கமல் இன்று கட்சி தொடங்குகிறார்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியலில் இருந்து ஒதுங்கும் வரைக்கும் காத்திருந்து இடம் காலியானவுடன் 'யாரெல்லாமோ பதவிக்கு வருகிறார்கள்...நாமும் இறங்கிப் பார்ப்போமே' என நினைத்திருக்கிறார் போலிருக்கிறது. தவறொன்றுமில்லை. எடபடியாரெல்லாம் ஒரு வருடத்தை நிறைவு செய்வதை பார்த்தால் யோகி பாபுவுக்கு கூட முதலமைச்சர் கனவு வருவது இயல்புதான். நாற்பதாண்டு காலமாக தமிழ்த் திரையுலகின் செல்லப் பிள்ளை. கமலுக்கு ஆசை வரக் கூடாதா? வரலாம். வரலாம்.
ஆசையும், சினிமாக் கவர்ச்சியும் மட்டுமே ஒருவரைத் தலைவராக்கிவிடுவதில்லை. வாக்குகளையும் பெற்றுத் தந்துவிடுவதில்லை. இன்றைய அரசியல் கள நிலவரமே வேறு. போகிற இடமெல்லாம் கூட்டம் சேரும். ஆனால் சேருகிற கூட்டமெல்லாம் வாக்காக மாறிவிடுவதில்லை. ஒவ்வொரு சாமானியனுக்கு அடிப்படையான அரசியல் புரிதல் இருக்கிறது. 'நீட் தேர்வுக்கு என்ன சொல்கிறீர்கள்?' 'மல்லையா பற்றி என்ன கருத்து' என்று வரிசையாக அடுக்குவார்கள். ஒவ்வொரு விவகாரத்திலும் உங்களது நிலைப்பாடு என்ன என்று கேள்வி கேட்பார்கள். பதில் சொல்லாத தெரிய வேண்டும். அந்த பதில் மனதில் இருந்து வருவதாக இருக்க வேண்டும். பொய் சொன்னால் அடுத்த ஐந்தாம் நிமிடம் சமூக ஊடகங்களில் மீம் போடுவார்கள். 'இவன் சரியான ஆள்' என்று சாமானியனிடம் நிரூபிக்காத வரைக்கும் பண அரசியலை எதிர்த்து துரும்பைக் கூட அசைக்க முடியாது.
எடப்பாடியையும் ஜெய்குமாரையும் கலாய்ப்பது பெரிய காரியமில்லை. வாழை மரத்தை அரிவாளால் வெட்டுவது போலத்தான் அது. பெரும் பலசாலிகளாக இருக்கும் மோடியையும் அமித் ஷாவையும் வெளிப்படையாக எதிர்க்கும் தில் இருக்கிறதா என்று கேட்பார்கள். இல்லையென்றால் நீங்கள் யார் பக்கம் என்று அடுத்த கேள்வி வரும். எதிர்ப்பதைக் கடுமையாகவும், ஆதரிப்பதைத் தெளிவாகவும் காட்ட வேண்டும். அரசியலில் இந்த வலு முக்கியம். இத்தகைய வலுவான நிலைப்பாடுதான் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமான பலமாக இருந்தது. ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் பலவீனமாகவும் இருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரைக்கும் சாமானியன் எழுப்புகிற கேள்விக்களுக்கு மழுப்பினால் 'பத்தோடு பதினொன்னு அத்தோடு இதொன்னு' என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அத்தோடு முடிந்தது.
கமலிடம் எல்லாவற்றுக்கும் தெளிவு இருக்கும் என நம்புவோம்.
டிவிட்டரில் கருத்து சொன்னால் நான்கு பேர் கண்டபடி பேசுவார்கள். அவ்வளவுதான். விட்டுவிடுவார்கள். அரசியல் களம் பொல்லாதது. தாளித்துவிடுவார்கள். தமது வாக்கு வங்கிக்கு அடி விழும் என்றால் பொடனியிலேயே அடிப்பார்கள். ஒருவனை முழுமையாக நிர்வாணமாக்கி முச்சந்தியில் நிறுத்தவும் தயங்கமாட்டார்கள். கமலை 'பாஜகவின் ஸ்லீப்பர் செல்' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். முத்தத் தலைவர் என்கிறார்கள். அப்படிதான் சொல்வார்கள். விஜயகாந்த்தைக் குடிகாரன் என்று சொல்லிச் சொல்லியே சோலியை முடித்தார்கள். விஜயகாந்த், கமல் மட்டுமில்லை. வாக்கு வங்கியைப் பதம் பார்க்க யார் புதிதாக வந்தாலும் ஏதாவது காரணங்களை அடுக்குவார்கள். முடித்துவிட எத்தனிப்பார்கள். அதுதானே அரசியல்? எல்லாவற்றையும் சமாளித்துதான் மேலே வர வேண்டும்.
தன்னைத் திறந்த புத்தகமாக வைத்துக் கொண்டிருந்தால் நகர்ப்புற வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளவார்கள். கிராமங்களில் கமலை அவரது வெளிப்படையான அந்தரங்கத்துடன் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆருக்கு வள்ளல் என்ற பட்டம் உதவியதை போல, ஜெயலலிதாவுக்கு ஒரு செல்வி பட்டம் தேவைப்பட்டது போல, புடவையைக் கிழித்தார்கள் என்ற முழக்கம் எடுபட்டது போல கமல் தமது பிம்பத்தை எப்படி மக்கள் முன்பாக வைக்கப் போகிறார் என்பதும் பெரும் கேள்வி.
கமலின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவரது பிம்பம், உருவாக்கப்படும் வதந்திகள் என ஒவ்வொன்றுமே பெரும் சோதனைதான். இவை தவிர கமல்ஹாசனால் மூலை முடுக்குகளிலெல்லாம் கட்சிக் கிளைகளை உருவாக்க முடியுமா என்பதும், கடுமையான பண பலத்துக்கு முன்னாள் கமலால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதும் மிகப் பெரிய சவால்கள்.ரசிகர் மன்றம் என்ற ரீதியிலும் கூட கமலிடம் வலுவான கட்டமைப்பு இல்லை. இனிமேல்தான் பூத் மட்ட அளவில் வேலை செய்ய ஆட்களைத் தயார் செய்ய வேண்டும். அவர்கள் விலை போகாத ஆட்களாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய காரியம் இது?
கமல் வெல்வார் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. அதிகபட்சமாக பத்து சதவீத வாக்குகளை சிதறடிக்க முடியும். ஆனால் அது நிச்சயமாக ஆட்சியமைக்கப் போதுமானதாக இருக்காது. கமல் வெல்வது தோற்பதெல்லாம் இரண்டாம்பட்சம். களமிறங்கி இருக்கிறார். அந்த அளவில் நிச்சயமாக அவரைப் பாராட்ட வேண்டும். அரசியலில்தான் அவர் பெயர் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை. அவர் ஏற்கனவே பிரபலம்தான். கட்சி தொடங்கித்தான் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை. தள்ளாடும் வயது வரைக்கும் அவரால் நடிக்க முடியும்.
பொறுத்துப் பார்ப்போம்.
'மாற்றுகிறேன்' என்றுதான் வர விரும்புகிறார் எனத் தோன்றுகிறது. தம்மை அவர் முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வரைக்கும் நம் எதிர்மறையான யூகங்களை முன்வைக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். எத்தனையோ அரசியல் கட்சிகள், எத்தனையோ தலைவர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். அதில் தொண்ணூறு சதவீதம் பேர் காணாமல் போய்விடுகிறார்கள். வாயிலேயே வடை சுடாமல் களம் இறங்கியிருக்கும் கமலுக்கு வாழ்த்துக்கள். தனித்த தலைமை வாய்த்துவிடாதா என்று தமிழகம் காத்துக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் மாற்றம் வர வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். கமல்ஹாசன் தம்முடைய மனசாட்சிப்படியும் நேர்மையாகவும் அத்தகைய தனித்த தலைமையாக உருவெடுக்க மனப்பூரவமான வாழ்த்துக்கள்.
13 எதிர் சப்தங்கள்:
//களமிறங்கி இருக்கிறார். அந்த அளவில் நிச்சயமாக அவரைப் பாராட்ட வேண்டும்//
பாராட்டுக்கள் கமல்.
Sir, Very nice write up.
Very first few observations made on Kamal.
Still we could see Banners with his name this seems same politics as others.
Lot of cars behind his car seems as a long vehicle queue of his supporters. He says he is going to create change but not seems to be promising, was expecting a lot from him.
தைரியமாக களமிறங்கிய கமலுக்கு வாழ்த்துக்கள்
ஆனால் அரசியலில் வெற்றிபெற மாட்டார். வெறும் ஊடக முக்கியத்துவமும் கூட்டமும் சமூக ஊடகங்கள் மட்டுமே அரசியலை தீர்மானிப்பதில்லை. கூடும் கூட்டத்தில் எத்தனைபேர் ஓட்டுரிமை உள்ளவர்கள் என்றும் தெரியாது. முக்கியமாக பெண்கள் ஓட்டை கமல் வாங்குவது மிகச்சிரமம்
நிசப்தத்தில் இதற்கு முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதை போன்று மக்கள் தங்களுக்கு கமலால் தனிப்பட்ட ஆதாயம் ஏதும் கிடைக்குமா என்றுதான் பார்ப்பார்கள்.ஒருவேளை போராடி மக்களின் நம்மிக்கையை பெற வேண்டுமென்றால் அதற்கான வயதும தற்போது இல்லை (63வயது).
தல. தல. நாம யெப்போ.? Batting?
We are Waiting.?
தலயின் விழுதுகள்.
காந்தியின் சம்பந்தி இந்தியாவின்
கவர்னர் ஜெனரல் என்ற கௌரவத்தை
விட்டுவிட்டு ஒரு மழை நாளின் இரவில்
கட்டுமரக்காரனின் வீட்டுக்கு வந்தார்
மூதறிஞர் ராஜாஜி. கட்டுவின் கையை
பிடித்து மதுவை கொண்டு வராதே என
கெஞ்சினார். நடக்கவில்லை.
தமிழ் இன படுகொலையை நடத்திய
இத்தாலி இரவு மதுபான விடுதி
நடனமாதுவின் மகன் பப்புராவ் கொஸ்மாஸ்
ஆகியோரை விட எடப்பாடியார், மோடி,
கமல், ரஜினி ஆகியோர் இலட்சம் மடங்கு
உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புகொண்டால்
நீயும் என் சகோதரனே
Mani,
I could see many spelling mistakes.
I understand that you missed it while typing faster.
What else could it be?
I don't think you are worrying about the impacts of Kamal's competition on your future (political) plans :-D
Regards,
Sundar K
Dear Sundar,
இதுவரையிலும் nhm ரைட்டர் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது அது வேலை செய்வதில்லை (due to some system upgrade). புதிய விசைப்பலகையில் தட்டச்சு செய்வதனால் பிழைகள் நேர்கின்றன. சரி செய்து விடுகிறேன்.
Thank you.
//தலயின் விழுதுகள்//
அதான் எல்லாம் விழுந்து மைதானமா ஆகிடுச்சே.இன்னுமா விழணும்?.
போங்க ய்யா போயி மைதானத்தை ஒரு சுத்து சுத்திட்டு கா(ல்)க் கலயம் அருவம்புல்லு சாறை குடிச்சிட்டு ச(ர்)க்கரை அளவு எம்புட்டு இருக்கு ன்னு பாத்துட்டு தூங்குங்க. முடிஞ்சா கொறட்டை வராம தூங்குங்க. சுத்தும் போது தொணைக்கு ஒங்க கொபசெ வையும் சேத்துக்கங்க.
// இப்பொழுது அது வேலை செய்வதில்லை //
"குறள் தமிழ்ச் செயலி" யும் நன்றாக தான் இருக்கிறது.என்னோட batting எல்லாம் அதுல தான்.
அடப்பாவிங்களா!😥
அனானிஸ்ஸுன்ற பேருல தலயத்தான் சீண்டிக்கிருந்தீக. இப்ப எங்களையும் சோதிக்கிறீயளா? எலக்சன் நடந்து முடியட்டும். அப்புறம் வந்து வரிசைல நிப்பீரில்ல. அப்ப குடுக்குறோம் அனானிக்கும் ஆதார் ர்டு.
நாம கீழ இருந்து எல்லாவற்றையும் சரி பண்ண வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். கமல், ரஜினி யாராக இருந்தாலும், நம்ம சட்டமன்ற தொகுதி வேட்பாளராகட்டும் அல்லது வார்டு கவுன்சிலராகட்டும், அவங்க சரியில்லையென்றால் அவங்களுக்கு ஓட்டு போடக் கூடாது. அப்பதான் தலைமை சரியான வேட்பாளரை நிறுத்தும். சரியான உள்ளூர் தலைவரை நம்மால தேர்ந்தெடுக்க முடியவில்லையென்றால், நாம எப்படி மாநில தலைவரை சரியாக தேர்ந்தெடுக்க முடியும்?
//களமிறங்கி இருக்கிறார். அந்த அளவில் நிச்சயமாக அவரைப் பாராட்ட வேண்டும்//
பாராட்டுக்கள் கமல்.
நெசம் ன்னு நம்புவோம்
https://www.vikatan.com/news/vikatan-survey/117405-this-is-the-opinion-of-people-for-kamals-new-political-party.html
Post a Comment