Jan 10, 2018

லா.ச.ராவின் நினைவுக் குறிப்புகள்

'குழந்தை மரணித்துத் தூளியில் எடுத்துக் கொண்டு சென்றாலோ, வேறு அருகிலோ தூரத்திலோ, இவர் கண் பார்வை படும்படியாக சவ ஊர்வலம் வந்து கொண்டிருந்தாலோ என்ன அவசர வேலையாய் சென்று கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நின்று செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டுக் கும்பிட்டு வழி அனுப்புவார். குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவரைக் கும்பிடுவார். சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தையைக் கும்பிடுவார். புத்தாடை அணிந்து அவ்ந்தால் புதுப்புடவை கட்டி வந்து நமஸ்கரித்தால் கும்பிட்டுப் பின் ஆசிர்வதிப்பார். இரவு பெய்த மழையில் குளித்துக் காலையில் மலர்ச்சியில் சிரித்துக் கொண்டிருக்கும் செம்பருத்தியைக் கும்பிடுவார். ஆர்பரித்துக் கொட்டும் குற்றால அருவியைக் கும்பிடுவார். அத்துமீறிக் கட்டவிழ்த்துக் கொண்டு ஓடும் கன்றுக் குட்டியைக் கும்பிடுவார். இலையில் கச்சிதமாய்ப் பரிமாறப்பட்டு அதனதன் இடத்தில் அமர்ந்திருக்கும் உணவு வகைகளைக் கும்பிடுவார். இவற்றைக் கும்பிட்டதைவிட இவர் சாமி கும்பிட்டது குறைவுதான்’

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் பற்றிய அவரது மனைவி ஹைமாவதி எழுதியிருக்கும் நினைவுக் குறிப்பு இது. இதை வாசித்த பிறகு லா.ச.ரா பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டேன். லா.ச.ராவின் மனைவி திருமதி.ஹைமாவதியின் குறிப்புகளைப் புத்தகமாக்கி விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பத்தி புத்தகத்தின் கடைசி சில பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது. வாசித்த பிறகு மனம் கனமாகிவிட்டது.  


கடந்த வாரத்தில் பாரதிமணி அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்த போது அவரிடம் கூடுதலாக சில பிரதிகள் இருந்தன.  ‘அன்பு நண்பனுக்கு’ என எழுதில் கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு புத்தகம் பற்றி நிறையப் பேசினார். ‘இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்களா?’ என்று அவரிடம் கேட்டேன். அவருக்கும் நூல் குறித்து நிறைய ஆச்சரியங்கள்.

லா.ச.ரா தொண்ணூற்றொரு வயது வாழ்ந்தவர். 1916 ஆம் ஆண்டு அக்டோபர் 29ல் பிறந்து அதே அக்டோபர் 29, 2007 மறைந்தார். எழுத்தாளர் என்பதைத் தாண்டி தொண்ணூறுகளைத் தாண்டி வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையப் படிப்பதில் நிறையச் சுவாரசியங்கள் இருக்கின்றன. எத்தனை அனுபவங்களைச் சேர்த்திருப்பார்கள்? அந்த ஒவ்வொரு அனுபவமும் அவர்களைத் தட்டி நெகிழ்த்து மெருகூட்டி ஆசான்களாக மாற்றுகின்றன. அதிலிருந்து சிட்டிகையை கிள்ளி எடுப்பதே பெரும்பாடம்தான்.

தங்களது தினசரி செயல்பாட்டில் தொடங்கி எல்லாவற்றிலும் உருவேறிக் கிடக்கும் அந்த அனுபவங்களை அவருடனேயே வாழ்ந்த இன்னொருவர் சொல்லச் சொல்லக் கேட்பது பெரிய பாடம். தம்மைப் பற்றித் தாமே எழுதுவதைவிடவும் நம்மோடு கூடவே இருந்தவர்கள் கவனித்து உள்வாங்கி எழுதுவதில்தான் சுவாரசியம் அதிகம். இந்த நூலின் பலமே அதுதான். கத்தரித்து அடுக்கிய சொற்கள் இல்லை. பேச்சுவழக்குதான். மடித்துத் திருகிய வாக்கியங்கள் இல்லை. பிராமண வீட்டு உரையாடல் நடைதான். ஆனாலும் புத்தகத்தின் அடிநாதம் நம்மை எங்கேயோ இழுத்துப் பிடிக்கிறது.

பாரதி மணி, இந்நூலின் பிரதியைக் கொடுத்தவுடனேயே பாடமாகத்தான் வாசிக்க விரும்பினேன். புத்தகமும் அப்படித்தான் இருந்தது.

காலையில் நான்கரை மணிக்கு காபி, மதியம் பதினோரு மணிக்கு முழுச்சாப்பாடு, இரவில் தயிர் சாதம் என்பதில் ஆரம்பித்து ரசத்துக்கு மிளகு எண்ணிப் போடுவது வரைக்கும் மனிதர் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக வாழ்ந்திருக்கிறார் என்று தோன்றியது. 

ஹைமாவதி தமது மகனுடன் ஓசூரில்தான் வாழ்கிறார். விரைவில் சந்திக்க வேண்டும்.

எவ்வளவுதான் வேலைச்சுமை என்றாலும் என்னுடைய ஒரு தினத்தின் கடைசியான பணியாக வாசிப்பு இருக்கும். குறைந்தபட்சம் பத்துப் பக்கங்களாவது வாசித்துவிட்டு வாசித்து முடித்த பக்கத்தில் ஒரு துண்டுச்சீட்டை அடையாளத்திற்காகச் செருகிவிட்டு உறங்குவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சுமை. ஒரு வழியாக்கிவிட்டார்கள். இந்தப் புத்தகத்தைத்தான் வாசித்தேன். ஒரு தாத்தா நம்மோடு இருப்பது போலவே இருந்தது.

லா.ச.ராவின் நாவல்களில் ஏதேனுமொன்றை வாசித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிப்பதுதான் சரி. தனது எழுத்துக்களில் ஒவ்வொரு சொல்லையுமே சலித்துப் பொறுக்கி எடுத்து எழுதுகிற எழுத்தாளர் அவர். தனது வாழ்க்கையை இவ்வளவு ரசித்து வாழ்ந்த ஓர் எழுத்தாளனால் மட்டுமே அப்படியான எழுத்தை எழுதுவது சாத்தியம். நூல் குறித்து மேலும் விரிவாக எழுத நிறைய இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல் பட்டியல் தயாரித்தால் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். 

திருமதி லா.ச.ராவின் நினைவுக் குறிப்புகள்- ஹைமாவதி ராமாமிர்தம், விஜயா பதிப்பகம்.

7 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் - லா ச ரா , பெயர் விளக்கமே இப்போதான் தெரியுது..

//லா.ச.ராவின் நாவல்களில் ஏதேனுமொன்றை வாசித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிப்பதுதான் சரி.//
கண்டிப்பாக , அப்போதுதான் அவரது ஆளுமையின் வீச்சைப் புரிந்து கொள்ள முடியும்.

நாவல்களின் பால் தலை சாய்க்கும்போது நிச்சயம் பட்டியலில் சேர்க்க வேண்டும் , நன்றிங்க மணி

சக்திவேல் விரு said...

லா சா ரா வை படிக்க தூண்டுகிற பதிவு அருமை ....

அருண் பிரசாத் ஜெ said...

Book Order panna poren ji ..
thanks for sharing

சஹஜமொழி said...

லா சா ரா போன்று எந்த எழுத்தாளரும் என்னை ஈர்த்ததில்லை ,

அருமையான உரையாடல் , படிக்கும்போதே கண்களில் விரியும் கதைகள்

அருண் பிரசாத் ஜெ said...

Online la book purchase link irundha kundunga Mani...|
I am unable to find the book in VijayaPathippagam website.

Anonymous said...

Can you suggest some "Late. Mr. La Sa Ra 's" Novels?

Anonymous said...

http://nammabooks.com/buy-லா-.சா-.ரா-தேர்ந்தெடுத்த-சிறுகதைகள்--La.Sa.Ra-Therndutha-Sirukathaigal-Nammabooks-Collection