரிருமுறை பேசியும் இருக்கிறேன். சில்கூர் கோவிலின் பிரகாரம் மிகச் சிறியது. நூற்றியெட்டு சுற்று சுற்றுவது அங்கு பிரபலம். கோவிலுக்குள் நுழையும் போதே அலைபேசியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். கோவிலைச் சுற்றும் போது அடுத்தவர்களிடம் பேசக் கூடாது என்பார்கள். எந்நேரமும் ஒரு கூட்டம் கோவிலைச் சுற்றிக் கொண்டிருக்கும். பெரும்பாலான சமயங்களில் ரங்கராஜன்தான் கோவிலைச் சுற்றிக் கொண்டிருப்பவர்களை வழிமுறைப்படுத்துவார். அந்தக் கோவிலுக்குச் செல்கிற ஒவ்வொருவருக்கும் இவரைத் தெரிந்திருக்கும். 

பெருமாளைப் போற்றி சில பாடல்களை பாடுவார். பக்தர்கள் அவரைப் பின்தொடர்ந்து பாடுவார்கள். பாடல்களைவிடவும் இடையிடையே அவர் அடிக்கும் பன்ச்கள் பிரபலம். 'நோ 3 ஜி, நோ 4 ஜி, ஒன்லி பாலாஜி' மாதிரியான பன்ச். நகைச்சுவையாக எதையாவது சொல்வார். கோவிலைச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் சிரிப்பார்கள். அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கலாய்ப்பார். வித்தியாசமான அனுபவம் அது. 


இந்த முறை கோவிலைச் சுற்றிக் கொண்டிருந்த போது சுகத்துக்கும், ஆனந்தத்துக்கு வித்தியாசம் இருக்கிறது என்று அவர் பேசிக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. 

சுகம் என்பது உடல் சம்பந்தப்பட்டது. மெத்தை வேண்டும், ஏ.சி வேண்டும், நல்ல சுவையான உணவு வேண்டும் என்றெல்லாம் உடலைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதுதான் சுகம் தேடுவது என்பது. ஆனந்தம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. உடல் அடையும் வலிகளையும், வேதனைகளையும், துன்பங்களையும்  பொருட்படுத்தாமல் இறைவனை நெருங்குவதைப் பற்றி மட்டுமே மனம் சிந்தித்து மனம் பெறுகிற சந்தோசம் ஆனந்தம். 'நீங்க நூத்தியெட்டு சுத்து சுத்தும் போது கால் வலிக்கும்தான்..ஆனா மனசு பாலாஜியை நினைக்குது இல்லையா..அதுதான் ஆனந்தம்' என்றார்.

வழமையான கோவில் அனுபவத்தைத் தாண்டி எதையோ ஒன்றை அவர் உருவாக்கித் தருவதாகத் தோன்றும். 

நேற்றுதான் இரண்டு பார்ப்பனர்கள் குறித்து எழுதினேன். பாராட்டி வேறு எழுதிவிட்டேன். விடுவார்களா நம் மக்கள்? கைகூலியில் ஆரம்பித்து, சூத்திரனின் வேலையைச் சரியாகச் செய்கிறான் என்பது வரைக்கும் குதித்துத்  தள்ளிவிட்டார்கள்.  இது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இந்த உலகம் இருந்தாலும் பேசும்; செத்தாலும் ஏசும். எல்லாவற்றிலும் அரசியல் கண்டுபிடிப்பார்கள். பார்ப்பனர்களை மட்டுமில்லை யாரைக் கொண்டாடினால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது? அடுத்தவர்களைத் தூக்கி வைத்தால் என்ன செய்துவிடப் போகிறார்கள்? கிஞ்சித்தும் பலனில்லை. புரிந்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள். புரியாதவர்களைப் பற்றி கண்டு கொள்ள வேண்டியதில்லை.

'பார்ப்பான் தலித்தை கோவிலுக்குள்ளே விடுவானா?' என்று ஒருவர் கேட்டார். எல்லோரும் விடமாட்டார்கள்தான். ஆனால் விதிவிலக்குகள் உண்டு. அப்படியான விதிவிலக்குகளைச் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். நம்மூரில் பார்ப்பான் மட்டும்தான் சாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறானா? வர்ணாசிரமத்தை ஆரியர்கள் கொண்டு வந்திருக்கலாம். இங்கு எத்தனை கவுண்டனும், தேவனும், வன்னியனும் தலித்தை தம் வீட்டுக்குள் அனுமதிக்கிறார்கள்?' சூத்திர சாதியினர் தமக்கு சொந்தமான கோவிலுக்குள் தலித்தை விட்டு பூசை செய்ய அனுமதிப்பார்களா? கேட்கலாம்தான். சூத்திரர்களையும் விட்டுவிடலாம். எத்தனை ஆதி திராவிடர்கள் அருந்ததியர் வீடுகளில் பெண் எடுக்கிறார்கள்? பொறியியல் படித்த ஒரு நரிக்குறவப் பெண் இருக்கிறாள். பிற எந்த சாதிக்காரன் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறான்? இங்கு பெரும்பாலான மனிதர்கள்- அவர்கள் எந்தச் சாதியாக இருந்தாலும் தமது சாதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காற்றைவிடவும் மோசமாக சாதி சகல இடங்களிலும் ஊடுருவிக் கிடக்கிறது. அதனால்தான் விதிவிலக்குகள் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டியிருக்கிறது. 'நான் எல்லாம் மேல..கீழ இருக்கிறவனுக்கு உதவி செஞ்சுட்டேன் பார்த்தியா' என்று பட்டும்படாமலும் கெத்து காட்டுகிறவர்கள்தான் அதிகம். காலனிக்குள் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று பார்த்தால் தெரியும். தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்திருந்து தருவார்கள். 'நம் வீட்டில் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்' என்று அந்த மக்களை முழுமையாக நம்ப வைத்திருக்கிறோம். சகலரும் இப்படித்தான். 'நம்ம சாதிக்காரன்..பார்த்து பண்ணுங்க' என்று சொல்லாத சாதியே இல்லை. பார்ப்பான் பூணூலைத் தடவிப் பார்த்தான் என்று அவன் மீது கையை நீட்டி நாம் யோக்கியர்கள் ஆகிக் கொள்கிறோம்.

உண்மையில் இத்தகைய பிரச்சினைகளைக் கொஞ்ச நாட்களுக்கு எழுதவே கூடாது என நினைத்தேன். எதையாவது சொல்லி வசைபாடுவார்கள். மண்டை காய்ந்து கொண்டிருக்க வேண்டும். 

இன்றைக்கு ரங்கராஜன் பற்றி செய்தியொன்று வெளி வந்திருந்தது. 

நாளை மறுநாள் தலித் ஒருவரைத் தோளில் சுமந்து ஆந்திராவில் ஜியாகுடாவில் இருக்கும் ரங்கநாதர் கோவில் கருவறைக்குள் சென்று தலித்தை பூஜை செய்யச் சொல்லப் போகிறார். இது விதிவிலக்கான செயலாக இருக்கலாம். ஆனால் எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்?. அவரைப் பார்த்திருக்கிறேன். பேசியுமிருக்கிறேன். 

பாராட்டினால்  'இதுல என்ன அரசியல் இருக்குதுன்னு தெரியாதா?' என்பார்கள். நம்மவர்களின் நுண்ணறிவு மூளை விழித்துக் கொள்ளும். நம்மையும் போட்டு பிறாண்டித் தள்ளிவிடுவார்கள். இத்தகைய செயல்பாடுகளில் என்ன அரசியல் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஓர் அடியை எடுத்து வைக்கிறார்கள் அல்லவா? அதுதான் முக்கியம் என்பதுதான் என் நிலைப்பாடு. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்தச் சாதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காலங்காலமாக 'இது என் சாதி பெருமை' 'இதுதான் எங்கள் குலத்தின் வழிமுறை' என்று சக மனிதனைப் பிரித்து வைத்திருக்கும் மனநிலையிலிருந்து விலகி வந்து ஓரடியை முன் வைக்கும் எந்தச் சாதிக்காரனாக இருந்தாலும் மனமுவந்து பாராட்டலாம். அதன் பின்னால் என்ன சுயநலமிருந்தாலும் சரி. அரசியல் இருந்தாலும் சரி.

நாமத்தையும் திருநீறையும் பார்த்து கடுப்பாகவும் வேண்டியதில்லை, குல்லாவை பார்த்தாலே பயந்து நடுங்க வேண்டியதுமில்லை. கிறித்துவர்கள் என்றாலே மதமாற்றுகிறவர்களுமில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்துதான் கிடக்கிறார்கள். 

பிறந்தநாளன்று பெரிய மனிதர் யாருடைய காலையாவது தொட்டு வணங்கலாம் என்று நினைப்பேன்.சில்கூர் பாலாஜி கோவிலில் ரங்கராஜன் இருந்தார்.'தீவிர இந்துத்துவம் பேசுகிறவர்' என்ற எண்ணம் இவர் மீது உண்டு. இவருக்கு நம் அப்பா வயது இருக்குமா? நல்ல மனிதராக இருப்பாரா என்றெல்லாம் யோசனை தோன்றாமல் இல்லை. கடைசியில்  'இவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்..இவரைத் தொட்டுக் கும்பிடுவதா' என்று ஈகோ தடுத்துவிட்டது. 

இனி எப்பொழுது சந்தித்தாலும் தயங்காமல் தொட்டு வணங்குவேன். இந்த ஒரு செயலுக்காக 

6 எதிர் சப்தங்கள்:

raja said...

மிக எளிமையாக வாழ வேண்டிய வாழ்க்கையை மனிதர்கள் எவ்வளவு சிக்கலாக்கி விடுகிறார்கள்!

இந்த இடத்தில் ஜெயமோகனின் கருத்து ஒன்றை பகிர விரும்புகிறேன். அவர்களுக்கு மதம் என்றால் நமக்கு சாதி!

எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்து:-

"நான் பார்த்தவரையுல் மேலைநாடுகளில் யார் மதத்தில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கிறார்களோ அவர்களால் மட்டுமே பிற மனிதர்களை மதிக்கவும் சமானமாக எண்ணவும் முடிகிறது. மதநம்பிக்கை கொண்டவர்கள் பிறரை கீழானவர்களாக, பரிதாபத்துக்குரியவர்களாக எண்ணி சேவை மட்டுமே செய்ய முடியும்.

சமீபத்தில் ரயிலில் மார்ட்டின் கெர்ஜோ·ப் என்ற டச்சுக்காரரைச் சந்தித்து நண்பரானேன். அவர்தான் இந்த விஷயத்தை மிக உறுதியாகச் சொன்னார்.

மதமனநிலையை வைத்துக்கொண்டிருக்கும் வரை இந்தியர்களையோ ஆப்ரிக்கர்களையோ பிறரையோ வெள்ளையர்களால் ‘தாங்கிக்கொள்ள’ முடியுமே ஒழிய இயல்பாக சமமாக எண்ணவும் விரும்பவும் முடியாது என்றார் அவர்"

சேக்காளி said...


Yarlpavanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Muralidharan said...

கடைசி வரைக்கும் சில்கூர் எங்க இருக்குன்னு சொல்லவே இல்லையே பாஸ். கொஞ்சம் MAP location இருந்தால் share பண்ணுங்க. நன்றி.

thiru said...

https://tamil.oneindia.com/news/tamilnadu/hyderabad-priest-carries-dalit-man-into-temple-on-his-shoulders-video-going-viral/articlecontent-pf305237-317628.html

ulavan said...

Linked News http://www.bbc.com/news/world-asia-india-43807951