Nov 6, 2017

கார்ட்டூனிஸ்ட் பாலா

கார்ட்டூனிஸ்ட் பாலாவைக் கைது செய்துவிட்டார்கள் என்பது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கவில்லை. எதிர்பார்த்ததுதான். அவரது கேலிச்சித்திரங்களின் வீரியம் அப்படி. சம்பந்தப்பட்டவர்களுக்கு பச்சை மிளகாயைக் கிள்ளி வாயில் வைப்பது போலத்தான் இருக்கும். அதனால் அவருக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. ‘எப்படா இவன் மாட்டுவான்?’ என்று சிலரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா. அப்படி பாலாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அதிகாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களை ஏதேனும் வகையில் அரசு இயந்திரம் மிரட்டுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இப்படிச் செய்வதனால் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களை அடக்கிவிட முடியாது என்று அரசுக்குத் தெரியும். ஆனால் புள்ளைப் பூச்சிகள் கூட்டத்தில் சேர்ந்து கோவிந்தா போட மாட்டார்கள். ‘நமக்கு வேண்டாம் சாமீ’ என்று ஒதுங்கிக் கொள்வார்கள். 

ஜெயலலிதாவைக் மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது அவரது உடல்நிலை பற்றிய யூகங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்கள் வெகு அதிகம். ‘வதந்திகளைப் பரப்பிய இருவர் நெல்லையில் கைது’ என்று ஒற்றைச் செய்தி வெளியானது. உண்மையிலேயே கைது செய்தார்களா என்று கூடத் தெரியாது. அப்படியொரு அல்லு கிளப்பினார்கள். ‘வசந்தி புருஷன் நல்லா இருக்காரான்னு பேசிட்டு இருந்தேன் மாமா’ என்று பேச்சைத் திருப்பியவர்கள் கொள்ளை பேர். அதே நுட்பம்தான் இப்பொழுதும். எப்பொழுதும். மன்னராட்சியில் அரசுக்கு எதிராக ஏதேனும் கசமுசா நடக்கிறது என்றால் ‘முக்கியமான நான்கு பேரைக் கழுவிலேற்றுங்கள் அரசே..அடங்கிவிடுவார்கள்’ என்று மன்னருக்கு அறிவுரை சொல்வார்களாம். அப்படிச் செய்து அடுத்தவர்களை மிரட்டி ஊர் வாயை அடக்குவது அரசியலில் ஒரு பாலபாடம். இன்றைக்கு பாலாவுக்கும் அதுதான் பாடம்.

பாலா எல்லைகளை மீறவில்லை என்று வக்காலத்து வாங்கவில்லை. அவரது கார்ட்டூன்களில் எல்லை மீறல்கள் இருந்தன. ஆனால் அது அவருக்கான சுதந்திரம் இல்லையா? எழுதுவதற்கும் பேசுவதற்கும் எவ்வளவு சுதந்திரத்தை எதிர்பார்க்கிறோமோ அதே அளவு சுதந்திரம் கார்ட்டூனிஸ்ட்களுக்கும் அவசியமில்லையா? கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், மோடியையும், அப்துல்கலாமையும், காமராஜரையும், பெரியாரையும் விமர்சித்து யாராவது எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அதைக் கருத்து சுதந்திரம் என்று சகித்துக் கொள்கிறோம். அதே சுதந்திரத்தின் அடிப்படையில் கேலிச்சித்திரம் வரைந்த ஒருவன் கைது செய்யப்படும் போது ஏன் கொண்டாடுகிறார்கள்?

தம்முடைய சித்தாந்தத்துக்கு, இயக்கத்துக்கு, தலைமைக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்பதால் ‘மாட்டட்டும்’ என்று நினைக்கிற மனநிலைதானே? அப்புறம் எப்படி தம்மைக் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவானவன் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிக் கொள்ள முடிகிறது? கவுரி லங்கேஷ் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அவரது எழுத்துக்களை எத்தனை பேர் வாசித்திருக்கிறார்கள்? அவரை பெங்களூரில் சுட்டுக் கொன்ற போது ‘நானும் ரவுடிதான்’ என்று வடிவேலு கணக்காக ஜீப்பில் ஏறியவர்கள் எல்லாம் இப்பொழுது பாலாவின் கைதைக் கொண்டாடுவதைப் பார்க்கும் போது சலிப்பாக இருக்கிறது. 

எப்பொழுதும் இப்படியானவர்கள் ஒரு போர்வைக்குள் ஒளிந்து குரல் எழுப்பியபடியே இருப்பார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

ஒருவனது கருத்தும் சித்திரமும் தம்மை அவமானப்படுத்துவதாகக் கருதும்பட்சத்தில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவதூறு வழக்கைத் தொடுத்து அலை கழித்திருக்கலாம். தவறேதுமில்லை. அதற்கான வழிமுறைகளும் அதிகாரமும் அவர்களிடம் இருக்கிறது. அதிரடியாகக் கைது செய்வதில் என்ன நியாயமிருக்கிறது? அரசும் ஆட்சியாளர்களும் தமக்கு எதிரான வெறுப்பினை மக்களிடத்தில் பெருக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். 

தம்மைக் கைது செய்துவிடக் கூடும் என்பதை பாலா எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இதையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியமான மனிதர்தான் அவர். பாலாவின் அரசியல் நிலைப்பாடுகள் என்னுடைய நிலைப்பாடுகளுக்கு முரணானவை. முரண்பாடுகளைத் தாண்டி அவருடன் நல்ல நட்பில் இருக்க முடிந்தது. அடிப்படையில் நல்ல மனிதர். மிக மென்மையாகப் பேசக் கூடியவர். தமது கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படாதவர். களப்போராளி. இத்தகைய மனிதர்களுக்கு இப்படியான இடர்பாடுகள் நிகழ்வது சகஜம்தான். இந்த இடைவெளியில் அவர் இன்னமும் உரமேறியவராக மாறட்டும். வலியைப் பொறுத்துக் கொள்ளும் வலிமையை அவரது அம்மாவும் மனைவியும் குழந்தைகள் இளஞ்செழியனும் இளமாறனும் பெறட்டும்.

கந்துவட்டிப் பிரச்சினையானது தேசிய அளவிலான கவனம் பெறுவதற்குரிய சூழல் இந்தக் கைது வழியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாலாவின் கைது பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தேசிய அளவிலான விவாதங்கள் நடைபெறக் கூடும். அந்த வகையில் இந்தக் கைது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

As you said, there are controversial and sometimes very raw cartoons from him. But he is very clear in his principles and have not adjusted or succumbed to any parties or power. Above all a very good humanitarian.

-Somesh

ADMIN said...

முக்கியமான நான்கு பேரைக் கழுவிலேற்றுங்கள் அரசே..அடங்கிவிடுவார்கள்’ என்று மன்னருக்கு அறிவுரை சொல்வார்களாம். அப்படிச் செய்து அடுத்தவர்களை மிரட்டி ஊர் வாயை அடக்குவது அரசியலில் ஒரு பாலபாடம். இன்றைக்கு பாலாவுக்கும் அதுதான் பாடம்.

இதுதானே காலம் காலமாக நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக ஒருவன் போராடுகிறான் என்றால் அவனை எப்படி அடக்குவது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகப் பலர் அடங்கிப் போகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் மாறாமல் இருக்கிறார்கள்.

Selvaraj said...

கைது நடவடிக்கையை எதிர்பார்த்திருக்க மாட்டார் எதிர்பார்த்திருந்தால் முன்ஜாமீன் வாங்க முயற்சித்திருப்பார் இதுவரை இவரை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இப்போது தெரிந்து கொண்டேன். நானும் இவர் வரைந்த கேலிச்சித்திரத்தை முகநூலில் பார்த்தேன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்,நிச்சயம் கோபமும் குற்ற உணர்வும் வர வேண்டும் ஆனால் என்ன இந்த கைது நடவடிக்கையும் வழக்கம்போல நம்மை போன்ற மக்களுக்கு ஒரு பரபரப்பு செய்தியாக கடந்து போகும் . “உச்சகட்ட அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்ச்சித்தால் இதுதான் கதி என்று நம் அனைவரையும் இந்த கைது வழியாக பகிரங்கமாக மிரட்டுகிறார்கள் . இந்த கைது நடவடிக்கை அவருக்கு நேரடியாக விடப்பட்ட அச்சுறுத்தல் அல்ல நம் அனைவரின் மீதும் விடப்பட்ட மிரட்டல் அல்லது எச்சரிக்கை”

எங்களைப்போன்றவர்களின் மனநிலையை உங்களை போன்றோ (நிசப்தம்) அல்லது பாலா போன்றோ எவரும் பொதுவில் வெளிப்படுத்தும் போது நாம் நினைத்ததை சொல்லிவிட்டார் என்று மனம் ஆறுதல் அடையும், இனி நிச்சயம் கருத்து சொல்ல பயப்படுவார்கள். இந்த பூமி எப்போதும் அதிகாரம் படைத்தவனுக்குத்தான்.

ஓன்று மட்டும் நிச்சயம் நேற்று இவரை நன்றாக அடித்திருப்பார்கள் அல்லது இவரை நிர்வாணப்படுத்தி இவர் வரைந்த கார்டூனில் இருப்பது போல இவரையும் நிற்க வைத்து அவமானப்படுத்தி எள்ளி நகையாடியிருப்பார்கள்.

(குறைந்தபட்சம் நம் கோபத்தையும் மனக்குமுறல்களையும் வெளிப்படுத்த இந்த இணைய வசதியாவது இருக்கிறதே என்று மனம் ஆறுதல் அடையவேண்டியதுதான் இல்லையென்றால் இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்போதும் பொதுவெளியில் வந்திருக்காது)

Aravind said...

ணீங்க மாட்டுவிங்க னு எத்தந பேரு காத்திருக்காய்ங்களோ?

Asok said...

When I saw that cartoon, I was shocked but I realized that how could one can express his extreme anger? The politicians are going beyond that level, why not he can express to that level? Actually, we are living in this life somewhat comfortable because of these kind of brave people. Even though the people are ignoring them, they are still doing their job. We have to salute for them.

மகேஸ் said...

கேலிச்சித்திரம் என்பதற்கும், அநாகரீகமாக வரைவதற்கும், உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போனதுதான் ஆச்சர்யம்

Catherine Augustine said...

And now the nudity of the govt is exposed to the whole world by Bala s arrest.