Dec 27, 2017

வேலை இல்லைன்னா என்ன செய்வது?

‘இந்த வேலை இல்லைன்னா என்ன செய்வது?’ என்று கேட்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்தான் என்றாலும் ‘எதையாவது செய்து வெளியில் போய்டணும்’ என்கிற நினைப்பு இருக்கிறவர்கள் எதையாவது உருட்டியும் புரட்டியும் கொண்டிருக்கிறார்கள். கோயமுத்தூரில் கார்போரேட் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து பொள்ளாச்சியருகே சில ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். யாருமே வேலையை விடவில்லை. ஆள் மாற்றி ஆள் பார்த்துக் கொள்கிறார்கள். வேளாண்மை என்பது எடுத்தவுடனேயே இலாபம் தந்துவிடவா போகிறது? ஆயிரத்தெட்டு மேடு பள்ளம். விவசாயம் மட்டுமே போதாது என்று புரிந்து கோவையிலேயே ஒரு தேநீர்க்கடையைத் தொடங்கியிருக்கிறார்கள். பெரிய லாரி கண்டெய்னர் ஒன்றைப் பிடித்து அதை அழகுபடுத்திக் கடையாக மாற்றியிருக்கிறார்கள். ஓரளவு தம் கட்டியவுடன் அவரவர் வேலையை விட்டுவிடுவதாக உத்தேசம்.

இன்னொரு நண்பர் இருக்கிறார். பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தார். வேலையை விட்டுவிட்டு இரண்டு மூன்று வாகனங்களை சல்லிசான விலைக்கு வாங்கி ட்ராவல் ஏஜென்ஸி ஒன்றைத் தொடங்கினார். அவருக்கு பெங்களூருவுக்குள் ஓரளவுக்குத் தொடர்புகள் இருந்தன. இப்பொழுது அதோடு சேர்த்து ஐஸ்கிரீம் கடை ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். கடை நடத்தும் வணிக வளாகத்திற்கு வாடகையே பெருந்தொகை.‘அதெல்லாம் பிரச்சினையில்லைங்க...அந்தளவுக்கு வியாபாரம் இருக்கு’ என்றார். சந்தோஷம்தான்.

விதவிதமான ஆர்வலர்கள். கேக் செய்வதற்கான நுட்பங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு கார்போரேட் வேலையை விட்டுவிட்டு கேக் கடை ஆரம்பித்தவரைத் தெரியும். மற்றுமொரு மூன்று நண்பர்கள் சேர்ந்து ஆளுக்கு பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் ஓர் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள். 

‘இப்போ இருக்கிற வேலையை மட்டுமே நம்பிட்டு இருக்க முடியாது’ என்று நினைக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. கார்போரேட் நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களுக்கு இத்தகைய எண்ணம் வருவது நல்லதுதான். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அடுத்தவர்களிடம் பணியாற்றி அவர்கள் தரும் சம்பளத்தை வாங்கிக் கொள்வது மட்டுமே போதுமானது என்கிற எண்ணம் நம் ரத்தத்திலேயே ஊறிக் கிடக்கிறது. அதைத்தான் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. வேலை நேரத்தை அதிகரிப்பது, அழுத்தம் கொடுப்பது, சம்பளத்தில் கை வைப்பது என சகல தகிடு தத்தங்களையும் பணியாளர்களிடம் காட்டுகின்றன.

இந்தியா மாதிரியான மக்கள் நெருக்கம் மிகுந்த பிரதேசத்தில் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தாலே பல கோடிப் பேருக்கு சுயதொழில் அமையும். கார்போரேட்களில் அடிமையாகவே வாழ வேண்டியதில்லை.

சிறிய மெஸ் அது. மதிய உணவு மட்டும்தான். சமைப்பது, பாத்திரம் கழுவுவது என குடும்பத்தினரே வேலை செய்கிறார்கள். ‘இந்த மாதிரியான சின்ன ஊர்ல மத்தியானம் மட்டும் சாப்பாடு போட்டு வியாபாரம் நடத்த முடியுமா?’ என்று எண்ணம் தோன்றாமல் இல்லை. கடைக்காரரிடம் கேட்டால் ‘என்ன மாதிரி சாப்பாடு போடுறோம் என்பதில்தான் வெற்றி இருக்கு’ என்றார். வீட்டு முறைச் சமையல், குடும்பத்தினரே பரிமாறுவது என வியாபாரத்தை வியாபாரமாக மட்டுமில்லாமல் தொழில் நடத்துகிறார்கள். இரண்டே மாதங்களில் வாடிக்கையாளர் பரப்பை அதிகரித்துவிட்டார்கள். நல்ல வியாபாரம். தினசரி இருநூறு சாப்பாடு. ஒரு சாப்பாடு எழுபது ரூபாய். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். எல்லாம் போக இரண்டு அல்லது மூன்றாயிரம் நின்றால் கூட போதுமானது. பார்ட்டி ஆர்டர் எடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஐடியில் பணியாற்றிவிட்டுச் சென்றவர் தொடங்கிய கடை இது. ஒரு குடும்பத்துக்கு அறுபதாயிரம் ரூபாய் என்பது போதுமான தொகை. போதும் என்ற மனம்தானே பொன் செய்யும்.

வேலையை விட்டுவிட்டுச் சென்ற நண்பரிடம் பேச்சுக் கொடுத்தால் சுவாரசியமாக இருக்கிறது. ‘என்ன செய்வது?’ என்று நிறையப் பேருக்குக் குழப்பம். இன்றைக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தால் அதே அளவு வருமானம் கிடைக்கும்படியாகத்தான் தொழில் தொடங்க வேண்டும் என்பது சாத்தியமில்லை. ஆனால் ‘நமக்கு இவ்வளவு போதுமானதாக இருக்கும்’ என்று முடிவு செய்துவிட்டு அதற்கேற்ற தொழிலைத் தொடங்குவது எளிதான காரியம் என்றார். உறவுக்காரர்களும் அக்கம்பக்கத்தவர்களும் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள். ‘கூமுட்டையா இருக்கானுங்க...பெங்களூர்ல வேலையை விட்டுட்டு வந்து தொழில் பார்க்கிறேன்னு சொல்லிட்டுத் திரியறான்’ என்று தன் மகனைப் பற்றிப் பேசிய அப்பாவை எதிர்கொண்டிருக்கிறேன். குடும்பத்தினரே அப்படியென்றால் வெளியாட்கள் எப்படியெல்லாம் கிசுகிசுப்பார்கள்? எல்லாவற்றையும் சமாளிக்கிற மனநிலைதான் முதல் அவசியமாக இருக்கும். 

சந்தோஷ் நாராயணனைத் தெரிந்திருக்கும். ஓவியர். கார்போரேட் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். நல்ல சம்பளம். வேலையை விட்டுவிட்டார். Freelancer ஆக இருக்கிறார். மிகச் சந்தோஷமாக இருக்கிறார். மாதத்தில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் வருமானத்திற்கான வேலையைச் செய்துவிட்டு மீதமிருக்கும் நாட்களில் தமக்குப் பிடித்தமான பணிகளைச் செய்கிறார். கடைசி வரைக்கும் அவரது ஓவியம் அவரைக் கைவிட்டுவிடாது. தமது வேலையை விட்டுவிட்டு அப்பாவின் நெசவுத் தொழிலைப் பார்த்துக் கொள்வதற்காக ஈரோடு சென்றுவிட்டவர், அப்பாவிடமிருந்தும் தாத்தாவிடமிருந்தும் கற்றுக் கொண்ட நகை வேலையைத் தொடர்கிற மென்பொருள் வல்லுநர் என்று யாரையாவது எதிர்கொண்டபடியேதான் இருக்க நேர்கிறது. அவர்கள் ஏதோவொரு விதத்தில் ஓர் அடி கூடுதலாக வைத்து கச்சடாவைத் தாண்டிவிட்டவர்களாகத்தான் தெரிகிறது.

இத்தகைய மனிதர்களைப் பார்க்கும் போது ஆசுவாசமாக இருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகு வளர்ச்சி என்ற பெயரில் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான முயற்சிகள்- கார்போரேட் நிறுவனங்கள், பாடத்திட்டங்கள்- என்பவையெல்லாம் வெறுமனே பணத்தைக் குறி வைத்து ஓடுகிற அடிமைக் கூட்டத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. கூட்டத்தில் ஒரு வேலையைப் பிடித்துவிட வேண்டும். கடன் வாங்கி வீடு கட்டி, கார் வாங்கி கடைசி வரைக்கும் வெளியேறத் தெரியாமல் அகப்பட்டுக் கொள்கிற கூட்டம். தமது வாழ்நாளின் அதிகபட்சமான சொத்து என்பது நகரில் ஒரு வீடு வாங்கியிருப்பதாகத்தான் இருக்கும். அதற்காக பெறுகிற அழுத்தங்களும் நசுக்கல்களும் வாழ்நாளில் பத்து வருடங்களைத் தின்றிருக்கும்.

‘இந்த வாழ்க்கை முறையைத் தாண்டி என்னவோ இருக்கிறது- அப்பாவும் தாத்தாவும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது எதையோ நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்பதை ஒரு தலைமுறை மெல்ல உணரத் தொடங்குவது அவசியமானதுதான். ‘இஞ்சினியரிங் படி, கம்யூட்டர் கத்துக்கோ’ என்று தம் குழந்தைகளிடம் சொல்லாமல் ‘உனக்குப் புடிச்சதைப் படி’ என்று சொல்லுகிற பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஆரோக்கியமானதுதான்.

வாழ்வதற்கு எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கின்றன. நூறு கோடி மக்களைக் கொண்ட தேசத்தின் Potential என்பது மிகப் பெரிய கடல். எவ்வளவோ வேலைகளைச் செய்ய இயலும். நமக்கு பிடித்தமான, ஒத்து வருகிற வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. ஒரே சூட்சமம்- நமக்கு எது ஒத்து வரும் என்பதைக் கண்டறிவதில் இருக்கிறது.  

10 எதிர் சப்தங்கள்:

Selvaraj said...

பொருளாதாரத்தில் பூஜ்யத்திலிருந்து தொடங்குபவர்களுக்கு வெளிநாடு அல்லது கார்ப்பரேட் வேலைதான் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கும் அது உண்மை ஆனால் அதையொட்டி துணிவுடனும் சரியான திட்டமிடலுடனும் அடுத்த அடியை எடுத்து வைக்க தயங்குகிறோம் அதற்கு சரியான காரணமும் (சாக்குபோக்கும்) நமக்குள்ளே சொல்லி சமாதானமாவோம் (வீட்டுக்கடன், சகோதிரிகள் திருமண செலவு இன்னும் பல). நீங்கள் இதற்கு முன்பு உங்கள் எழுத்தில் பலமுறை கூறியதுபோன்று COMFORT ZONE ஐ விட்டு வெளிவர தயங்குகிறோம் அல்லது நமக்கு துணிவில்லை இதைத்தான் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்கின்றன. விடுமுறையில் ஊருக்கு வரும்போது கைநிறைய செலவு செய்து பழகிவிட்டு திடீரென சிக்கனமான செலவுக்கு மனம் பழகுவதில்லை. அடுத்து நம்மை சுற்றியுள்ளவர் என்னசொல்வார்களோ என்ற மனநிலை இதைக்கூட புறந்தள்ளிவிடலாம். ஆனால் ஒரு ஆர்வத்தில் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க ஊருக்கு வந்தவுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதை போன்று நண்பர்களுடன் சேர்ந்து நல்லா தண்ணி அடித்துவிட்டு ஊர்சசுற்றிக்கொண்டும் இருந்தால் கதை கந்தல்தான்.


நிறைய பேருக்கு முதலில் இருக்கும் ஆர்வம் சுய கட்டுப்பாடு தொடர்ந்து இருப்பதில்லை தொழிலில் சிறு தடங்கல் வந்தாலும் ஐயோ நல்ல சம்பளம் கிடைத்த வேலையை விட்டுவிட்டோமோ என்று மனம் திரும்பவும் அலைபாயும் இதுதான் உண்மையான பிரச்சினை

Bala said...

Business is a mindset!

சேக்காளி said...

// எதையாவது உருட்டியும் புரட்டியும் கொண்டிருக்கிறார்கள்//
என்னைப் பொறுத்த வரையில் இவர்கள் தான் நம்பிக்கை மனிதர்கள்.

சேக்காளி said...

//போதும் என்ற மனம்தானே பொன் செய்யும்.//
நன் செஞ்சா மட்டும் போதும் ய்யா.
பொன் செஞ்சா அப்புறம் செய்கூலி, சேதாரம் ஆரம்பிச்சிருவாங்க.

Anonymous said...

//Selvaraj said...//

Very true. Excellent comment!

Dineshkumar Ponnusamy said...

I had this thought for past 3-4 years, but nothing has been done till last month. I started learning about new technology (investment on self improvement with 5% of salary) and started outside investment for 2% of my salary with the knowledge I have gained on block chain, I got good profit this year. If people are worried about alternatives they can start with small investment. 2% would be considerably nothing for most of the people who are worried about changing the jobs!

அன்பே சிவம் said...

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்.!....

அன்பே சிவம் said...

சத்தியமா படிச்சதும் மனசுல தோனுனத சொன்னேன். அப்புறம்தான் Comment களை படிச்சேன்.

தமிழ்ப்பூ said...

Well said.Superb

Manoj said...

yeah ....that all words are true. ha ha ha...
23 to 30 is very toughest ages ..
very hard to move with and without money .
KEEP GOING! success will come

dont put all in your mind ..be free ..
burn your stress ,that's enough.

all age people can watch cartoon , it may be the solution of your stress.

https://www.youtube.com/watch?v=FcKUnEnm5TU&t=29s