Mar 2, 2018

மேய்ச்சல்

விகடன் நன்றாக இருப்பதாக குங்குமம் இதழின் ஆசிரியர் கே.என்.சிவராமன் எழுதியிருந்தார். எவ்வளவு நல்ல மனம்? அவர் அப்படிதான். நன்றாக இருந்தால் வகை தொகையில்லாமல் பாராட்டிவிடும் சுபாவம் அவருக்கு. கொட்டினாலும் ஓங்கிக் கொட்டி விடுவார். அவர் குறிப்பிடும் புத்தகங்களை வாசித்து திரைப்படங்களைப் பார்த்துவிடுவேன். 

விகடனை வாசித்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. வாசிக்கக் கூடாது என்றில்லை.பத்து வருடங்களுக்கு முன்பாக பெங்களூர் வந்த போது நிறைய இடங்களில் வாரப் பத்திரிக்கைகள் கிடைக்கும். இப்பொழுதெல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்டன.  தேட வேண்டியதாக இருக்கிறது. 

அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போது வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றால் அல்சூர் வரைக்கும் நடக்க வேண்டும்.  இல்லையென்றால் வீட்டுக்கு வரும் வழியில் கோரமங்களாவில் ஒரு கடையில் வாங்கி கொண்டிருந்தேன். இப்பொழுது அங்கும் இருப்பதில்லை.

'விக்கறதில்லை' என்கிறார் கடைக்காரர். இத்தனைக்கும் அது பெட்டிக் கடைதான். 

'வாங்கி வெச்சுக்குங்க...விக்கலைன்னா திருப்பிக் கொடுத்துடலாம்ல' என்று கேட்டால் 'ரிட்டர்ன் எடுத்துக்குவாங்க..ஆனா தேவையில்லாம ஏன் வாங்கி வைக்கணும்?' என்கிறார். தமிழ் மட்டுமில்லை- பிற மொழி பத்திரிகைகளுக்கும் இதுதான் நிலைமை என்றார். அவரிடம் வேறு என்ன பேசுவது?

புத்தகக் கண்காட்சிகளை ஒவ்வொரு ஊராக நடத்தி புத்தக விற்பனையை ஓரளவுக்கு உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் பத்திரிக்கைகளின் வியாபாரம் பெரிய சவால்தான். புதிய பத்திரிக்கைகள் சமீப காலத்தில் கூட நிறைய முளைத்தன. ஜனனம், ஜன்னல் என்று சில பத்திரிக்கைகளின் பெயர்கள் நினைவில் இருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும்தான் தாக்குப் பிடிக்கிறார்கள். 

கோரமங்களாவை விட்டால் அடுத்து பொம்மனஹள்ளிதான். அங்கே சஞ்சிகைகள் கிடைக்கின்றன. ஆனால்  குமுதம், விகடன் மற்றும் குங்குமம் மட்டும்தான். ஜூ.வி எல்லாம் கிடைப்பதில்லை. 

கடைக்காரர் புலம்புகிறார். 'முன்னாடியெல்லாம் முப்பது நாப்பது காப்பி விக்கும். இப்போவெல்லாம் பதினஞ்சு கூட விக்குறதில்லை'  என்பது அவரது பாட்டு. இத்தனைக்கும் அது முக்கியமான இடம். கே.பி.என் பேருந்து அலுவலகத்துக்குப் பக்கத்துக் கடை. ஒரு நாளைக்கு ஐநூறு பேராவது வந்து போவார்கள். அத்தனை பேரும் பேருந்தில் பயணிக்கிறவர்கள்தான். இத்தனை கூட்டத்தில் வெறும் பதினைந்து பேர்தான் சஞ்சிகைகள் வாசிக்கிறார்கள். அதுவும் ஒரு வாரம் முழுக்கவும் சேர்த்து. 

'வெள்ளிக்கிழமை சாயந்திரமும் அப்படித்தானா?' என்றேன். வார இறுதி என்பதால் அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்கும்.

'நீங்களே பாருங்க...ஒருத்தராச்சும் மொபைல் நோண்டாம இருக்காங்களா?' என்றார். சிரித்தேன். 

வெள்ளிக்கிழமை என்றால் நான்கைந்து கூடுதலாக விற்கிறதாம். பத்திரிக்கைகளின் விற்பனைப் பிரிவை பார்த்துக் கொள்பவர்களிடம் கேட்டால் பதில் சொல்வார்களா என்று தெரியவில்லை. பெங்களூரில் மட்டும் இப்படி இருக்க வாய்ப்பில்லை. பரவலாகவே இதுதான் சூழலாக இருக்க வேண்டும். 

வாசிப்பதற்கும் மேய்வதற்கு வித்தியாசம் இருக்கிறது. 

'வீ ஆர் நாட் ரீடிங்'  என்று மேலாளர் ஒரு கூட்டத்தில் கடித்தார். 'ஒழுங்கா மின்னஞ்சலைக் கூட நீங்க படிக்கறதில்லை' என்பதான கடித்தல் அது.

அப்படி மாறிவிட்டோம். வாசிப்பு என்பதும் பயிற்சிதான். வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் கவனம் செலுத்தி  வாசிப்பவர்களும் உண்டு. நடுநடுவே சில வரிகளை விட்டுத் தாவி 'இது என்ன சொல்ல வருது' என்று மட்டும் புரிந்து கொள்பவர்களும் உண்டு.  விகிதாச்சார அடிப்படையில் இரண்டாம் வகையினரின் எண்ணிக்கை மிக அதிகம். எல்லாவற்றையும் மேம்போக்காக பார்த்து சிரித்துவிட்டு அல்லது உச்சுக்கொட்டிவிட்டு அடுத்த ஒரு விஷயத்துக்கு தாவிவிடும் மனநிலை பலருக்கும் ஒட்டிவிட்டது. 

கடந்த தலைமுறை ஆட்கள் வெகு நுணுக்கமாக வாசிப்பார்கள். அவர்களுக்கான வாசிப்பு பயிற்சி அப்படி. இன்றைக்கு எதையும் ஆழ்ந்து படிக்க வேண்டியதில்லை. மனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. வாசிப்பு பயிற்சி வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதில் சரி தவறு என்றெல்லாம் எதையும் சொல்ல முடியவில்லை. காலம் அப்படி. நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பம் அப்படி. காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப மனிதர்கள் மாறுவார்கள். மனிதர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. 

ஃபேஸ்புக்கில் கூட நான்கு வரிகளை விட அதிகமாக எழுதினால் வாசிக்காமல் தாண்டிச் செல்கிறவர்கள்தான் அதிகம். இன்றைய சஞ்சிகைகள் சந்திக்கும் சவாலும் இதுவாகத்தான் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் துணுக்குகளாக மாற்றிவிடும் உலகம் இது. எவ்வளவு பெரிய சீரியஸ் விஷயத்தையும் இரண்டு வரிகளில் நக்கல் அடித்தும் வடிவேலுவின் ஒற்றைப் படத்தை மீமாக்கி கலாய்ப்பதும் மிகச் சாதாரணமாகியிருக்கிறது. விரலை தேய்க்கிற வேகத்தில் விஷயங்களை உள்வாங்கிவிட வேண்டும். 

இத்தகைய மேய்ப்பு சூழலில் விகடனும் குமுதமும் குங்குமம் தம் கட்டி நிற்பது பெரிய காரியம். கே.என்.எஸ் குறிப்பிட்டது போல விகடன் லே-அவுட்டில் மெனக் கெடுக்கிறார்கள். இந்த வாரம் சரவணன் சந்திரன், அதிஷா உள்ளிட்ட ஏழு பேர்களின் புதிய தொடர்கள். ஈர்ப்பை உருவாக்குகிறார்கள். இன்றைக்கு பேருந்தில் வாசிக்க நிறைய இருக்கிறது. 

11 எதிர் சப்தங்கள்:

thiru said...

நீங்களே பாருங்க...ஒருத்தராச்சும் மொபைல் நோண்டாம இருக்காங்களா?'
...என்ன பாஸ் பண்ண.. உங்க பதிவு படிக்க மொபைல் தான்...

Ramesh L said...

எல்லாரும் இணையத்தில subscription வச்சி இருக்கலாம். நான் 15 வருடங்களா குமுதம், விகடன் துக்லக் கல்கி எல்லாம் இணையத்திலதான் வாசிக்கறேன்.

saranya Mohankumar said...

ஆன்லைன் சந்தாதாரர்கள் அதிகம் ஆகிவிட்டனர் அண்ணா . அதனால தான் விகடனும் குமுதமும் வெப் அண்ட் மொபைல் ஆப்ப விட்ருக்காங்க .
நானுமே விகடனை ஆன்லைனில் தான் படிக்கறேன். வாராவாரம் வேள்பாரி படிக்க வியாழக்கிழமைக்காக காத்திருக்கேன்.
இங்க லண்டன்ல சில கடைகள்ல தான் கிடைக்கும் . கிடைச்சாலும் விலை ரொம்ப அதிகமா இருக்கு . ஆனாலும் விகடனை கைல எடுத்து படிக்கற சுகமே தனி. நான் எழுத்து கூட்டி படிக்க காத்துக்கிட்டதே விகடனும் குமுதமும் படிச்சு தான்.

அன்பே சிவம் said...

நல்ல மனம் வாழ்க.
நேர்மையோடு உண்மையை உரைத்த உம்மனமும் வாழ்க. கரித்தாலும் கேலி புரிந்தாலும் நமக்காக அல்ல நம் மக்களுக்காக நீர் புரியும் தொண்டு நிச்சயம் பலம் பெறும்.

Anonymous said...

Tamil and all language weekly books are selling at hosa road junction signal also

Selvaraj said...

Ramesh & Saranya Mohankumar சொன்னதுபோன்று ஆன்லைன் சந்தாதாரர்கள் அதிகமாகியிருப்பார்கள்.

சேக்காளி said...

//இன்றைக்கு பேருந்தில் வாசிக்க நிறைய இருக்கிறது. //
இந்த வார விகடன் வாங்கிட்டாராமாம்.
என்ன அவைத்தலைவா!!! அந்த பரிசு தொகை ஒரு லெச்சம் பஞ்சாயத்து நல்ல படியா முடிஞ்சிருக்குமோ?

Karthik R said...

Inside St. John’s hospital near to canteen there is a magazine shop. There is a good collection, try it.

Anbu Bala said...

Sir, I am online member for Vikatan from 2000 or 2001. Online Vikatan was free till 2007. After that I got 10 yrs membership for just $100.Online membership is worst for Kumudam. I paid $50 for 2 yrs. Lot of my friends are using online membership for so many years.

kulasekaran said...

We can all vikatan books near Bommnahalli Signal.

Sathya said...

Dear Mani,

Near Bommanahalli Signal, One shop was there, I got Vikatan, Kumudham and Junior Vikatan..

But the shop also closed due to Metro work.

Bad situation in Bangalore...