Mar 7, 2018

கேள்வியும் பதிலும்

ஒருவேளை சுயேட்சையாக தேர்தலில் களமிறங்க வேண்டிய சூழல் உங்களுக்கு உருவானால்...

சீப்பு சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்க்கப்போகிறோமென்று அரசியலில் சிலர் புதிதாகக் களம் இறங்கியுள்ளனர். தங்களது செயல்பாடு இவ்விரு அழுக்குகளையும் தமிழகத்திலிருந்து களையும் இயக்கமாகத் மாற்றம் பெறுவது எப்போது?

இயக்கமாக மாறுவதெல்லாம் அவ்வளவு எளிய காரியமா என்ன? அதிகபட்சமாக பத்தாயிரம் பேருக்கு என்னைத் தெரிந்து இருக்கும். இதை வைத்துக் கொண்டு இயக்கத்தை உருவாக்குகிறேன் என்று களத்தில் இறங்கினால் கந்தரகோலம் ஆகிவிடும். களப்பணி அவசியம். இப்பொழுதுதான் முளைத்திருக்கிறோம். முதலில் மூன்று இலைகள் துளிர்க்கட்டும். 

பள்ளியில் படிக்கும் போது உங்களுக்கு பட்டப்பெயர் இருந்ததா?

எடடாம் வகுப்பு படிக்கும் போது குண்டாக இருந்தேன். மணிகுண்டா என்பார்கள். வீட்டில்தான் வெகு காலத்துக்கு சுள்ளாணி என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

சகுனம் சரியில்லன்னு பொண்ணு அப்பா நிச்சயத்த நிருத்திட்டார். திடீர்ன்னு என்ன பிரச்சனைன்னு தெரியல. பொண்ணு அப்பா பேச்சை மீறி வர மாட்டீங்றா. எனக்கு அவள மறக்க முடியல. என்ன பண்ணனு தெரியல. பைத்தியம் பிடிச்சா மாதிரி இருக்கு.

சகுனம் என்பது ஒரு சாக்கு. அவர்களுக்கு உங்கள் மீது ஏதோவொரு காரணத்தினால்தான் விருப்பம் குறைந்திருக்க வேண்டும்.  அது என்ன காரணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். 'அந்தப் பையன் வேண்டாம்' என்று வீட்டில் சொன்னால் பெண் அவர்களை மீறி அந்தப் பெண் வெளியில் வர சாத்தியமில்லை. கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். தேவைப்பட்டால் என்னை அலைபேசியில் அழையுங்கள். பேசுவோம். 

//சில சமயங்களில் விதிகளைத் தாண்டி 'இவர்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும்' எனது தோன்றும். அப்பொழுது விதிகளை மீறத் தயங்கியதில்லை. விதிகளைவிடவும் மனிதாபிமானம்தான் முக்கியம் என்பதுதான் நிசப்தம் அறக்கட்டளையின் அடிநாதம்- ஆரம்பத்திலிருந்தே. விதிகள் என்பவை அதிகப்படியான கோரிக்கைகளில் இருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள உதவுகிறது. அவ்வளவே.// இதன் தொடர்ச்சியாக ...... மனிதாபிமானம் என்பதை மருத்துவம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு மட்டும் என எடுத்துக்கொள்ளலாமா? 

அப்படி இல்லை. 'ச்சே...நாம உதவ வேண்டும்' என்று நம்மை நினைக்க வைக்கிற எதுவுமே மனிதாபினம்தான்.

40 வயசாச்சி, நல்லா சம்பாதிக்கல, கல்யாணம் பண்ணல வாழ்க்கைய வீணடிச்சாச்சி. நம்பிக்கையோ, ஆசையோ இல்லாம தான் இருக்கு. என்ன பண்ண?

நாற்பது வயது வரைக்கும் எல்லாமே கற்றல்தான். அனுபவங்களை சேகரித்துக் கொள்கிறோம். நாற்பது வயதுக்கு மேல்தான் வாழ்க்கையே தொடங்குகிறது. இதுவரையில் கற்றுக் கொண்டதிலிருந்து அனுபவங்களிலிருந்து வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். ஒருவேளை திருமணம் செய்தே ஆக வேண்டும் என விரும்பினால் இப்பொழுது கூட நீங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் ஒன்று -  திருமணம் ஆகவில்லை என்பதெல்லாம் ஒரு குறையில்லை. நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள திருமண பந்தத்தைத் தாண்டி எவ்வளவோ இருக்கின்றன. நம்முடைய பிறப்புக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தேடுங்கள். அந்தத் தேடல்தான் சுவாரசியமானது. வாழ்க்கையை பூர்த்தி செய்யக் கூடியது. பிறப்புக்கான அர்த்தம் தெரியாதவர்கள் ஆயிரம் திருமணம் செய்தாலும் வெறுமையாகத்தான் இருக்கும். ஆல் தி பெஸ்ட்.

இப்பொழுது உங்களக்கு கேர்ள் பிரென்ட் இருக்காங்களா? 

அட ஏங்க நீங்க வேற..

                                                                 ***

Sarahahவில் கேட்கப்பட்ட கேள்விகள்

4 எதிர் சப்தங்கள்:

Nemo said...

அருமை !!

Anonymous said...

//திருமணம் ஆகவில்லை என்பதெல்லாம் ஒரு குறையில்லை. நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள திருமண பந்தத்தைத் தாண்டி எவ்வளவோ இருக்கின்றன. நம்முடைய பிறப்புக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தேடுங்கள். அந்தத் தேடல்தான் சுவாரசியமானது.//

If you are not married after the age of 40 serve society, if you are married serve family first and if you can organize yourself then extend your view on society.

Anonymous said...

This session of saraha Q&A is good.

அன்பே சிவம் said...

நமது சின்னம் சீப்பு சின்னம்.

வெற்றியின் சின்னம் சீப்பு சின்னம்

ஆனா வாரத்தான் வேலையில்லை. 5 வருசம் பத்திரமா இருக்கும். சீப்புக்கு நான் கேரண்டி.