Mar 19, 2018

நீ பேசாத

எங்கள் பள்ளிக்கூடத்தில் இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள். ஜென்மப் பகை. இரண்டு பேருமே ட்யூஷன் எடுப்பார்கள். இவரிடம் டியூஷனுக்கு போகிற மாணவர்களை அவர் மொத்துவார். அவரிடம் ட்யூஷன் படிக்கிறவர்கள் இவரிடம் மாட்டுவார்கள். ரகளையாக இருக்கும். தெரியாத்தனமாகக் கூட ஒரு வாத்தியாரின் பெயரை இன்னொரு வாத்தியாரிடம் சொல்ல மாட்டோம். அதெல்லாம் தனிக்கதை. எதற்குச் சொல்கிறேன் என்றால் ரத்தக் களறியாகிக் கிடைக்கும் பூமியில் எந்தப் பக்கமும் சிக்கிக் கொள்ளக் கூடாதாம். நிறைய அறிவுரைகள். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கச் சொல்கிறார்கள். அக்கறையில்தான் சொல்கிறார்கள். ஆனால் அது எப்படி சாத்தியம்?  இங்கு எந்த மனிதனுக்குத்தான் அரசியல் விருப்பு வெறுப்புகள் இல்லை? எந்த மனிதனுக்குத்தான் அரசியல் பற்றிய கருத்துக்கள் இல்லை. யாராவது வசைபாடுவார்கள் என்பதற்காக 'வெளிய பேசாத' என்பது எவ்வளவு அபத்தம்?

பொதுவெளியில் கருத்துச் சொல்லும் போது  'அவரைப் பற்றிச் சொன்னால் இவர்களுக்குப் பிடிக்காது' 'இதைப் பற்றிப் பேசினால் அவர்கள் கடுப்பாவார்கள்' என்று நினைத்து நம் வட்டத்தைச் சுருக்கிக் கொண்டால் எதை பற்றியுமே பேச முடியாது. 'நாமுண்டு நம் வேலையுண்டு' என்று குண்டுச் சட்டிக்குள்ளாக குதிரையோட்ட வேண்டியதுதான். யாரிடமும் வசை வாங்காமல் இருக்க வேண்டுமானால் 'மழையை மழையைப் போலவே பெய்தது' என்று ஜல்லியடிக்கலாம். 'எங்கள் வீட்டில் நேற்று தட்டைக்கொட்டை சாம்பார்' என்று நீட்டி முழக்கலாம். மற்றபடி அரசியல் சார்பான எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. இங்குதான் ஒவ்வொரு தலைவரையும் ஒரு சட்டகத்திற்குள் மாட்டி வைத்திருக்கிறார்களே. எல்லாவற்றையும் முரட்டுத்தனமாக ஆதரிக்கும் ஒரு கூட்டம் இருக்கும். 

எனக்கு எந்தச் சித்தாந்தம் மீதும் வலுக்கட்டாயமான பிடிப்பு இல்லை. எந்தத் தலைவர் மீதும் அசைக்க முடியாத அபிமானமுமில்லை. ஒரு தலைவரை இறுகப்பற்றிக்  கொண்டால் அவர் என்ன செய்தாலும், பேசினாலும் முட்டுக் கொடுக்க வேண்டும். 'ஆமாம் சாமி' என்று ஒத்தூத வேண்டும். அதே போல ஒரு சித்தாந்தத்தைப் பின்பற்றினால் அதை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அது சாத்தியமா? தம்மையொரு இடதுசாரி என்று அறிவித்துவிட்டு முதலாளியாக தொழில் நடத்துகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தலித்தியம் பேசியபடியே தலித் மக்களிடம் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வயிறு வளர்க்கிறவர்கள் இருக்கிறார்கள். காந்தியவாதி வேடம் போடும் ரவுடிகள் இல்லையா?

யாரைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு சித்தாந்தத்தைப் பின்பற்றி அதையொட்டி இம்மிபிசகாமல் வாழ்கிற சூழல் இங்கு இல்லை. உலகம் வெகுவாக மாறிவிட்டது. தொண்ணூறுகளுக்குப் பிறகாக உலகமயமாதலும், தாராளமயமாதலும் ஏகப்பட்ட மாறுதல்களைக் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றன. ஒற்றைச் சித்தாந்தம் மட்டுமே சாத்தியமில்லை. ஒவ்வோர் சித்தாந்தத்தையும் நாம் நம்முடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு நிலவுகிற அரசியல், சமூகக் காரணிகளோடு சேர்த்து உள்வாங்க வேண்டியிருக்கிறது. அதற்காக உரையாடுவதற்கான அவசியமும் இருக்கிறது. 

இனியெல்லாம் ஒன்றைப் பற்றி தீர்ப்பு எல்லாம் எழுத வேண்டியதில்லை. உரையாடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று சொன்னால் கூட போதும். 'நீ பெரியாரை முழுசா படி' என்பார்கள். காந்தியை விமர்சித்தால் 'நீ காந்தியை முழுசா புரிஞ்சுக்கல' என்பார்கள். அப்படிச் சொல்கிறவர்களில் ஒரு சதவீதம் ஆட்கள் கூட தாம் நம்புகிற தலைவரையும் சித்தாந்தத்தையும் முழுமையாகப் படித்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆனால் அப்படிதான் மிரட்டுவார்கள். தமக்கு எல்லாம் தெரியும் என்றும் உனக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும் பதறுவார்கள்.

எனக்கு எல்லாமும் தெரியும் என்று எப்பொழுதும் சொல்லிக் கொள்வதில்லை. கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொள்ளும் போது பேசுகிறேன். அவ்வளவுதான். அம்பேத்கார், மார்க்ஸ், இந்துத்துவம் என்று யாரைப் பற்றியும்/ எதை பற்றியும் பேசத் தொடங்கினால் இதுதான் நடக்கும். முத்திரை குத்துவார்கள். தூற்றுவார்கள். புழுதியை வாரி இறைப்பார்கள். எல்லாவற்றையும் முரட்டுத்தனமாக ஆதரிக்க ஒரு கூட்டம் இருக்கிறது.  எல்லாவற்றையும் எதிர்க்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் ஆளாளுக்கு ஒரு அடி போடுவார்கள். அப்படியில்லையென்றால் 'உன்னை நம்பினேன்..நீயே இப்படி பேசலாமா' என்று எமோஷனலாக வீழ்த்தப் பார்ப்பார்கள். 

ஈழப் பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்த போது கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். அதை விமர்சித்து எழுதினேன். கனிமொழியும் திருமாவும் ராஜபக்ஷேவிடம் குழாவிய நிழற்படம் வெளியான போது வசைபாடினேன். காங்கிரஸ் கட்சியை இகழ்ந்தேன். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்காகத்தான் பிரச்சாரம் செய்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை ஆதரித்து எழுதினேன். இன்றைக்கு மோடிக்கு, பாஜவுக்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறேன். பிரபாகரன் மீதும் விமர்சனமிருக்கிறது. காந்தியின் மீதும் விமர்சனமிருக்கிறது. ஆனால் இவர்களை எப்படி முழுமையாக மறுக்க முடியும்? ஒவ்வோர் ஆளுமையும் தங்களவில் இச்சமூகத்துக்கு பங்களித்திருக்கிறார்கள். தாங்கள் சரி என்று நினைத்தத்தைச் செய்திருக்கிறார்கள்.

எது சரி? எது தவறு?

அவர்களது காலக்கட்டம், சமூக, அரசியல் சூழல் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் உரையாடுவதன் வழியாகவே அடுத்த தலைமுறைக்கு செய்திகளை எடுத்துச் செல்ல முடியும்.

புரிதல்களையும் நிலைப்பாடுகளையும் வெளிப்படையாக அறிவித்துவிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. மறைமுகமான சில திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு ஒருவரை ஆதரித்தும் இன்னொருவரை எதிர்த்தும் பேசும் போதுதான் பிரச்சினை வரும். அப்படியெல்லாம் எதுவுமில்லை. நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறேன். 'இவன் நேர்மையாக இருக்கிறான்' என்று எல்லோரும் நம்ப வேண்டிய அவசியமில்லை. நம்புகிறவர்கள் நம்பட்டும். நம்பாதவர்களிடம் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுதான் எல்லாக் காலத்திலும் என் நிலைப்பாடாகவும் இருக்கும்.

'நீங்க பதறாதீங்க' என்கிறார்கள். இவர்களாக முடிவு செய்து கொள்கிறார்கள். 'நான் பதறவே இல்லை. நிதானமாக இருக்கிறேன்' என்று சொன்னால் மட்டும் நம்பவா போகிறார்கள்? தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்போம். அதைப்  பேசிக் கொண்டுமிருப்போம்.

மற்றபடி, நிசப்தம் அறக்கட்டளை வேறு. என்னுடைய அரசியல் நிலைப்பாடு வேறு. உதவிகள் செய்ய வேண்டும் என்கிற சூழலில் மனிதாபிமானம் என்கிற ஒற்றை அளவுகோல் மட்டும்தான். அதைத் தவிர எதுவுமில்லை. அறக்கட்டளை என்பது கடந்த மூன்றாண்டுகளாகத்தான் செயல்படுகிறது. அதற்கு முன்பிருந்தே அரசியல் கருத்துக்களை எழுதியிருக்கிறேன். எதையும் அழிக்கவில்லை. தளத்தில் அப்படியே வெளிப்படையாக இருக்கின்றன. அரசியல் சமூகக் கருத்துக்கள் என்பவை நான் பார்ப்பதிலும், புரிந்து கொள்வதிலும், வாசிப்பதிலும் இருந்து உருவாகி வெளிப்படுபவை. புரிதல் விசாலாமாகும் போது கருத்துக்கள் மாறக் கூடும். Change is the only constant thing.

அறக்கட்டளையின் செயல்பாடுகளை பொறுத்தவரையிலும் 'இவன் சரிதான்' என்கிற புரிதலுடையவர்களிடம் மட்டுமே இணைந்து செயல்பட விரும்புகிறேன். 'இவனை நம்பலாம்' என்கிற எண்ணம் இருக்கிறவர்களுடன் மட்டுமே பயணிக்க விரும்புகிறேன். அப்படியான புரிதல் இல்லாதவர்கள் இன்னும் கொஞ்சம் கவனித்துப் பார்க்கட்டும். புரிதல் ஏற்பட்டால் இணைந்து கொள்ளலாம். இல்லையெனில் நாம் விலகிக் கொள்ளலாம். எல்லோருக்கும் நேர்மையானவனாக இருக்க முடியும். ஆனால் எல்லோருடைய கருத்துக்களோடும் ஒத்துப் போவது சாத்தியமில்லை.

அதே சமயம் உரையாடலைப் பொறுத்தவரைக்கும் யார் வேண்டுமானாலும் கல்லெறியட்டும். கற்கள்தான் பண்படுத்தும். நம்மை அடுத்த தேடலை நோக்கி நகரவும் செய்யும். 

நன்றி. 

10 எதிர் சப்தங்கள்:

”தளிர் சுரேஷ்” said...

அரசியலில் பாரபட்சமின்றி எல்லோரையும் ஒரு சமயம் எதிர்த்து இருக்கிறீர்கள் ஒரு சமயம் ஆதரித்து இருக்கிறீர்கள். இதற்கும் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை! தொடருங்கள்! நன்றி!

சுப்ரமண்யன் said...

தெளிவாக இருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.

Asok said...

நாம தலைவர்களையுடைய செயல்பாடுகளையும், அவர்களையுடைய சொந்த வாழ்க்கையையும், மற்ற சம்பவங்களையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். பெரியார் காலத்தில் சாதி கொடுமையும், தீண்டாமையும் உச்சக்கட்டத்தில் இருந்தது, அந்த சமயத்தில் பாமர மக்களுக்கு புரியற மாதிரி பெரியார் அப்படி பேசினார் என்று நினைக்கிறேன், ஆனால் அவர் பேசியதை போல் வேற எவரும் அந்த காலக்கட்டத்தில் (சூழலில்) அப்படி துணிச்சலாக பேசி இருக்க முடியாது. அன்று தமிழகத்துக்கு அவர் தேவைப்பட்டார், அதை தமிழக மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் தமிழகத்தில் ஒரளவுக்கு மாற்றம் நிகழ்ந்தது. அதேபோல்தான், காந்தி, அம்பேத்கார் தலைவர்களுக்கும் நடந்தது, அவர்களது செயல்களை மக்கள் அந்த சூழலில் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் நல்லது நடந்தது, இந்தியாவில் மக்கள் எப்போதும் சரியான முடிவையே மக்கள் எடுக்கிறார்கள். அதேபோல்தான் நாமும் சூழலுக்கு ஏற்ற முடிவைத்தான் எடுக்கிறாம், அதுவும் நம்ம அறிவுக்கு ஏற்றார்போல. இப்ப எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதால், ரொம்ப சுலபமாக குறை சொல்லுக்கொண்டிருக்கிறோம். சூழலுக்கும், காலத்திற்கும் ஏற்ப கொள்கைகள் மாறுபடும். ஒரே கொள்கையை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டியதில்லை.

Murugan R.D. said...

விமர்சனங்களை தாங்காமல் முரட்டுதனமாக தாங்கள் போற்றும் ஆளுமைகளுக்கு முட்டுக்கொடுக்கும் ஒரு விதமான உளவியல் சிக்கலை விமர்சிப்பவர்களின் கருத்துக்கள், பெரும்பாலும் ஒதுக்கப்படுகின்றன அல்லது புரிதல்இல்லாதவர்களின் கருத்துக்கள் என்று ஒதுக்கப்படுகின்றன. ஏதோ ஒரு சித்தாந்ததுக்கு ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் மனநிலை தங்களை அறிவுஜீவிகளாக எண்ணிக்கொள்ளும் அனைவரிடமும் உண்டு,,, இ‌வர்களைப்போலவேதான் சினிமா மாயையில் சிக்கி நடிகர்களை நம்பி அரசியலுக்கு அழைக்கும் அல்லது நடிகர்களின் ஹீரோயிசத்தை அவர்களின் அரசியலை நேர்மை என நம்பும் போக்கு படித்த படிக்காதவர்கள் என வித்தியாசமின்றி பலரிடமும் உள்ளது,,, இந்த சினிமா ரசிக ஆதரவாளர்களர்களுக்கும் ஏதோ ஒரு இசத்தின் ஆதரவாளர்களுக்கும் பெரிதும் வித்தியாசமில்லை,,,, இவர்கள் இருவருக்கும் சம்பந்தப்பட்டவர்களின் முரண்பாடுகள் கண்ணுக்கே தெரியாது,, அவர்கள் போற்றும் ஆளுமைகளின் முரண்பாடுகளை சற்று கூர்ந்து கவனியுங்கள் என்று சொன்னால் சந்தானம் படத்தில் வருகிற மாதிரி எனக்கு இஸ்க்கு இஸ்க்கு என்றுதான் கேட்கிறது என்பது போல சம்பந்தப்பட்ட ஆளுமைகளின் பராக்கிரமத்தை போற்றி புளங்காகிதப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்,,,,

ஏதோ ஒரு ஆளுமைகளை தொடர்ந்து ஒருவர் விமர்சிக்கிறார் என்றால் கண்டிப்பாய் ஓரளவு புரிதலோடுதான் விமர்சனம் செய்து கொண்டு இருப்பார்கள், நடுநிலைமையோடு தான் விமர்சிக்கிறார்களா என்றால் இல்லை என்று உறுதியாக சொல்லிவிடலாம் என்னைப்போன்றவர்களின் ரோமசாமியை பற்றிய விமர்சனங்களை வைத்து,,, ஆம் ரோமசாமியை பற்றிய நல்லவற்றை சிலர் எடுத்துக்கொள்வதில்லை, அந்த நல்ல விசயங்களை அவர் செய்ததன் பின்னனி என்ன? அவரின் பங்கு என்ன? அவர் கொண்ட கொள்கையில் உண்மையாகதான் இருந்தாரா என்பதை ஆராய்ந்து அதை விமர்சனம் பண்ணுகிறோம்,

இன்றும் ராமசாமியை புனிதப்படுத்தும் கூட்டத்தில் தமிழ கம்மனாட்டிஸ் கட்சி உண்டு,,, ஆனால் அதே கம்யூனிஸ்ட் கட்சி கீழ வெண்மனி பிரச்சனையில் ரவுடி கட்சியாகவும் கொலை பாதகர்களாகவும் ராமசாமியால் விமர்சிக்கப்பட்டதுண்டு,,, ஏன் இந்த முரண் என்பதற்கான காரணத்தை தேடும்போது அவர்களின் நிழல் உலக அரசியல் ஒற்றுமைகளை இனம் காணமுடிகிறது,,, தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கேற்ப ராமசாமி போன்ற வேற்றின போராளிகள் இங்கு நடந்துகொண்ட நடந்துகொள்ளும் விதங்களை விமர்சிக்கும் போது மேலே சொன்ன இயக்கங்களும் இச கருத்து ஆதரவாளர்களும் பொத்தாம் பொதுவில் இதுபோன்ற விமர்சகர்களுக்கு போய் பெரியாரை முழுசா படிங்க என்ற இரண்டு வார்த்தை பதிலை தந்துவிட்டு ஓடிவிடுவார்கள்,,

இதிகாச மூட நம்பிக்கைகளுக்கு பதிலளிக்க தெரிந்த அவர்களுக்கு தாங்கள் போற்றும் ஆளுமைகளின் முரண்பாடுகளுக்கு பதிலளிக்க தெரியாது,,, ஏனென்றால் அவர்களின் முரண்பாடுகள் உள்ளங்கை நெல்லிக்கனி யென வெளிப்படையாக தெரியும் என்பதால்,

கீழ வெண்மனி பிரச்சனையில் அது கூலி உயர்வு பிரச்சனை என்று அசால்ட்டாக கூறி ஒதுங்கி கொண்ட ஒருவரை எப்படி சாதியை ஒழிக்க வந்த போராளியாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டால் எவரும் சரியான பதிலை சொல்ல மாட்டார்கள், மூன்று பதில் தருவார்கள்
1) பெரியார் மட்டும் இல்லன்ன நீங்க இந்த கேள்வி கேட்டுகிட்டிருக்கமாட்டீங்க
2) போய் முதல்ல வரலாற முழுசா படிங்க,,,
3) அவன் உன்ன அப்படி சொல்லிட்டான் இப்படி செஞ்சிட்டான்னு திசை திருப்பல்

அவன்தான் அப்படி செஞ்சிட்டான் சரி நீங்க ஏன் இப்படி செஞ்சீங்கன்னு அவர்களின் முரண்பாடுகளை கேள்வி எழுப்பினால் போச்சு,,
சாதி வெறியன்
பார்ப்பனீய அடிமை
ன்னு பட்டம் கொடுத்து விடுவது,

வைக்கம் வீரர் என்ற அடைமொழி இவருக்கு எப்படி வந்தது,, இந்தியாவில் உள்ள அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் அவ்விடத்திற்கு சென்று போராட காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டிருந்தது, அப்போதை தலைவர் ராமசாமியும் அங்கு சென்றார் அவ்வளவே,,,, ஆனால் இங்கு அவரைப்பற்றி கூறப்படும் வரலாறில் வைக்கம் என்ற இடத்திற்கு இவர் வேங்கையன் மகன் ஒத்தையில போய் நின்னான்ங்கிற ரேஞ்சுக்கு இவர் தானே சென்று போராடினார் என்பது போல பேசுவார்கள், அதேபோல தான் மீனாட்சியம்மன் கோயிலுக்கு நுழையும் போராட்டங்களை நடத்தியவர்கள் யார் அவர்களை பற்றி இந்த ராமசாமி இயக்க ஆதரவாளர்கள் தங்கள் வரலாறுகளில் பதிவு செய்ததுண்டா? ராமசாமி போற்றப்படுவதற்கு காரணம் அவரின் சில போராட்டங்களும் அவரால் பலருக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கிற கூடிய பொதுநலனும் சிலருக்கு சுயநலனும் கூட காரணமாக இருக்கும் என்றால் அவர் இவ்வளவு காட்டமாக விமர்சிக்கப்படுவதற்கும் தகுதியான காரணங்கள் இருக்கின்றது என்பதை ஏனோ சில திராவிட கருத்தியலாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை,, பல திராவிட ஆதரவாளர்கள் புரிந்துகொண்டாலும் தங்கள் நலனுக்கு எதிராக அமைந்துவிடும் என்பதால் அதை அப்படியே மறைத்து நழுவிவிட எண்ணுகிறார்கள்,

Murugan R.D. said...

நீங்க பதறாதீங்க' என்கிறார்கள். இவர்களாக முடிவு செய்து கொள்கிறார்கள். 'நான் பதறவே இல்லை. நிதானமாக இருக்கிறேன்' என்று சொன்னால் மட்டும் நம்பவா போகிறார்கள்? தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்போம். அதைப் பேசிக் கொண்டுமிருப்போம்./////////////////////////////////////

இந்த ஆறுதல் வார்த்தைகள் விமர்சனம் பண்ணுகிற அனைவருக்கும் ஒன்றிரண்டுமுறையாவது கிடைத்திருக்கும்,, அதுவும் உங்களை போன்று பதிவு போட்டு கருத்துரையாடல்களுக்கு வழிவகுத்தவர்களுக்கு, விமர்சனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என இரண்டு பக்கமிருந்தும் ஆறுதல் வார்த்தை வரும்,,, உங்கள் மேல் நல்ல கருத்து வைத்திருப்பதனால் தான் இது போன்ற ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கிறது,,,, கவலை வேண்டாம்,,,

'நான் பதறவே இல்லை. நிதானமாக இருக்கிறேன்' என்று சொன்னால் மட்டும் நம்பவா போகிறார்கள்? இந்த கருத்து மோதல்களால் நீங்க சங்கடப்பட்டோ அலுத்துக்கொண்டோ கோபப்பட்டுக்கொண்டோ மூட் அவுட் ஆயிருக்க மாட்டீங்கன்னு,,,,,நான் உறுதியா நம்பினேன்,,

நீங்க உங்கள் பாணியிலேயே தொடருங்கள்,,

நாமக்கல் அப்புச்சி said...

Mani, keep going on your way. You are doing nothing wrong. Best wishes

சேக்காளி said...

திரு வா.மணிகண்டன் என்பவரின் இந்த பதிவு திரு வா.மணிகண்டன் என்பவரின் பதிவைப் போலவே இருக்கிறது.

//நீ பேசாத//
சரி பேசல•

vijay said...

நீ நீயாக இரு

raja said...

முருகன்,

உங்களுக்கு பதில் சொல்ல எவ்வளவு உரிமை உண்டோ அதே போல் மறுக்கவும் மற்றவர்க்கு உரிமை உண்டு. ஆனால் வெறும் நக்கலை மட்டும் பதிலாக தரும் போது உங்களுக்கும் எஸ்.வி. சேகருக்கும் என்ன வித்தியாசம்.

பெரியார் கோவில்களை உடைக்க வில்லை. சாதி கலவரங்களை உண்டாக்க வில்லை. பெண்களுக்கு 4,5 கல்யாணம் பண்ணி வைக்க வில்லை. பெரியார் வலுக்கட்டாயமாக எதையும் செய்ய வில்லை.
எல்லாம் கட்டுக்கதைதான்.

பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததை பற்றி விமர்சனம் இருக்கிறது. சொந்த அண்ணன் மகன் சம்பத்தே திமுக பக்கம் சாய்ந்த போது, வெறும் பொறுப்பு மட்டும் கொடுத்தால் மணியம்மைக்கோ கழகத்துக்கோ என்ன நடக்கும் என்று பெரியார் சஞ்சல பட்டார். பெரிதாக யோசித்து குழம்ப வேண்டாம்.

உலகின் முதல் பெண்களுக்கான பொறியியல் கல்லூரி "பெரியார் மணியம்மை காலேஜ்", தஞ்சாவூர். ஆதரவு அற்ற பெண்களுக்கான ஏராளமான திட்டங்கள் அவர் மனதில் இருந்தன. பல விஷயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன.

பெரியார் தத்து பித்துன்னு உளற வில்லை. அண்ணாவுக்கு இவர்களை நம்பி போகாதே என்று எடுத்து சொல்லியும் அண்ணா கேட்க வில்லை. தன் அந்திம காலத்தில் அண்ணா இதை ஒவ்வொரு நாளும் உணர்ந்தார்.

நம்பி அழைத்த தொண்டர்களின் வீடுகளில் "நெஞ்சுக்கு நீதி தலைவர்" செய்த பிறன் மனை நோக்குதல் பற்றிய புகார்கள் அண்ணாவுக்கு சென்றன. கட்சியினரின் ஊழல்களால் மனம் வெதும்பினார். அவரை ஓய்வெடுக்க காஷ்மீர் செல்ல கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி அறிவுறுத்திய போது, "என் கட்சி நான் நினைப்பதற்கு முன்பே ஆட்சிக்கு வந்து விட்டது. என்னால் இவர்களை கட்டுப்படுத்த முடிய வில்லை. பணியாற்றி கொண்டே இருந்து விடுகிறேன்" என்று பதில் அளித்தார். பெரியார் ஒரு தீர்க்க தரிசி தான்!! யார்கண்டது, அண்ணா பெரியார் பேச்சை கேட்டு இருந்தால், வரலாறு மாறியும் இருக்கலாம்!!

பல பிராமண தலைவர்கள் பெரியாருடன் நல்ல தொடர்பில் இருந்தனர். அவ்வளவு ஏன், பல பிராமண தலைவர்களுக்கு பெரியார் முன்னிலையில் திருமணம் நடை பெற்றது. நேரம் இருந்தால் பி ராமமூர்த்தி எழுதிய "விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும்" படித்து பாருங்கள்.

பேச்சுரிமையின் மிக சிறந்த எடுத்துக்காட்டாக பெரியார் இருந்தார். இன்னும் பகிர நிறைய இருக்கிறது. கால வெளியில் மறைந்து போகட்டும்!!

Anonymous said...

MANY OF US, OUR COMMENTS ARE NOT ISSUE BASED.
MOST OF US ARE PARTISAN.EITHER PARTY BASED OR PERSON BASED.
IN OUR COMMENTS/REACTIONS WE TAKE SIDES SOMETIMES KNOWING WE ARE WRONG.IN SUCH CASES TRUTH BECOMES THE CASUALITY.

WE ARE NOT WILLING TO CONSIDER EVIDENCE/PROOF SUBMITTED.
YOU HAVE BEEN VERY STRAIGHT FORWARD/NEUTRAL AND PUBLISHING EVEN NEGATIVE COMMENTS THAT TOO FROM YOUR ARDENT ADMIRERS.
YOUR INITIATIVES THOROUGH 'NISAPTHAM' IN MEDICINE/EDUCATION ARE COMMENDABLE.
'NEET' INITIATIVE FOR SC/ST STUDENTS IS MIRACULOUS. NO BODY WILL EVEN ATTEMPT.
IN YOUR CASE "MANITHAM" HAS OVERTAKEN ALL OTHER THINGS.
CONTINUE WRITING IN YOUR STYLE.
ANBUDAN,
M.NAGESWARAN.