Mar 1, 2018

தமிழ் ரத்னா

விருதுகள் என்றாலே அரசியல்தான். பெருமபாலான விருதுகளுக்குப் பரிந்துரைகள் எதுவும் இருக்காது. அவர்களாக முடிவு செய்வார்கள். சில விருதுகளுக்கு யாராவது சிலரிடம் மட்டும் பரிந்துரை வாங்குவார்கள். யோசித்துப் பார்க்கும் போது தம்மோடு தம் அடித்தவர்கள், தண்ணியடித்தவர்கள், கடலை போட்டவர்கள், தம்மைப் புகழ்ந்தவர்கள் என யாரெல்லாம் நினைவுக்கு வருகிறார்களோ அவர்களையெல்லாம் பரிந்துரை செய்வார்கள். கடைசியில் பெரும்பாலான பரிந்துரைகள் குப்பைத் தொட்டிகளுக்குத்தான் செல்லும். 

இதெல்லாம் உள்ளரசியல். எதையாவது பேசினால் 'இவனுக்கு பொறாமை' என்பார்கள். ம்க்கும். 

விருதுகளுக்கான செயல்பாடுகள் ஏதேனும் ஓர் அமைப்பைச் சார்ந்தவர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் நடக்கும். தமது அமைப்புக்கு/அரசியலுக்கு சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து பிரகடனப்படுத்துவார்கள். அவர்களைத் தூக்கிப் பிடிப்பார்கள். சற்று எதிர் நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை எல்லாம் கண்டு கொள்ளமாட்டார்கள். ஒன்றரையணா விருது என்றாலும் அப்படிதான். ஊடகங்கள் பூதகரமாக்கும் விருதுகள் என்றாலும் இப்படித்தான். 

தம்மை நிறுவனமயமாக்கிக் கொள்ளவும், தமது அதிகார பீடத்தைக் கட்டமைத்துக் கொள்ளவும் பெரும்பாலான அமைப்புகள் தாம் வழங்கும் விருதுகளைப் பயன்படுத்துகின்றன. முக்கால்வாசி விருதுகள் தமக்குரிய மரியாதையை இழந்து போனதற்கு காரணமும் இதுதான்.

பொதுமக்களின் பரிந்துரைகளைப் பெற்று அவற்றிலிருந்து விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பது என்கிற நடைமுறை தமிழகத்தில் எங்குமில்லை என நினைக்கிறேன். ஒரு குழு தேர்ந்தெடுத்து விருதை அறிவிக்கும். ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு ஒப்புக்குச் சப்பான சில காரணங்களைச் சொல்வார்கள். ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

விருதுகளின் அரசியல் கிடக்கட்டும். 

நேற்று ஓர் இணைப்பை நண்பர் அனுப்பியிருந்தார். தமிழ் ரத்னா என்ற பெயரில் பதினேழு பிரிவுகளில் நியூஸ் 7 தொலைக்காட்சி நிறுவனம் பரிந்துரைகளைக் கோரியிருக்கிறது. உண்மையிலேயே பரிந்துரைகளின் அடிப்படையில் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் எனில் அது மிகச் சிறந்த விஷயம். அமைப்புகளின் பின்புலம் இல்லாதவர்கள், உதிரிகள், வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் என சகலரும் விருது பெறுவதற்கான வாய்ப்பு அமையும். ஊடக வெளிச்சமில்லாத மனிதர்கள் மீதும் வெளிச்சம் பாய வாய்ப்பாக அமையும். 

ஒருவரே எத்தனை பரிந்துரைகளைச் செய்ய முடியும் என்று தெரியவில்லை. இன்னமும் நாற்பது நாட்கள் அவகாசமிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் பரிந்துரைகள் வந்து சேரக் கூடும். தேர்ந்தெடுப்பது அவர்கள் பாடு.

பட்டியலைப் பார்த்த உடனேயே சில பரிந்துரைகள் மனதில் தோன்றின- 
  • இயல் ரத்னா (பேச்சு) - சுமதி ஸ்ரீ (தெளிவான மேடைப் பேச்சுகளுக்காக)
  • அறுசுவை ரத்னா - Village Food Factory ஆறுமுகம் (யூடியூபில் தேடிப் பார்க்கலாம்)
  • சேவை ரத்னா - பியூஸ் மானுஷ் (சேலம் மூக்கனேரி ஏரிக்காக)
  • ஆசிரிய ரத்னா - ரூபி கேத்தரின் தெரசா (கணிதம் கற்பித்தலில் ரூபி டீச்சர் பயன்படுத்தும் நுட்பங்களுக்காக)
  • புதினம் ரத்னா (நாவல்) - லட்சுமி சரவணகுமார் (அவரது நாவல்களுக்காக).
இசை, நடனம் போன்ற சில துறைகளில் எனக்கு அறிவில்லை. அவற்றைத் தவிர்த்து பிற துறைகள் அனைத்திலும் பரிந்துரை செய்கிற எண்ணமிருக்கிறது. பரிந்துரையைச் செய்துவிட்டு ஒவ்வொருவரையும் ஏன் விரும்புகிறேன் என்று விரிவாக எழுதுகிறேன். 

நேரம் கிடைக்கும் போது பரிந்துரைகளைச் செய்யுங்கள். தகுதியான மனிதர்கள் வெளியுலகத்துக்குத் தெரியட்டும். மற்ற விருதுகளைப் போலில்லாமல் நம்முடைய பரிந்துரைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள் என நம்புவோம்.

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

விருதுகள் எளிய நபரை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை?

Unknown said...

நாவல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்க வேறு எளிய படைப்பாளர்கள் உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் உங்களுக்கம் நீங்கள் எழுதிய கட்டுரைக்கும் தொடர்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

சேக்காளி said...

// தமிழ் ரத்னா என்ற பெயரில் பதினேழு பிரிவுகளில் நியூஸ் 7 தொலைக்காட்சி நிறுவனம் பரிந்துரைகளைக் கோரியிருக்கிறது.//
தமிழக விருது வரலாற்றில் இது ஒரு நல்ல முயற்சி தான்.