டிசம்பர் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக்கு கணக்குகளை வெளியிடவில்லை. அலுவலகத்தில் நிலவிய அழுத்தம் காரணமாக மறந்துவிட்டேன்.
யாரும் கேட்கவுமில்லை.
ஜனவரி மாதத்தின் உதவிகள் அனைத்தும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்துக்காக வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தனியாக மாணவர்கள் குறித்து எழுத வேண்டாம் என நினைக்கிறேன். குறிப்பிட்ட யாராவது மாணவர் பற்றி எழுத வேண்டிய அவசியம் இருந்தால் மட்டும் எழுதுகிறேன். இப்பொழுது பரவலாக நிசப்தம் தளத்தை வாசிக்கிறார்கள். யாரேனும் மாணவர்களை விசாரிக்கும் போது அவர்கள் சங்கடப்பட வாய்ப்பிருக்கிறது.
தாய்த் தமிழ் பள்ளியை நிசப்தம் சார்பில் எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டதற்கு உதவுவதற்காக சில நன்கொடையாளர்கள் ஐம்பதாயிரம் ரூபாய்களை வழங்கி இருந்தார்கள். பள்ளி விவகாரம் நீதி மன்றத்தில் இருக்கிறது. பள்ளியின் தற்போதைய நிர்வாகத்தினர் கல்வித்துறையின் உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். தெளிவான முடிவு கிடைக்க இன்னமும் சில வாரங்கள் ஆகும் போலிருக்கிறது. நிலவரம் குறித்து தனியாக எழுதுகிறேன்.
ஜனவரி மாதத்துக்கு 16 ஆம் தேதிக்கு பிறகான விவரங்களை மட்டும் வங்கியில் இருந்து அனுப்பியிருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. விவரங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.
திரு.ஸ்ரீதரன் அவர்கள் டிசம்பரில் பணம் அனுப்பிய போது அவரது கணக்கிலிருந்து இரண்டு முறை கழிக்கப்பட்டு நிசப்தம் கணக்கில் இரண்டு முறை சேர்க்கப்பட்டுவிட்டது. அதனால் அவரது பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறது.
ஜனவரி மாத இறுதியில் நிசப்தம் அறக்கட்டளையின் வங்கியின் கணக்கில் முப்பத்தேழு லட்சத்து ஐம்பதோராயிரத்து தொள்ளாயிரத்து பதினாறு ரூபாய் இருக்கிறது.
ஏதேனும் சந்தேகங்கள் அல்லது வினாக்கள் இருப்பின் கேட்கவும்.
ஏதேனும் சந்தேகங்கள் அல்லது வினாக்கள் இருப்பின் கேட்கவும்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment