Dec 2, 2017

என்ன பதில்?

திரைப்படங்களில் காட்டப்படுவதுபோன்று பெண்களின் ‘பாலியல் ஒழுக்க நெறி பிறழ்வும், கெட்டவார்த்தை பேசுவதும்’ பெண்ணியம் அல்லது பெண் சுதந்திரம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? (இதை ஆண்கள் செய்தால் சரி என்ற பொருள் அல்ல)

தான் எப்படி வாழ வேண்டும் என்பதை பெண்ணே முடிவு செய்வதை பெண்ணியம் என நம்புகிறேன். 

பாலியல் ஒழுக்க நெறி என்று மட்டுமில்லை- பொதுவாக சமூக நெறிகள் என்பவை நாமாக அல்லது நமக்கு முன்பாக இருப்பவர்கள் வரையறுத்து வைத்திருப்பதுதானே? இருநூறு அல்லது நூறு வருடங்களுக்கு முன்பாக இருந்த நெறிகள் இன்றைக்குப் பொருளற்றதாக மாறியிருக்கக் கூடும். சமூக நெறிமுறைகள் காலந்தோறும் தொடர்ச்சியாகத் தட்டி நெகிழ்த்தப்பட்டு அந்தந்தக் காலச் சூழலுக்கு ஏற்ப உருமாறிவிடும். பாலியல் ஒழுக்க நெறியும் அதில் அடக்கம்தான். இதில் சரி, தவறு என்று நாம் நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் சரி என்று நினைப்பது அடுத்த தலைமுறையினருக்கு தேவையற்ற தடையாகத் தெரியலாம். 

தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சி உள்ளிட்ட பல காரணிகளால் நம் சமூக நெறிமுறைகள் கடுமையான மாறுதல்களைச் சந்தித்து வருகின்றன. இன்றைய நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மிக இயல்பாக சிதைந்து போய்க் கொண்டிருகின்றன என்பதுதான் நிதர்சனம். திரைப்படங்களிலும் ஊடகங்களிலும் காட்டப்படும் மிகைப்படுத்தப்பட்ட செயல்பாடுகளைப் பெண்ணியம் என்று வகைமைப்படுத்த வேண்டியதில்லை. பக்குவப்பட்ட பெண் தான் வாழ விரும்புகிற வாழ்க்கையை அடைய விரும்பி முன்னெடுக்கும் எந்தக் காரியமும் பெண்ணியம். அதைத்தவிர பிறவற்றை பெண்ணியம் எனச் சொல்லி பொதுவான கண்ணியத்தைக் குறைக்க வேண்டியதில்லை.

அரசுப் பள்ளிகளில் கணிப்பொறி கல்வியின் நிலை?

மோசம்!

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கும் கற்றலுக்கும் கணினிகள் கிடையாது. தொண்ணூறு சதவீத அரசு ஆசிரியர்களுக்கு கணினிப் பயன்பாட்டில் அறிவு இல்லை. கணினியின் அடிப்படைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் கற்றுக் கொடுத்து தொடக்கப் பள்ளிகளில் இருந்தே மாணவர்களின் பயன்பாட்டுக்கு என இரண்டு கணினிகளாவது வழங்கப்பட வேண்டும். அந்தவொரு நிலையை அடையை இன்னும் பத்து வருடங்களாவது ஆகும்.

‘குறள் பாட்’ தொடர்பு எண் அல்லது மின்மடல் முகவரி கிடைக்குமா, நன்றி

சிவசுப்பிரமணியன் இங்கிலாந்தில் வசிக்கிறார். அவருடைய எண் என்னிடமில்லை. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
vengaishiva@gmail.com

பேனரிலிருந்து பலூன்- இந்த புத்திசாலித்தனத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னதான் நீதிமன்றம் தீர்ப்பு எழுதினாலும் அதை மீறுகிறவர்களாகத்தான் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ‘உயிரோடிருப்பவர்களின் உருவத்தோடு பதாகைகள் வைக்கக் கூடாது’ என்று நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் கோவையில் ரகு இறந்து போனார். அமெரிக்காவில் வேலையில் இருந்த இளைஞர். திருமண ஏற்பாடுகளுக்காக சொந்த ஊருக்கு வந்தவர் அடுத்த நாள் அமெரிக்கா திரும்ப வேண்டியது. முந்தின நாள் இரவில் ஆளுங்கட்சியினர் வைத்த அலங்கார வளைவு- பேனர் எதுவும் கட்டாமல் வெறும் குச்சிகளை மட்டும் சாலையில் நட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். இருளில் அவர் அது தெரியாமல் வந்து மோதி இறந்து போனார். ஓர் அப்பாவி இளைஞனை ஆளுங்கட்சியின் விளம்பர மோகம் கொன்றிருக்கிறது. புழுத்துக் கிடக்கும் அரசு எந்திரத்தை வெறும் பேனரை வைத்து மறைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள். ஓர் இளைஞன் செத்துப் போன பிறகும் அவர்கள் திருந்தியாகத் தெரியவில்லை. நாமும் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்த மாதிரி தெரியவில்லை. இன்று வரையிலும் அலங்கார வளைவுகளும் வரவேற்புப் பதாகைகளும் குறைந்த மாதிரியே இல்லை. அரசியல்வாதிகளாகத் திருந்தாவிட்டால், கடுமையான எதிர்ப்பைக் காட்டி மக்கள் இவர்களைத் திருத்தாவிட்டால் எந்தச் சட்டமும் எதையும் மாற்றிவிட முடியாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவாசயம் குறைய திருப்பூர் காரணமா? ஆனால் இதனால் தான் இன்று பல கிராமங்களில் பலரின் பணத் தேவை ஒரளவு நிறைவடைந்து உள்ளது. இந்த கால மாற்றத்தை பற்றி உங்கள் பார்வை?

வேளாண்மை குறைந்து போக திருப்பூரின் நிறுவனங்களின் வளர்ச்சி மட்டுமே காரணமில்லை. நீர் மேலாண்மைத் திட்டம் எதுவும் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படவில்லை. விவசாயத்திற்குத் தேவையான நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வறட்சி பரவலானது. விவசாயக் கூலிகளுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போது நூற்புத் தொழிலகங்களில் அவர்களுக்கு வேலைகள் கிடைத்தன.  தொழிலகங்கள் வாகனங்களை அவரவர் ஊருக்கே அனுப்பி ஆட்களை பணிக்கு அழைத்துச் சென்றார்கள். தினசரி வேலை இருந்து கொண்டேயிருக்கிறது. கூலித் தொழிலாளர்களுக்கு இது பிடித்திருக்கிறது. அதனால் அவர்கள் அந்தப் பணியிலேயே தொடர்கிறார்கள். 

பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்த போதும் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்வது எப்படி என உழவர்கள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் இல்லை. மேலை நாடுகளில் நிலங்களில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதானே? ஆனால் ஒன்று- ஆட்களின் எண்ணிக்கை குறையும் போது அவர்களின் பணிகளைச் செய்வதற்கான எந்திரங்களுக்கான தேவை அதிகமாகிறது. விலை அதிகமான எந்திரங்கள். ஆனால் அவ்வளவு முதலீடு செய்து எந்திரங்கள் வாங்குகிற அளவுக்கு நம் உழவர்களிடம் பொருளாதார வசதிகள் இல்லை. 

வேளாண்மை ஏன் குறைந்து போகிறது என்றால் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்த நிறைய காரணங்களைச் சொல்லலாம். காலம் மாறுவதற்கு ஏற்ப அரசும் சமூகமும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இங்கே காலம் மட்டுமே மாறுகிறது. மாற்று ஏற்பாடுகள் வெகு குறைவு.

Sarahah வில் கேட்கப்பட்ட கேள்விகள்.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அரசியல்வாதிகளாகத் திருந்தாவிட்டால், கடுமையான எதிர்ப்பைக் காட்டி மக்கள் இவர்களைத் திருத்தாவிட்டால் எந்தச் சட்டமும் எதையும் மாற்றிவிட முடியாது//
சோத்துக்கே வழியில்லை என்றால் தான் அப்படி ஒரு முடிவை எடுப்போம்.
இவண் மக்கள்
எனவே இலவச அரிசி, அம்மா உணவகம் (இன்னும் இருக்கா?) எல்லாம் எத்தனை கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் வெவ்வேறு பெயர்களில் தொடரும்.
இவண் : அரசியல் வதிகள்

வெட்டி ஆபீசர் said...

Can you think about creating a link in your portal to ask questions?
(rather than receiving in Saraha?)

Selvaraj said...

'பக்குவப்பட்ட பெண் தான் வாழ விரும்புகிற வாழ்க்கையை அடைய விரும்பி முன்னெடுக்கும் எந்தக் காரியமும் பெண்ணியம்'. எதற்கெடுத்தாலும் பெண்ணியம் என்று சொல்பவர்களும் பெண்ணியத்தை எதிர்ப்பவர்களும் புரிந்து கொள்ளவேண்டிய பதில் இது