Mar 8, 2018

இன்னைக்கு வாழ்த்து இல்லையா?

எங்கள் பகுதியில் கன்னடக்காரர் வீடு காட்டுகிறார். மிகப்பெரிய மஞ்சள் சிவப்பு கொடி பறந்து கொண்டிருக்கிறது. கன்னடக் கொடி.  'டேய் நான் லோக்கல்' என்று சொல்லாமல் சொல்கிறார். வட கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தை குடி வைத்திருக்கிறார்கள். கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள். கணவனும் மனைவியும் கட்டிடத்தில் வேலை செய்வார்கள். குழந்தைகள் மணல் மீது விளையாடிக் கொண்டிருப்பார்கள். பையன் பெரியவன். ஐந்து வயது இருக்கும். பகலில் கட்டிட வேலை. இரவில் கட்டிடத்துக்கான காவலர்கள்.

ஆரம்பத்தில் கட்டிடத்துக்கு அருகில் குடிசை போட்டிருந்தார்கள்.  நான்கு மாடிக் கட்டிடம் அது. முதல் தளம் தயாரானதும் அங்கே மாறிவிட்டார்கள். சிவாவிடம் எப்பொழுதாவது பேசுவேன். 'இடம் மாறிக் கொண்டேயிருந்தால் குழந்தைகளை எப்படி படிக்க வைப்பீர்கள்?' என்று கேட்டால் அவரிடம் பதில் இருக்காது. சிரித்துக் கொண்டு நகர்ந்துவிடுவோம். இந்தக் கட்டிடத்தின் வேலை முடிந்தால் சட்டி பானையைத் தூக்கிக் கொண்டு இன்னொரு கட்டிடத்துக்கு இதே வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பெருநகரங்களில் இத்தகைய மனிதர்கள் நிறைய உண்டு. பொடியன்கள் ஆரமபத்தில் அங்கேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். சற்று பெரியவர்களானதும் சித்தாள் ஆகிவிடுவார்கள். 

சிவாவைவிடவும் அவரது மனைவிக்குத்தான்  நிறைய வேலை. மஞ்சுளா. கட்டிடத்தில் வேலை செய்ய வேண்டும். அவ்வப்பொழுது கீழே வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் வேறொரு வீட்டில் பணிப்பெண்ணாகவும் இருந்தார். பொதுவாகவே பெண்களுக்கு வேலை அதிகம்தான். இல்லையா? அதுவும் வேலைக்குச் செல்கிற பெண்ணாக இருந்தால் வீட்டையும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளையும் கவனித்து, வேலைக்கும் சென்று வந்து- எல்லாக் காலத்திலும் இப்படித்தான். எல்லாத் துறையிலும் இப்படித்தான். 

உடம்பில் தெம்பு இருக்கும் வரைக்கும் அமத்தா  தோட்டத்தில் பாடுபட்டார். கடுமையான உழைப்பு. 'வேலைக்கு போற பொம்பளைங்க வளர்க்கும் பிள்ளைகள் உருப்பட மாட்டார்கள்' என்று யாரோ சொன்னதையெல்லாம் காதில் வாங்கி கொண்டு அம்மா உழைத்தார். அமத்தா, அம்மா காலத்துக்கு இப்பொழுது பரவாயில்லை என்பது ஒருவிதமான ஜஸ்டிபிகேஷன் மட்டும்தான். இன்றைக்கும் பெண்கள் அப்படிதான் இருக்கிறார்கள். பிரச்சினைகளின் பரிமாணங்கள் வேறு. ஆனால் அழுத்தங்கள் அதிகம்.

எங்கள் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு பெண் இருந்தார். கடுகடுவென்றுதான் பேசுவார். யாரிடமும் அவர் முகம் கொடுத்து பேசுவதில்லை. எள்ளும் கொள்ளும் முகத்தில் பொரியும். அந்தப் பெண் அம்மாவிடம் சிரித்துப் பேசுவதை பார்த்திருக்கிறேன். 'சின்ன வயசுலயே புருஷன் செத்துட்டான்...பாவம்..கொஞ்சம் சிரிச்சா கூட நாய்கள் சும்மா இருப்பானுகளா?' என்று அம்மா சொன்னார். நாய்கள் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தினார்.

பெண் விடுதலை என்று நினைத்து நாம் அளித்துக் கொண்டிருப்பது உண்மையான விடுதலையா என்பதை பெண்கள்தான் சொல்ல வேண்டும். எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் வீட்டில் கணக்குச் சொல்லியாக வேண்டும். தாம் ஆசைப்பட்ட ஒன்றை  'அது எதுக்கு வேஸ்ட்டா' என்று கணவன் கேட்டால் அதைத் தவிர்க்கத்தான் வேண்டும். 'எதுக்கு தேவையில்லாம சிரிக்கிற' 'அவன் கூட ஏன் பேசுற' என்று கேட்டால் கத்தரித்துவிட்டாக வேண்டும். நேரடியாக இல்லையெனிலும் மறைமுகமாக, நாசூக்காக இங்கே பெண்களுக்கு பெரும் தடுப்பணைகள் உண்டு.

வீட்டுக்கு வீடு வாசப்படி. 

எல்லைகளை மீறி, தடைகளைத் தாண்டுகிற பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தனை வசைகளையும் தாங்கி கொள்ள வேண்டும். 'பொண்ணா அவ' என்ற கேள்வியை எதிர்கொண்டாக வேண்டும். இந்தச் சமூகமே முன் வந்து கொடுத்திருக்கும் சுதந்திரம் என்பது சொற்பம். 

ஒரு பெண் பெண்ணாக வாழ்வது அவ்வளவு சுலபமில்லை. 'நீ சார்ந்துதான் இருக்க வேண்டும்' என்பதை அழுந்த விதைத்துவிடுகிறோம். அது எவ்வளவு வயதானாலும் சரி. அப்பா இறந்த பிறகு அம்மாவுக்கு கடுமையான மன அழுத்தம் உருவானது. தன்னந்தனியே அழுவார். அடுத்தவர்கள் மீது கோபப்படுவார். இரவில் பசியில்லை. உறக்கம் குறைந்து போனது. 'அப்பாவின் இழப்பு' தான் காரணம் எனச் சாதாரணமாக இருந்தேன். ஆனால் இதில் எதோ பிரச்சினை இருக்கிறது எனது தோன்றி மருத்துவர்களை அணுகினோம்.  'டிபெண்டெண்ட்டாவே இருந்துட்டாங்க..அதான் பிரச்சினை' என்றார் மருத்துவர். 

மஞ்சுளாவையும் சிவாவையும் வெகு நாட்களாகக் காணவில்லை. குடும்பம் இடம் மாறிவிட்டது என நினைத்திருந்தேன். ஆனால் சிவா இறந்துவிட்டாராம்.ஊருக்குச் சென்றிருந்த போது வயிற்று வலி. வைத்தியம் பலிக்காமல் இறந்து போனதாகச் சமீபத்தில் சொன்னார்கள். 'அந்தப் பொண்ணு என்னங்க பண்ணுறா?' என்றேன். 'தெரியலை' என்றவர் 'இங்க எப்படிங்க தனியா இருக்க முடியும்? ஊருக்கு போயிட்டா' என்றார். எந்த ஊர் என்கிற விவரமெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. அவள் தனியாக இருப்பது சாத்தியமில்லை. அவ்வளவுதான். 

ஆயிரம் குறைகள் இருப்பினும் யாருமற்ற தனிமையில்  கண்களை மூடி ஒரு வினாடி யோசித்துப் பார்த்தால் மனதளவில் நெருக்கமான எந்தப் பெண்ணுமே நம் கண்களை கசியச் செய்துவிடுவாள். 

இன்று எங்கள் அலுவலகத்தில் பெண்கள் தினம் கொண்டாடுகிறார்கள். பெண்கள் சேலை அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மதிய உணவையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முடித்துவிட்டு ஒரு சிறு ஓய்வு. அதன் பிறகு ஏதோவொரு ரிஸார்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதெல்லாம் எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்த பெண்களாவது அனுபவிக்கட்டும். 

வாழ்த்து என்றெல்லாம் எதுவும் தனியாக இல்லை. ஆண்களுக்கு இணையாக வாழ்க!

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பெண்கள் தினம் கொண்டாடுகிறார்கள். பெண்கள் சேலை அணிந்து வந்திருக்கிறார்கள்.//
சேல கட்ட லேன்னா இது பொண்ணு இல்ல. வேற யாரோ ன்னு மணி வாழ்த்து சொல்ல மாட்டாராமாம்.

சேக்காளி said...

//எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் வீட்டில் கணக்குச் சொல்லியாக வேண்டும். தாம் ஆசைப்பட்ட ஒன்றை 'அது எதுக்கு வேஸ்ட்டா' என்று கணவன் கேட்டால் அதைத் தவிர்க்கத்தான் வேண்டும். 'எதுக்கு தேவையில்லாம சிரிக்கிற' 'அவன் கூட ஏன் பேசுற' என்று கேட்டால் கத்தரித்துவிட்டாக வேண்டும்//
எல்லா வீட்டிலும் அப்படி இல்லை.

Anonymous said...

ஆயிரம் குறைகள் இருப்பினும் யாருமற்ற தனிமையில் கண்களை மூடி ஒரு வினாடி யோசித்துப் பார்த்தால் மனதளவில் நெருக்கமான எந்தப் பெண்ணுமே நம் கண்களை கசியச் செய்துவிடுவாள்.

Excellent!

Anonymous said...

If we set aside the male chauvinistic ego and weigh the qualities, capabilities of women, particularly regarding family, Women outweigh men. They shouldn't fight to be equal to men, as they are better than men.

-Somesh