Nov 22, 2017

வாட் மை கருத்து ஈஸ்..

ஒவ்வொரு வருடமும் ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுவோம். ‘நம்ம சிலபஸ் எல்லாம் வேஸ்ட்டுப்பா..சிபிஎஸ்ஈ மாதிரி வராது’ என்பதுதான் அந்தப் பாட்டு. பல ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரே பாடத்திட்டம்தான் இருக்கிறது என்பது சரிதான். ஆனால் அப்படியொன்றும் மோசமாகத் தெரியவில்லை. 

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நிசப்தம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தைந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தினோம். மாணவர்களுக்கு நீட் வினாக்கள் எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டுமல்லவா? கடந்த வருடத்தின் வினாத்தாள் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு கேள்வியாகக் கேட்ட போது ‘நாங்க படிச்சதேயில்லை’ என்று அவர்கள் சொன்னது வெகு சில கேள்விகளுக்குத்தான். பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்களை அவர்கள் பதினொன்றாம் வகுப்பிலோ அல்லது பனிரெண்டாம் வகுப்பிலோ எதிர்கொண்டிருக்கிறார்கள். ஒரே பிரச்சினை- இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படக் கூடும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. திருகாமல் நேரடியாகக் கேட்டால் பதில் சொல்லிவிடுவார்கள். இன்னொரு பிரச்சினை பதினொன்றாம் வகுப்புப் பாடங்களை அவர்கள் ஒழுங்காகப் படிக்கவில்லை. இந்த இரண்டையும் சரி செய்துவிட்டால் தமிழகத்தில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லாவிதத்திலும் வல்லவர்கள்தான்.

இதை வெறுமனே சொல்லவில்லை. ஆசிரியர் அரசு தாமசும் உடனிருந்தார். அவர்தான் இந்தப் பயிற்சிக்கான முழு ஒருங்கிணைப்பையும் செய்து கொண்டிருக்கிறார். மாணவர்களிடம் பேசுவது, ஆசிரியர்களிடம் பேசுவது, தலைமையாசிரியர்களுக்குத் தகவல் சொல்வது எனத் தொடங்கி வகுப்பு நடக்கும் போது உடன் அமர்ந்திருப்பது வரைக்கும் சகலமும் பார்த்துக் கொள்கிறார். மிகச் சாதாரணமான காரியமில்லை. இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் ஒதுக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஆசிரியருக்குத் தேவையில்லை. ஆனால் செய்கிறார். கடந்த வாரம் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் ‘பசங்களுக்கு ஒண்ணுமே தெரியலை, Blank என்றால்தான் பிரச்சினை...பெரும்பாலான கேள்விகள் அவர்களுக்கு அங்குமிங்குமாகத் தெரிந்திருக்கின்றன என்பதே ஆச்சரியம்தான்.....பிடித்துக் கொள்வார்கள்’ என்றார். இதுதான் நிதர்சனம்.

மாணவர்களும் சரியாக இருக்கிறார்கள். பாடத்திட்டமும் சரியாகத்தான் இருக்கிறது. கல்வித்துறையில்தான் வேகமில்லை. 



கடந்த வாரம் நக்கீரனிலிருந்து அழைத்து நீட் குறித்துக் கேட்டார்கள். அலைபேசியில் சில கருத்துக்களைச் சொல்லும் போது சில விஷயங்கள் சற்று மாற்றி புரிந்து கொள்ளப்படுவது இயல்பானதுதான். அதைத் தெளிவாக்கிவிட வேண்டும்.

‘கேள்விகளை ட்விஸ்ட் பண்ணிக்கேட்டால் மாணவர்கள் எப்படி பதில் அளிக்க முடியும்?’ என்று நான் கேட்கவில்லை. வினாக்கள் அப்படித்தான் இருக்கின்றன. அப்படித்தான் இருக்கும்.  இன்றைய நம் தேர்வு முறை மனனம் செய்வதை எழுதுவதாக இருக்கிறது. போட்டித் தேர்வுகளில் திருகிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்ன பதில் எழுத வேண்டும் என்கிற புரிதலை நம்முடைய மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும். அதற்கு அவர்களைப் பழக்க வேண்டும். அதுதான் நம் மாணவர்களிடம் உள்ள மிக முக்கியமான சவால். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு கல்வித்துறையின் சார்பிலிருந்து உருப்படியான எந்த நடவடிக்கையும் இல்லை.

மாதிரி வினாக்கள் தயாரிக்கப்பட்டு இந்நேரம் மாணவர்கள் கைகளில் வந்து சேர்ந்திருக்க வேண்டும். இன்னமும் தயாராகவில்லை. ஒரு ஆசிரியருக்கு 100 கேள்விகள் கொடுத்து மொழி பெயர்க்கச் செய்தால்தான் மொத்த கேள்விகளையும் தமிழில் மாணவர்கள் படிக்க முடியும் என்பதும் கூட துல்லியமான சொற்றொடர் இல்லை. ‘ஆசிரியருக்கு தலா 100 கேள்விகள் என்று கொடுத்து மொழிபெயர்த்து வாங்கியிருந்தால் கூட இந்நேரம் தமிழில் பல்லாயிரக்கணக்கான நீட் மாதிரி வினாக்கள் இருந்திருக்கும். இவ்வளவு நாட்கள் அரசாங்கம் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது’ என்கிற தொனியில் கேட்டிருந்தேன். ஐம்பதாயிரம் கேள்விகள் இருக்கின்றன; எழுபதாயிரம் கேள்விகள் இருக்கின்றன என்கிறார்கள். எங்கேயிருக்கிறது என்று சொல்லட்டும். 

கண் துடைப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கூட்டங்கூட்டமாக மாணவர்களை வரவழைத்து வீடியோ கான்ப்ரன்ஸிங்கில் பாடம் நடத்துகிறார்கள். தேர்வுச் சமயத்தில் மாணவர்களின் நேரத்தை வீணடிக்காமல்விட்டால் அவர்கள் குறைந்தபட்சம் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுக்காகவாவது படிப்பார்கள். அதையும் சேர்த்துக் கெடுத்துவிடாமல் இருந்தால் சரிதான். பயிற்சி மையங்களைத் தாலுகா அளவில் தொடங்கினால் மட்டும் போதாது. உதாரணமாக சத்தியமங்கலம் நகரம் தாலுக்காவின் தலை நகரம்தான். பண்ணாரியைத் தாண்டி தாளவாடி மலையில் படிக்கும் மாணவன் சத்தியமங்கலத்துக்கு வந்து படிப்பது நடக்கிற காரியமா? இப்படி தமிழகத்தில் பல ஊர்கள் இருக்கின்றன. அத்தகைய ஊர் மாணவர்களுக்கு என்ன வழி?

நக்கீரன் இதழுக்கு நன்றி. நக்கீரன் மாதிரியான இதழ்கள் இதைப் பற்றித் தொடர்ந்து குரல் எழுப்புவது அவசியம்.

இன்னொரு விஷயம்-

இனிவரும் காலத்திற்கான வரைவுப் பாடத்திட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இணைப்பில் இருக்கிறது. பாடத்திட்டத்தை ஆய்ந்து நம்முடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். ஐந்து நாட்களில் கருத்துச் சொல்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை பார்த்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். சொல்வதைச் சொல்லி வைப்போம்.

இப்போதைக்கு என் கருத்து- ‘தயவு செஞ்சு பாடத்திட்டத்தைத் தமிழில்  கொடுங்கள் அய்யா. தமிழ் வழிக்கல்வியில் பாடம் நடத்துகிற பள்ளிகள்தானே நம் மாநிலத்தில் அதிகம்? அப்புறம் ஏன் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறீர்கள்?’ 

3 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

தயவு செஞ்சி மனம் தளராதீங்கையா.

உங்க முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

Anonymous said...


WE MUST THANK THE TAMILNADU EDUCATION DEPARTMENT FOR DRAFT SYLLABUS PUBLISHED.
IF ONE COMPARES WITH 'NEET' SYLLABUS IT IS ALMOST THE SAME IN PHYSICS AND BIOLOGY.MAJOR HEADINGS CARRY THE SAME NAME. THE IN SIDE SUBJECTS ARE ALMOST SIMILAR TO 'NEET' TOPICS..

IN CHEMISTRY IT IS PURE/ VERBATIM REPRODUCTION.
SO THE EDUCATION DEPARTMENT HAS INDIRECTLY HELPED THE FUTURE STUDENTS IN PREPARING FOR 'NEET'.
THE EDUCATION DEPARTMENT MUST REALLY SPEED UP PUBLISHING 12 TH 11TH BOOKS.
FIRST 12TH AND THEN 11TH .
OTHER CLASSES CAN WAIT SINCE THERE IS NO PUBLIC EXAM/NO FILTERING.
AS SAID EARLIER STUDENTS CAN STUDY 11TH PORTION RIGHT AWAY. EVEN A CURSORY READING/GLANCING WILL DO.
ANBUDAN,
M.NAGESWARAN.

சேக்காளி said...