Nov 29, 2017

அப்ரைசல் முடிஞ்சுதா?

வருடக் கடைசி வந்துவிட்டது. ‘இந்த வருஷம் பூரா நீ என்ன செஞ்ச?’ என்று மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள். வருடத் தொடக்கத்தில் ‘நீ மலையைத் தாண்டுற; கடல்ல குதிக்குற’ என்றெல்லாம் மேலாளர் எழுதி வைக்க அதற்கெல்லாம் தலையாட்டி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் இப்படித்தான். கடைசி நேரத்தில் அழைத்து ‘நீ அதைச் செய்யல; இதைச் செய்யல...நீ செஞ்ச லோலாயத்துக்கெல்லாம் சேர்த்து கொடுத்திட்டிருக்கிற சம்பளத்தைக் குறைக்கணும்..எப்படி வசதி’ என்கிறார்கள். ‘அய்யோ சாமீ...நீங்க பெரியவங்க..அப்படியெல்லாம் சொல்லக் கூடாது..சேர்த்துக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை..கொடுத்துட்டு இருக்கிற சம்பளத்துல கை வெச்சுடாதீங்க’ என்று கெஞ்ச வைத்துவிடுகிறார்கள். அப்படிக் கீது எசகுபிசகாக ஆகிவிட்டால் வீட்டில் காக்கா குருவி கூட மதிக்காது.

‘எப்போ பார்த்தாலும் பொழப்பு கெட்ட வேலையவே பண்ணிட்டு இரு...’ என்று பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். ஃபேஸ்புக், ப்லாக் என்பதெல்லாம் அவர்களுக்கு பொழப்புக் கெட்ட வேலை. நமக்கு பொழப்பே அதுதான் என்பது அவர்களுக்குத் தெரியவா போகிறது?

வீட்டில் இருப்பவர்கள் கலாய்ப்பார்களே என்று பயந்து மேலே இருப்பவர்களிடம் கெஞ்சினால் ‘சரி இந்த வருஷம் கை வைக்கல..ஆனா அடுத்த வருஷம்...’ என்று இக்கு வைத்து மலையைத் தோண்டிக் கடலைப் புரட்டிவிடுவதாகச் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். அந்தப் பதற்றத்திலும் நடுக்கத்திலும் இருப்பவனிடம் நீலத் திமிங்கல விளையாட்டை விளையாடச் சொன்னாலும் கூட சரி என்றுதான் சொல்வான். ‘அப்படியே ஆகட்டும் பகவானே’ என்று சத்தியம் அடித்து வைத்திருக்கிறேன். அதோடு சரி. வருடக் கடைசியில் அதையெல்லாம் படித்துப் பார்த்தால் பெரிய உருண்டை ஒன்று தொண்டையை வந்து அடைத்துக் கொள்கிறது. எந்த உருண்டை எங்கேயிருந்து வந்து அடைத்திருக்கிறது என்று புரியாமல் மண்டை காய்கிறது.

என்னதான் தலையே போனாலும் சத்தியம் மட்டும் செய்துவிடுத்துவிடக் கூடாது. மனைவியிடம் செய்கிற சத்தியத்தையே ஒழுங்காகக் கடைபிடிக்க முடிவதில்லை. அதைவிடவா மேலாளரும் நிறுவனமும் கதற வைத்துவிடுவார்கள். அப்புறம் எதற்கு சத்தியம்? அடுத்த வருடமாவது தெளிவாக இருக்க வேண்டும்.

இந்த வருடத்திற்கான உற்சவம் ஆரம்பித்துவிட்டது. தினசரி ஒரு கட்டுரை எழுதச் சொன்னாலும் கூட எழுதிவிடலாம். ‘உருப்படியா என்ன செஞ்ச?’ என்று மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள். எதை எழுதுவது எப்படி எழுதுவது எனப் புரியாமல் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ரொம்ப சங்கடமாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. மனசாட்சியைக் கொண்டு போய் அன்புச்செழியனிடம் அடமானம் வைத்துவிட்டு வந்து எழுதிக் கொட்டி கிளறி மூடி வைத்துவிட்டேன். நீங்கள் மட்டும் படித்துப் பார்த்தால் அரண்டு போய்விடுவீர்கள். 

நீங்களே அரண்டு போவீர்கள் என்றால் மேலாளரை நினைத்துப் பாருங்கள். அநேகமாக துக்கத்தில் அவர் தனியறையில் அழுது புரண்டிருக்க வேண்டும். பக்கத்தில் இருந்தவன் செய்த வேலையையெல்லாம் நான் செய்ததாக எழுதி வைத்திருக்கிறேன். அழைத்தார். கண்களைத் துடைத்துக் கொண்டார் போல. நானும் வாழைப்பழத்தைத் திருடித் தின்ற செந்தில் போல நின்றேன்.

‘அப்ரைசல்தானே செய்யச் சொன்னேன்?’ என்றார். 

‘ஆமாங்கய்யா’ என்றேன். விவேக் ஜெயராமன் பெங்களூரில் ஐடிசி நிறுவனத்தில் இருந்த போது மேலாளருக்கு டீ எல்லாம் எடுத்து வந்து தருவாராம். அவரளவுக்கு பம்ம மாட்டேன் என்றாலும் ஓரளவுக்கு பம்முவேன். நாம்தான் பெரிய ரவுடியாச்சே! அந்தளவுக்கு பம்ம வேண்டிய அவசியமில்லை.

‘நீ என்ன Boasting செஞ்சிருக்க?’ என்றார். இப்படியெல்லாம் புதுப் புது சொற்களைப் பயன்படுத்தினால் ஆத்திர அவசரத்துக்கு எங்கே போய் அகராதியைத் தேடுவது. புரிந்தும் புரியாததும் பார்ப்பது போல அவரைப் பார்த்தேன். ‘அவன் செஞ்ச வேலையெல்லாம் நீ செஞ்சதா எழுதியிருக்க’ என்றார். நாம் ஏதாவது செய்திருந்தால் எழுதலாம். நாவல் எழுதினேன். சினிமாவுக்கு விமர்சனம் எழுதினேன் என்றால் சம்பளம் கொடுப்பார்களா? 

‘அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு..அதை நான்தானே சரி செஞ்சேன்’ என்றேன். அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது. வடிவேலு கணக்காக ‘ஆஹான்’ என்றார்.

அவர் என்ன கேட்டாலும் பதில் சொன்னேன். அவருக்கே ஒரு வழியாகிவிட்டது. ‘விட்டால் என் வேலையைக் கூட நீயே செஞ்சதா சொல்லுவ போலிருக்கு’ என்றார். மேலாளரின் மேலாளர் மட்டும் அழைத்துக் கேட்கட்டும். தயக்கமே இல்லாமல் அப்படித்தான் சொல்வேன். ‘அவர் என்னங்க செஞ்சாரு? அவரோட எல்லா வேலையையும் நானே இழுத்துப் போட்டு செஞ்சேன்’ என்பேன். இவரிடமே எப்படிச் சொல்ல முடியும். அந்தளவுக்கு லஜ்ஜை இல்லாதவனாக இல்லை.

ஒரு மணிநேரம் சத்சங் நடத்திவிட்டார். ‘உன்னை மலை போல நம்பியிருந்தேன்’ என்று அவர் சொன்ன போது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘யாரை நம்பணும் யாரை நம்பக் கூடாதுன்னு ஒரு தராதரம் வேண்டாமா?’ என்று தொண்டை வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. உருண்டை வேறு அடைத்திருந்ததல்லவா? அது கொஞ்சம் வார்த்தைகளைப் பிடித்து வைக்க இந்த நேரத்தில் எதைப் பேசினாலும் வம்பாகப் போய்விடும் என்றும் நானே விழுங்கிக் கொண்டேன். கடந்த வருடத்தில் நிறைய அழிச்சாட்டியங்களைச் செய்திருக்கிறேன்.

‘இன்னன்ன தேதியில் அனுப்பின கேள்விகளுக்கு எல்லாம் ஒழுங்கா பதில் அனுப்பல; கடைசி வரைக்கும் ஃபாலோ செய்யல’ என்றெல்லாம் அடுக்கினார். அனுஷ்கா, நயன்தாரா என்றால் கூட ஃபாலோ செய்யலாம். அட்லீஸ்ட் மனுஷி சில்லார். ம்ஹூம். நாய்ப் பிழைப்பு. ஓலிவரையும் ரோஜரையும் ஃபாலோ செய்ய வேண்டுமாம்.

கடைசி அஸ்திரம். ‘நைட் ஷிஃப்ட் எல்லாம் வந்தேனே’ என்று சொன்னேன். அந்த இடத்தில்தான் கொஞ்சம் மனம் இளகிவிட்டார். அதைத் தவிர பெரிய சாதனை எதுவும் செய்யவில்லை.

‘இதையேதான் டீம்ல இருக்கிற அத்தனை பேரும் சொல்லுவாங்க’ என்றார். மேலாளர்களுக்கு நம்மை மடக்குகிற வழி தெரிகிறது. 

என்னதான் சொல்ல வருகிறார் என்றே புரியாத அளவுக்கு மடச்சாம்பிராணியா என்ன?

மீண்டும் ‘நீ செஞ்சதுக்கு உன் சம்பளத்தைக் குறைக்கணும்’ என்றுதான் வந்து நிற்பார்.  வீட்டில் இருப்பவர்களையெல்லாம் நினைத்துப் பார்த்துவிட்டு ‘அய்யோ சாமீ’ என்று நானும் அதே இடத்துக்கு வந்து நிற்பேன்.  

‘அடுத்த வருடத்தில் என்ன செய்வன்னு சத்தியம் பண்ணு’ என்பார்.

‘பெருமாளே’ என்று தசாவதாரம் அசின் மாதிரி புலம்பிவிட்டு ‘கூகிள் கம்பெனியை வாங்கி அதை நம்ம கம்பெனி கூட இணைச்சு..சுந்தர் பிச்சையை உங்களுக்குக் கீழ வேலை செய்ய வைக்கல...’ என்று தொடைய மேலே தூக்கித் தட்டி முடிக்க டைன்..டடடடடைன் என்று அண்ணாமலை தீம் மியூஸிக் ஒலிக்க வெளியே வருவேன். எத்தனை வருடமாக இதையவே செய்து கொண்டிருக்கிறோம்! இந்த வருடம் செய்ய மாட்டோமா?

17 எதிர் சப்தங்கள்:

GANESAN said...

பிரமாதம் திரு .மணி . உங்கள் எழுத்து நடையில் நல்ல முன்னேற்றம் .இந்த பதிவை எவராலும் சிரிக்காமல் படிக்க முடியாது .வாழ்த்துக்கள் திரு.மணி .

Unknown said...

கொங்கு வழக்கை சரியாக
வார்த்தைபடுத்துமாறு
கேட்டு கொள்கிறேன்.

அப்படிக் கீது எசகுபிசகாக அல்ல.
அப்படிக் கிது எசகுபிசகாக

Vaa.Manikandan said...

வட்டார வழக்கே ஊர் ஊருக்கு மாறக் கூடியதுதான்...
நினைவு தெரிந்ததிலிருந்தே கீது என்றுதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ‘அப்படிக் கீது ஏதாச்சும் ஆச்சுன்னா’ என்பதும் சரிதாங்க...

கண்ணன் கரிகாலன் said...

சுய எள்ளலுடன் , சிரிப்பு நடிகர்களையும் ஆங்காங்கே துணைகொண்டு , நகைச்சுவையாக எழுதியுள்ளீர். சிறப்பு.

வெட்டி ஆபீசர் said...

//"எந்த உருண்டை எங்கேயிருந்து வந்து அடைத்திருக்கிறது"// ஆ(பா)ஷம் ஆ(பா)ஷம்...

Mohamed Ibrahim said...

superb, lol

சேக்காளி said...

//ஃபேஸ்புக், ப்லாக் என்பதெல்லாம் அவர்களுக்கு பொழப்புக் கெட்ட வேலை. நமக்கு பொழப்பே அதுதான் என்பது அவர்களுக்குத் தெரியவா போகிறது?//
டேமேஜர் சார் கேக்குதா?.

சேக்காளி said...

//மனைவியிடம் செய்கிற சத்தியத்தையே ஒழுங்காகக் கடைபிடிக்க முடிவதில்லை.//
அப்டின்னா அடுத்த வாட்டி மேனேஜர் தலையில அடிச்சு சத்தியம் பண்ணுங்க மணி.

Vinoth Subramanian said...

Serious script but a comical presentation. .

Anonymous said...

மணி'கே மணியடிக்கிறாங்க போல.. அப்போ நம்ம நெலமை எல்லாம் என்ன சொல்லறது... டேய் மேனேஜர்'ரூ நான் ஒரு ரெண்டு மாசம் லீவு'டா....

Anonymous said...

enga company % hike pathi keela irukkara meme vanthu irukku.

Employee: LPG Gas subsidy ennoda salary account-la credit aagum-nu ethukku mail anupee irukeenga?

HR: That is 2017 Compensation letter.

Anonymous said...

Classic... Though tried to map it as jovial as possible, it is what everyone questions themselves and it pains to paint in a colour one dislikes most.. Self appraisal requires overcoming a sort of "self trumpeting is bad and shameful syndrome", and many Tamils fail in this. Let me wish to have your version of "how a Bihari did his/her appraisal" without an iota of disturbance that he is the best employee in "frame".

அன்பே சிவம் said...

பாஸ் இது சம்மந்தமா ஒரு Complete Details ஓட ஒரு பொஸ்தகம் எழுதுனீங்கன்னா, புதுசா வர்ரவங்களுக்கு (பொய் சொல்றது எப்படீ அதுவும் மேனேஜருங்க நம்புற மாதிரி பொய் சொல்றது எப்படீன்னு) ஒரு DATABASE தந்தீங்கன்னா உபயோகமா இருக்கும்ல. ஏன்னா INFORMATION is WEALTH ஆச்சே.

சுதா சுப்பிரமணியம் said...

Super.. I was continously laughing till I read the entire post... 😀

Sundar Kannan said...

‘கூகிள் கம்பெனியை வாங்கி அதை நம்ம கம்பெனி கூட இணைச்சு..சுந்தர் பிச்சையை உங்களுக்குக் கீழ வேலை செய்ய வைக்கல...’
---
இந்த இடத்தில ஒரு எக்கோ எபெக்ட் கொடுத்திருந்தால், செம்ம மாஸ்ஸ்ஸா இருந்திருக்கும்.
உங்களுக்காக சிறப்பு எக்கோ எபக்டோடு :

‘கூகிள் கம்பெனியை வாங்கி அதை நம்ம கம்பெனி கூட இணைச்சு..சுந்தர் பிச்சையை உங்களுக்குக்
கீழ
வேலை செய்ய வைக்கல..
வைக்கல.
வைக்கல.....

எப்படி சும்மா கிர்ருன்னு இருக்குல்ல ???

அன்பே சிவம் said...

அந்த அப்புறானி மேலாளர் இடத்துல நான் இருந்திருந்தா!, தாட்சன்யமே பாக்காம ₹ 5000/ஐ சம்பளத்தில் குறைச்சிருப்பேன். ஏன்னா!? அத பாக்கெட்ல வச்சிட்டுதான இம்பூட்டு அட்டகாசம் பண்றீரு! அதனால அந்த POCKET. MONEY ய CUT பண்ணுவேன்.😳

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

இன்னுமா அப்ரைசல் இடியிலிருந்து மீள முடியவில்லை..
வாழ்க வளமுடன்