வெள்ளிக்கிழமையன்று வெளியூர் கிளம்புவதாகத்தான் உத்தேசம். போக்குவரத்துத் துறையின் வேலை நிறுத்தத்தால் வீட்டிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. ஒருவிதத்தில் நல்லதுதான். சனிக்கிழமையன்று மகனின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு வரச் சொல்லியிருந்தார்கள். இத்தகைய கூட்டங்களுக்கு மனைவி செல்வதுதான் வழக்கம். இந்த முறை மாறிவிட்டது.
‘பையன் படிப்பில் பிரச்சினையில்லை’ என்றுதான் டீச்சர் ஆரம்பித்தார். எனக்கு முன்பாக ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்த பெற்றோர் அதைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஆங்கிலத்தில் மட்டும் ஏன் ஏ கிரேடு’ என்பதுதான் அவர்களின் பிரச்சினையாக இருந்தது. மற்றவற்றில் அவர்களது குழந்தை ஏ+ போலிருக்கிறது.
மகியிடம் ‘நீ போய் விளையாடு’ என்று சொல்லிவிட்டு ‘இங்க பாருங்க..அவன் படிக்கலைன்னாலும் பிரச்சினையில்லை’ என்றேன்.
குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு முடிக்கிற வரைக்கும் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டறிவதுதான் வேலையாக இருக்க வேண்டும். ‘இப்படித்தான் கிதார் வாசிப்பார்கள்’ ‘இதுதான் கராத்தே’‘நீச்சல் இப்படி அடிப்பாங்க’ என்று விதவிதமான வாய்ப்புகளைக் காட்டினால் போதும். எதையும் அழுத்திச் சொல்லித் தர வேண்டியதில்லை. உலகின் வர்ணங்களைக் காட்டினால் குழந்தைகள் தமக்கு எது பிடிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
அப்படித்தான் என் சிட்டுக்குருவி மண்டை கருதுகிறது. அப்படியில்லாமல் ‘நீ இதைத்தான் செய்ய வேண்டும். இப்படித்தான் வளர வேண்டும்’ என்று குழந்தைகளிடம் திணித்தால் அவர்களுக்கு வெறுப்புதான் வளரும்.
Let them enjoy their learning. ஒவ்வொரு பாடத்துக்குமான அறிமுகம்தான் பத்து வயது வரைக்கும் குழந்தைகளுக்கான அவசியம். ‘அதை மட்டும் செஞ்சீங்கன்னா போதும்’ என்றேன் ஆசிரியையிடம். குழந்தைகளை அவர்கள் போக்கில் படிக்க விட்டு விட வேண்டும். நூற்றுக்கு நூற்றிப்பத்து மதிப்பெண்கள் வாங்கச் சொல்லி வதைக்க வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பிலேயே ராமானுஜங்களை எதிர்பார்ப்பது குழந்தைகளின் மீதான பெரியவர்களின் வன்முறை.
‘ஆர் யூ சீரியஸ்?’ என்றார் ஆசிரியை. ஆமாம் என்றேன்.
ஆசிரியைக்கு இவனைப் பற்றித் தெரியும். சில சமயங்களில் வகுப்பில் பொது அறிவுப்போட்டிகள் நடத்துவானாம். முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் கேள்விகள் கேட்பேன். இணையம்தான் துணை. இயற்பியல், வேதியியல், வானியல் என சகலமும் கலந்து கட்டிக் கேட்பதுண்டு. அவனால் எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள முடிகிறதோ அதை வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதுண்டு.
முன்பொருமுறை ஏதோ பேச்சுவாக்கில் எங்கள் அம்மா ‘ஃபேமிலி ப்ளானிங்’ என்ற வார்த்தையை உதிர்த்துவிட்டார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் ‘ஃபேமிலி ப்ளானிங்ன்னா என்ன?’ என்றான். என்ன செய்வார்களோ அதைச் செய்தார்கள். அம்மா பேச்சை மாற்றி விட்டார். இந்த மாதிரியான கேள்விகளை அவன் எழுப்பினால் அன்றைய தினமே அவனைத் தனியாக அழைத்து பதில் சொல்லித் தந்துவிடுவேன். ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜனில் இருந்து நிறைய. பிறவற்றைச் சொல்லித் தரும் போது போகிற போக்கில் டெஸ்ட்டிக்கிள், ஓவரிஸ் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்தால் அவனுக்கும் தயக்கம் எதுவும் இருப்பதில்லை.
இணையத்தில் ஒரு படத்தைக் காட்டி கருமுட்டையிலிருந்து கரு உண்டாவதைத் தடுப்பதற்காக செய்யப்படுகிற அறுவை சிகிச்சை என்ற போது புரிந்து கொண்டான். ‘ஆமாம்..நாய் குட்டி போடாமல் இருக்க நாய்க்கு ஆபரேஷன் செஞ்சதா வீரப்பன்காட்டு அப்பிச்சி சொன்னாரு’ என்றான். அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பார்கள். மூன்றாம் வகுப்பு படித்த போது எனக்கு ஊரில் இருந்த அத்தனை கெட்ட வார்த்தைகளும் தெரியும். ஆனால் முழுமையாகத் தெரிந்திருக்காது. எந்த வார்த்தை எந்த உறுப்பைச் சுட்டுகிறது என்று தெரியாமலே பேசிக் கொண்டிருப்பேன். யார் வழியாகவோ, எங்கேயோ இருந்து அரைகுறையாகத் தெரிந்து கொள்வதைவிட நாமாகவே சொல்லிக் கொடுத்துவிடுவது நல்லதுதானே?
அவனது வகுப்பில் முப்பது மாணவர்கள். பத்துப் பத்து பேராக மூன்று குழுக்களாக அமைத்து கேள்விகள் கேட்பதாகச் சொல்லியிருக்கிறான். அப்படியொரு பொது அறிவுப்போட்டியில் ‘ஃபேமிலி ப்ளானிங் என்றால் என்ன?’ என்று கேட்டிருக்கிறான். ஆசிரியை மயக்கம் போடாத குறைதான். ஏதோ சொல்லி வேறு கேள்வியைக் கேட்கச் சொல்லியிருக்கிறார். கடந்த முறை வேணி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்துக்குச் சென்ற போது ஆசிரியை இதைச் சொன்னாராம். ‘அப்பனும் மகனும் சேர்ந்து ஏதோ சதி செய்கிறார்கள்’ என்று நினைத்திருப்பாள்.
இதைக் கேள்விப்பட்ட பிறகு சற்று அலர்ட்டாகி விட்டேன். ‘இதெல்லாம் அறிவுக்காகச் சொல்லித் தர்றேன்...தேவையில்லாமல் வெளியில் பேச வேண்டாம்..உன்னை அதிகப்பிரசங்கி என்பார்கள்’ என்ற எச்சரிக்கையுடன் மட்டுமே அடல்ட்ஸ் ஒன்லி விவகாரங்களைப் பேசுவது வழக்கமாகியிருக்கிறது. குழந்தைகளுக்கு இதெல்லாம் தேவையா என்றால் தேவையில்லைதான். ஆனால் எல்லாவற்றையுமே குழந்தைகள் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறு எதுவுமில்லை என்று நினைப்பேன்.
குழந்தைகளிடம் எவற்றையெல்லாம் மறைக்கிறோமோ அவற்றின் மீதுதான் அவர்களின் கவனம் குவியும். க்யூரியாசிட்டி. அதைத்தான் தோண்டித் துருவுவார்கள். பெரும்பான்மையான நேரம் அதில்தான் கவனம் செல்லும். எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்கிற பக்குவத்தை பெற்றவர்கள்தான் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.
மீசை முளைக்கிற பருவத்தில் கசமுசா பற்றியே நினைத்து நினைத்து நேரத்தை வீணடிக்காமல் இருந்திருந்தால் ஒழுங்காகப் படித்து டாக்டராகியிருப்பேனோ என்னவோ! எம்புருஷனும் கச்சேரிக்குப் போகிறான் என்ற நினைப்பில் ஐடித்துறையில் சேர்ந்து இந்த பிரேசில் ப்ராஜக்டில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்க வேண்டியதில்லை.
6 எதிர் சப்தங்கள்:
//ஃபேமிலி ப்ளானிங் என்றால் என்ன?’//
ஒமக்கு பெப்ரவரி ல இருக்கு ய்யா ஆப்பு.
"மீசை முளைக்கிற பருவத்தில் கசமுசா பற்றியே நினைத்து நினைத்து நேரத்தை வீணடிக்காமல் இருந்திருந்தால் ஒழுங்காகப் படித்து டாக்டராகியிருப்பேனோ என்னவோ! எம்புருஷனும் கச்சேரிக்குப் போகிறான் என்ற நினைப்பில் ஐடித்துறையில் சேர்ந்து இந்த பிரேசில் ப்ராஜக்டில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்க வேண்டியதில்லை" -------
முதலில் சிரிப்பு வந்தது. ஆனால் எவ்வளவு உண்மை. திரும்ப பெற முடியாத கிடைத்தற்கரிய வாழ்க்கை நமக்கு வழங்க பட்டது. ஆனால் கடந்த காலத்தை திரும்பி பார்க்க சொன்னால் கண்ணீர் வருவதை தவிர்க்க முடிய வில்லை. இந்த கடைசி பாரா என்னை மிகவும் பாதித்து விட்டது.
This is not சிட்டுக்குருவி மண்டை
எனக்கு மஹியோட போன் நம்பர் கொஞ்சம் அவசரமா வேணும். இல்லாட்டி வீட்டுல 'வேற' பெரியவங்க யாராவது பேசினாலும் பரவாயில்ல. அவங்கப்பா கூட மட்டும் சேராதேன்னு சொல்லனும்.😳
நல்ல பதிவு. இனிமேல் மழுப்பாமல் உண்மையை சொல்ல முயற்சி செய்கிறோம். *****
நல்ல சொன்னிங்க! எங்க பொண்ணு இதேமாதிரி ஒரு கேள்வி கேட்டுச்சு. வரதட்சணை என்றால் என்ன என்று? எப்படியோ சொல்லி சமாளித்தோம்.
**** நன்றி! வணக்கம் !!
//சேக்காளி said...
//ஃபேமிலி ப்ளானிங் என்றால் என்ன?’//
ஒமக்கு பெப்ரவரி ல இருக்கு ய்யா ஆப்பு.//
;-) ;-)
Post a Comment