Dec 4, 2017

வாழ்க்கை யாரையுமே கை விட்டுவடுவதில்லை

சிவலிங்கத்துடனான எனது அறிமுகம் சுவாரசியமானது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக பி.டி.எம் லே-அவுட்டில் ஒரு பர்ஸ் கிடைத்தது. அப்பொழுது அந்த ஏரியாவில்தான் குடியிருந்தோம். சில சமயங்களில் பேருந்தில் செல்வேன். உள்ளே பணம் எதுவுமில்லை. இரண்டு மூன்று டெபிட் அட்டைகள், ஓட்டுநர் உரிமம், சில சில்லரைக்காசுகள் இருந்தன. 

உள்ளே கிடந்த ஒரு விசிட்டிங் கார்டுக்கு அழைத்து ‘சிவலிங்கம் தெரியுமா சார்?’ என்றேன். விவரங்களைக் கேட்டுவிட்டு ‘இங்கதான் இருக்காரு’ என்று சொல்லிவிட்டு அவரை அழைத்தார். சிவலிங்கத்திடம் அவரது பர்ஸ் கிடைத்த விவரத்தைச் சொன்ன போது அவருக்கு சந்தோஷம்.

‘டொம்ளூர் டெல் கம்பெனியில் இருக்கேன்..வந்து வாங்கிக்குறீங்களா?’ என்றேன். அவரால் உடனடியாக வர முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து மதிய வேளையில் வந்தார். அறைக் கொள்கலன் (ஃபர்னிச்சர்) கடையில் வேலை செய்கிற பையன். அவருடைய உரிமையாளரின் விசிட்டிங் கார்டு அது. உத்தர கர்நாடகாவிலிருந்து காலத்தில் பஞ்சம் பிழைக்க வந்துவிட்டார்கள். பி.யூ.சி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு வந்துவிட்டார்.  

‘நீங்க என் கூட ஒரு காபியாவது குடிக்கணும்’ என்றார். பர்ஸ்ஸை எடுத்துக் கொடுத்ததற்கான நன்றிக்கடன் அது. அப்பொழுதுதான் குடும்பம் பற்றியெல்லாம் பேசினோம். அவரது அம்மாவுக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு. அதற்காக வைத்தியம் பார்ப்பதற்காகத்தான் பணத்தேவை அதிகமிருப்பதாகச் சொன்னார். ‘எனக்கு சொந்தமா ஒரு கடை வெக்கணும்ன்னு ஆசை’ என்றார். ஆனால் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. பெங்களூரில் கடை பிடித்தால் அட்வான்ஸ் தொகையே லட்சத்தில் கொடுக்க வேண்டும். அவரது சொந்த ஊரில் ஒரு சொத்துப் பத்திரம் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு பெங்களூரில் கடன் வாங்குவது கடினம் என்றார்.  ஏற்கனவே விசாரித்து வைத்திருப்பார் போலிருக்கிறது.

அந்தச் சமயத்தில் கானப்பா என்றொரு வங்கி அதிகாரியுடன் தொடர்பில் இருந்தேன். Kaனப்பா இல்லை- Gaனப்பா. வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதே வங்கியில் கடன் ஆலோசகராகப் பணியில் இருந்தார். கடன் வேண்டும் என்று கேட்டால் ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு அவருக்கு திருப்தியாக இருந்தால் விண்ணப்பங்களை நிரப்பி அதை வங்கியில் கொடுப்பார். அவர் கொடுத்தால் கடன் கட்டாயம் கிடைத்துவிடும் என்று சொன்னார்கள். அவ்வளவு முரட்டுத்தனமான நேர்மையான மனிதர். வீட்டுக்கடன் வாங்குவதற்காக அவரோடு தொடர்பில் இருந்தேன்.

அவரை அழைத்து ‘சார் ஒரு பையனைப் பார்த்தேன்..கடன் வேணும் போலிருக்கு...எனக்குப் பையனைப் பத்தி தெரியல..செக் பண்ணிப் பாருங்க சார்’ என்றேன். 

‘அதுக்கென்ன அனுப்பி வைங்க’ என்றார். முகத்தில் அடித்தாற்போல அவர் இல்லையென்று சொன்னதில்லை. 

கானப்பாவின் வீடு தேவசிக்கனஹள்ளியில் இருந்தது. சிவலிங்கத்திடம் விவரங்களையெல்லாம் சொல்லி அனுப்பியிருந்தேன். இரண்டாவது முறை செல்லும் போது ‘வர முடியுமா சார்?’ என்றார். இருவரும் கன்னடத்தில் பேசிக் கொண்டார்கள். நான் வேடிக்கை மட்டும் பார்த்தேன். எங்கள் வீட்டில் விவரங்களைச் சொன்ன போது ‘தேவையில்லாம வம்புல சிக்கிக்காத’ என்றார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். இந்த நகரத்தில் யாரை நம்புவது? கானப்பாவை அழைத்து ‘எனக்குத் தனிப்பட்ட முறையில் சிவலிங்கத்தைத் தெரியாது சார்’ என்றேன்.

‘அப்படியெல்லாம் பார்த்தா நான் வேலையே செய்ய முடியாது..டாக்குமெண்ட் சரியா இருந்தா கடன் கொடுப்பாங்க..இல்லைன்னா கிடைக்காது..அவ்வளவுதான்..நீங்க டென்ஷன் ஆகாதீங்க’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். சற்று ஆசுவாசமாக இருந்தது. சிவலிங்கம் அவ்வப்பொழுது அலைபேசியில் அழைத்து கடன் விவகாரம் என்ன ஆனது என்று சொல்வார். கடைசியில் அவருக்கு கடன் கிடைக்கவில்லை. 

‘ஒண்ணும் பிரச்சினையில்ல சார்...இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு பார்த்துக்கலாம்’ என்றார். அதன் பிறகு தொடர்பில்லாமல் போய்விட்டது. 

இத்தனை வருடங்களுக்குப் பிறகு நேற்று சந்தித்தேன். கடை தொடங்கிவிட்டார். பி.டி.எம் லே-அவுட்டிலேயேதான் கடை. வீட்டுக்கு ஒரு பொருள் வாங்குவதற்காகச் சென்றிருந்தேன். கடைக்குள் நுழைந்தவுடனேயே அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். சொந்தக் கடை. ஊரில் இருந்த சொத்தை விற்றுவிட்டு வந்து இங்கே கடை தொடங்கியிருக்கிறார். ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிவிட்டதாகச் சொன்னார். 

‘அதுவும் கடன்தான்..மெதுவா கட்டிக்கலாம்’ என்று சிரித்தார். அம்மா இறந்துவிட்டார். திருமணமாகிவிட்டது. ஒரு பெண் குழந்தை. அப்பா சிவலிங்கத்துடன்தான் இருக்கிறார்.

‘என் ஃபோனைக் காணோம் சார்..உங்க நெம்பரைத் தொலைச்சுட்டேன்..இல்லன்னா கடை ஆரம்பிக்கும் போது கண்டிப்பா கூப்பிட்டிருப்பேன்’ என்றார்.

‘எல்லோரும் சொல்கிற எளிமையான காரணம்’ என்று சிரித்தேன். 

‘சத்தியமா இல்ல சார்...’ என்று பதறினார். 

‘சும்மா சொன்னேன்..நல்லா இருந்தீங்கன்னா சரி’ என்று சொன்ன போது கரங்களைப் பற்றிக் கொண்டார். வாழ்க்கை அவருக்கு ஓரளவுக்கு வசப்பட்டுவிட்டது. 

‘தொழில்ல மட்டும் கடன் வாங்குறதில்ல..கொடுக்கிறதுமில்ல..தம் கட்டிட்டேன்’ என்ற போது அவரது சொற்களில் ஒரு திருப்தி இருந்தது. 

அவரிடம் பொருள் எதுவும் வாங்கவில்லை. வாங்கினால் பேரம் பேச முடியாது. ‘சும்மா பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனைத போது காபி குடித்து வரலாம் என்றார். டெல் நிறுவனத்திற்கு முன்பாக நானும் அவரும் டீ குடிக்கச் சென்றது நினைவில் வந்து போனது. சிவலிங்கத்திடம் சொன்ன போது சிரித்தார்.

‘அடிக்கடி வாங்க சார்’ என்றார். தலையை ஆட்டி விட்டுக் கிளம்பினேன்.

இத்தகைய மனிதர்கள்தான் அரிபரி மனிதர்களுக்கு ஏதாவதொரு பாடத்தைச் சொல்லித் தருகிறார்கள். பெரிய ஆர்ப்பாட்டமில்லாத அதே சமயம் யாரையும் அண்டிப்பிழைக்காத பிழைப்பு. யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை யாரையுமே கை விட்டுவடுவதில்லை. இவன் படித்திருக்கிறானா? என்றெல்லாம் கூட அது நம்மிடம் நேர்காணல் நடத்துவதில்லை. நம் சக மனிதர்களைப் பற்றிய குறைந்தபட்ச அறிவும் சுமக்க முடியாத சுமையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற தெளிவும் மட்டும் இருந்தால் போதும். நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். சிவலிங்கம் அத்தகையதொரு மனிதர்.

பெங்களூரில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. வீடு வந்து சேரும் வரைக்கும் உடல் சில்லிட்டுக் கொண்டேயிருந்தது.

4 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

இத்தகைய மனிதர்கள் வாழ்க்கை பாடத்தை சுமந்து திரிபவர்கள், அவர்களை வாழ்க்கை ஒரு போதும் கைவிடாது. தேவை இல்லாத பெரும் சுமையும் ஒரு புரிதலும் இல்லாத மனிதர்களுக்கே வாழ்க்கை பெரும் சுமையாக தெரியும்.

சேக்காளி said...

//எல்லோரும் சொல்கிற எளிமையான காரணம்’ என்று சிரித்தேன்//
குசும்பு குசும்பு அம்புட்டு குசும்பு.

சேக்காளி said...

ஒரு விசிட்டிங் கார்டின் விபரங்கள் எத்தனை சுவராசியமாய் விரிந்திருக்கிறது.
அதுவும் எளிமையை முன்னிறுத்தி.
மணிடா

Anonymous said...

Even though it was just tossed enroute the journey, they were golden words. சுமக்க முடியாத சுமையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற தெளிவும் மட்டும் இருந்தால் போதும்