Nov 6, 2017

கேள்வி பதில்கள்

நான் IT ல் வேலை செய்கிறேன் . எனக்கும் வேலை பற்றிய பயம் இருந்து கொண்டே உள்ளது. என்னுடையது Mainframe Platform. மிகப் பழையது. உங்கள் பதிவை படித்த பின்பு புதிய டெக்னாலஜியை கற்று கொண்டு வருகிறேன். ஆனால் Opening என்று வரும் போது Experienced Platform skills ஐ மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். நான் கற்ற Technology ல் எவ்வாறு உள்ளே செல்வது? Fresher போல மட்டுமே அவர்கள் கருதுகிறார்கள். இதை எவ்வாறு கையாள்வது?

புதிய தொழில்நுட்பத்தைப் படிக்கும் போது நமக்கு சம்பந்தமேயில்லாத துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் நம்மை புதியவர்களைப் போலத்தான் கருதுவார்கள். மென்பொருளை upgrade செய்வது போலத்தான் நாமும் upgrade ஆக வேண்டும். தற்சமயம் செய்து கொண்டிருக்கும் பணிக்குத் தொடர்புடைய, அதற்கு சம்பந்தப்பட்ட புதிய நுட்பங்களைத் தேடிப் படித்து தயார் செய்து கொள்ளலாம். அதுதான் பாதுகாப்பானதும் கூட. 

NKK பெரியசாமி & NKKP ராஜா ஒப்பிடுக

பெரியசாமி அடிப்படையில் சிறந்த நிர்வாகி. தான் சரி என நினைப்பதை அடைய வெகு உறுதியாக நிற்கக் கூடியவர். பவானி ஆற்றை மாசடையச் செய்த விஸ்கோஸ் ஆலை அவரது உதவியினால்தான் மூடப்பட்டது. அதற்காகவே கட்சியிலும் ஆட்சியிலும் பின்னடைவுகளைச் சந்தித்தார்.  யூனியன் தலைவராக இருந்த போது அடைந்த நற்பெயரை அமைச்சரான பிறகு மெல்ல மெல்ல இழந்தார். அவருடன் ராஜாவை ஒப்பிட முடியாது. ராஜாவின் முரட்டுத்தனமும் பேராசையும் அவரது அரசியல் எதிர்காலத்தை முடக்குவதற்கு முக்கியக் காரணங்களாகின.

உங்கள் நண்பர் செல்லமுத்து குப்புசாமி தொடர் "ஷேர் மார்க்கெட் ஏபிசி" தொடர் நாணயம் விகடனில் வெளிவருகிறது. பங்குச் சந்தையை பற்றி எளிமையாக சொல்கிறார். படித்து பார்த்தீர்களா?

பங்குச் சந்தையில் குப்புசாமி புலி. அவரது புத்தகங்களை வாசிப்பதோடு சரி. நாணய விகடன் தொடரை வாசிப்பதில்லை. எந்த சஞ்சிகையையும் நான் தொடர்ந்து வாங்குவதில்லை என்பது முக்கியமான காரணம்.

அண்ணா, சில ஆங்கில வார்த்தைகளுக்கு ஏற்ற தமிழ் சொற்கள் தெரியவில்லை என்றால் எங்கே தேடூவீர்கள்? உதரணத்திற்கு layout; google பலநேரங்களில் சரியான வார்த்தைகளை தருவதில்லை.

கூகிளில் தேடும் போது ‘Layout தமிழ்’ என்று தேடுங்கள். பெரும்பாலும் பதில் கிடைத்துவிடும்.

சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பியிருக்கும், தூர் வாரப்பட்ட ஏரி/குளங்களின் புகைப்படங்களைப் பதிவிடவும். நன்றி.

வேமாண்டம்பாளையத்தில் மழை இல்லை. குளம் காய்ந்து கிடக்கிறது. ஒழலக்கோயிலும் அதே நிலைமைதான். ஒருவேளை வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.

சொந்த ஊரைவிட்டு வெளியூர் வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்கள் தன் வாழ்க்கையையே இழக்கிறார்கள் என்று சில பேச்சாளர்கள் எதிர்மறையாகப் பேசுகிறார்கள் (இவர்கள் பேசுவதும் வெளியூர் மேடைதான்) ஆனால் இவர்கள் அனைவரும் கல்லூரியில் பேராசிரியராகவோ அல்லது அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும் இருக்கின்ற காரணத்தால் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் வாழ்கை ஒன்றுபோல் அமைவதில்லையே இந்த மாதிரி பேச்சுக்களை பார்க்க நேரிடும்போது என்ன நினைப்பீர்கள்?

ஊருக்குச் செல்லும் போது ‘என்ன இருந்தாலும் உள்ளூர் வாழ்க்கை மாதிரி அமையுமா?’ என்று என்னை யாராவது கேட்பதுண்டு. பதில் எதுவும் சொல்ல மாட்டேன். எனக்கும் உள்ளூர் வாழ்க்கைதான் பிடிக்கும். யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் ஊரை விட்டு வெளியே வாழ்வதற்கு அவரவருக்கு சில காரணங்கள் இருக்கும். பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். நமக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதைச் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

I am 42 and in IT as a Project Manager. I lost my touch in technology and doing generic PM activity. What are all the business opportunity we can explore when we thrown out ?

தூக்கி வீசப்படும் வரைக்கும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என்பது என் நிலைப்பாடு. ஆனால் சில தயாரிப்புகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். அது நமக்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். துறையை விட்டு வெளியே வரும் போது அப்பொழுது இருக்கக் கூடிய சூழலுக்கு ஏற்ப ஏதேனும் வழிவகைகளை முடிவு செய்து கொள்ளலாம். இப்போதைக்கு சம்பாத்தியத்தில் உருப்படியான முதலீடு ஒன்றைச் செய்வதற்கான வழிவகைகளை யோசிக்கவும். இப்பொழுது காற்றடிக்கிறது. அடிக்கும் வரைக்கும் தூற்றிக் கொண்டேயிருப்போம்.

Sarahah கேள்விகள்.

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

👌👌👌👌👌

சேக்காளி said...

//கூகிளில் தேடும் போது ‘Layout தமிழ்’ என்று தேடுங்கள்//
இதுதான் பொறி.
நன்றி.

Unknown said...

திருப்திகரமான பதில்கள். நன்றி!!!