Feb 20, 2018

கைய வெச்சா..

அடர்வானம் அமைக்க 25 சென்ட் இடம் வேண்டும். தூர் வாரிய பிறகு நீர் நிரம்பிக் கிடக்கும் குளத்தின் அருகிலேயே அடர்வனம் அமைப்பது என முடிவு செய்து வட்டார வளர்ச்சி அலுவரை அணுகிய போது 'அடர்வனம் குறித்தான விவரங்களை அனுப்பி வையுங்கள்' என்று சொல்லி அனுப்பியிருந்தார். நிசப்தம் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை அவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துவிட்டு மறு நாள் அழைத்தேன். மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொன்னார். கலெக்டரிடம் பேசியதுண்டு. ஆனால் அவ்வளவு நெருக்கமில்லை. வருமான வரித்துறை இணை ஆணையர் முரளிக்கு தகவல் அனுப்பியிருந்தேன். அவருக்கு ஆட்சியரிடம் நல்ல நட்பு உண்டு.

மறுநாள் காலை முரளி அழைத்து 'கலெக்டர் உங்களுக்கு அனுமதி கொடுத்துவிடுவார் அவரிடம் பேசுங்கள்' என்றார். ஆட்சியர் யாரவது ஒருத்தரை நேரில் வரச் சொன்னார். உள்ளூர்வாசிகளிடம் கேட்டேன். 'அதுக்கு என்னங்க...நாங்களே போய்ட்டு வந்துடுறோம்' என்றவர்கள் ஆம்னி வண்டியை எடுத்துக் கொண்டு ஆறு பேர்கள் சென்றிருக்கிறார்கள். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆட்சியரின் அனுமதி கிடைத்தது.

இதெல்லாம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. சனிக்கிழமையன்று ஊர்க்கூட்டத்தை நடத்தினோம். உள்ளூரில் ஆதரவில்லாமல் துரும்பையும் அசைக்க முடியாது. நல்ல கூட்டம். இத்துறையில் அனுபவஸ்தர்களான களம் அறக்கட்டளை சதீஷ் மற்றும் ஆனந்த் வந்திருந்தார்கள். இயற்கை உழவர் அருணாச்சலத்தையும் அழைத்திருந்தோம். கூட்டத்தில் ஊர்காரர்கள் அதிகம் பேசவில்லை. அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள். 

அடுத்தடுத்து என்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என பட்டியலிட்டோம்.

இரண்டு அடி ஆழத்துக்கு மண்ணை வழித்து எடுத்துவிட்டு குழியை மீண்டும் நிரப்ப வேண்டும். அதுதான் முக்கியமான வேலை. சொன்னால் நம்ப முடியாது. அடுத்த நாள் காலையிலேயே ஆறு மணிக்கு அழைத்து மண் எடுக்க ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார்கள். ஆச்சரியமாக இருந்தது. ஊர்காரர்களில் சிலர் வெகு வேகமாக இருக்கிறார்கள்- கன ஆர்வமாகவும்.


குளக்கரையின் மேல் மட்டத்தில் இறுகிய ஓடை மண் படிந்திருக்கிறது. சூடு கிளப்பக் கூடிய மண் இது. இந்த மண்ணில் அப்படியே குழி தோண்டி செடிகளை நெருக்கமாக நட்டு வைத்தால் மேலே வளர்வது சிரமம் என்பதால் முதலில் குழி தோண்டி மண்ணை உதிரச் செய்து அதன் பிறகு வாழை மட்டைகளை நிரப்பி அதன் மீது இயற்கை உரம், மண்புழு உரம் போன்றவற்றைக் கலந்து மண்ணை பக்குவப்படுத்தி அதன் பிறகு வனத்தை அமைக்க வேண்டும்.

இனி செய்யப் போகிற எல்லாவற்றையும் இங்கே பதிவு செய்துவிடலாம். எல்லாக் காலத்திலும் இது ஆவணமாக இருக்கும். 

அடர்வனம் என்பது பெரிய வேலை. செலவு பிடிக்கும் வேலையும் கூட. ஆனால் ஊர்க்காரர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். இப்படியொரு குழு அமைவதுதான் பெரிய சவால். அமைந்து விட்டால் போதும். நிசப்தம் சார்பில் வேறு சில பணிகளைச் செய்திருக்கிறோம். ஆனால் அத்தனையும் வெற்றி என்று சொல்ல முடியாது. ஆரம்பத்தில் தலையை ஆட்டுவார்கள். அதன் பிறகு விட்டுவிடுவார்கள். திணறிப் போவோம். எல்லாவற்றையும் எழுதுவதில்லை. அந்தந்த ஊர்க்காரர்கள் வாசிக்கும் போது சங்கடமாக நினைப்பார்கள். ஆனால் இதுதான் சவால். 

மாணவர்களைப் படிக்க வைப்பதையும் விட, மருத்துவ உதவிகளைச் செய்வதைக் காட்டிலும் பெரிய சிரமம் பொதுக் காரியங்களைச் செய்வதுதான். உள்ளூர் அரசியல் இருக்கும். 'என்னை விட்டுட்டு அவனை மட்டும் அழைத்தான்' என்பார்கள். புரளிகளைக் கிளப்புவார்கள். வதந்திகள் உலவும். எல்லாவற்றையும் சமாளிப்பதற்குள் தலை வலி வந்துவிடும். அதனால்தான் இத்தகைய காரியங்களை நிறைய இடங்களில் செய்ய முடிவதில்லை. 'எங்கள் ஊரில் இதைச் செய்கிறோம்' என்று யாராவது வந்தால் களமிறங்கத் தயார். ஆனால் கையைப் பிடித்து இழுத்துவிட்டு நான் ஒதுங்கி கொள்ள மாட்டேன்' என்று உறுதி கொடுக்க வேண்டும். ஒருவனாகத் பல்வேறு இடங்களில் நிறைய வேலைகளைச் செய்ய முடிவதில்லை. இயன்றவரைக்கும் 'முன் மாதிரியாக' சில வேலைகளைத் தொடங்குவோம். அதில் கிடைக்கக் கூடிய அனுபவங்களை வைத்து அடுத்து அடுத்த கட்டத்துக்கு நகரலாம். அகலக் கால் வைத்து அடுத்தவர்கள் நம்பித் தரும் பணத்தை வீணடிப்பது நியாயமில்லை. 

இந்த வாரத்தில் குழி தூண்டுகிற வேலையை முடித்துவிட்டால் அடுத்தடுத்த வாரங்களில் மண்ணைப் பதப்படுத்தும் வேலைகளைச் செய்யப் போகிறோம். சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு இலந்தை, கொடுக்காப்புளி, அத்தி, அரசன், வேம்பு, புங்கன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு வகைகளைத் தேடிக் கண்டறிந்து நடப் போகிறோம். உள்நாட்டு வகை செடியினங்களைத் தந்து உதவ முடிகிறவர்கள் உதவினால் பெரும் உபாயமாக இருக்கும். நர்சரிகளில் கேட்டால் பெரும் விலை சொல்கிறார்கள். வனத்துறையில் அத்தனை உள்நாட்டு வகை செடியினங்களும் இல்லை. தேட வேண்டி இருக்கிறது.

இன்னும் ஒரு மாதத்தில் செடிகளை நாடும் பணியைத் தொடங்கிவிடும் திட்டமிருக்கிறது.  ஒரே நாளில் மூன்றாயிரம் செடிகளையும் நட்டுவிட வேண்டும். நம்மை விடவும் கணேசமூர்த்தியும், பழனிசாமியும் இன்னபிற ஊர்க்காரர்களும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். 'எண்ணித் துணிக கருமம்'. துணிந்தாகிவிட்டது. அடர்வனம் அமைத்துவிட்டுத் தான் மறுவேலை. 'போய்ட்டு வரலாமா' என்று யோசிக்கிறவர்கள் மார்ச் இரண்டாம் வாரத்தில் தயாராகிக் கொள்ளவும். வார இறுதியில் அமோகமாகத் தொடங்கிவிடலாம். 

8 எதிர் சப்தங்கள்:

Kasi said...

எந்த ஊரில் கை வைத்துள்ளீர்கள்

Selvaraj said...

...அது wronga போவதில்லை (உசுப்பேத்துவோம்). நிஜமாகவே மனம்நிறைந்த வாழ்த்துக்கள்

சேக்காளி said...

//ஆம்னி வண்டியை எடுத்துக் கொண்டு ஆறு பேர்கள் சென்றிருக்கிறார்கள். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆட்சியரின் அனுமதி கிடைத்தது.//
விக்ரமனை தோற்கடித்த தல

அன்பே சிவம் said...

தல ஏதோ குஷி Moodல இருக்காப்ல. Dear கொ.ப.செ. நாமளும் Prepar பண்ணிக்க வேண்டியதுதான். திடீர்னு Batting பன்னச்சொல்லிக்கூட உத்தரவு வரும். பதட்டமில்லாம தலைக்கு தொணையா நின்னா போதும். அவுரே டிச்சி கெலிப்பாரு...

சேக்காளி said...

//திடீர்னு Batting பன்னச்சொல்லிக்கூட உத்தரவு வரும். பதட்டமில்லாம தலைக்கு தொணையா நின்னா போதும். அவுரே டிச்சி கெலிப்பாரு//
மரியாதைக்குரிய அவைத்தலைவருக்கு,
கடேசி வரைக்கும் தொணையா நிக்கேன். பேட்டிங் எல்லாம் வேண்டாம். அந்தாளு (தல) கூட ஓட மிடியல. ஓடச் சொன்னா ரன் அவுட்டு கன்பார்ம். அதனால அவரையே ஆறும் , FOUR மா அடிச்சி கெலிச்சிர சொல்லிருங்க.
நன்றி
கொபசெ

Jaypon , Canada said...

மகிழ்ச்சியாக இருக்கிறது படிக்க. வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள். சிலர் எழுத்துக்களில் மாத்திரமே கர்ம யோகம் செய்வார்கள். சிலர் எழுதுவதை தாண்டி கர்ம யோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களை வித்தியாசப்படுத்த இது போதும். --- பித்துக்குளி நாஞ்சில் ஆசான்

karthikmasa said...

நல்ல செயல் நான் ஆனைமலை ஊராட்சி இருக்கிறேன்.. உதவி தேவை என்றால் WhatsApp பண்ணுவம்...9698612014.Karthik.