Mar 18, 2018

வெளிச்சப் புள்ளி

வாழ்க்கை, பல தருணங்களில் நமக்கு முன்பாக ஒரு வெளிச்சப் புள்ளியைக் காட்டும். 'நீ போறது சரியான ரூட்' என்று உறுதி படுத்திக்க கொள்வதற்கான வாய்ப்பு அது. 

இன்று ராஜேந்திரனைச் சந்தித்தேன். 'நேரில் வா' என்று நானாகத்தான் அழைத்திருந்தேன். ராஜேந்திரனைப் பெற்றவர்கள் கூலி வேலை. கூலி வேலை என்றாலும் கூட சமநிலையில்லாத குடும்பச் சூழல். சமீப காலம் வரைக்கும் மின்வசதி இல்லாத குடிசை அது.  'மழை பேஞ்சா எங்க வீட்டுக்குள்ள ஒதுங்க முடியாது' என்று சிரிப்பான். அந்த வீட்டில் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்தவன். எம்.எஸ்..சி வேதியியல் படிப்பை முடிக்கப் போகிறான். அது பெரிய காரியமில்லை. இந்த வருடம் ஐ.ஐ.டி குவஹாத்தி நடத்திய GATE தேர்வில் வெற்றியடைந்துவிட்டான். இரண்டாயிரத்து எண்ணூறாவது ரேங்க் வந்திருக்கிறது. முடிவு வந்தவுடன் நேற்று அழைத்துச் சொன்னான். அவனை விடவும் எனக்கு மகிழ்ச்சி அதிகம். தெரிந்தவர்களை எல்லாம் அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். 

'எப்படியும் பி.ஹெச்.டி போயிடனும் சார்..அதுவும் டாப் காலேஜ்ல ' என்று சொல்லிக் கொண்டிருந்தவன் அவன். கனவை மிக நெருங்கி இருக்கிறான். சந்தோஷமாக இருந்தது. ஏற்கனவே சில ஐ.ஐ.டி பேராசிரியர்களிடம் பேசி வைத்திருக்கிறான். தேர்வு முடிவு வந்த பிறகு அவர்களுக்குத் தகவல் சொல்லியிருக்கிறான். தமது கல்லூரியில் விண்ணப்பிக்கச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அநேகமாக ஏதேனும் ஒரு ஐ.ஐ.டியில் நுழைந்துவிடுவான் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நேர்காணல் நடத்தி தேர்வு செய்வார்கள். இனி அவன் நேர்காணலுக்குத் தயாராக வேண்டும்.

விருட்சமாகிக் கொண்டிருக்கிறான். 

அதனால்தான் நேரில் சந்திக்க விரும்பினேன். பையை எடுத்துக் கொண்டு நேரடியாக வீட்டுக்கு வந்திருந்தான். சில வருடங்களுக்கு முன்பாக முதன் முறையாக தமது உயர் கல்விக்கு உதவச் சொல்லி அவன் அணுகிய போது ரமேஷ்தான் ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு அழைத்தார். 'அண்ணா ரொம்ப மோசமான நிலைமையில இருக்காங்க' என்று அவர் சொன்னது நினைவில் இருக்கிறது. ஆனால் ராஜேந்திரனிடம் ஒரு வெறி இருந்து கொண்டேயிருந்தது. துல்லியமாகத் தெரியவில்லை- ஆனால் இந்த வருடம் மட்டும் எப்படியும் ஏழெட்டு போட்டித் தேர்வுகளையாவது எழுதி இருப்பான். 

நிசப்தம் வழியாகக் கல்வி உதவியைச் செய்து கொண்டிருக்கும் பெரும்பாலான மாணவர்களிடம் வாரம் ஒரு முறையாவது பேசிவிடுவேன்- குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு ஒரு முறையாவது. 'எங்க இருக்க?' 'என்ன விஷேஷம்?' என்று இயல்பான பேச்சாகத்தான் ஆரம்பிக்கும். 'ரூம்ல இருக்கேன்' என்று ராஜேந்திரன் சொன்னதாக நினைவிலேயே இல்லை. ஆய்வகம், நூலகம் என்று ஏதாவது ஓரிடத்தைச் சொல்வான். அவனது ஆர்வம் ஆச்சரியம் ஊட்டக் கூடியது. ஆனால் அந்த வேகமும் ஆர்வமும் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. கேட் தேர்வு எவ்வளவு கடினமானது என்று எனக்குத் தெரியும். அந்தத் தேர்வை முயற்சித்துப் பார்த்தவர்களும் சொல்லக் கூடும்

(துணை ஆட்சியர் சந்திரசேகருடன் ராஜேந்திரன்)

சந்திக்க வந்திருந்தவனை அழைத்துச் சென்று மருத்துவர் கார்த்திகேயனிடம் அறிமுகப் படுத்தினேன். அவர் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர். இப்பொழுது குழந்தைகள் நல மருத்துவர். சமூகத்தின் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். சத்தமில்லாமல் நிறையக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். உற்சாகமூட்டும்படி பேசினார். 

ராஜேந்திரனிடம் 'அடுத்து என்ன பிளான்?' என்றார்.

'பி.ஹெச்.டி முடிச்சுட்டு அடுத்து போஸ்ட் டாக்ட்ரல் ஃபெல்லோஷிப் சார்' என்றான். 

'என்னடா இவன் இப்படி முரட்டுத் தனமாகச் சொல்கிறானே' என்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.  

காட்டிக் கொள்ளவில்லை. சிரித்துக் கொண்டிருந்தேன். ஆனால் குறித்து வைத்துக் கொள்ளலாம். அவன் சொன்னதைச் செய்துவிடுவான்.

நாங்கள் கிளம்பும் போது கார்த்திகேயன் எழுந்து நின்று வழியனுப்பினார். 'அவர் எந்திரிச்சு நின்னது ராஜேந்திரன் என்ற பொடியனுக்கு இல்லை..நீ வாங்கி இருக்கிற மார்க்குக்கு' என்றேன். 'ஆமாம் சார்...' என்றான்.

இன்னும் வளரட்டும். அவனுக்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. அவனது வழிகாட்டி பேராசிரியர் ரமேஷ்குமாருக்குதான் இந்த பாராட்டுகளில் பெரும்பகுதி சேரும். நிசப்தம் வழியாக ராஜேந்திரனைத் தெரிந்து கொண்டு அவனது படிப்பு, தேர்வுகள் சம்பந்தமாக பலவிதமான உதவிகளையும் ராஜேந்திரனுக்கு செய்து கொடுக்கும் பேராசிரியர் ஸ்ரீராகவனுக்கும் நன்றி.

பெருநகரங்களில், வசதியான குடும்பத்து பிள்ளைகள் இதையெல்லாம் செய்வது பெரிதாகத் தோன்றாது. நகமலை போன்ற குக்கிராமத்தில், நிரந்தர வருமானமில்லாத பெற்றோருக்கு, மின்வசதி கூட இல்லாத குடிசையில் பிறந்து, கையூன்றி கர்ணம் அடித்து கொடி நாட்டுவது சாதாரணக் காரியமில்லை. ராஜேந்திரன் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னமும் இருக்கிறது. ஆனால் அவன் மீது அசாத்தியமான நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இந்த உலகம் எதை பற்றியாவது வெறும் வாயை மென்று கொண்டேதான் இருக்கும். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கும் ராஜேந்திரனைப் போன்றவர்களின் வெற்றிதான் இந்தச் சமூகத்திற்கான வெளிச்சப் புள்ளி.   வாழ்த்துக்கள் மட்டுமில்லை, நன்றியும் ராஜேந்திரன். 

8 எதிர் சப்தங்கள்:

www.rasanai.blogspot.com said...

best wishes and congrats. yes miles to go still. a ray of hope for all those others following their endeavours in achieving them. credit goes to rajendran for his tenacious efforts and their mentors for their proper guidance and to mani for having faith on these sort of stubborn students anbudan sundar g chennai

Saravanan Sekar said...

/பெருநகரங்களில், வசதியான குடும்பத்து பிள்ளைகள் இதையெல்லாம் செய்வது பெரிதாகத் தோன்றாது. நகமலை போன்ற குக்கிராமத்தில், நிரந்தர வருமானமில்லாத பெற்றோருக்கு, மின்வசதி கூட இல்லாத குடிசையில் பிறந்து, கையூன்றி கர்ணம் அடித்து கொடி நாட்டுவது சாதாரணக் காரியமில்லை.//

முற்றிலும் உண்மை.

நீங்கள் அசாதாரணமான காரியம் -ங்க மணி சார் . ஒரு அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து மேலேறி வந்த என் போன்றவர்களுக்கு தெரியும்- கல்விக்கான செலவுகளுக்கு உதவுவதோடு -தக்க தருணத்தில் சரியான ஆலோசனைகளையும், வழிகாட்டிகளையும் வழங்குவது - என்பது எப்பேர்ப்பட்ட உதவி என்பது.

ராஜேந்திரன் போன்ற வெளிச்ச புள்ளிகள் வளர்ந்து பெரும் சூரியனாக எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
சே சரவணன், ஈரோடு

Selvaraj said...

அன்பான வாழ்த்துக்கள்.

Anonymous said...

மென்மேலும் வெளிச்சங்கள் தோன்ற வாழ்த்துக்கள்!

Malar said...

very inspiring!

”தளிர் சுரேஷ்” said...

மாணவர் ராஜேந்திரன் கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்!

சேக்காளி said...

"வெளிச்சப் புள்ளி"
க்கு வந்து விட்டான் ராஜேந்திரன். விட்டா "ர்" என்று சொல்லலாம் தான்.அதை விட "ன்" நெருக்கமாய் உணர வைக்கிறது.
வாழ்த்துக்கள்.
ராஜேந்திரனுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான்.
இனி அவனுக்கு, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும் பழக்கப் படுத்துங்கள்.குறிக்கோளில் வென்று ஆசுவாசமாகி விட்ட பலரை பார்ப்பதால் சொல்கிறேன் இதை.

Jaypon , Canada said...

வாழ்த்துக்கள் ராஜேந்திரனுக்கும் மற்றும் அனைவருக்கும்