Mar 5, 2018

உதிரிகள்

அட்டகாசம். 

சனிக்கிழமையன்று பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. 

அரவிந்த் குமார் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்றவன். அரவிந்தின் அம்மாவும் கூட்டத்துக்கு வந்திருந்தார். முதன் முறையாக தமது மகனுக்காக உதவி கேட்க வந்திருந்த போது தனது இயலாமையை நினைத்து அழுதார். நேற்று தனது மகனை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று சந்தோஷத்தில் அழுது கொண்டிருந்தார். அவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். 


அரவிந்த் தனது கண்டுபிடிப்பை கூட்டத்துக்கு விளக்கிய போது 'கூட்டத்தில் இவ்வளவு தெளிவா பேசறான் பாருங்கண்ணா' என்று பக்கத்தில் அமர்ந்திருந்த கிரி சொன்னார். ஆமாம், அவ்வளவு சந்தோசம் எனக்கும். இனி அரவிந்த் பற்றி பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை. மேலே வந்துவிடுவான்.

தமிழரசன் யோகா செய்து கட்டினான். யோகாவில் தேசிய அளவில் வென்றவன். சார்லியும், விக்னேஷூம், பெரியசாமியும் சிலம்பம் ஆடினார்கள். குங்ஃபூ செய்து காட்டினார்கள். நான்கு பேரும் எம்.ஜி. ஆர் காலனியைச் சேர்ந்தர்வர்கள். அந்தக் காலணியிலிருந்து ஒரு கூட்டமே வந்திருந்தார்கள். தமது பிள்ளைகள் பாராட்டு பெறுவதை பார்க்க வந்திருந்தவர்கள். 

அந்தக் காலனியின் தலைவர் பேசினார். 

அவருக்கு இதுதான் முதல் மேடை. 'என்னை எல்லாம் மேடை ஏத்தி இருக்கீங்க' என்று ஆரம்பித்து கோர்வையாகப் பேசினார். 'இன்னைக்கு எங்க பிள்ளைகள் இவ்வளவு தூரம் வந்திருக்காங்கன்னா அது உங்களாலதான்' என்றார். இறுதியில் பேசும் போது பதில் சொன்னேன். நிசப்தம் இயங்கும் முறை, வாசகர்கள் கொடுக்கும் பணம் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டு 'இதில் என் பங்களிப்பு பயனாளிகளைக் கண்டுபிடிப்பது மட்டும்தான். எல்லாக் காலத்திலும் நான் இப்படியே இருக்க விரும்புகிறேன். உங்கள் நன்றிகள் அனைத்தும் நன்கொடையாளர்களுக்கு உரித்தாகட்டும்' என்றேன். 

அந்தக் காலனியிலிருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர்கள் மூன்று பேர்களை உருவாக்கியிருக்கிறோம். இன்னமும் முழுமையாக உருவாக்கவில்லை. கொல்கத்தாவில் பயிற்சி பெற்று திரும்பியிருக்கிறார்கள். இனி அவர்களுக்கான வேலையைத் தேட வேண்டும். அதே காலனியில் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கிறோம். நூலகம் அமைத்து தரப்பட்டிருக்கிறது. அந்த காலனிக்கு ஒரு கணினியைக் கொடுத்திருக்கிறோம். மருத்துவர்களை அழைத்துச் சென்று விழிப்புணர்வு கொடுத்திருக்கிறோம்.  இன்னமும் நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் மனதிலிருந்து பேசினார் காலனியின் தலைவர். அந்த இனக்குழுவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இன்னமும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது.

விளையாட்டு போட்டிகளை பொறுத்தவரையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. பெரும்பாலும் அங்கீகாரம் பெற்ற சங்கங்கள்தான் போட்டிகளை நடத்துகின்றன. போக்குவரத்து செலவு வெகு அதிகம். தங்குவதற்கும் உணவுக்கும் போட்டியாளர்கள்தான் செலவு செய்ய வேண்டும்.  பணக்காரர்களால் தம் குழந்தைகளை போட்டிகளுக்கு அனுப்பி வைக்க முடிகிறது. தினக் கூலிகளால் அதைச் செய்ய முடிவதில்லை. 'அவ்வளவு செலவு செய்ய முடியாது' எனச் சொல்லிவிடுகிறார்கள். தேசிய அளவிலான போட்டிகளுக்குக் கூட இல்லாதவர்களின் குழந்தைகள் செல்ல முடியாததற்கு இது முக்கியமான காரணம். சார்லி தேசிய அளவிலான கத்திச் சண்டையில் வென்றிருக்கிறான். ஆனால் அவனிடம் ஒரு கத்தி கிடையாது. 'ஏற்பாட்டாளர்களே கத்தி கொடுத்தாங்க சார்' என்றான். கத்தி இல்லாததால்தான் சிலம்பம் நடத்திக் காட்டினான். சிலம்பத்துக்கு மூங்கில் குச்சி போதுமல்லவா? விளையாட பணம் அவசியம். பணம் இருப்பவர்கள் விளையாடுவதில்லை. விளையாடுகிறவர்களிடம் பணமிருப்பதில்லை. 

திவ்யா என்ற குட்டிப் பெண்ணையும் நிகழ்வில் பாராட்டினோம். ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். செஸ் வீராங்கனை. அவளது அப்பா தையல் தொழிலாளி. அவள் போட்டிக்கு சென்று வருவதற்கான உதவிகளை நிசப்தம் செய்கிறது. அவள் மாவட்ட அளவிலான போட்டியில் வென்று மாநில அளவிலான போட்டியில் தோற்றுப் போனாள். வயது இருக்கிறது. அவள் அடைய வேண்டிய உயரமும் நிறைய இருக்கிறது.


இந்திய இராணுவத்தில் பணியாற்றும் அபிநயா சிறப்பு விருந்தினர். இந்த மாணவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே பயிற்சியளித்திருக்கிறார். பவானி நதி நீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சத்தியசுந்தரி தலைமை விருந்தினராக இருந்தார். வேறு யாரும் மேடையில் அமரவில்லை. 


பாராட்டுக் கூட்டத்துக்கு நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். வெளியூர்களில் இருந்தெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள். ஈரோடு, காங்கேயம், திருப்பூர் என்று பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தார்கள். எனக்கு அதுதான் மிக ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லவே விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை. இவ்வளவு மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறேன்.





   

ஆசிரியர் அரசு தாமஸ் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார். மருத்துவர் கார்த்திகேயன், ஆசிரியர் வின்சென்ட், திவ்யாவின் தலைமையாசிரியர் உஷா, ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் என இன்னமும் சிலரும் பேசினார்கள். நிகழ்வு முடிந்து பேருந்து ஏறிய போது மனதுக்கு நிறைவாக இருந்தது. அந்த மாணவர்களுக்கு இது நிச்சயமாக உற்சாகத்தைக் கொடுத்திருக்கும்.

கூட்டம் நடத்துவதற்கான அரங்கினை வைரவிழா பள்ளியின் நிர்வாகத்தினர் கொடுத்து உதவினார்கள். தேநீருக்கான பணத்தை நிலாச்சோறு உணவகத்தின் உரிமையாளர் சங்கர் கொடுத்துவிட்டார். நிறைய நல்லவர்களின் நம்பிக்கையைச் சேகரித்திருக்கிறேன். எளிய மனிதர்களுக்கு கை கொடுத்து தூக்கிவிடும் நல்ல வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இன்று கூட ஒரு மாணவியிடம் பேச வேண்டியிருந்தது அம்மா சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். சமீபத்தில் அப்பாவும் தவறிப் போனார். அவள் பொறியியல் கல்லூரியில் படிக்கிறாள். தம்பி ப்ளஸ் டூ. பொருளாதார ரீதியில் சிரமப்படுகிறார்கள்.  

'என்ன செய்யறதுன்னு தெரியல' என்றாள். 

'நீ கவலைப்படாம படி. அவன் படிக்கட்டும்.. பார்த்துக்கலாம்' என்று சொல்லியிருக்கிறேன். அது என்னுடைய சொற்கள் இல்லை. பின்னால் நிற்கும் ஆயிரக்கணக்கானவர்களின் சொற்கள் அவை. யாருக்கோ கடனாகக் கொடுத்த பணம் திரும்பி வரும் போது 'அது வரவே வராதுன்னு நினைச்சேன்..வந்துடுச்சு...அதான் நிசப்தம்ல போட்டு விட்டேன்' என்று கோவில் உண்டியலில் பணம் போடுவதைப் போல நிதி கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள். பொய் சொல்லவில்லை. இதையெல்லாம் சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள். 

இப்படியே இருந்து விட வேண்டும்- எப்பொழுதும்  உதிரியாகவே.

ஆற்றின் போக்கில் விழுந்த இலை பத்து எறும்புகளைச் சுமந்து இடம் மாற்றி விடுவது போல எந்தச் சார்புமின்றி நம் போக்கில் போய்க் கொண்டிருப்போம். தத்தளிக்கும் எறும்புகளை எல்லாம் கரையாற்றிவிடுவோம். அதற்குத்தான் இந்தப் பிறவி கிடைத்திருக்கிறது எனத் தோன்றுகிறது. அப்படி இருப்பதுதான் வாழ்க்கையின் அர்த்தமாகவும் இருக்கும். 

5 எதிர் சப்தங்கள்:

Unknown said...

சிறப்பான பணிகள் வாழ்த்துக்கள் தங்கள் குழுவின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

I FEELS LIKE....

Dr. Garbage

vijay said...

வாழ்த்துக்கள்

Malar said...

ஆற்றின் போக்கில் விழுந்த இலை பத்து எறும்புகளைச் சுமந்து இடம் மாற்றி விடுவது போல எந்தச் சார்புமின்றி நம் போக்கில் போய்க் கொண்டிருப்போம். //ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..

சேக்காளி said...

// சார்லி தேசிய அளவிலான கத்திச் சண்டையில் வென்றிருக்கிறான். ஆனால் அவனிடம் ஒரு கத்தி கிடையாது//
சொந்தமாக கத்தி இன்றியே கத்திச் சண்டையில் வெற்றி.
பயிற்சி எல்லாம் எப்படி?
எத்தனையெத்தனை கவனகுவிப்பு இருந்திருந்தால் இது சாத்தியப் பட்டிருக்கும்.
இனி இந்த ஏகலைவ வாரிசுகளை துரோ(க)ண கழுகுகளிடமிருந்தும் (அடை)காத்து வளர்த்தெடுக்க வேண்டும்.
வளர்த்தெடுப்போம் மணியோடு இணைந்து.