'உங்களுக்கு கன்னடம் தெரியுமா?'
'அதை ஏன் கேட்குறீங்க...அதைப் பழகாம ஒருத்தன் கூடவும் சண்டை போட முடியறதில்லை' - இப்படித்தான் புலம்புவேன். டிராபிக் சிக்கனல்களில் யாராவது எரிச்சலைக் கிளப்புவார்கள். வடக்கத்திக்காரன் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டும் 'உனக்கு அறிவில்லையாடா' என்று கத்திவிட்டு அவன் பதில் சொல்வதற்குள்ளாக ஓடி வந்துவிடுவேன். அப்படியும் ஏமாந்திருக்கிறேன். கன்னடர்களில் சிலர் செக்கச் செவேலென இருப்பார்கள். கொங்கணி பகுதிக்காரர்கள் மாதிரியான சிலரிடம் உணர்ச்சிவசப்பட்டு கத்திய பிறகு 'ஏன்னு பேக்கு' என்பார்கள்.
'அடங்கொன்னிமலையா நீ கன்னடமா' என்று அப்பொழுது நான் பம்முவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
'இதெல்லாம் உனக்குத் தேவையா...இனிமேல் வாயை மூடிட்டு இரு' என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு. ஆனாலும் நமக்குள்ளும் ஒரு போராளி ஒளிந்து கொண்டிருக்கிறான் அல்லவா? சரியான லோலாலயத்தான். அவ்வப்பொழுது உணர்ச்சிவசப்பட்டு என்னை மாட்டிவிட்டுவிடுவான். எங்கள் அலுவலகம் இருக்கும் எம்.ஜி.சாலையில் மாநகராட்சியே குப்பைத் குப்பைத் தொட்டிகள் நிறைய வைத்திருக்கும். ஒரு பான்பராக் வாயன் கிழித்து வாயில் போட்டுக் கொண்டு பொட்டலத்தை கீழே போட்டான். ஐடி பட்டையை கழுத்தில் மாட்டி பார்ப்பதற்கு அப்பிராணியாகத்தான் இருந்தான்.
'பெரிய ஆபத்து இருக்காது' என்ற நம்பிக்கையில் 'கீழ போடுறீங்களே..குப்பைத் தொட்டியில் போடலாமே' என்றேன்.
'உன் வேலையைப் மட்டும் பாரு...f ***கிங் இடியட்' என்றான். சுருங்கிவிட்டது-முகம்தான். இங்கு யாருக்குமே அறிவுரை சொன்னால் சுள்ளென்று வந்துவிடுகிறது. 'நாம யாரு? எவ்ளோ படிச்சுட்டு இங்க வந்து பொட்டி தட்டிட்டு இருக்கோம்? நமக்குத் தெரியாத உலக நடப்பா?' என்று உள்ளுக்குள் இருக்கும் ஈகோவை சுரண்டி விட்ட மாதிரி ஆகிவிடுகிறது. பெண்களிடமும் திட்டு வாங்கியிருக்கிறேன். கோரமங்களா சோனி வேர்ல்டு சிக்கனலில் அவள் விடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தாள். அறிவுரை புண்ணாக்கை அவளிடம் தள்ளப் பார்த்தேன். இவனாவது நான்கு எழுத்து கெட்ட வார்த்தை. அந்தப் பெண் ஏழு எழுத்தில் திட்டிவிட்டு போனாள். ஜென்மத்துக்கும் மறக்காது. நம் முகத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது என்று நொந்து போனேன்.
ஒவ்வொரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையாக விரல் விட்டு எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்காமல் மேலே படியுங்கள்.
படித்தவர்கள் ஆங்கிலத்தில் திட்டுகிறார்கள் என்றால் படிக்காத முரடர்கள் வேறு மார்க்கம். கடந்த வாரத்தில் கூட பொம்மனஹள்ளியிலிருந்து கூட்லு செல்லும் சர்வீஸ் சாலையில் இப்படித்தான். ஒருவர் ஹெல்மெட் போடாமல் செல்போனில் பேசியபடியே நடுச் சாலையில் சென்று கொண்டிருந்தார். 'பாவம்..மனுஷன் கீழே விழுந்தால் என்னவாகும்' என்ற எண்ணத்தில் அவரை முந்துவது போல முந்தி கையை நீட்டி மெல்லத் தட்டி 'ஓரமா நின்னு பேசுங்க' என்று சைகை காட்டினேன். தொட்டுச் சொல்லி இருக்கக் கூடாது போல. தீக்குச்சியை பற்ற வைத்து வீசிவிட்டேன்.
'டேய் டேய்..நில்லுடா' என்று கன்னடத்தில் கத்தினார்.
'மாட்டினோமா?' என்று பயத்தில் வண்டியை வேகம் எடுத்தேன்.
இந்தக் கருமாந்திரம் பிடித்த சாலையில் அடிக்கடி யாராவது வண்டியைக் குறுக்கே நிறுத்தி பாதையை மறித்துவிடுவார்கள். வண்டியின் பக்கக் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். அவன் செல்போனை துண்டித்துவிட்டு வேகம் எடுத்திருந்தான்.
சிக்கிவிட்டோம். அருகில் வந்தவன் 'லவடே க பால்' என்று கத்திவிட்டு 'என்னடா சொன்ன?' என்று முரட்டுத்தனமாகக் கேட்டான்.
வாயைத் திறந்தால் தமிழன் என்று காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் அந்தக் கணத்தில் அதை யோசிக்கவில்லை. என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டான் என உணர்ச்சிவசப்பட்டு 'நீதாண்டா லவடேகபால்' என்றேன். நம்மை மாட்டிக் கொடுக்க 'நீதாண்டா' போதாதா? கண்டுபிடித்துவிட்டான்.
இந்த ஊரில் நாற்பத்தைந்து சதவீதம் பேர் தமிழர்கள்தான். ஆனால் ஐடிகாரர்களைத் தவிர பெரும்பாலான தமிழர்கள் கன்னடம் பேசுவார்கள். கடந்த முறை காவிரி பிரச்சினை வந்த போது அடி வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஐடிவாலாக்கள்தான். என்னையெல்லாம் நிறுத்தி 'கன்னடத்தில் பேசு' என்றால் 'நெசரு ஏன்னு?' 'ஊட்டா ஆயித்தா?' தவிர ஒன்றும் தெரியாது. இவன் கன்னடத்தானா இல்லை தமிழனா என்று தெரியாமல் பெருங்குழப்பம். எப்படி இருந்தாலும் சிக்கினால் ஒரு அடி போட்டுவிடுவான். நான்கு பேர் கூடுவார்கள்தான். ஆனால் நல்லது செய்யத்தான் சொன்னேன் என்று எப்படிப் புரிய வைப்பது. சொன்னால் மட்டும் நம்பவா போகிறார்கள்? அப்படி நம்பினாலும் வாங்கின அடியை என்ன செய்ய முடியும்.
'தப்பிச்சுடுடா தம்பி' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு 'வாடா நீயி' என்று சொல்லிவிட்டு வண்டியை முறுக்கினேன். 'வாடான்னு சொல்லிட்டு எங்கடா போற?' என்றபடியே அவனும் முறுக்கினான்.
'ஆண்டவா குறுக்க யாரும் வந்துடக் கூடாது' என்று கிளப்பிய கிளப்பிருக்கிறதே. பின்னால் கத்தியபடியே வந்தான். என்ன கத்தப் போகிறான்? நில்லுடா நில்லுடா என்பான். அவன் என்னவோ கத்தட்டும். 'நீ வாடா..' என்று சொல்லி கையை உயர்த்தி 'வா..வா' என சைகை காட்டினேன். 'பயந்துட்டு ஓடுறான்' என்று அவன் நினைத்திருக்கக் கூடும்.
ஆனால் நாம் பந்தாவாகச் சொல்லிக் கொள்ள வேண்டும். என்னுடைய திடடமிடல் அது. ஸ்ட்ராட்டஜி. எதிரிகளை இப்படித்தான் குழப்ப வேண்டும். ஒரு கட்டத்தில் 'அங்க யாராச்சும் இவனோட ஆளுங்க இருப்பாங்களோ' என்று அவன் யோசித்திருக்க வேண்டும். எனக்கு யார் இருக்கிறார்கள்? 'கூட்லு சிக்கனலில் டிராபிக் போலீஸ் நிற்க வேண்டும்' என்று வேண்டாத தெய்வமில்லை. வழக்கமாக நிற்பார்கள்.
'ஹெல்மெட் போடல சார்...காதுல செல்போன் சார்...அட்வைஸ் பண்ணினா கண்ட கண்ட முடின்னு திட்டுறான் சார்..பேட் ஃபெல்லோ ' என்று அந்நியன் அம்பி மாதிரி புகார் தெரிவித்திருக்கலாம். அதுதான் என்னுடைய டாக்டிஸாக இருந்தது. ஆனால் நம்முடன் சண்டை போடுவதற்காக ஒருவன் எவ்வளவு தூரம்தான் துரத்துவான்? அவனுக்கே சலித்துப் போயிருக்க வேண்டும். நான் சர்வீஸ் சாலையிலேயே சென்று கொண்டிருந்தேன். அவன் பிரதான சாலைக்கு சென்றுவிட்டான். நடுவில் தடுப்பு இருக்கும். இனி அவனால் வர முடியாது. கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
வண்டியின் வேகத்தைக் குறைத்து 'இங்க வாடா' என்றேன். 'இப்போ வாடா பார்க்கலாம்' என்றேன். உடல் சிலிர்த்து கொண்டு நின்றது.
அவன் ஒரு சைகை காட்டினான் பாருங்கள். வ்யாக். வாந்தி வந்துவிடும். எனக்கு தெரிந்த சில பயங்கரமான கெட்டவார்த்தைகளைக் கத்தினேன். வண்டிச் சத்தத்தில் அவனுக்கு ஒன்றும் கேட்டிருக்காது. நூறடி தள்ளி டிராபிக் காவலர்கள் நின்றார்கள். ஆனால் பிரயோஜனமில்லை.
'இனி எவனுக்கும் அட்வைஸ் செய்யக் கூடாது' என வழக்கம் போல முடிவெடுத்துக் கொண்டேன். அப்படியே அட்வைஸ் செய்வதாக இருந்தால் ஃபேஸ்புக்கில்தான் செய்ய வேண்டும். இங்கேதான் அறிவுரைக்கெல்லாம் யாரும் திட்டமாட்டார்கள். லைக் போட்டு உசுப்பேற்றுவார்கள். அவர்களுக்கு என்ன உசுப்பேற்றி விட்டுப் போய்விடுவார்கள். அதே கெத்தில் சாலையில் அறிவுரை சொன்னால் நாம்தான் வாந்தியெடுக்க வேண்டும்.
11 எதிர் சப்தங்கள்:
அந்த ஏழு எழுத்து கெட்ட வார்த்தை என்னது? சின்னையா!
ஹெல்மெட் போடாமல் செல்போனில் பேசியபடியே நடுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை,
வாந்தி வர்ற அளவுக்கு சைகை காட்ட வைக்குறதெல்லாம் வேற லெவல் சின்னையா.
ஒரண்டை:
போன் பேசிட்டு வண்டி ஓட்டுறதே "தப்பு" ன்னா,
போன் பேசிட்டு வண்டி ஓட்டுறவன சைகை காட்ட வைக்குறது எவ்ளோ பெரிய தப்பு ?
பெங்களூருவில் ,சமூக வலைத்தளங்களில் காவேரி பற்றி எழுதும் தமிழர்களை தாக்குவதாக செய்தி. ஆனாலும் துணிஞ்சு எழுதுறீங்களே, எப்படி .?
'நெசரு ஏன்னு?'is not the right kannada word
THIS COMMENT HAS NO RELEVANCE TO THIS BLOG. I AM USING THIS SPACE ONLY FOR GIVING MY CHANGED LAND LINE NO.
I AM AVAIVLABLE FOR ANY CONSULTATION/HELP ON 'NEET' EXAM.
MY MAIL ID IS nagooo 2002@yahoo.co.uk
MY CHANGED LAND LINE NO IS 044 28472607. DALIT STUDENTS CAN CALL/WRITE TO ME AT ALL TIMES.
ANBUDAN,
M.NAGESWARAN.
ஏழு வார்த்தை கொண்ட கெட்ட வார்த்தை என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் அதை சொல்லி
அந்தப் பெண் ஏழு எழுத்தில் திட்டிவிட்டு போனாள் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில்
ஒவ்வொரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையாக விரல் விட்டு எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்காமல் மேலே படியுங்கள் என்று சொன்ன இந்த அட்வைஸ்தான் சூப்பர்
"ஒவ்வொரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையாக விரல் விட்டு எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்காமல் மேலே படியுங்கள்" I was counting actually....Hilarious...
சில வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு எழுதினாலும் சொல்ல வந்த விசயத்தை தெளிவாக உங்களால சொல்ல முடியும். அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத வார்த்தைகள்?
ஒவ்வொரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையாக விரல் விட்டு எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்காமல் மேலே படியுங்கள் AGMARK SUJATHA TOUCH
வேணாம் பாஸு, வண்டி நம்பர வெச்சி, RTOல அட்ரஸ் வாங்கி வீட்டுக்கே வந்து மெரட்டுவாங்க.
It happened with one of my friend, they knocked on the apartment door and warned the family (guy was out) about dire consequences.
யாரு கிட்ட
___ க்_ பால் இன்னொரு தடவ உன்ன MG Road பக்கம் பாத்தேன்!
பார்த்த எடத்துலயே 'குளி' தோண்டி பொதச்சிடுவேன்னு சொல்றதுதான பாஸ்.
Post a Comment