Nov 15, 2017

வேட்கை

‘பையன் வேலைக்கு வேணும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்களேன்னு கூட்டிட்டு வந்தேன்’ பெரியவர் பேசிக் கொண்டிருந்த போது ரவி அவருக்குப் பின்னால் நின்றிருந்தான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. எதிரில் அமர்ந்திருந்த ஸ்ரீதரை சில கணங்கள் பார்ப்பதும் பிறகு நிலத்தைப் பார்ப்பதுவுமாக இருந்தான். பெரியவர் அவனை அழைத்து வரும் போதே ‘அம்மா அப்பா ஒருத்தரும் இல்லைன்னு சொல்லிடு..வேற ஏதாச்சும் கேட்டாங்கன்னா எனக்கு சொந்தக்காரன்னு சொல்லிடு’ என்று அவனிடம் கூறியிருந்தார். 

‘தூரத்துச் சொந்தம்...கோயமுத்தூருக்கு அந்தப் பக்கம் ஒரு ஊரு....அம்மா அப்பாவும் செத்துட்டாங்க..மில்லு வேலைக்கு போய்ட்டு இருந்தான்...அங்க தனியா இருக்கானேன்னு இங்க கூட்டிட்டு வந்துட்டேன்..’ என்று பெரியவர் அத்தனையும் பொய்யாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ரவி எதுவும் பேசவில்லை.

‘இவனைப் பத்தி போன மாசம் உங்ககிட்ட சொல்லியிருந்தேனே’ என்றார். ஸ்ரீதரிடம் ஆயிரம் பேர் ஆயிரம் பேர்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அவருக்கு எதுவும் நினைவில் இருக்காது. அப்படியா என்ற படி ரவியை உற்று நோக்கினார். 

‘படிச்சிருக்கியா?’ என்றார்.

தலையை ஆட்டினான். என்ன படிச்சிருக்க என்று அடுத்த கேள்வியைக் கேட்கக் கூடும் என எதிர்பார்த்தான். அவர் கேட்கவில்லை. அது அவருக்குத் தேவையானதுமில்லை.

‘ஒழுக்கமா இருந்துக்கணும்..சரியா?’ என்ற கேள்விக்கும் பெரியவரே பதில் சொன்னார். 

‘நீங்க அது பத்தியெல்லாம் எதையும் நினைச்சுக்க வேண்டியதில்ல...சொல்லித்தான் கூட்டிட்டு வந்திருக்கேன்..நான் கேரண்டி தர்றேன்’ என்றார். பெரியவரை ஒரு கணம் பார்த்துவிட்டு மீண்டும் ஸ்ரீதர்  ரவியைப் பார்த்தார். 

‘இருந்துக்குவேங்க’ என்றான்.

மல்லிகா என்று அவர் அழைத்த போது வரவேற்பறை அதிர்ந்தது. பெரிய அறை. வீடியோகான் டிவி இருந்தது. அதற்கு நேர் எதிரில் இரண்டு தந்தங்களை வைத்திருந்தார்கள். தந்தங்களுக்கு முன்பாக டாம்பீகமான மர வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கை. அதில் ஸ்ரீதர் அமர்ந்திருந்தார். தந்தங்கள் அவருக்கு முளைத்த கொம்புகளைப் போலத் தெரிந்தன. வெள்ளைச் சட்டை. வெள்ளை பேண்ட். நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார். மல்லிகா வர சில கணங்கள் பிடித்தன.

தன்னை அழைத்து வந்த பெரியவரை ரவி காவல் நிலையத்துக்கு வெளியில் சந்தித்தான். அங்கேயிருந்த கடைக்கு முன்பாக ரவி அமர்ந்திருந்தான். பெரியவர் இவனைப் பார்த்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார். காலையிலிருந்து டீக்கு கூட வழியில்லாமல் பசியில் இருந்தான். காவலர்கள் அடித்த்திருந்தார்கள். வெளியில் தெரியாத மொக்கு அடி. பெரியவர் அவனிடம் நிறையக் கேட்டார். எதற்குமே அவன் உண்மையான பதிலைச் சொல்லவில்லை. இவன் பொய் சொல்கிறான் என்பதை அவர் அநேகமாகக் கண்டறிந்திருக்கக் கூடும். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. 

‘வேலைக்குப் போறியா?’ என்று கேட்டார்.

சரி என்றான். அப்போதைக்கு ஏதேனும் வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. 

‘படிப்பெல்லாம் ஒண்ணும் வேண்டியதில்ல. எடுபுடி வேலைதான்..ஆனா பெரிய இடம்...சேர்ந்துக்குறியா?’என்றார். மெளனமாகத் தலையை ஆட்டினான். 

ஸ்ரீதரின் வீடு மிகப்பெரிய மாளிகையாக இருந்தது. ‘அய்யாவைப் பார்க்கணும்’ என்று காவலாளியிடம் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார்கள் இருவரும். கிருஷ்ணகிரி க்ரானைட்டுகளால் வீடு இழைக்கப்பட்டிருந்தது. 

மல்லிகா வரவேற்பறைக்கு வந்தாள். புடவை அணிந்திருந்தாள். மஞ்சள் நிற பாலிஸ்டர். வெகு நேர்த்தியாகப் புடவை கட்டியிருந்தாள். அது அவளது உடம்போடு ஒட்டித் தெரிந்தது. ரவி இப்படியொரு அழகியைப் பார்த்ததில்லை என நினைத்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஊர் மாறியதும் அழகி ஒருத்தியின் அருகாமையும் ரவியின் அடலஸன்ஸை மெல்லக் கண் விழிக்கச் செய்தன. ஸ்ரீதர் தன்னை கவனிப்பதை உணர்ந்தவன் அவரைப் பார்க்காமலேயே தலையைக் குனிந்து கொண்டான்.

‘வேலைக்கு ஆள் வேணும்ன்னு சொன்னியே’ என்று ஸ்ரீதர் அவளிடம் கேட்டார்.

‘பொண்ணா இருந்தா செளகரியமா இருக்கும்’ என்று சொல்லிவிட்டு ‘என்ன வேலை தெரியும்?’ என்றாள் மல்லிகா. அவளது குரலில் இருந்த நளினம் அவனை திணறடித்தது. அவன் யார், எந்த ஊர் என்ற எந்த விவரத்தையும் அவள் கேட்டுக் கொள்ளவில்லை. நம்முடைய வீட்டில் நம்மை மீறி எதைச் செய்துவிட முடியும் என்கிற தைரியத்தைவிடவும் கணவன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பிவிட மாட்டான் என்கிற அவளின் நம்பிக்கை பெரிதாக இருந்தது.

ஓசூர் என்பதே வெளியூர்வாசிகளின் ஊர்தான். தொழிற்சாலைகளில் பணிபுரிய ஒவ்வொரு நாளும் புதுப்புது ஆட்களாக வந்து கொண்டேயிருக்கிறார்கள். வீட்டு வேலைகளிலிருந்து தொழில்கள் வரைக்கும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு ஊர் மனிதர்கள் கலந்து கிடக்கிறார்கள். அதனால் யாரும் அடுத்தவர்களின் ஊர் பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை. 

ரவி, ‘மில் வேலை’ என்றான். அவள் சிரித்துவிட்டாள். வேலை என்ற சொல்லையே வேறொரு அர்த்தத்தில்தான் தமது பள்ளியில் பையன்கள் பயன்படுத்துவார்கள் என்பது நினைவில் வந்து போனது.

‘வீட்டு வேலை தெரியுமாப்பா?’ என்ற கேள்விக்கு ரவி ஒரு கணம் முழித்தான். 

‘வீடு பெருக்கிறது, பாத்திரம் கழுவுறது’ அவள் பேசும் போது ரவி பெரியவரைப் பார்த்தான். அவர் குறுக்கே புகுந்து ‘வீட்ல அப்பப்போ செஞ்சதுதாங்க...நீங்க சொல்லிக் கொடுத்தா பழகிக்குவான்’ என்றார். அவளுக்கு அது திருப்தியான பதிலாகத் தெரியவில்லை.

‘வீட்டு வேலைக்கு புள்ளங்க யாராச்சையும் வெச்சுக்கலாங்க..பசங்க சரிப்பட்டு வரமாட்டாங்க’ என்று கணவனிடம் சொன்னாள். ஸ்ரீதர் இத்தகைய விவகாரங்களில் தலையிடுவதில்லை. ரவிக்கு அந்த வீட்டில் வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் பெரியவர் உறுதியாக இருந்தார். அவனை உள்ளே நுழைத்துவிட்டால் தமக்குத் தேவையான பெரிய வீட்டுக்காரியங்களைச் சுலபமாகச் செய்துவிட முடியும் என்கிற கணக்கு அவருக்கு. உள்ளூரில் ஸ்ரீதர் பெரிய கை. வட்டிக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ரியல் எஸ்டேட்டும் உண்டு. இரண்டுமே வில்லங்கமானது என்பதால் ஆட்கள் நிறையத் தேவைப்பட்டார்கள். ஆட்கள் சேரச் சேரத் தொழிலை விரிவுபடுத்த முடியும்.

ஸ்ரீதர் பெரியவரைப் பார்த்து ‘உங்க வீட்டுல வேணும்ன்னா ஒரு வாரம் இருக்கட்டும்..வேற ஏதாச்சும் பார்க்கலாம்’ என்றார். பெரியவர் அவரருகே சென்று காதில் குனிந்து ஏதோ கிசுகிசுத்தார். 

‘அப்படியா..சரி நம்ம வீட்டிலேயே டிரைவர் கெஸ்ட் ஹவுஸில் இருக்கட்டும்..’ என்றவர் ரவியிடம் ‘வீட்டுல ஒத்தாசையா இரு...நாலஞ்சு நாள் கழிச்சு ஒரு வேலை சொல்லுறேன்’ என்றார். மல்லிகாவிடம் ‘வயசுப்பொண்ணுங்க இருக்கிற வீடு பெரியவருது... பையன் இங்கேயே இருந்துட்டு போகட்டும்’என்றார். அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. ரவிக்கு அதுவொன்றும் பெரிய உற்சாகத்தைத் தரவில்லை. ஆனால் மல்லிகாவைவிட்டுவிட்டு போய்விடக் கூடாது என்ற நினைப்பு அவனுக்குள் வந்திருந்தது.

பெரியவர் மகிழ்ந்தார். ரவியிடம் ‘ஒழுக்கமா இருந்துக்கப்பா..என் பேரைக் காப்பாத்து’ என்றார். அப்பொழுது அவன் மல்லிகாவைப் பார்த்தான். அவளும் அவனை ஒரு கணம் பார்த்ததை உணர்ந்தான். அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது அவனுக்குள் என்னவோ செய்தது. அவள் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. 

‘சாப்பிட்டியா?’ என்றாள்.

‘ம்ஹூம்’

‘நீ போய் சாப்பிடு...’ என்று அவனிடம் சொல்லிவிட்டு ஸ்ரீதர் வெளியில் கிளம்பினார். பெரியவரிடம் ‘நீங்களும் சாப்பிட்டு போங்க’ என்றார். 

பெரியவர் சாப்பிட விரும்பவில்லை. ‘இல்லைங்க...பரவாயில்லை..நீங்க வேலை கொடுத்ததுல ரொம்ப சந்தோஷம்...நானும் கிளம்பறேன்’ என்று கிளம்பினார். வீடு வெறுமையானது.

மல்லிகா ரவியை உணவு பரிமாறும் அறைக்குள் வரச் சொன்னாள். அவன் வேறொரு உலகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

(நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிக்க இன்னும் ஓரிரு மாதங்கள் தேவைப்படும். நாவலின் ஒரு அத்தியாயம் இது)

6 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

இதேபோல் தொடர் கதையாக எழுதுங்கள். ஆனால் முழு நாவலாக பதிப்பு பெற்று வரும்போது.. விற்பனை பாதிக்கப்படும்..
வாழ்க வளமுடன்

A Follower said...

Your typical great Narrative Manikandan, Looks like a real conversation.

But please have a look at this sentence and that word I have marked in BOLD, "The old man thinks he can easily do the things" right or other way? Sorry if misunderstood wrongly.

//அவனை உள்ளே நுழைத்துவிட்டால் தமக்குத் தேவையான பெரிய வீட்டுக்காரியங்களைச் சுலபமில்லாமல் செய்துவிட முடியும் என்கிற கணக்கு அவருக்கு. //

Vadielan R said...

Sir Romance Novela illa Thrillera or classicla ethunu theiryalye ayyo rama indha mani sir paathi pottu thalaia vedika vaikirare

Vaa.Manikandan said...

இது நாவலின் ஆறாம் அத்தியாயம். இன்னமும் இரண்டு அத்தியாயங்களை மட்டும் வெளியிடும் யோசனை இருக்கிறது. முழுமையாக வெளியிடுகிற எண்ணம் இல்லை.

A Follower,

அது பிழை. சரி செய்துவிட்டேன். நன்றி.

அன்புள்ள வடிவேலன்,

ரவியை மையமாக வைத்துச் சுழலும் கதை. மூன்றாம் நதி பவானிக்கும் இடமுண்டு.

சேக்காளி said...

//ஆனால் மல்லிகாவைவிட்டுவிட்டு போய்விடக் கூடாது என்ற நினைப்பு அவனுக்குள் வந்திருந்தது//
டீசர் சூப்பர்

Anonymous said...

வா ரே வா! சூப்பர் ஜி சூப்பர் ஜி... சும்மா ஜிவ்வுன்னு இந்த பொருந்தாக் காதல்(மம்)கதைகள்ல கிடைக்கிற கிக்கே தனி!!!