Nov 4, 2017

காலனிகளும் கல்வியும்

‘சுதந்திரம் வாங்கி இத்தனை வருஷம் ஆச்சு...இன்னமும் இட ஒதுக்கீடு கொடுத்துட்டு இருக்காங்க...எப்படி நாடு உருப்படும்’ என்று சமீபத்தில் கூட ஒருவர் விவாதம் செய்தார். ஒருவேளை இவர்கள் சொல்வது சரியாக இருக்குமோ என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டியதில்லை.

நேற்று மட்டும் சுமார் பத்து அரசு மேனிலைப்பள்ளிகளுக்குச் சென்றிருந்தோம். நீட் தேர்வுக்கு பயிற்சியளிப்பதற்காக தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த பதினைந்து மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதுதான் பயணத்தின் நோக்கம். மலையப்பாளையம் என்றொரு கிராமப்புறப்பள்ளிக்குச் சென்றிருந்தோம். பனிரெண்டாம் வகுப்பில் கிட்டத்தட்ட நாற்பது சதவீத மாணவர்கள் அருந்ததியர் மாணவர்கள். திட்டத்தை விவரித்துவிட்டு ‘ஆயிரம் மார்க் வாங்குற மாதிரி மாணவர்கள் இருந்தா சொல்லுங்க சார்’ என்று பொறுப்பாசிரியரிடம் கேட்டோம்.

‘எம்.பி.சி பையன் ஒருத்தன் இருக்கான்...பேசறீங்களா?’ என்றார். 

‘இல்ல சார்...அடுத்த வருஷம் விரிவாகச் செய்யலாம்..இந்த வருடத்திற்கு எஸ்.சி அல்லது எஸ்.டி மாணவர்களை மட்டும் பார்க்கலாம்’ என்றதற்கு ‘அவங்க கொஞ்சம் டல்லாத்தான் இருக்காங்க’ என்கிறார்.

அந்தப் பள்ளியில் மட்டுமில்லை. பட்டிமணியாரம்பாளையம், குருமந்தூர் என்று எங்கே சென்றாலும் இதுதான் நிலைமை. நிலைமை இதுதான் என்று தெரிகிறது. என்ன காரணம் என்று பேசினால் கந்தசாமி வாத்தியார் சொன்ன விஷயம்தான் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. 

‘எங்க ஊரைச் சுத்தி அஞ்சு காலனி இருக்குதுங்க..ஒரு காலனியில் கூட ஒருத்தரும் இதுவரைக்கும் டிகிரி முடிக்கவில்லை’ என்றார். 

பிரச்சினையின் அடிநாதமே இதுதான். எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்பதுதான் அரசாங்கத்தின் கல்வித்திட்டமாக இருக்கிறது. 1950களில் இந்தத் திட்டம் சரி. இன்னமும் அப்படியே இருந்தால் எப்படி? அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அரசாங்கம் யோசிப்பதாகத் தெரியவில்லை. நகர்ப்புறத்தில் இருக்கக் கூடியவர்கள் இட ஒதுக்கீட்டைப் பற்றிக் கொண்டு மேலே வந்துவிடுகிறார்கள். கிராமங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட இன மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் கல்வியில் கீழேயேதான் இருக்கிறார்கள். மிகச் சொற்பமானவர்கள் மட்டுமே அங்குமிங்குமாக மேலே வருகிறார்கள்.

‘காலனி வீடுகள்ல என்னங்க குறை? எல்லோரும் நல்லா இருக்காங்க’ என்று பேசுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். நீட் தேர்வுக்கான பயிற்சி பற்றிப் பேசும் போது கூட ‘ஏன் அவங்களுக்கு மட்டும்?’ என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இன்றைக்கு காலனி வீடுகளில் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. பைக் வாங்கி ஓட்டுகிறார்கள். செல்போன் வைத்திருக்கிறார்கள்.  ரசிகர் மன்றங்கள் தொடங்குகிறார்கள், கட்சிக் கொடிகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இது மட்டும்தான் வளர்ச்சியா என்ன? அவர்களும் அப்படி நினைத்துக் கொள்கிறார்கள். அரசாங்கமும் அப்படி நினைத்துக் கொள்கிறது. அதிகபட்சமாகக் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மில் வேலைகளுக்குத்தான் தினக் கூலியாகச் செல்கிறார்கள். 

பழைய சம்பவம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்- நாற்பதாண்டுகளுக்கு முன்பாக கிராமக் கூட்டம் ஒரு ஜமீனின் வீட்டில் நடக்கிறது. உள்ளூர் பெரியவர்கள் கலந்து கொண்ட கூட்டம். ‘நம்மூர்ல இருக்கிற அஞ்சாவது வரைக்குமான பள்ளிக் கூடத்தை உயர்நிலைப்பள்ளியாக மாற்ற அரசாங்கத்துக்கு மனு எழுதிப் போடலாம்’ என்று முடிவு செய்கிறார்கள். கூட்டம் கலைகிறது. ஜமீனின் வீட்டில் இரண்டு பெரியவர்கள் மட்டும் மற்றவர்கள் கலைந்து போன பின்னாலும் அமர்ந்து கொள்கிறார்கள். எல்லோரும் சென்ற பிறகு ‘ஏங்க பத்தாவது வரைக்கும் கொண்டு வந்துட்டீங்கன்னா சக்கிலி பறையனெல்லாம் படிக்க போய்டுவான்...பண்ணையத்துக்கு ஆள் வேணும்ன்னா என்ன பண்ணுவீங்க?’ என்று கேட்டார்களாம். அவ்வளவுதான். மனுக் கொடுக்கும் திட்டம் அதோடு கிடப்பில் போடப்பட்டது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் அந்தப் பள்ளி தொடக்கப்பள்ளியாகவே தொடர்ந்தது. இந்த நிலைமையில் இன்றைக்கும் பெரிய மாற்றமில்லை.  அத்தகைய மனநிலையில்தான் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.

கிராமப்புறங்களில் செயல்படும் பெரும்பாலான பள்ளிகளில் சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்கள்தான் அதிகம். ஆனால் ஐந்து சதவீதம் அல்லது பத்து சதவீதம் இருக்கக் கூடிய பிற பிரிவினர்தான் முதல் மதிப்பெண்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லை- இந்த நாற்பது சதவீத மாணவர்களில் கல்லூரிப்படிப்பை முடிக்கிறவர்கள் மிகக் குறைவு என்பதுதான் அவலம். நேற்று அலைந்ததில் வெறும் ஆறு மாணவர்களைத்தான் அடையாளம் கண்டறிய முடிந்தது. அதுவும் கூட முழுமையான திருப்தி இல்லை. இன்னமும் நிறைய வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. 

அரசாங்கம் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அறிவித்திருக்கிறது. மாவட்டத்துக்கு மூன்று பயிற்சி மையங்கள் வீதம் நூறு பயிற்சி மையங்களுக்கு இருபது கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறார்கள். இது நிச்சயம் போதுமானதாக இருக்காது. பெரும்பாலான மாவட்டங்களில் ஐந்து தாலுக்காக்கள் இருக்கின்றன. ஒரு தாலுக்காவுக்கு ஒன்று என்றாலும் கூட மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் பயிற்சி மையத்துக்கு வரமாட்டார்கள்.

நேற்று ஒரு மாணவியைச் சந்தித்துப் பேசினோம். பத்தாம் வகுப்பில் 447 மதிப்பெண்கள். பனிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்தைத் தாண்டுவாள். ஆனால் பயிற்சி பற்றிப் பேசிய போது வெகுவாக யோசித்தாள். ‘என்ன பிரச்சினை’ என்று விசாரித்தால் ‘அப்பா விட மாட்டாங்க’ என்றாள். ‘அப்பாவிடம் நாங்க பேசறோம்’ என்று தலைமையாசிரியர் சொல்லி அனுப்பினார். அவள் எப்படி தாலுக்கா தலைநகரில் அரசாங்கம் நடத்தவிருக்கும் பயிற்சி மையத்துக்கு வந்து படிப்பாள்? அரசாங்கம் இத்தகைய நடைமுறைச் சிக்கல்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீட் தேர்வினை தடாலடியாக அறிமுகப்படுத்தியது, பாடத்திட்டங்களை இன்னமும் தரம் உயர்த்தாதது போன்ற பிரச்சினைகளுக்கு நடுவில் ஒதுக்கப்பட்டிருக்கும் இருபது கோடிகளை துல்லியமான திட்டமிடலின்றி வீணடிப்பது சரியானதாக இருக்காது.

கிராமப்புற மாணவர்களைப் பொறுத்தவரையிலும் அவர்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லை. அசாருதீன் மாதிரியான மாணவர்களைத்தான் உதாரணமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. பத்தாம் வகுப்பில் பாதியில் நின்றுவிட்டவன். யாரோ ஒரு நல்ல மனிதர் அவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துவிட பதினொன்றாம் வகுப்பில் அடித்துப் பிடித்துத் தேர்ச்சியடைந்து பனிரெண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் தோல்வி. அதன் பிறகுதான் அவனைச் சந்தித்தோம். பேச்சுக் கொடுத்தோம். ‘உங்ககிட்ட பேசுனதுக்கு அப்புறம்தான் படிக்கவே ஆரம்பிச்சேன்’ என்று சொல்வான். 1123 மதிப்பெண்கள் வாங்கி இன்றைக்கு கால்நடை மருத்துவம் படிக்கிறான். சென்னைக் கால்நடை மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் முனைவர் தங்கபாண்டியன் அசாருக்கு Mentor ஆக இருக்கிறார். அசார் இனி எப்படியும் பிழைத்துக் கொள்வான். அவனிடம் பேசும் போது சொன்னது நினைவில் இருக்கிறது. ‘ஆற்றின் போக்கில் வரக் கூடிய இலைகளுக்கு திசை எதுவும் இருக்காது..அது போக்கில் போய்க் கொண்டேயிருக்கும். சிறு குச்சிகள் படும் போது அதன் திசைகள் மாறி கடைசியில் தனக்கான இடத்தை அடையும். அப்படித்தான் மாணவர்களுக்கும் கூட’. திசைமாற்றும் குச்சிகளுக்கான தேவை நிறைய இருக்கிறது.

பட்டப்படிப்பே முடிக்காத காலனிகளிலிருந்து மருத்துவர்களை உருவாக்குவது என்பது பெருங்கனவுதான். ஆனால் முயற்சியே செய்யாமல் இருப்பது சரியானதாகத் தோன்றவில்லை. இந்த வருடத்திலிருந்தே முயற்சித்துப் பார்த்துவிடலாம். அவர்கள் உலகம் தெரியாத மனிதர்கள். 

‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கேஸு கொடுக்கிற அளவுக்கு அவங்களுக்கு விவரம் இருக்குது..விவரம் இல்லையாமா! என்ன பேசற நீ?’ என்றுதான் பேசுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அரசியல்கட்சிகளும் சாதிக்கட்சிகளும் அதைத்தான் முன்னேற்றம் என்று கற்றுக் கொடுத்திருக்கின்றன. வெட்டு, குத்து, மிரட்டு என்கிற முரட்டுத்தனமெல்லாம் சீர்திருத்தமே இல்லை. படிப்பது, தமது தலைமுறையில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்று எவ்வளவோ இருக்கின்றன. உண்மையான சீர்திருத்தம் என்பது கூட அதுதான். அதைத்தான் அரசாங்கமும், அரசியல் அமைப்புகளும், தன்னார்வலர்களும் முன்னெடுக்க வேண்டும். பேனர் கட்டி பாலாபிசேகம் செய்கிற சினிமாவைத் தாண்டி, இருநூற்றைம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிற அரசியல் சாயங்களைத் தாண்டி இந்த உலகத்தில் எவ்வளவோ இருக்கின்றன. இல்லையா?

13 எதிர் சப்தங்கள்:

Prabakaran said...

சிறப்பான பதிவு தம்பி.

சேக்காளி said...

//வெட்டு, குத்து, மிரட்டு என்கிற முரட்டுத்தனமெல்லாம் சீர்திருத்தமே இல்லை//
ஆனால் வெட்டு,குத்து,மிரட்டு என்கிற முரட்டுதனங்களெல்லாம் தான் முன்னேற்றம் என தாழ்த்தப்பட்டவர்களும் நம்புவது தான் கொடுமை.
அடுத்து
//சக்கிலி பறையனெல்லாம் படிக்க போய்டுவான்...பண்ணையத்துக்கு ஆள் வேணும்ன்னா என்ன பண்ணுவீங்க?’ //
இதற்கும் தீர்வு காண வேண்டுமல்லவா? அரசு என்ன தீர்வை கண்டுள்ளது?

kandhu said...

அரசு என்பது நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவதே விதைக்கப்பட்டது தானே அறுவடை ஆகும் இப்படி தான் கள நிலவரம் உள்ளது என்பதை சரியான நபரின் காதுக்கு கைட்க வைத்துள்ளேன் நாம் ஒவ்வொருவரும் குச்சிகளாக மாறி செயல்பட்டால் நிச்சயமான மாற்றம் நாளை நாம் பார்ப்போம்

கொமுரு said...

தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி ,வாழ்த்துக்கள்

Packirisamy N said...

//‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கேஸு கொடுக்கிற அளவுக்கு அவங்களுக்கு விவரம் இருக்குது..விவரம் இல்லையாமா! என்ன பேசற நீ?’ என்றுதான் பேசுகிறார்கள். //
நம் சகோதரன் என்று அன்பிருந்தால் அப்படி சொல்லமாட்டார்கள். சிறப்பான பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் மணிகண்டன்.

கண்ணன் கரிகாலன் said...

இட ஒதுக்கீட்டின் பலன் காலனிகளுக்கு கிடைப்பது நின்று பல வருடங்களாகி விட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் கல்லூரியில் பயின்ற போதே இதை கவனித்ததுண்டு. ஒதுக்கீட்டில் பலன் அடைந்து உயர் நிலை எய்தியோரின் பிள்ளைகள்தான் தற்போது பட்டியல் இனங்களுங்கான ஒதுக்கீடுகளை முழுமையாக அனுபவிக்கிறார்கள். விதிவிலக்குகள்​ சொற்பம்.
அரசு ஆசிரியராக பணி பெற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு உள்ளது.
அது போல அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில்​பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீடுகளில் இருபது சத உள் ஒதுக்கீடு தரலாமே.
அப்போது அரசுப் பள்ளிகளில்​ பயிலும் காலனி மாணவர்களுக்கு போதிய இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்கும்.

கண்ணன் கரிகாலன் said...

இட ஒதுக்கீட்டில் படித்து ,பணி பெற்று, வெகு ஊதியம் ,மற்றும் கையூட்டு, பெற்று​ நல்ல நிலையில் உள்ளவர்கள் அவர்தம்​ மக்கள் முன்னேற்றத்துக்கு​ இது போன்ற பயிற்சி வகுப்புகள், இன்னும் பிற முயற்சிகள் ஏதும் செய்வது போலத் தெரியவில்லை​யே.

இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பு நிர்ணயித்தால் எளியோர் பயன் பெறுவர்.

Anonymous said...

It is time to consider creamy layer system which is recommended by supreme court.But it must be opposed by some organisations.

Anonymous said...

இடுப்புலியே வச்சிட்டிருந்தா இப்படித்தான் சவலையா இருப்பாங்க. அரசாங்கம் தன் இடுப்பில் இருந்து இறக்கிவிட்டுட்டா தானா சரியாகிடும் ப்ரு

Yarlpavanan said...

சிறந்த ஆய்வுப் பதிவு
பாராட்டுகள்

Anonymous said...

That is why reservation should be based on income and financial status. Not on cast. Those who already developed from the caste side will get more and more and this village people will be like this...

Asok said...

Those people are the vote bank for all political parties, Political parties are making sure they will not go beyond the high schools, in order to provide all ration shop, free groceries, give money for some reason (rain, drought etc), TASMAC etc.

Anonymous said...

I THINK 1000 MARKS IS A HIGH TARGET THOUGH UNDERSTANDABLE FROM COACHING POINT.
PLEASE SEE THEIR 10TH MARKS.
WE HAVE TO SEE THEIR BIOLOGY, CHEMISTRY, PHYSICS MARKS ALSO.
THEIR ENROLLMENT TO NEET COACHING MAY ITSELF MOTIVATE THEM.
THEIR SELECTION IN SPITE OF LOW MARKS WILL MAKE AT LEAST ONE/TWO GRATEFULP AND CLEAR 'NEET'.
YOUR EFFORTS TO HELP POOR TAMIL MEDIUM DALIT STUDENTS WILL NEVER GO WASTE/FRUITLESS.
GOD,ALL PEOPLES BLESSINGS/SUPPORT WILL BE WITH YOU..
MORE THAN ONE OF YOUR STUDENTS WILL GET MEDICAL SEAT THIS YEAR.
ANBUDAN,
M.NAGESWARAN.