Mar 11, 2018

எவ்ளோ பெரிய்ய்ய மாத்திரை

நிறுவனங்களில் அப்ரைசல் பெண்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை ரேவதி எழுதியிருக்கிறார். நிறைய பெண்கள் (அல்லது பெரும்பாலான பெண்கள்) இத்தகைய சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். வேலையா? குடும்பமா என்கிற பட்டிமன்றச் சூழலில் 'நீங்க வேலைய பார்த்துக்குங்க...நான் குடும்பத்துக்காக இதையெல்லாம் விட்டுவிடுகிறேன்' என்று சொல்கிற பெண்கள் அதிகம். 

                                                                ***
நீங்கள் அப்ரைசல் பற்றி எழுதி இருந்தீர்கள். 

ஒரு பெண்ணாக ஓவ்வொரு வருடமும் பிரச்னை தான். 'வருஷம் முழுசா நீ நல்லா வேல செஞ்ச, இன்னொரு டிவிஷன்ல பிரச்னை, அடுத்த ப்ராஜெக்ட் ல பிரச்னை அப்படின்றனுக, வருஷ கடைசில நிலைமையே வேறா இருக்கு'

நேர்காணல் - 'உங்களோட technical மற்றும் project management skills வெச்சு பார்த்தா நாங்க உங்களுக்கு சீனியர் அசோசியேட் பதவிதான் கொடுக்கணும், ஆனா உங்களுடைய அனுபவம், அப்புறம் சின்ன கம்பெனில இருந்து வேற வந்து இருக்கீங்க...விதிப்படி உங்களை அசோசியேட்டாத்தான் போடணும். ஆனா கவலைப்படாதீங்க... நீங்க நல்லா பண்ணுனா அடுத்த வருஷமே ப்ரொமோட் செஞ்சுடுவோம்'.

முதல் வருடம்: 

வாடிக்கையாளரிடம் பாராட்டு இருக்கா? 'நிறைய இருக்கு. அவ மட்டும் இல்லன்னா இந்த ப்ரொஜெக்டயே சரியான நேரத்துல முடிச்சுருக்க முடியாது'
ஏதாவது புகார் இருக்கா? இல்லை.

தனிப்பட்ட முறையில் ஏதாவது காரணமிருக்கா? 'இருக்கே.. அவ குழந்தை பெத்துக்க போறா'. 
'வெரி குட் .  அதனால் இந்த பொண்ணுக்கு போடுங்க 2 ரேட்டிங்' (1 - சிறப்பு; 2-சராசரி; 3- ரொம்ப மோசம்)

இரண்டாம் வருடம்:
அதே கதைதான். 
கடந்த வருடம் குழந்தை பிறப்புக்கான விடுமுறையில் ஆறு மாதம் இருந்தாள். அப்படினா அவளுக்கு ரேட்டிங் 3.


பேறு கால விடுப்புக்குப் பிறகு வேறொரு மேலாளரிடம் பணி: (அதன் பிறகு) 

மூன்றாம் வருடம்:  
அதே கதை.  'போன வருஷம் 3 மாசம் பேறு கால விடுமுறையில் இருந்தாள். இப்போத்தான் இந்த கிளைண்ட்கிட்ட வந்து கத்துக்கிட்டு இருக்கா' அப்போ ரேட்டிங் 2.

நான்காம் வருடம்:
பாராட்டு வாங்கி இருக்காளா? 
'நிறைய இருக்கு. அவ மட்டும் இல்லன்னா இந்த ப்ரொஜெக்டயே சரியான நேரத்துல முடிச்சுருக்க முடியாது'
ஏதாவது புகார் இருக்கா? இல்லை.
சரி ரேட்டிங் 1. அப்பாடா. 

பதவி உயர்வுக்கான பரிந்துரைகளின் போது:
வருடாந்திர அப்ரைசல் எல்லாம் படித்துவிட்டு - 'எல்லாம் ஓகே, ஆனா விதிமுறைப் படி கடைசி மூன்று வருட வருடாந்திர அப்ரைசலில் 3 ரேட்டிங் இருக்க கூடாதே!.(அதனால போச்சு)

விசா லாட்டரி முறை- என் கேட்ட நேரம் - அதிலும் காலி. 

ஐந்தாம் வருடம்:  
இந்த முறை என்னோட இரண்டாவுது குழந்தை பிறந்ததுக்கு 3 மாதம் மட்டும் விடுமுறை எடுத்தேன். அதற்கு முக்கியக் காரணம, அடுத்த வருடமாவது பதவி உயர்வை வாங்கிட வேண்டும் என்கிற வெறியும் ஆதங்கமும். அதே வருடம் ரேட்டிங் 1 ஒன்றும் வாங்கினேன். விசா லாட்டரியும் கிடைத்தது. ஆனால் வேற  ஒரு மேலாளருக்கு கீழ் வேலை மாற்றம். ஏற்கனவே இருந்த client  மூலமான ஆன்சைட் வாய்ப்பும் இல்லை.

அதே வருடம் பதவி உயர்வுக்கான விவாதத்தில் கதையை மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். நீ வேற client bucketல இருக்க, இதனால் ஏற்கனவே இந்த வாடிக்கையாளருக்கு  வேலை செய்யறவங்களுக்கு தான் கொடுப்போம். Retail துறையில் இவ்வளவு பேருக்கு பதவி உயர்வு, இன்சூரன்ஸ் துறையில் இவ்வளவு பேருக்கு பதவி உயர்வு என  மேலிடத்தில் இருந்து ஓர் எண்ணிக்கையைக் கொடுத்துவிடுவார்கள்.  அந்த எண்ணிக்கையில் என்னைச் சேர்த்துகிறதுக்கு தான் இவ்ளோ பெரிய சண்டை. அந்த வார்த்தையை கேட்கும் வரை நான் ஒவ்வொரு முறையும் என்னிடம் தான் ஏதோ குறைவான தகுதி போலிருக்கிறது என்கிற எண்ணம் வந்து கொண்டே இருக்கும்.

இதில் என்னுடைய தகுதிக் குறை என எதுவும் இல்லை. உள்ளரசியல். அவர்களுக்கு நான் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன், என் மேலாளரிடம் கேட்டேன் 'நான் இந்த கம்பனிக்கு வேலை செய்கிறேன். அதில் இருக்கும் client யாராக இருந்தாலும், நான் என்னுடைய முழுத் திறமையை கொடுத்துக்  கொண்டே தான் இருக்கிறேன். இனி இந்த நிறுவனம் ஒரு பணியாளருக்கு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யட்டும்' என்று சொல்லிவிட்டு நானும் அனைத்திற்கும் தயாராக தான் இருந்தேன்.

அதன் பிறகு என்னுடைய தற்போதைய மேலாளார் பழைய மேலாளருடன் பேச்சு வார்த்தை நடத்தி, எப்படியோ பதவி உயர்வைக் கொடுத்தார்கள்.  ஆனால் இந்த 5 வருடத்திற்கு பிறகு, இவ்வளவு  நிறைய சிக்கல்களுக்கு பிறகு கொடுக்க பட்ட இந்த பதவி உயர்வில் ஒரு ஆனந்தமோ, அதை அனுபவிக்கும் தருணண்களையோ இழந்து தான் இருந்தேன்.  

அதன் பிறகு இப்போது மேலும் 3 வருடம் அதே நிறுவனத்தில் அதே வேலையில் தொடர்கிறேன்.

ஆறாம் வருடம்  - அதே கதை, எனக்கு onsite வரும் வாய்ப்பு கிடைத்ததால் 2 ரேட்டிங்.

ஏழாம் வருடம்  -  'நன்றாக வேலை செய்தாய். ரேட்டிங் 1 ' 

இப்பொழுது எனக்கும்  ஒரு பெண் தான் மேலாளர். சமீபத்தில்தான் மேலாளருக்கான ஆகும் தகுதி மாற்றம் அடைந்தவர். அவருடைய கதை இன்னமும் கரடு முரடானது. 

நானும் எனது குழந்தைகளும் நாட்டின் ஒரு பக்கம், எனது கணவர் வேறொரு பக்கமுமாக இரண்டு வருடங்கள் வாழ்ந்தோம். அதனால் என்னை வேறு ஒரு க்ளையண்ட்டுக்கு மாற்ற வேண்டிக் கேட்டேன். அது சரியான முறையில் எனது மேலாளர் வாடிக்கையாளரிடம் தெரிவிக்காமல், குளறு படி ஏற்பட்டது. என்னிடமாவது இன்னும் 6 மாத காலம் கழித்த பிறகு செல்லலாம் என்று சொல்லி இருக்கலாம். Client என்னுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு,  'அந்த பொண்ணு அவர் கணவர் இருக்கும் இடத்திற்கு போகட்டும், அனால் வீட்டில் இருந்தபடியே எங்களுக்கே வேலை செய்யட்டும்' என்று விட்டனர். அப்பொழுதே இந்த முடிவில் எனக்கு இரண்டு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. 

1. கண்டிப்பாக xxx என்னுடைய வருடாந்திர ரேட்டிங்கில் கை வைப்பார்கள். 2. வீட்டில் இருந்து வேலை செய்தால் என்னுடைய கற்றல் குறையும்.

எட்டாம் வருடம் - நான் நினைத்த #1 நடந்தது. காரணம் கேட்டால். ரேட்டிங் குறைந்தது. என்ன என்னவோ காரணங்களைச் சொல்கிறார்கள்.  இப்படியே தொடர்ந்தால் அடுத்த வருடமும் இதே எண் தான் கிடைக்கும் என்று எச்சரித்து உள்ளனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கிளைண்ட்க்கு வேலை செய் என்கின்றனர், என்னுடைய வேலையை வாடிக்கையாளர் தரப்பில் பாராட்டவும் செய்கின்றனர்,ஆனால் என் நிறுவனம் அதற்கு எதிராகச் சொல்கிறது. 

'Employee's personal life is our vision' அப்படின்னு போர்டு மட்டும் பெருசு. உள்ள இறங்கி பார்த்தா தான் அதன் சாக்கடை தெரிகிறது.

--ரேவதி 

8 எதிர் சப்தங்கள்:

Catherine Augustine said...

There are managers who don't select women for their team. Even if there are women, they give only documentation or testing work. No core development. And they boast about their team selection strategy. I had a bitter experience once. When I had just joined back work from my maternity leave, Iwas put in a new team. I told the manager, I can't work in a production support project. But it actually was a production support project. Later when I asked him , he said bluntly, ' if you can't be flexible, then quit ' . In two months I quit. Looking for a New job is hard. You have to start all over again. But I had no choice. Luckily, new environment was warm, I survived. I have stopped thinking about recognition for work. It gives me enormous pressure.

Anonymous said...

பல நேரங்களில் கூட்டமான பஸ்ஸில் இடம் போடுவது போல் அப்ரைசலில் அலைய வேண்டியிருக்கிறது. ஒரு 5000-10000க்கு கெஞ்ச வேண்டியிருக்குதுன்னு எது வேணா போட்டுக்கோன்னு விட்டற்றேன். 5 வருஷம் வேலை செஞ்சி மொத்தமா 1 லட்சம் கூட ஏத்தல. என்ன பண்ண?

மதன் said...

இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் தட்டி கேட்கதான் HR.. ஆனா அவங்க இவங்களுக்கும் மேல காரணம் சொல்லுவாங்க பாருங்க... அப்பப்பப்பா!!!

Anonymous said...

எனக்கு 13 வருட அனுபவம் இருக்கிறது. இப்போது மூன்றாவது ஆண்டாக அமெரிக்காவில் வேலை செய்கிறேன்.. இந்த 13 வருடத்தில் நான் சராசரியைத்தாண்டி ரேட்டிங் வாங்கியதே இல்லை. ப்ரமோஷனும் வாங்கியதே இல்லை. காரணம், பதிலாக வேறு கம்பெனிக்கு தாவி விடுவேன். இந்த 10 வருடங்களில் 7 கம்பெனி மாறியிருக்கிறேன்..

என்னைப்பொறுத்தவரை, வேலையை நேர்மையாக செய்வது.. பலன் கிடைக்காவிட்டால் தாவி விடுவது. இதுதான் ஃபார்முலா. ரேட்டிங்குக்காகவோ, ப்ரமோஷனுக்காகவோ வாதம் செய்வது வீண்.. People claim that they are unbiased, broad minded and so on. But, those are mere pretence. All are hipocrats. No need to trust those sugar coated words. ஆனால் என் போல் தாவுதல் ஒரு கட்டத்துக்கு மேல் சாத்தியமா என்றால் நேரடியாக இல்லை தான். பத்து வருடங்களுக்கு பிறகு இப்போது மார்க்கெட் நிலவரம் அப்படி இல்லை. நண்பன் ஒருவன் ஆலோசனை கேட்ட போது இப்படி சொன்னேன்.

"எல்லாவற்றையும் கற்றவர் எவரும் இல்லை. 10 வருட அனுபவம் இருந்தாலும், வேலை தேவை என்று வந்துவிட்டால், அனுபவத்தை குறைத்துவிட்டு அதற்கான வேலையில் சென்று அமர்ந்துகொள்ளலாம். எல்லாவற்றையும் கற்றவர் எவரும் இல்லை எங்கிற எண்ணம் இருந்தால், ஈகோ பிரச்சனைகள் வராது. இன்னும் சொல்லப்போனால், அனுபவம் அதிகம் இருப்பதால், நாம் தான் அங்கே பெரிய ஆளாக இருப்போம். சம்பளம் சற்று குறைவாக கிடைக்கும். கடனில் வீடு, கார் என்று இல்லாமல் இருந்துவிட்டால் சமாளித்துவிடலாம். நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், வரவுக்குள் செலவு என்கிற ஃபார்முலாவுக்குள் அடைந்துகொள்வது நல்லது. கனவுகளை விட தறகால நிஜம் முக்கியம்"

Ram said...

இங்கு அமெரிக்காவில் (நான் வசிக்கும் சியட்டிலில் பகுதியில் மட்டுமேனும்) நிலைமை சற்று தலைகீழ். மென்பொருள் நிறுவன ஊழியர்களில் பெண்களின் சதவீதம் மிகவும் குறைவு. அதை சரிகட்ட, ஒரு பெண்ணுக்கு வேலை கிடைப்பதும், வேலையில் மேலாண்மை தளத்துக்கு உயர்வதும் அதே தகுதியுடைய ஆண் ஊழியரைவிட சற்றே எளிது. மகப்பேறு காரணங்களுக்காக விடுமுறை எடுப்பதெல்லாம் ஊழியரின் உயர்வுப்பாதையில் வருவது ஒரு நிறுவனத்தில் தொடர்கதையாய் இருத்தல் இங்கு தவிர்க்கப்படுவது பலமான தொழிலாளர் சட்டங்களாலும், நிறுவனம் பற்றிய உள் செய்திகள் சரளமாக க்லாஸ்டோர் போன்ற வலைத்தளங்களில் பகிரப்படுவதாலும்.

சுப இராமநாதன்

சேக்காளி said...

//என்னைப்பொறுத்தவரை, வேலையை நேர்மையாக செய்வது.. பலன் கிடைக்காவிட்டால் தாவி விடுவது. இதுதான் ஃபார்முலா. ரேட்டிங்குக்காகவோ, ப்ரமோஷனுக்காகவோ வாதம் செய்வது வீண்..//
சூப்பர் அனானிமஸ் ஐயா (அல்லது ) அம்மா.

SENTHILKUMAR M said...

//என்னைப்பொறுத்தவரை, வேலையை நேர்மையாக செய்வது.. பலன் கிடைக்காவிட்டால் தாவி விடுவது. இதுதான் ஃபார்முலா. ரேட்டிங்குக்காகவோ, ப்ரமோஷனுக்காகவோ வாதம் செய்வது வீண்..//
சூப்பர் அனானிமஸ் ஐயா (அல்லது ) அம்மா.

I realized it very late.

Anonymous said...

Its the same for men as well, the reasons could be different. I have been on both the sides after a level you will be playing both. Some of them are biased but most of them play by rules set by the company and thought processes. If I dont get what I want, I will ask once else go where I can find them.