ஐ.டி துறையின் இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்று ஒரு கேள்வி.
தொண்ணூறுகளில் இந்தியாவில் அறிமுகமான தகவல் தொழில்நுட்பத் துறை கிடு கிடுவென வளரத் தொடங்கிய போது கம்ப்யூட்டர் தெரிந்தால் பல்லாயிரங்களில் சம்பளம் கிடைக்கிறது என்றதும் 'டிமாண்ட்'க்கு ஏற்ப கல்லூரிகள் பெருகின. ஓரளவுக்கு கணினி பற்றிய அறிவிருந்தால் போதும் என்ற சூழல் உருவானதும் தனியார் கல்லூரிகளின் கல்வித் தரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியது. ஐ.டியை பொறுத்த வரையிலும் படிப்புக்கும் அறிவுக்கும் சம்பளத்துக்கு எந்தத் தொடர்புமில்லை என்பது உறுதியானது. அதுதான் மிகப்பெரிய சிக்கல்.
ஊர்ப்பக்கங்களில் விவசாய நிலங்களில் வேலை அதிகமாக இருக்கும் போது எந்த வேலையும் தெரியாத சிண்டு சிலுவானுங்களையும் அழைத்துக் கொள்வார்கள். வேலை இல்லாத போது 'அவனை எதுக்கு கூட்டிட்டு வர்ற' என்று கேட்பதுண்டு. அதே நிலைமைதான் ஐ.டி துறையிலும். தேவை இருந்த போது (அல்லது) தேவை இருப்பதாகக் கருதிய போது அளவுக்கு அதிகமான ஆட்களை எடுத்து பெஞ்சில் அமர வைத்திருந்தார்கள். உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிகளின் போது (குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம்) அடி வாங்கிய போதெல்லாம் 'ஊளைச் சதை' என தாம் கருதும் ஆட்களை நிறுவனங்கள் வெட்டி எறிந்தன. 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் இதைத் தொடர்ச்சியாகச் செய்யத் தொடங்கின- வருடம் ஒரு முறையாவது தமக்கு ஒத்து வராத ஆட்களை வெளியேற்றுவது நிகழ்கிறது. மார்க்கெட் மோசமாக இருக்கும் வருடங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இதை ஐ.டி துறையின் வீழ்ச்சி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒருவகையில் இத்துறை பக்குவம் (Matured) அடைந்து கொண்டிருக்கிறது. தேவைக்கு ஏற்ப மட்டும் ஆட்களை எடுக்கிறார்கள். Saturation என்றும் இதைச் சொல்ல முடியாது. தேக்கம் எதுவுமில்லை. சொல்லப் போனால் இத்துறை தம்மை வெகு வேகமாக புதுப்பித்துக் கொள்கிறது. தேவைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுதும் நிறுவனங்கள் தொடர்ந்து வேலைக்கு ஆட்களை எடுக்கின்றன. கல்வி நிறுவனங்களில் வளாக நேர்முகத் தேர்வுகளுக்கும் IT நிறுவனங்கள் செல்கின்றன; அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்றால் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகவும் இருக்கின்றன. எல்லாமும் வழக்கம் போலவேதான் இருக்கின்றன. ஆனால் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நிறைய வடிகட்டுகிறார்கள். கழித்துக் கட்டுகிறார்கள்.
ஐ.டி நிறுவனங்கள் ஆட்களை எடுப்பதால் மாணவர்கள் குவிவார்கள் என்ற நினைப்பில் கல்லூரிகளைத் திறந்து லட்சக்கணக்கான போலி பொறியாளர்களை உருவாக்கிய கல்வி நிறுவனங்கள் தம்மை மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவேயில்லை. ஐ.டி துறை மாறிக் கொண்டிருக்கும் போது கல்லூரிகளின் பாடங்களில் பெரிய மாறுதல்கள் செய்யப்படவில்லை. தம்மை புதுப்பித்துக் கொண்ட பேராசிரியர்களின் எண்ணிக்கையும் வெகு குறைவு. படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் உண்டானது. அதனால்தான் ஐ.டித்துறையே காலி என்பது போன்ற பிம்பமும் உருவானது.
ஐ.டி துறைகளில் தேவைக்கு ஏற்ப பணியாளர்களை வேலைக்கு எடுப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இனி இப்படித்தான் இருக்கும். அதே சமயம் இப்படியே எவ்வளவு நாட்களுக்குத் தொடரும் என்பதையும் அனுமானிக்க வேண்டும் . டெஸ்டிங் மாதிரியான பணிகளை பல நிறுவனங்கள் கீழ் திசை நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன. வியட்நாம் போன்ற நாடுகள் நமக்கு முக்கியமான போட்டியாளர்கள். அங்கே இந்தியாவை விடவும் சம்பளம் குறைவு என்பது முக்கியமான காரணம்.
மூளைக்கு பெரிய அளவு வேலை இல்லாத பணிகள் நம்மை விட்டு நழுவும் போது புதிய தொழில்நுட்பங்களில் நம்மை உறுதியாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகிறது. இந்திய நிறுவனங்களின் பெருந்தலைகளிடம் பேசினால் அவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். 'இந்த வேலையை அவர்களே செய்துவிடுவார்களே' என்று இன்னொருவரைச் சுட்டிக் காட்ட வாய்ப்பையே உருவாக்கக் கூடாது என்பார்கள்.
அப்படியென்றால் ஓடியபடியே இருக்க வேண்டியதுதான். நம்முடைய அனுபவ வருடங்கள் அதிகமாக அதிகமாக நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் மட்டுமில்லை- இந்திய மென்பொருள் துறையே கூட புதிய நுட்பங்களை நோக்கி நகரக் கூடும். அப்பொழுதுதான் தாக்குப் பிடிக்கும்.
'Hot Technologies' என சிலவற்றைக் கருதலாம்.
1 ) பிளாக் செயின் டெக்னாலஜி
2 ) பிக் டேட்டா
3) கிளவுட் கம்ப்யூட்டிங்
4) ஐ.ஓ.டி (Internet Of Things)
5) ஆட்டோமேஷன்
6) மெஷின் லேர்னிங்
இப்படி புதுப் புது நுட்பங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்னமும் நிறைய வரும். நாம் தற்பொழுது செய்யும் பணிக்கு புதிய நுட்பம் எது ஒத்து வரும் என்று தெரிந்து கொஞ்சம் கற்று வைத்துக் கொண்டால் மாறும் சூழலுக்கு ஏற்ப வளைந்து கொள்ளலாம். இப்போதைக்கு மென்பொருள் துறையில் நிகழும் வேலை இழப்பு என்பது மைக்ரோ அளவுதான். இன்னமும் பல ஆண்டுகளுக்கு நிச்சயமாக நிறைய வேலைகள் இருக்கும். பழைய வேலைகள் காலி ஆகும். புதிய வேலைகள் உருவாகும். நாம் வாங்குகிற சம்பளம் அளவுக்கு தகுதி கொண்டவர்களாக இருக்கிறோமா என்பதும், நம்முடைய தற்போதைய நிறுவனத்துக்கு நாம் எவ்வளவு தூரம் பயன்மிக்கவர்களாக இருக்கிறோம் என்பதுதான் கேள்வி. கிடைக்கும் பதில் சங்கடமானதாக இருந்தால் கமுக்கமாக கற்கத் தொடங்கி விட வேண்டும்.
2 எதிர் சப்தங்கள்:
√
இந்தியா கணிப்பொறி துறையில் அசைக்கமுடியாத இடத்தை பிடிக்க வேண்டிய இடத்தில் உள்ளது. அதுவும் நடக்ககூடிய சூழல்தான் உள்ளது. அமெரிக்காவின் எதிர்கால திட்டமெல்லாம், எல்லாவிதமான தொழில்நுட்பத்தையும் தன்னகப்படுத்தி, அதன்மூலமாக பணம் சம்பாதிப்பதுதான். அதை உடைக்க இந்தியர்களால் மட்டும்தான் முடியும் இப்போதைய நிலைமை. அதற்கும் ரொம்ப தூரம் போகவேண்டியுள்ளது.
Post a Comment