Jan 7, 2018

போக்குவரத்துத் துறை

சித்தப்பா பேருந்து நடத்துநர். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே காக்கி சட்டைதான். விடுப்பு எடுக்கவே மாட்டார். வீட்டில் ஏதாவது நிகழ்வு என்றாலும் கூட பணியை முடித்துவிட்டு வந்து கலந்து கொள்வதுதான் வழக்கம். அவர்கள் விடுப்பு அளிக்கிறார்களோ இல்லையோ இவர் வெகு சின்சியர். அப்படி இருந்த மனிதர் கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதற்கு அவர் அளிக்கும் கட்டணம் மாதம் பத்தாயிரம் ரூபாய். இலஞ்சம்தான். காலம் முழுக்கவும் ஒரு மனிதன் குடும்ப நிகழ்வுகளுக்காகக் கூட விடுப்பு எடுக்காமல் சேர்த்து வைத்த விடுமுறைகளை தான் பயன்படுத்திக் கொள்ள மாதம் பத்தாயிரம் ரூபாயை லஞ்சமாக வழங்க வேண்டியிருக்கிறது என்பது மட்டுமே இத்துறையின் லட்சணத்தைக் காட்டிவிடும்.

தமிழக அரசுத்துறைகளில் மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டு, மிகவும் கொடூரமான அளவில் ஊழல் தலைவிரித்தாடுகிற துறை என்றால் அது போக்குவரத்துத்துறைதான். பெயருக்குத்தான் சொகுசுப் பேருந்து. வண்டியின் லட்சணத்தைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? இருக்கைகள் குதிக்கும். சாளரங்களை மூட முடியாது. லொட லொட சத்தம் தூங்கவிடாது. மிகைப்படுத்திச் சொல்லவில்லை. தொண்ணூற்றைந்து சதவீதப் பேருந்துகள் இப்படித்தான். நடத்துநர்களிடம் கேட்டால் ‘நாங்க என்ன சார் செய்வது?’ என்பார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்? வாகனங்கள் வாங்குவதில் ஊழல், உதிரிப் பாகங்கள் வாங்குவதில் ஊழல் என்று எல்லாவற்றிலும் கைவைத்துவிடுகிறார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர்களாக இருந்தவர்களின் சொத்து மதிப்பு உயர்வை யாராவது ஆய்ந்தால் நிலைமை பல்லிளிக்கும்.

வாகனங்கள் வாங்குவதில் ஊழல், உதிரிகளில் திருடுவதையெல்லாம் விட்டுவிடலாம். பணியாளர்கள் அனுபவிக்கும் சிரமங்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டால் போதும். பணி நியமனத்துக்கு ஏழு அல்லது எட்டு லட்ச ரூபாய் என்பதில் ஆரம்பித்து, விடுப்பு வழங்குவதற்குக் கூட லஞ்சம் என்பது வரை சகலத்திலும் தொழிலாளியின் வயிற்றில் அடிக்கிறார்கள். பேருந்து நிலையங்களில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்துநர் அல்லது ஓட்டுநர்களிடம் பேசுவதை கவனித்திருக்கிறீர்களா? அடிமைகளிடம் பேசுவதைப் போல பேசுவார்கள். செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் செய்கிற லோலாயம் அதைவிட அதிகமாக இருக்கும். இதே லோலாயத்தை பக்கத்தில் இருக்கும் கர்நாடகத்தில் பார்க்க முடியாது. எல்லை மீறுகிறார்கள் என்று தெரிந்தால் நடத்துநரும் ஓட்டுநரும் பேருந்தை விட்டு இறங்கிச் சென்றுவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழகத்தில் ஊழியர்கள் நடுங்குவார்கள். அதனால்தான் விடுப்பு தராமல் தாளிப்பதிலிருந்து ஊழியர்களின் அத்தனை உரிமைகளிலும் கை வைக்கிறார்கள்.

முதன் முறையாக போக்குவரத்து ஊழியர்கள் துணிந்து களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மக்களுக்குச் சிரமம்தான். ஆனால் அதே சமயம் அவர்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளை மாநிலம் புரிந்து கொள்ளட்டும்.

‘கண் புரை அறுவை சிகிச்சைக்கு விடுமுறை தாங்கய்யா’ என்று கேட்ட ஓட்டுநரிடம் ‘சரி போய்ட்டு மூணு நாளில் வந்துடுங்க’ என்று சொன்ன அயோக்கியத்தனமான அதிகாரியைத் தெரியும். அதிகாரிகளிடம் கேட்டால் ‘மேல இருந்து ப்ரஷர்’ என்பார்கள். ஒவ்வொரு ஓட்டுநருக்கும் இலக்கு உண்டு. KMPL. கிலோமீட்டர் பெர் லிட்டர். அதே போல நடத்துநருக்கு வருமான இலக்கு உண்டு. இந்த ஆகாவழி வண்டிகளை வைத்துக் கொண்டு எப்படி இலக்கை அடைய முடியும் என்று நொந்து போவார்கள். இலக்கு நிர்ணயிப்பது தவறில்லை. ஆனால் அதற்கேற்ற கட்டமைப்புகள் இருக்க வேண்டியதில்லையா. இப்படி தொழிலாளர்களை நசுக்கி மிச்சம் பிடித்த பணம் எல்லாம் எங்கே போனது? பெரும்பாலான போக்குவரத்து மண்டலங்கள் அடமானத்தில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் கோடி ரூபாய் கடனாக இருக்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் நட்டத்தில் துறை இயங்குகிறது. இதில்தான் மேல்மட்டத்தில் நடக்கும் ஊழல், அதிகாரிகளின் மிரட்டல், அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கத்தினர் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள். இவையெல்லாம் ஊழியர்களை எரிச்சல் அடையச் செய்யாமல் என்ன செய்யும்? 

டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிக்கான பணம், 8 கோட்டங்கள், 20 மண்டலங்கள் அங்கே அளவுக்கதிகமான அதிகாரிகள் என்று செலவுகள் ஒரு பக்கம் நெருக்க, சரியான பராமரிப்பின்மை, தலைவிரித்தாடும் ஊழல் என்றெல்லாம் தாறுமாறு செலவுகள் பெருக, தமக்கான பலன்களைக் கூட அடைய முடியாத  ஊழியர்களின் மன உளைச்சல்  என்பதெல்லாம் இன்னொரு பக்கமுமாக போக்குவரத்துத் துறையை ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கின்றன. கார்போரேட் நிறுவனங்களில் இலாபம் குறையும் போதெல்லாம் ஊழியர்களின் சம்பளப் பலனில் கை வைப்பார்கள். இங்கேயும் அதுதான் நடக்கிறது. கடைநிலை ஊழியர்களின் பலன்களை நிறுத்தி வைக்கிறார்கள். எங்கேயோ யாரோ செய்கிற தவறுகளுக்கு ஊழியர்கள்தான் பலிகடாவாகுகிறார்கள். 

‘ஓய்வு பெறுகிற தருணத்தில் இருக்கிற ஆட்களை ஏதேனும் சிக்கலில் சிக்க விடுங்கள்’ என்று கூடச் சொல்வதாகச் சொல்கிறார்கள். அந்தச் சிக்கலைக் காட்டி ஓய்வுகாலப் பலன்களை நிறுத்தி வைக்க முடியும் என்பதால் அப்படிச் செய்கிறார்களாம். எவ்வளவு கொடுமை? வாழ்நாள் முழுவதும் பேருந்திலேயே கசங்கிப் போகும் தமக்கான பலன்களைக் கொடுங்கள் என்றுதான் ஊழியர்கள் கேட்கிறார்கள்.

வழக்கமாக போக்குவரத்துறையில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கம் பலமானதாக இருக்கும். போராட்டங்களின் போது தொழிற்சங்கத்தினரை அமைச்சர் அழைத்து ‘முடிச்சு விடுங்கப்பா’ என்று சொல்லி பெட்டியைத் தருவார். பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக புளகாங்கிதம் அடைந்து அறிவிப்பார்கள். இப்பொழுது தொழிற்சங்கங்களால் கூட எதுவும் செய்ய முடியவில்லை என்றால் ஊழியர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம். அத்தனை வெறுப்பில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்களின் போராட்டங்களை முறியடிக்க முடியவில்லையென்றால் இப்பொழுதெல்லாம் அரசு நாடுவது நீதிமன்றங்களைத்தான். ஒரே தீர்ப்பில் முடக்கிவிடுகிறார்கள். சமீபத்தில் ஆசிரியர்களின் போராட்டம் அப்படித்தான் முடக்கப்பட்டது. இன்றைக்கு போக்குவரத்து ஊழியர்கள் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறியிருக்கிறார்கள். ‘என்ன செய்வாங்க? பலன்களை நிறுத்துவாங்க...இப்போ மட்டும் என்ன வாழுது’ என்கிறார்கள். அதுதான் நிதர்சனம்.

ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது போக்குவரத்துறையைத் தனியார் மயமாக்குங்கள் என்றெல்லாம் கூவுகிறவர்களைப் பார்த்தால் ஆபாசமாக இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் மாதாந்திர வருமானம், பேருந்துகளிலேயே இரவுகளில் கொசுவர்த்திச் சுருளை பற்ற வைத்துக் கொண்டு உறங்கும் அவர்களின் வாழ்க்கை முறை, நேரத்துக்கு உணவில்லாமல் வாங்கிக் கொள்கிற அல்சர், உடல் உபாதைகள், வாரத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை, பொங்கலும் இல்லாத, தீபாவளியுமில்லாத தொழில் என்பதையெல்லாம் புரிந்து கொண்டவர்கள் அப்படிப் பேச மாட்டார்கள். தனியார் மயமாக்குதல் என்பதை எதிர்காலத்தில் செய்யலாம். இன்றைக்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களின் பலன்களை வழங்குங்கள் என்றுதான் கேட்கிறார்கள். உங்கள் வியாக்கியான விளக்குமாறைத் தூக்கிக் கொண்டு வருவதை நிறுத்துங்கள். ப்ளீஸ்!

16 எதிர் சப்தங்கள்:

Jaikumar said...

எங்க சொந்தகாரர் ஒருவர் 20 வருடங்கள் ஓட்டுநராக பணியாற்றி பின் பதவி உயர்வில் 3 வருடங்கள் Senior Driving Instructor ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நாளன்று தங்களது குடும்ப உறுப்பினர்களை கூட பணிமனைக்கு (depot) வரவேண்டாம் என்று தடுத்துவிட்டார். கேட்டதற்கு பணி ஓய்வு பலன்கள் கிடைக்காது. நாம் அங்கு சென்றால் அதிகாரிகளுக்கு இனிப்பு, காரம், தேநீர் வாங்கி தர வேண்டும், அதற்கு தன்னிடம் பணம் இல்லை மற்றும் தன் சயமரியாதையை விட்டு அவர்களுக்கு வாங்கி தரமுடியாது என்றும் சொன்னார். அவரின் மகள் தன் மாமனாரின் பணி ஓய்வு விழாவின் போது அவர்கள் அளித்த விருந்தை நினைத்து அழுதார்.

மிகக் கொடுமை.

சேக்காளி said...

கடந்த வருடத்தின் முதல் போராட்டம் (சல்லிக்கட்டு) வென்றது போல் இந்த ஆண்டின் முதல் போராட்டமும் வெல்லட்டும்.

அன்பே சிவம் said...

தல, ஊருக்கெல்லாம் வழி சொல்றீரு. கொஞ்சம் அப்பாரு ஆபிஸ் பக்கமும் எட்டி பாருங்கோவ். நீரு சொல்லுற அளவுக்கெல்லாம் இல்லாட்டியும் அங்ஙனயும் இதே லட்சணம்தேன்.

அன்பே சிவம் said...

செருப்பு இல்லையேன்னு நாங்க பேசுறதுக்கும் காலே இல்லையேன்னு அவங்க கதறுறதுக்கும் இரு(று)க்கும் வித்யாசத்த வெளக், சொல்லிட்டீங்க. இதுக்கு மேல சொல்றதுக்கு என்ன இருக்குங்...

Anonymous said...

தமிழக அரசின் மெத்தனபோக்கே காரணம் தேவையற்ற திட்டங்களை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு மக்களின் அத்தியாவசங்களின் ஒன்றான போக்குவரத்தை சரி செய்வதன் மூலம் பெருமளவில் லாபம் ஈட்டலாம் அதற்கு தகுதியான அதிகாரிகளும் நிர்வாகமும் தேவை.ஓய்வு பெற்ற்வர்களின் 7ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

கலியபெருமாள் புதுச்சேரி said...

மிகச் சரியான பதிவு..நானும் எழுத நினைத்தேன் இதைப்பற்றி..வெளியிலிருந்து பார்க்கும் மக்கள் சும்மா இருந்தாலும் வீணாப்போன மீடியா ஊதிப் பெருசாக்கறனானுங்க

vijayan said...

1967 -லிருந்து 2000 வரை தமிழக போக்குவரத்து அமைச்சராக இருந்தவர்கள் சேலம்,ஈரோடு,கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான்,இவர்கள் பஸ் உரிமையாளர்கள்,ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அல்லது தனியார் பஸ் உரிமையாளர்களின் ரத்த சொந்தங்கள்,இந்த அமைச்சர்களின் முக்கிய வேலையே இம்மாவட்டங்களில் புதிய ரயில்கள் வரவிடக்கூடாது,பொதுத்துறை போக்குவரத்து நிறுவனங்கள் உருப்படியாகிவிட கூடாது என்பதுதான்.

Anonymous said...

வாழ்க வளர்க ட்ரான்ஸ்போர்ட் புகழ் செங்கோட்டையன்........ வாழ்க அதிமுக அடிமைகள்.

இவ்வளவு ப்ரச்சினைக்கும் தான் தான் காரணம் நு தெரிஞ்சாலும், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டு கொஞ்சம் கூட வெட்கமும் சொரணையும் இல்லாமல் அண்ணா வாழ்க அம்மா வாழ்க ந்னு மைக் பிடித்து பேசும் செங்கோட்டையனை என்ன செய்வது? அவருக்கு ஓட்டு போட்ட மக்களை என்ன செய்வது?

Selvaraj said...

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போக்குவரத்துக்கு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது அரசு சில உறுதிமொழிகளை வழங்கி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தது. அப்போதே உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லையென்றால் மீண்டும் போராடுவோம் என்று போக்குவரத்துக்கு ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. தங்களுக்கு இரண்டு மடங்கு ஊதிய உயர்வை முன்தேதியிட்டு அரசிடமிருந்து வாங்க போகும் நீதிபதிகள் போக்குவரத்துக்கு ஊழியர்கள் ‘ஊதியம் போதவில்லையென்றால் வேறு வேலைக்கு செல்லலாம்’ என்பது சற்றும் ஏற்புடையதல்ல

வெள்ளிக்கிழமை 05.01.2018 போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருந்தது ஆனால் தீர்ப்பின் மீது மக்கள் கடும் அதிருப்தி கொண்டதும் இன்று 08.01.2018 போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. குனிய குனிய தலைல குட்டுவானுங்க

Selvaraj said...

அரசுப்போக்குவரத்தை தனியார் மயமாக்க வேண்டுமென்பவர்கள் ஒரு எளிய உண்மையை புரிந்துக்கொள்ளவேண்டும் ‘தனியாரின் முதல் நோக்கு இலாபம் மட்டுமே சேவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான் ஆனால் அரசின் முதல் நோக்கம் சேவை அடுத்துதான் இலாபம் ‘சென்னையில் வெள்ளத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்க பட்டபோது தனியார் வாகனங்கள் எல்லாம் ஒதுங்கி கொண்டன அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கின’

Bala said...

Privatisation 'll lead to monopoly only.what happened to cement industries owners syndicate. Even iron lady not able to convince them to reduce the price.Private buses are charging excess than normal. Judiciary may direct govt to revamp the transport corporation.

Bala said...

Unions also approach best lawyers to put their view not only for their benefits but also eliminate the unhealthy practice which made sick.

Dhana said...

என் மாமனார் கூட நடத்துனர் தான். கோபி கிளை. முந்தா நேத்து நம்ம செங்கோட்டையன் பிரான்ச் ல வந்து உங்காந்துட்டாராம . லோக்கல் ல இருக்கற டிரைவர் கண்டக்டர் கு போன் பண்ணி மினிஸ்டர் இங்க தான் இருக்காருன்னு பேச வச்சு பிரஷர் கொடுத்துருக்காங்க. அவர் மூலமா ரெகமெண்டஷன் ல போனவங்க கண்டிப்பா வந்து தான ஆகணும்.

கண்ணன் கரிகாலன் said...

சம்பளமே கொடுக்காட்டியும் strike பண்ணாத துறைகள் ..!

1. பத்திர பதிவு
2. Municipality , corporation,
3. RTO, Revenue
4. காவல் துறை
5. இன்னும் சில துறைகள்

தன் கையே தனக்குதவி , இவன் யாரு நமக்க்கு increment போட

-படித்ததில் வாய்விட்டு சிரித்தது.

கண்ணன் கரிகாலன் said...

சம்பளமே கொடுக்காட்டியும் strike பண்ணாத துறைகள் ..!

1. பத்திர பதிவு
2. Municipality , corporation,
3. RTO, Revenue
4. காவல் துறை
5. இன்னும் சில துறைகள்

தன் கையே தனக்குதவி , இவன் யாரு நமக்க்கு increment போட

-படித்ததில் வாய்விட்டு சிரித்தது.

vijay said...

our govt waste lot of money for poster and making statues . if they dont waste money for these kind of unwanted things . definitely Tamilnadu will become great