Dec 29, 2017

கேள்வி பதில்கள்

‘நிசப்தம்’ வா.மணிகண்டன்-- ‘வீடு’ மணியன்--வித்தியாசமுண்டா?

எனக்கு அப்படியெதுவும் தெரியவில்லை. ஒரே மாதிரியாக இருப்பதாகத்தான் நினைக்கிறேன். வேணியிடம் கேட்டால் ஏதாவது சொல்லக் கூடும். 

2018ல் தனிப்பட்ட முறையில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எட்டாவது மாதம் இது. பிப்ரவரியில் தேதி கொடுத்திருக்கிறார்கள். பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளில் பெங்களூர் வாழ தகுதி இல்லாத நகரம் ஆகிவிடும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன். நீங்களும் நம்புகிறீர்களா? உங்கள் திட்டம் என்ன?

பெங்களூரு சீரழிந்து கொண்டிருக்கிறது. பிற பெரிய ஊர்களைப் போலவே. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கோயமுத்தூர் பக்கமாக ஒரு வேலையைக் கண்டுபிடித்துச் சென்றுவிட வேண்டும் என்பதுதான் திட்டம். சூழலுக்கு பயந்து மட்டுமில்லை- ஊரோடு ஒட்டி வாழலாம் என்பதற்காக.

வணக்கம்,  ‘குறள் பாட்’ தொடர்பு எண் அல்லது மின்மடல் முகவரி கிடைக்குமா?

சிவாவின் மின்னஞ்சல்: vengaishiva@gmail.com

அரசு வகுத்திருக்கும் புதிய கல்வித் திட்டத்தைக் குறித்துத் தங்கள் கருத்து?

சிலபஸ்ஸை மட்டும்தானே கொடுத்திருக்கிறார்கள்! அதுவும் ஆங்கிலத்தில். பனிரெண்டாம் வகுப்பின் இப்போதைய சிலபஸ் கூட சிறப்பானதுதான். அந்த பாடத்திட்டத்திற்குள் பாடத்தை எப்படி விரிவாக வைக்கப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். பாடத்திட்டத்தைச் சிறப்பாகக் காட்டிவிட்டு உள்ளே பாடங்களை மேம்போக்காக வைத்தால் அது அர்த்தமற்றது. ட்ரெய்லர் மட்டும் காட்டியிருக்கிறார்கள். படம் எப்படி என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

செப்டம்பர் 7-ஆம் தேதி ராஜஸ்தான் அரசு, "குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசரச் சட்டம் 2017' என்ற அவசரச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், முன்னாள் - இன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது, மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல், எந்தவித விசாரணையும் மேற்கொள்ள முடியாது. அதேபோல, அரசு ஊழியர் மீது லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ வேறு எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டாலோ அவரது குற்றம் உறுதி செய்யப்படும்வரை அவரது பெயர், புகைப்படம், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரிகைகளோ, தொலைக்காட்சி ஊடகங்களோ வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்" என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதே?

அம்மாவும் அப்பாவும் அரசு அதிகாரிகள். அம்மா கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர். ஒவ்வொரு முறையும் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வரும் போது ‘கீழ்மட்ட ஆளுங்கதான் கண்ணுக்குத் தெரியும்’ என்று அவர்கள் பேசிக் கொள்வதுண்டு. நூறும் இருநூறும் வாங்கும் கடைநிலை ஊழியர்களைத்தான் கைது செய்து கர்ச்சீப்பை முகத்தில் போட்டுக் காட்டுவார்கள். லட்சங்களில் புரளும் அதிகாரிகள் தப்பிவிடுவார்கள். அப்படிப் பார்த்தால் ராஜஸ்தான் இயற்றியிருக்கும் இந்தச் சட்டம் ஒரு வகையில் சரி என்றுதான் தெரியும். கீழ்மட்ட ஊழியர்களுக்கு ஒரு பாதுகாப்பு. அதே சமயம் பட்டா மாறுதலுக்கு என்று போய் நின்றால் கூட லட்சக்கணக்கில் பணம் கேட்கும் அரசு ஊழியர்கள் பெருத்துக் கிடக்கிறார்கள். ஆதரவற்றோர் முதியோர் தொகை வாங்கித் தருவதற்குக் கூட பணம் வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துளிர்விட்டுப் போய்விடும். துளி கூட பயமிருக்காது. 

ஊழல் புகார்களில் சிக்குகிறவர்களை விசாரிப்பதைத் தடை செய்யும் எந்தவிதமான சட்டங்களும் அவசியமற்றவை. இன்னமும் கடுமையாக்க வேண்டும். ஊழியர்களைக் காப்பதாக இருப்பின் தவறான புகார் என நிரூபிக்கப்படுமாயின் புகார் அளித்தவருக்கு கடும் தண்டனையளிக்கும் வகையில் மாற்றியமைக்கலாம்.

நம் உணர்வுகளுக்கான வடிகாலாக குடும்பம் இருக்கிறது என்பதுதான் உண்மை - கொஞ்சம் விரிவாக சொல்லலாமே.

சாலையில், அலுவலகத்தில், வெளியிடங்களில் என நாம் செல்லுமிடங்களில் எல்லாம் நம்மை ஏதாவதொருவகையில் இந்த உலகம் நம்மை கோபம் கொள்ளச் செய்கிறது. அழச் செய்கிறது. எதற்காக என்றே தெரியாமல் நம்மை அழுத்துகிறது. நம்மை ஒரு பலூனாக வைத்து தொடர்ந்து ஊதிக் கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் மனமும் உடலும் தாங்கும்? ‘எங்கேயோ கடி வாங்கியிருக்கிறான்’ என்பதை நல்ல குடும்பம் மட்டுமே புரிந்து கொள்ளும். வேறு யாருக்கும் அவகாசமும் இல்லை அதற்கான அக்கறையும் இல்லை. ‘போச்சாது விடு..பார்த்துக்கலாம்’ என்பதை பெரும்பாலும் குடும்பம்தான் நமக்கு உணர்த்துகிறது. அதுவொரு ஆசுவாசம் நமக்கு. நாளை மீண்டும் அதே அழுத்தங்கள் நம்மைச் சூழும் என்றாலும் மனம் கொஞ்சம் சாந்தப்படுகிறதல்லவா? அதுதான் வடிகால். சூழலாலும் இன்னபிறராலும் ஊதிப்பெருக்கப்பட்ட உணர்வுகளுக்கான வடிகால் குடும்பம் என்கிற அமைப்பு.

2017ல் விரும்பி வாசித்த எழுத்தாளர் யார்?

கி.வா.ஜ. அவருடைய நிறையப் புத்தகங்கள் தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் (tamilvu.org) இருக்கின்றன.  சிலம்பு பிறந்த கதையிலிருந்து கி.வா.ஜவை வாசிக்கத் தொடங்கினேன். தற்பொழுது ‘என் ஆசிரியப்பிரான்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

அரசியலுக்கு வருவீர்களா?

சொட்டைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்னைப் பார்த்தால் ரஜினி மாதிரியா தெரிகிறது?

Sarahah வில் கேட்கப்பட்ட கேள்விகள்.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ஆனால் என்னைப் பார்த்தால் ரஜினி மாதிரியா தெரிகிறது?//
பார்த்தால் ரசினி மாதிரி தெரியவில்லை.
மாறாக அரசியலுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது.

சேக்காளி said...

ஆடிட்டரு ஜெமினி(புரொடக்சன்)பிரதர்ஸ் ஐ தானே விமர்சிச்சாரு.இவரு ஏன் விளக்கம் குடுத்துருக்காரு?
கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பார்வதி புருசரே.

அன்பே சிவம் said...

ஆடிட்டர்னாவே நமக்கு அடி முதல் முடிவரை மீஜிக் இல்லாமயே ஆடிடும். ஆனா தல அப்டியா? ஹேய் எல்லாரும் பாத்துக்கங்க நான் ஆடிட்டர் கூட காபி சாப்ட போனனான்னு ஆரம்பிச்சு அந்த ஆனானப்பட்ட ஆடிட்டடருக்கே புளிப்பு மிட்டாய் குடுத்து புலிப்பாலே கறந்துடுவாரு. அதோட அதையே ஒரு பதிவாக்கிடுவாரு தெரியும்ல. இதையெல்லாம் ஊருக்கு நாமதான்சொ ல்லனும். கொ.ப.செ ன்னா சும்மாவா.

சேக்காளி said...

//இதையெல்லாம் ஊருக்கு நாமதான்சொ ல்லனும். கொ.ப.செ ன்னா சும்மாவா.//
பின்ன.