Feb 19, 2018

கொக்கரக் குண்டி

கொக்கரக் குண்டி- இதுதான் அவருக்குப் பட்டப் பெயர் என்று சொன்னால் 'அப்படி கிப்படி இருக்குமோ' என நீங்கள் எசகு பிசகாக நினைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. வாத்தியார் சாபம் பொல்லாதது. அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டியதில்லை.  

அவர் வாத்தியார்தான். அரசுப் பள்ளி ஆசிரியர். அவர் வாத்தியாராக வந்து சேர்ந்த போது ஆதி அந்தமெல்லாம் விசாரித்திருப்பார்கள்.  

'நான் சத்திங்க' என்றுதான் அவர் சொல்லி இருக்கக் கூடும்- சத்தியமங்கலம் என்பதன் சுருக்கப்பட்ட வடிவம். ஊர்க்காரர்கள் விசாரிக்கும் போது இப்படி பெருமொத்தமாகச் சொல்லித் தப்பிப்பது என்பது சாதாரணக் காரியமில்லை. ஊர்ப்பெயரை வைத்து சாதி வரைக்கும்கண்டுபிடிப்பார்கள். அடுத்தவர்களின் ஊரைத் தெரிந்து கொள்ளக் காட்டுகிற ஆர்வத்தின் அடிப்படையும் அதுதான். 

'அவன் மாக்கினாம்கோம்பையாமா...தோலைப் பார்த்தா ஒக்கிலியனாட்டத்தான் தெரியுது..அந்த ஊர்ல அவிய சனம்தான் ஜாஸ்தி' என்கிற மண் அல்லவா நம்முடையது? 

வாத்தியாரிடம் 'சத்தில எங்கீங்க?' என்று கேட்டவர்கள்தான் அதிகமாக இருந்திருக்கக் கூடும். எத்தனை நாட்களுக்குத்தான் சமாளிக்க முடியும்? 

'சத்திக்கு பக்கம்ங்க..பவானிசாகர்'..

'அட..நல்லதா போச்சுங்க..எங்க சொந்தக்காரர் ஒருத்தரும் பவானிசாகர் தாங்க..எங்க அத்தைக்கு பெரிய மாமனார் பையன் அவுரு'  இப்படித்தான் கொக்கி போடுவார்கள். ஊர்ப் பெயரை மட்டும் சொன்னால் போதாது. வீதிப் பெயர் வரைக்கும் சொல்ல வைத்துவிடுவார்கள். 

'இலங்கை அகதிகள் முகாம் இருக்குங்குல்ல...அதுக்கு பக்கத்துலதான் இருக்காருங்க...பேரு பொன்னுசாமி..உங்களுக்குத் தெரியுமுங்களா?'

இத்தகைய பவுன்சர்களை வாத்தியார் சமாளிக்க முயன்றிருக்கக் கூடும். 

'பவானிசாகருக்கும் பண்ணாரிக்கும் நடுவுலதாங்க'

'ராஜன் நகருங்களா?' 

'இல்லைங்க..கொஞ்சம் பக்கம்'

'அட ஊர் பேரை சொல்லுறதுக்கு என்னங்க இவ்வளவு வெட்கம்'

'வெக்கம்தான்...போடா டேய்' என்று சொல்ல வேண்டியது மட்டும்தான் பாக்கி.

உண்மையிலேயே அந்தப் பகுதியில் 'கொக்கரக் குண்டி' என்று ஊர் இருக்கிறது. எப்படித்தான் ஊருக்கு பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. பெயர்க் காரணத்தைக் கண்டுபிடித்தே தீர வேண்டும். ராஜன் நகருக்கு சற்று முன்பாக கொக்கரக் குண்டி இருக்கிறது. ராஜன் நகர் - எவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்கள்? இந்தப்பக்கம் முடுக்கன் துறை. அந்தப் பெயரையும் குறை சொல்ல முடியாது. இந்த ஊருக்கு மட்டும் அப்படியொரு பெயர்.

எவனோ ஒருத்தனிடம் தப்பிக்கவே முடியாமல் தனது ஊர் பெயரை அந்த வாத்தியார் சொல்லி இருக்க வேண்டும். 'கரட்டுப் பாளையத்துக்காரர்' 'புளியம்பட்டிக் காரர்' என்று ஊர்ப் பெயருடன் 'காரர்' சேர்த்து சொல்லும் வழக்கம் இருக்கிறது அல்லவா? அப்படிதான் வாத்தியாருக்கு பெயர் அமைந்து போனது. கொக்கரக் குண்டி என்ற ஊரிலிருந்து கஷ்டப்பட்டு படித்து மேல வந்து வேலை தேடி இருந்தார். என்ன சாதித்து என்ன பலன்? கடைசி வரைக்கும் இந்தப் பெயருடன் தான் சுற்றினார். 

'கொக்கரக் குண்டிக்காரர்' என்பதற்கும் 'கொக்கரக் குண்டிக்கும்' பெரிய வித்தியாசம் இல்லை என்று யாரவது ஐ.க்யூ சிகாமணி கருதியிருக்க வேண்டும். கொக்கரக் குண்டி என்று பெயரை முடிவு செய்து சூடி விடடார்கள்.

பள்ளியில் மானம் போனது. 

சக வாத்தியார்கள் அழைத்தால் தொலைகிறது. ஆசிரியைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பொது அப்படித்தான் விளிப்பதாகக் கேள்விப் படும் போதெல்லாம் அவருக்கு எப்படித்தான் இருந்திருக்கும்? வேஷ்டி கட்டுகிற வழக்கத்தையே அந்த மனுஷன் தூக்கி வீசியதற்கான காரணத்தையெல்லாம் ஆராய்ச்சி செய்யவே வேண்டியதில்லை. 

பள்ளிக்கூடத்தில் அவரைப் பார்த்தால் மாணவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள். ஆனால் வெளியில் வந்துவிட்டால் சுண்டெலிகள் கூட ஒளிந்து நின்று 'யோவ்..கொக்கரக் குண்டி' என்று கத்தும். வாழ் நாள் முழுமைக்கும் சுமக்க மாட்டாமல் அந்தப் பெயரைச் சுமந்து திரிந்த அந்த ஆசிரியரை இப்பொழுது நினைக்கும் போதும் எசகு பிசகாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. 

ஒரு மனிதனுக்கு ஊர்ப் பெயரும் ஏன் முக்கியம் என்பதற்கு அவர் ஒரு முக்கியமான உதாரணம். அந்த ஊர்க்காரர்கள் யாராவது இதையெல்லாம் படித்தால் கொடும்பாவி எரித்தாலும் இருப்பார்கள். ஆனால் அதுக்காக இப்படியெல்லாம் ஒன்று நடக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா?

எங்கள் பள்ளியில் அவர் ஆசிரியராக பணியாற்றியதில்லை.. சில காலம் எங்கள் ஊரில் குடியிருந்தார். அப்பொழுதுதான் அவரும் பிரபலம். அவருடைய ஊரும் பிரபலம். கடந்த முறை கூட  பவானிசாகர் பக்கமாகச் சென்ற போது அவர் வீட்டுக்கு செல்லலாமா என மனம் அலை பாய்ந்தது. வெகு காலத்திற்கு முன்பாகவே ஊட்டிக்கு இடம் மாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அவரது இடம் மாறுதலுக்கு பட்டப் பெயர்  காரணமில்லை என்று நம்புகிறேன். வண்டியை ஒரு கணம் நிறுத்தியும் விட்டேன். ஏனோ அந்த ஊரில் எனக்கு எல்லாமே கொக்கரக் குண்டியாகத் தோன்றி பொது மாத்து வாங்குவது போல ஒரு கணம் தோன்றியது. இன்னொரு முறை அவரைப் பார்த்துக் கொள்ளலாம் எனக் கிளம்பி வந்துவிட்டேன். 

7 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

வேஷ்டி காட்டுகிற வழக்,?!😳. ஏதேது பாக்கிராசா ஊருக்கேதும் வந்திருக்காரோ?.

சேக்காளி said...

ஊர் பெயரை மாற்ற முடியாதா?
அடுத்தடுத்த தலைமுறைகளில் புதுப்பெயர் புழக்கத்திற்கு வந்து விடுமல்லவா?

கண்ணன் கரிகாலன் said...

பெயர்கள் எல்லாம் காரணப் பெயர்களே.
ஈரோடை ஈரோடு என்றும், கவுண்டன் பாடி கவுந்தப்பாடி என்றானது போல, குன்று என்பது குண்டு என்றும் (வத்தலகுண்டு கடமலை குண்டு) பிறகு குண்டி என்றும் மருவி இருக்கலாம்.
மறைக்கப்பட்ட உறுப்புகளின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லும்போது நகைச்சுவையாகி விடுகிறது

கண்ணன் கரிகாலன் said...

வாய் அகன்ற உள்புறம் அகன்ற பாத்திரத்தை குண்டா, குண்டான் என்பர்.
மலையாளத்தில் இருபுறமும் உயர்ந்து நடுவில் குழியான நிலப்பகுதி​யை குண்டி என்பர்.
ஆக அருமையான தமிழ்ப்பெயர் என்றே கொள்ளலாம்.

கண்ணன் கரிகாலன் said...

குண்டி தெரிய கோவணம் மட்டுமே உடுத்தி ஊரில், தோட்டங்களில் உலாவும் பழக்கம் இப்போதும் கோபி சத்தி பகுதிகளில்​ உள்ளது. அதுவும் காரணமாக இருக்கலாமோ.

Anonymous said...

it might be a kannada name. kundi means malai in kannada. Since that place is near hills and karnataka border..

vic said...

Anonymous has said I think well here a name Bunde how can we say this word