Nov 13, 2017

டாக்டருக்குக் கூட பிரச்சினையா?

இருப்பதிலேயே நல்ல படிப்பு என்ன? - மிகச் சாதாரணமாக எதிர்கொள்ளக் கூடிய கேள்வி. எம்.சி.ஏ? பொறியியல்? அறிவியலில் முனைவர் பட்டம்? சி.ஏ? கிட்டத்தட்ட எல்லோருமே ‘எம்.பி.பி.எஸ் தாங்க’ என்று ஒத்துக் கொள்ளக் கூடும். அதனால்தானே இவ்வளவு போட்டி. எந்தக் காலத்திலேயும் அதற்குத்தான் கடும் போட்டி. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குகிற கிட்டத்தட்ட அத்தனை மாணவர்களும் சொல்லக் கூடியதும் அதையேதான். ‘பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ மாதிரி வெளியிலிருந்து பார்த்தால் ஜிகினாவாகத் தெரிகிறது. ஆனால் உண்மையிலேயே பாவப்பட்டவர்கள் என்றால் மருத்துவப்படிப்பு படிக்கிறவர்கள்தான். 

படிப்பில் சேர்வதிலிருந்தே அழுத்தம் ஆரம்பிக்கிறது. நான்காயிரத்துச் சொச்சம் இடங்களுக்கு லட்சக்கணக்கானவர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கிறது. ஐந்தரை வருடங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தால் பிறகு முதுநிலைப்படிப்பை படிக்க வேண்டும். அதற்கு அதைவிடக் கடும் போட்டி. இன்னொரு நீட் தேர்வு. NEET-PG. இதில் ஐம்பது சதவீத இடம்தான் தமிழக மாணவர்களுக்கு. மீதமிருக்கும் இடங்களுக்கு இந்தியா முழுக்கவுமிருந்து ஆட்கள் வருவார்கள். தமிழகத்தில் இரண்டாயிரத்துச் சொச்சம் இடங்கள் உண்டு. நம்மைவிடப் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சற்றேறக்குறைய ஆயிரம் முதுநிலை மருத்துவ இடங்கள்தான் இருக்கின்றன. அவர்களும் இங்கேதான் படிக்க வருவார்கள். இரண்டாயிரம் இடங்களுக்கு பல்லாயிரம் போட்டியாளர்கள்.

தமது படிப்பை படித்து முடித்தவுடனே அவர்கள் இங்கே போட்டிக்கு வந்தால் பிரச்சினையில்லை. எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துவிட்டு முடித்துவிட்டு இடைவெளி எடுத்துக் கொண்டு முக்கி முக்கித் தேர்வுக்குத் தயாராகி இருப்பார்கள். அவர்களோடு போட்டியிட வேண்டுமானால் தமிழக மருத்துவர்களும் படிப்புக்குப் பிறகு ஒரு வருடமாவது தயாரிப்பைச் செய்ய வேண்டியிருக்கிறது. வயது ஆகிக் கொண்டேயிருக்கிறது என்றால் ஆகாமல் என்ன செய்யும்? அதுவும் முதல் தலைமுறை மருத்துவர் என்றால் படித்து முடித்து பயிற்சியை ஆரம்பித்து ஊருக்குள் நல்ல பேர் சம்பாதித்து ஒரு நிலைமைக்கு வர முப்பத்தைந்து வயதைத் தாண்ட வேண்டியிருக்கிறது. ‘கிட்டத்தட்ட டிப்ரஸனுக்கு போய்டுவோம்’ என்றார் ஒரு மருத்துவர். சத்தியமான வார்த்தை. ‘கூடப்படித்தவனெல்லாம் அமெரிக்கா போய் சம்பாதிச்சு கல்யாணம் பண்ணி வீடு கட்டிட்டான்’ என்று சொல்ல மாட்டார்களா என்ன? அவர்களிடம் சென்று ‘சேவை செய்’ என்றால் என்ன செய்வார்கள்? கார்போரேட் மருத்துவமனைகளில் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்வது எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றும். கார்போரேட் மருத்துவமனைகளின் அழுத்தங்களுக்கு வளைகிறார்கள் என்று படம் எடுத்து கை தட்டிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி அடித்துப் பிடித்து முதுநிலைப் படிப்பு என்னும் பெருங்கடலைத் தாண்டினால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் என்கிறார்கள். M.Ch, D.M மாதிரியான படிப்புகள். கடந்த ஆண்டு வரை இந்தப் படிப்புகளில் ஐம்பது சதவீதம் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அதிலும் கை வைத்திருக்கிறார்கள். NEET-SS என்றொரு தேர்வை எழுத வேண்டும். எழுதினால் இடம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை இந்தியாவிலிருந்து எந்த மாநிலத்திலிருந்து வேண்டுமானாலும் வந்து படிக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். open to all. அப்படியென்றால் தமிழகத்தில் மருத்துவம் படித்தவர்கள் புறங்கையை நக்கியபடி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

‘நாமெல்லாம் சுதந்திர இந்தியா..யார் எங்க வேணும்ன்னாலும் படிக்கிறதுதானே சரி?’ என்று யாராவது பொங்கல் வைக்கக் கூடும். சரிதான். ஆனால் இந்தியா முழுவதும் மருத்துவப்படிப்புகள் ஒரே அளவில் இருக்க வேண்டியதில்லையா? களம் சமமானதாக இருக்க வேண்டும். இல்லையா? நிலைமை அப்படியா இருக்கிறது? 

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் என்பவை வகுப்பறைப் பாடங்கள் இல்லை. பேராசிரியர்களுடன் பணியாற்றி, கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து, அனுபவ அறிவு பெற்று என என்னென்னவோ குட்டிக்கர்ணம் அடிக்கிறார்கள். சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான அனுமதியும் அவ்வளவு எளிதில்லை. துறை சார்ந்த வல்லுநராக இருக்கும் பேராசிரியர்களின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, நிதி ஒதுக்கப்பட்டு, படிப்புக்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியுடன் தொடங்கப்படுகின்றன. 

உதாரணமாக Surgical Gastroenterology என்கிற படிப்பு இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் ரங்கபாஷ்யத்தால் தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் கல்லூரிகளில் தொடங்கப்பட்டன. அநேகமாக தமிழகம் முழுவதும் சேர்த்து பத்து இடங்கள் இருக்கக் கூடும். இந்தப் படிப்பு மட்டுமில்லை பொதுவாகவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையே 202 தான். (அரசுக்கல்லூரிகளில்). 202 என்பது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எண்ணிக்கை அதிகம். பல மாநிலங்களில் மருத்துவ மேற்படிப்புகளின் நிலைமை மிக மோசம். 

இந்த லட்சணத்தில் ‘இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து படிக்கட்டும்’ என்பது மனசாட்சிப்படி சரியா? மாநில உரிமைகள் பறிக்கப்படுவது இப்படித்தான்.

சிறந்த மருத்துவர்களால், பேராசிரியர்களால், முந்தைய மாநில அரசுகளின் உதவியால் தமிழக மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலைப்படிப்புகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் உருவாக்கப்பட்டு கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு வைத்திருக்க, இந்தியாவில் ஏதோவொரு மாநிலத்தில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு இரண்டு மூன்று வருடங்கள் தயாரிப்புகளைச் செய்துவிட்டு வந்து அந்த இடங்களை பிடித்துக் கொள்வார்கள். இப்படியான சூழல் சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும். ‘இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்/மாநிலம்’ என்பதெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியவில்லை. வெளிமாநில மாணவர்கள் இங்கே வந்து படிக்கும் போது ‘இங்க படிச்சா இங்கேயதான் பணி புரிய வேண்டும்..இல்லாவிட்டால் இரண்டு கோடி ரூபாயை இழப்பீடாகத் தர வேண்டும்’ என்று ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கப் போவதாகச் சொல்கிறார்கள். நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. ஒப்பந்தத்தை மீறுகிறவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தாலும் கூட அரசினால் வெற்றி பெற முடியும் என்று சொல்ல முடியாது. 

மருத்துவர்களுக்கான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. சம்பளம், கல்வி உதவித் தொகை என்று வரிசையாகப் பட்டியலிடலாம். இப்பொழுது இந்த வெளிமாநிலப் போட்டிகளும் கூடச் சேர்ந்து கொள்கின்றன. இதையெல்லாம் பொது ஊடகங்கள் எவ்வளவு தூரம் பேசுகின்றன? அவனவன் பிரச்சினையை அவனவனே பேசிக் கொள்ள வேண்டியதுதான் என்றுதான் விட்டுவிடுகிறோம். தமக்கான உரிமைகளைக் கோரி மருத்துவர்கள் போராடினால் ‘இவனுகளுக்கு எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்தாது’ என்கிறோம். தமிழக அரசு மருத்துவர்களின் சம்பளம் பல அரசுத்துறை ஊழியர்களின் சம்பளத்தைவிடக் குறைவு. கர்நாடகத்தில் அரசு மருத்துவர்களுக்கு லட்சம் ரூபாயைத் தாண்டிய சம்பளம். தமிழகத்தில் எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்? விசாரித்துப் பார்த்தால் புரியும். 

பொது ஊடகமும் மக்களும் நம் மருத்துவர்களுக்காகப் பேசவில்லையென்றால் அவர்களுக்காக அவர்களாகவேதானே பேசுவார்கள்? இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ‘ஐம்பது ரூவாக்கு மருத்துவம் பாருய்யா’ என்று பன்ச் வசனம் பேசினால் கை தட்டிக் குதூகலித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடன் படித்த மருத்துவ நண்பர்களில் சிலர் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று தெரியும். படித்த காலத்தில் மிகப்பெரிய அறிவாளிகள் அவர்கள். அட்டகாசமான படிப்பாளிகள். இன்றைக்குத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அத்தனை மருத்துவர்களும் லட்சங்களில் புரள்வதில்லை. ஆனால் நம் கண்களுக்கு சம்பாதிக்கிற மருத்துவர்கள் மட்டும்தான் தெரிகிறார்கள். அதுதான் நம் பிரச்சினை. 

6 எதிர் சப்தங்கள்:

கண்ணன் கரிகாலன் said...

கள நிலையை மிகவும்​ சரியாக​ ஆய்ந்து பதிவு செய்துள்ளீர்கள்.
மருத்துவம் படிக்க குறைந்தது பதினைந்து ஆண்டுகளைச் செலவிட வேண்டும். முப்பத்தைந்து வயதுவரை படித்துவிட்டு இளமையைத்தொலைத்துவிட்டு பின்னர்​ மணவாழ்வு மற்றும் வருமானம் அமைய 40 வயது வரை தடுமாறும் மருத்துவர்கள் அநேகம்.
மருத்துவம் என்பது மிகவும் நவீனமான​ ஒன்றாக தற்போது உள்ளது. நவீன கருவிகள் வசதிகள் இல்லாமல் practiceசெய்வது கடினம்.

அரசுப் பள்ளிகளில் படித்து ,பின்பு அரசுக் கல்லூரிகளில் பயின்று, மருத்துவராகும் பின்புலம் இல்லாத மருத்துவர்கள் ,அரசு மருத்துவமனையில் தான் பணிபுரிய வேண்டும்.
பணம் கட்டி தனியார் பள்ளிகளில் பின் தனியார் கல்லூரியில் பயில்வோர் நவீன கருவிகள் வாங்கி வசதியான தனியார் மருத்துவமனை நடத்துவர் .
இது தான் கடந்த பல ஆண்டுகளாக நிலைமை. விதிவிலக்குகள்​ உண்டு அவை சொற்பமே.

அரசுப் பணிகள் யாவற்றிலும் மிகவும் வலுவற்ற தாழ்நிலைப் பணி என்பது அரசு மருத்துவப் பணியே.
கையூட்டுக்கு வழிவகையற்ற அரசுப் பணி.
எந்த அரசு அலுவலகத்திலாவது நுழைந்து எங்கேயடா அந்த அதிகாரி எனச் சாமானியர் சட்டமாகக் கேட்க முடியுமா?. முடிகிற, மிரட்ட முடிகிற, ஒரே அலுவலர் அரசு மருத்துவ அலுவலரே. எப்போது எவன் சாவானோ ;எந்த மூடன் அடிக்க வருவானோ ; என்ற பதற்றத்துடன் பணியாற்றும் கடினமான பணிச்சூழலை, ஓய்வு பெறும் வயது வரை எதிர் கொள்ள வேண்டும்.

சேக்காளி said...

// அவர்களிடம் சென்று ‘சேவை செய்’ என்றால் என்ன செய்வார்கள்? கார்போரேட் மருத்துவமனைகளில் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்வது எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றும்.//
"கார்ப்பரேட் மணி" ஏன் இந்த மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும் மாரடித்துக் கொண்டிருக்கிறார்?.
பொறாமை படுபவர்களை தவிர்த்து மற்ற யாராவது மருத்துவர்களுக்கு மரியாதை கொடுக்க தயங்குகிறோமா?.அந்த மரியாதை ஆசிரியர்களை தவிர்த்து வேறு யாருக்கும் கிடைக்காது.ஏன் உங்களை போன்ற சமூக சேவகர்களுக்கு கூட கிடைக்காது.

Ponchandar said...

மருத்துவம் பயிலும் முதல் தலைமுறை என் மகனுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு.நன்றிகள்

Asok said...

I would like to add my view here. We are just talking about our State here. If we say we are an Indians, we have to think about all over India. Yes, we agreed Tamilnadu is ahead than other states, aren't we selfish? arent we narrow minded? are we really educated? we have to share our facilities to other state people and our people need to find out a away to get these facilities to all Indians. This is called as educated and proud to say we are ahead. What we have to do that we have to give pressure to all other states to open more colleges and universities and make them to use all.

jabeen said...

அருமை சகோ என்னுடைய முகநூலில் இந்த பதிவை போட்டு கொள்கிறேன்

சேக்காளி said...

// What we have to do that we have to give pressure to all other states //
அசோக் சார்!!,
தமிழ் பேசிய ஒரே காரணத்திற்காக பக்கத்து நாட்டுல லெச்சம் உயிரு போயிருக்கு.அத விடுங்க அது நமக்கு தேவயில்லை.
தமிழ் ல பேசுன ஒரே காரணத்துக்காக தமிழ் மீனவன் இந்திய படையால (இலங்கை படை அல்ல) சுடப்படுறான்.
(ஒருவேள இலங்கை மீனவன் ன்னு நெனைச்சுருப்பாங்களோ?)
Why other states do no give pressure to stop that issues?
நம்ம இங்குலீசு சரியா ன்னு தெரியல. அதனால " அந்த பிரச்னைகளை நிறுத்த மற்ற மாநிலங்கள் ஏன் அழுத்தம் குடுக்கல?"