Dec 5, 2017

பெரிய இவனாமா

திரும்பத் திரும்ப எதிர்கொள்ளும் கேள்வி என்னவென்று கேட்டால் ‘ட்ரஸ்ட் நடத்துவது எப்படி?’ என்பதுதான். இன்று கூட ஒரு நண்பர் இது குறித்து விசாரித்தார். விழியிழந்தோர்களுக்கு உபகாரம் செய்வதற்கான அறக்கட்டளையைத் தொடங்குகிறார்கள். அறக்கட்டளை தொடங்குவது, அதை நிர்வகிப்பது என்பதெல்லாம் பெரிய காரியமில்லை. அவ்வப்பொழுது யாராவது காயப்படுத்துவார்கள். அதைத் தாங்கிக் கொள்கிற மனம்திட்பத்தைக் கொண்டிருப்பதுதான் மிக அவசியம்.

சில மாதங்களுக்கு முன்பாக ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். எழுத்தாளர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ‘அவர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்’ என்று எழுதியிருந்தார். யார் யாரைக் குறித்து எழுதியிருக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு முக்கியத்துவமில்லாத விவரங்கள். அவர் நிசப்தம் வாசித்திருக்க வாய்ப்பேயில்லை எனத் தோன்றியது. சில உதவிகளைக் கேட்டார். விதிமுறைகளுக்கு ஒத்து வரவில்லை. சாத்தியமில்லை எனச் சொல்லியிருந்தேன். பிறகு இன்னொரு மாணவனுக்கான உதவி. அவர் அழைத்த போது - இரவு பதினொன்றரை மணிக்கு மேல் அழைப்பார்- எடுக்கவில்லை. அந்த மாணவனுக்கு உதவுவதில் தவறில்லை. இடையில் அவர் அழைத்த போது ஒன்றிரண்டு முறை அலைபேசியை எடுக்க முடியவில்லை. ‘நீ முடியலைன்னா முடியலைன்னு சொல்லியிருக்கலாம்ல’ என்று கோபமாக மின்னஞ்சல் எழுதியிருந்தார். ‘முடியவில்லை’ என்றால்தானே முடியவில்லை என்று சொல்ல வேண்டும்?

கடந்த வாரத்திலேயே அந்த மாணவனுக்கு காசோலையை அனுப்பிவிட்டேன். வழக்கமாக பெங்களூரு எம்.ஜி.சாலையில் இருக்கும் புரொபஷனல் கூரியரில் இருந்து அனுப்புவது வழக்கம். சரியாகச் சென்று சேர்ந்துவிடும். ஊருக்குச் சென்றிருந்தேன் அல்லவா? அங்கேயிருந்து அனுப்பினேன். ஏதோவொரு உள்ளூர் கூரியர். போய்ச் சேரவில்லை போலிருக்கிறது. 

நேற்றிரவு மகி ‘அப்பா இந்த வாரம் ட்ரஸ்ட் வேலைக்குப் போறீங்களா?’ என்றான்.

‘நீட் கோச்சிங் க்ளாஸ் இருக்கு தங்கம்..போறேன்’ என்றேன். 

‘அப்படின்னா இன்னைக்கு என்கிட்ட வந்து படுங்க’ என்றான். வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் இப்படி அழைத்துப் படுக்கச் சொல்வான். கட்டிப்பிடித்து உறங்குவதற்காக அப்படி அழைப்பான். ஒரு கையை ஒரு காலையும் என் மீது போட்டுக் கொள்வான். அவன் அழைக்கும் போது நான் மறுப்பதில்லை. அவனோடு படுத்தால் நானும் உறங்கிவிடுவேன். பத்தரை மணிக்கு மேலாக விடாமல் இரண்டு மூன்று முறை அலைபேசி சிணுங்கிக் கொண்டேயிருந்தது. துண்டித்துவிட்டு ‘I will call you later' என்று சேமிக்கப்பட்ட செய்தியை அனுப்பி வைத்தேன். உறங்கியும் போனேன். பேட்டரி தீர்ந்து செல்போன் அணைந்துவிட்டது.

இன்று காலையில் செல்போனை எடுத்தால் அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது ‘I will call you later என முட்டாள்தனமாக அனுப்பியிருக்கிறாய்..நீ குப்பைடா...அருவெருப்பா இருக்குடா.’ என்றெல்லாம் ஒருமையில் மிக மோசமாகத் திட்டி அனுப்பியிருந்தார். காலையிலேயே கண்டவன் பல்லில் விழ வேண்டியிருக்கிறதே என படபடவென ஆகிவிட்டது. சமீபமாக இப்படி யாரும் திட்டியதாக நினைவில் இல்லை. காசோலை போய்ச் சேர்ந்திருக்கும் என்றும் அதைச் சொல்வதற்காகத்தான் அழைக்கிறார் போலிருக்கிறது என நினைத்தேன். ஆனால் காசோலை போய்ச் சேரவில்லை. அவர் திட்டி குறுஞ்செய்தி அனுப்பாமல் இருந்திருந்தால் அழைத்துப் பேசியிருப்பேன். 

வங்கியில் அழைத்து காசோலையை நிறுத்தி வைக்கச் சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன்.

இரவு பத்து மணிக்கு மேல் அழைக்க வேண்டாம் என அவரிடம் முன்பே சொல்லியிருக்கிறேன். அந்த நேரத்தில் எடுத்துப் பேசினால் வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அவஸ்தை. புரிந்து கொள்ளாமல் செய்கிறார்கள். இப்படியான வாதைகளையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘Mind your words, Sir' என்று மரியாதையாகத்தான் பதில் அனுப்பியிருக்கிறேன்.

பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது நிறைய வடிகட்டல் தேவைப்படுகிறது. அப்படியும் கூட சிலவற்றில் ஏமாந்துவிடுகிறேன். ஓர் எழுத்தாளர் வழியாகக் கொடுத்த உதவி, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் வழியாகக் கொடுப்பட்ட உதவித் தொகை என சிலவற்றைச் சுட்டிக் காட்ட முடியும். ஏதோவொரு உணர்வில் உதவிவிட்டு ‘இவங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டியதில்லை’ என பின்னால்தான் மனதுக்குள் தோன்றும். ஆனால் இத்தகைய ஏமாற்றங்களைத் தவிர்க்கவே முடியாது. அனுபவத்தின் வழியாகத்தான் கற்றுக் கொள்ள முடியும். இப்படி ‘தேவையில்லாமல் கொடுத்துவிட்டோமே’ என்று தோன்றும் போது அடுத்தடுத்து வரக் கூடிய கோரிக்கைகளை மிகத் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. அப்படி பரிசீலிக்கும் போதுதான் நடுமனிதர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்கிறேன்.

‘இவன் பெரிய இவனாமா...அடுத்தவங்க காசை வாங்கிக் கொடுக்கறதுல இவ்வளவு பண்ணுறான்’ என்று கறுவுகிறார்கள். என்ன செய்வது என்றே புரிவதில்லை. 

புலம்புவதற்காக எழுதவில்லை. எழுதினால் ‘இதையெல்லாம் கண்டுக்காதீங்க’ என்று சொல்வார்கள். ஆனால் கண்டுகொள்ளாமல் விடுவது மிகக் கடினம். முகத்துக்கு நேராக ‘அருவெருப்புடா நீ’ என்று யாராவது சொல்லும் போது என்னைப் போன்ற சென்ஸிடிவான ஆட்கள் அதை எதிர்கொள்வது வெகு சிரமம். நல்ல பெயர் வேண்டியதில்லை. கெட்ட பெயர் வாங்காமல் தடுத்தால் போதும். அதுதான் பெரிய காரியமாகத் தெரிகிறது. சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.