Feb 14, 2018

பிப்ரவரி 14

ஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அநேகமாக அதைவிடக் கூட பொடியனாக இருந்திருக்கக் கூடும். அப்பொழுது ஒரு காதல் அரும்பி இருந்தது. எனக்குத்தான். செம லவ். ஒன் சைட். ஆங்! முன் குறிப்பு போட மறந்துவிட்டேன். இந்தச் சம்பவத்தில் தெரியாத்தனமாக யாருடைய பெயரையாவது குறிப்பிட்டிருந்தால் அது மாற்றப்பட்ட பெயர் என்று எடுத்துக் கொள்ளவும். அப்புராணித்தனமாக பெயர்களை அப்படியே எழுதினால் அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அரிவாளோடு வந்துவிடுவார்கள். 

அந்தப் பெண் எங்களுக்கு ஒரு வகையில் சொந்தக்காரி. ஒரே ட்யூஷனில் படித்தோம். அழகாகவும் இருப்பாள். காதல் வராமல் இருக்குமா? பூத்துவிட்டது.  காதலை யாரிடமும் சொல்லாமல் பொத்தி பொத்திதான் வைத்திருந்தேன். ஒரேயொரு ஆகாவழியிடம் மட்டும் சொன்னேன். 'டேய் சூப்பர் ஜோடிடா' என்று கிளப்பிவிட்ட அவன் வடிவேலுவின்  பேக்கரி விவகாரத்தை அர்ஜுன் ஊருக்குள் சொன்னது போல பள்ளி முழுக்கவும் பற்ற வைத்துவிட்டான். அடுத்த நாளே ஒருத்தன் வந்தான். அவன் வேறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவன். பெரிய இடத்துப் பையன். 

'அவளை லவ் பண்ணுறியாமே'  என்றான். 

ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் பம்மினேன். 

'அவ என் ஆளு...குறுக்க வராத' என்றான். 

அது ஒரு வகையில் மிரட்டுகிற தொனி. இப்பொழுது இருப்பதைவிடவும் சற்று குண்டாக இருப்பேன் என்றாலும் அம்மாவையும் அப்பாவையும் நினைத்து பயம் வந்துவிட்டது. அதுவும் அம்மாவுக்குத் தெரிந்தால் சோலி சுத்தம். 'முளைச்சு மூணு இலை விடல..' என்று உச்சியை பிடித்து ஆட்டித் தள்ளிவிடுவார். அப்பொழுது எனக்கு உச்சியில் முடி இருந்தது. சத்தியமாகத்தான். நம்புங்கள்.

காதலை என்ன செய்வது என எனக்கு ஏகக் குழப்பம். வெகு சிந்தனைக்குப் பிறகு விட்டுக் கொடுத்து விட்டேன். அதைத் தவிர வழி ஒன்றும் புலப்படவில்லை. கடுமையான யோசனை செய்துவிட்டு அடுத்த நாள் என் வில்லனைப் பார்த்து 'நான் இனிமேல் குறுக்க வரலை...ஆனா வேற ஒரு பொண்ண நான் புடிச்சா அதுல நீ குறுக்க வரக் கூடாது. அது மட்டுமில்ல, வேற யாராச்சும் ரகளை செஞ்சாலும் நீ எனக்கு சப்போர்ட்டா இருக்கணும்...ஓகேன்னா சொல்லு' என்றான்.அவன் சரி எனச் சொல்லிவிட்டான். டீலிங் முடிந்துவிட்டது.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொள்வோம். 'சொல்லிட்டியா' என்று நான் கேட்க மறப்பதில்லை. 'இல்லை' என்று அவனும் தலையாட்டாமல் இருந்ததில்லை. அந்தப் பெண்ணிடம் எப்பொழுதும் போல பேசிக் கொண்டுதான் இருந்தேன். அது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 'இப்படியே அவனவன் லவ் பண்ணிட்டு இருப்பான்...நாம மட்டும் சும்மா இருக்கறதா' என்று அடுத்த காதலியை தேடவும் தொடங்கியிருந்தேன்.அதே சமயம் அவள் அவனைக் காதலிக்கிறாளா என்று தெரிந்து கொள்ளவும் வெகு ஆர்வம் உருவாகி இருந்தது. 

ஜனவரி வாக்கில் எங்கள் பள்ளியில் வட்டார அளவிலான போட்டிகளை நடத்தினார்கள். அவளும் வந்திருந்தாள். எங்களுக்கு எல்லாம் ஒரே உற்சாகம். வெறும் பையன்களால் நிரம்பிக் கிடந்த பாலைவனம் எங்கள் பள்ளி. ரோஜாக்களும் மல்லிகைகளும் மணந்தால் மனசுக்குள் மத்தாப்பு பொறி பறக்கத்தானே செய்யும்? அவன் அவளிடம் பேசினானா என்று தெரியவில்லை. ஆனால் பையன்கள் அவன் பெயரை சத்தமிட்டு அழைத்தார்கள். அவள் வெட்கப்பட்டாள். 'அடியே காந்தா உனக்கு அவனைப் பத்தி முன்னாடியே தெரியுமா' என்று கறுவிக் கிடந்தேன். ஆனாலும் வாக்கு கொடுத்தாகிவிட்டது..ஒன்றும் செய்வதற்கில்லை..அவர்களைச் சேர்த்து வைத்து விட வேண்டும் கங்கணம் கட்டியிருந்தேன்

அப்பொழுதெல்லாம் பிப்ரவரி 14 இவ்வளவு பிரபல்யம் இல்லை. அதுவும் கிராமப்புறத்தில். ஆனால் எங்களை போன்ற இளங்காதலர்களுக்கு பரிச்சயம் உண்டாகி இருந்தது. அன்றைய தினம் ட்யூஷனில் 'ஷாஜஹான்' விஜய் வேலை ஒன்றைச் செய்வதாக நினைத்து ஒரு காரியத்தைச் செய்தேன். அவளது நோட்டு ஒன்றை எடுத்து 'அன்பே...நான் உன்னைக் காதலிக்கிறேன். இன்று உன்னைப் பார்த்தேன். பார்த்த உடனேயே செத்துப் போனேன். நீயும் என்னை காதலிப்பதாக இருந்தால் காதலர் தினத்தன்று ஒற்றை சிவப்பு ரோஜாவை வைத்துக் கொண்டு வரவும்' என்று எழுதி வைத்தேன். பள்ளிக்கு அவள் வந்திருந்த போது அவன் எப்படியாவது நோட்டை லவட்டி எழுதி இருப்பான் என்று அவள் நம்பிவிடுவாள் என்பதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை வராது என்ற நினைப்பில் செய்த காரியம் அது.

நல்ல நினைப்பில் செய்த காரியம்தான் என்றாலும் கடைசியில் அது நம்பியார்த் தனமான வேலையாக முடிந்துவிட்டது. அவளது அப்பா அரசுப்பள்ளியில் ஆசிரியர். நோட்டு அவரது கையில் சிக்கிவிட்டது. கதை கந்தல். சும்மா விரட்டி விரட்டி வெளுத்து இருக்கிறார். இவள் ஓடிப் போய் குளியல் அறையில் நுழைந்து பூட்டிக் கொள்ள அவர் இவளை விட தில்லாலங்கடி. ஒரு ஸ்டூல் ஒன்றைப் போட்டு மேல ஏறி நின்று சுவருக்கு அந்தப் பக்கமாக சாட்டையை விட்டு விளாசித் தள்ளிவிட்டார். இரண்டு நாட்களுக்கு அவள் ட்யூஷன் பக்கமே வரவில்லை. மூன்றாவது நாள் வந்த போது கூட முகம் வீங்கியே கிடந்தது என்றால் வீரியத்தைப் புரிந்து கொள்ளலாம்.  தடுக்கப் போன அவளது அம்மாவுக்கும் பூசை நடந்ததாக பின்னர் கேள்விப்பட்டேன்.

காதல் காலி. 

அதன் பிறகு அவன் என்ன முயற்சிகளை எல்லாமோ செய்து பார்த்தான். ம்ஹும். வேலைக்கே ஆகவில்லை. அரும்புவதற்கு முன்பாகவே ஒரு காதல் செடியில் ஆசிட் அடித்த புண்ணியவான் ஆகிப் போனேன். அவனை மட்டுமில்லை அதன் பிறகு அவள் யாரையுமே காதலித்ததாகத் தெரியவில்லை. இப்பொழுது அவனும் அவளும் எனக்கு நண்பர்கள். இதை படித்தால் 'நம்மைத் தான் சொல்கிறான்' என்று புரிந்து கொள்வார்கள். கண்டபடி சாபம் விடவும் வாய்ப்பும் இருக்கிறது. அவர்கள் கண்களில் படாமல் இருக்க வன பத்ரகாளியம்மன் அருள் புரியட்டும்.

காதலர் தின வாழ்த்துக்கள்.

7 எதிர் சப்தங்கள்:

YogAnand said...

இவ்வளவு நடந்த பிறகும் நண்பர்களா. ஐயகோ.

Unknown said...

நமக்கும் அனுபவம் உண்டு,ஆனால் எழுத வரமாட்டேன் என்கிறது.

Selvaraj said...'நான் இனிமேல் குறுக்க வரலை...ஆனா வேற ஒரு பொண்ண நான் புடிச்சா அதுல நீ குறுக்க வரக் கூடாது. அது மட்டுமில்ல, வேற யாராச்சும் ரகளை செஞ்சாலும் நீ எனக்கு சப்போர்ட்டா இருக்கணும்ஹா' ஹா ஹா இதுக்கு அந்த பேக்கரி டீலிங்கே பரவாயில்ல போல இருக்கே

'அப்பொழுது எனக்கு உச்சியில் முடி இருந்தது. சத்தியமாகத்தான். நம்புங்கள்' சத்தியமா நம்புறோம்

நான் ஏழாவது படிக்கும்போது இடுப்பிலேர்ந்து அவுந்து விழும் என் ‘நிக்கற’ (அரைக்கால் சட்டை ) திரும்பவும் எடுத்து கட்டுறதுக்கே எனக்கு நேரம் சரியாய் இருக்கும் நீங்க என்னடானா ஒரு காதல் கோட்டையை கட்டிருக்கீங்க இன்னொரு காதல் கோட்டையை இடிச்சிருக்கீங்க

சேக்காளி said...

// அரும்புவதற்கு முன்பாகவே ஒரு காதல் செடியில் ஆசிட் அடித்த புண்ணியவான் ஆகிப் போனேன்//
அட கிராதகனே!!!!

ராமுடு said...

Mani.. Looks like You have another face with terror mindset. .:)

அன்பே சிவம் said...

கிராதகன் என்றெல்லாம் தலையை அழைக்கக்கூடாது என்று கொ.ப.செ வை கண்டிப்பதுடன் அவைக்குறிப்பிலிருந்து அவ்வார்தை நீக்கப்படுகிறது.

சேக்காளி said...

//கிராதகன் என்றெல்லாம் தலையை அழைக்கக்கூடாது //
"அரும்புவதற்கு முன்பாகவே ஒரு காதல் செடியில் ஆசிட் அடித்த புண்ணியவான் ஆகிப் போனேன்" என்ற வரிகளை வாசித்த அந்த கணம் என்னுள் உதித்த கொடுஞ்சொல் அது.இதை விட கடுமையான வார்த்தை சிக்கவில்லை.
மேலும் இந்த ஆசிட் அடித்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் "தல" தல யாக ஆகியிருக்கவில்லை. இது அப்போதைக்கான திட்டுதல்.ஆகவே இந்த சொல்லை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன்.
அப்படி வைக்கும் பட்சத்தில் எதிர்காலம் "தல" யை எள்ளி நகையாடும் என எண்ண வேண்டாம்.அப்படி ஒரு வேளை கேள்வி எழுந்தால் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு படத்திறப்பு நடத்தும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சமாளித்து விடுவோம்.
நன்றி
கொபசெ