கடந்த வாரத்தில் ஒரு சம்பவம். மூன்றாம் வகுப்பு மாணவன் சக மாணவனைத் தாக்கிவிட்டான். அடிபட்ட மாணவனுக்கு மண்டை உடைந்துவிட்டது. வழக்கமாக பள்ளிகளில் நடக்கக் கூடிய சச்சரவுதான். ஆனால் பிரச்சினை அதுவன்று. அடித்த மாணவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அடித்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வந்து பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னாலும் அவன் கேட்பதாக இல்லை போலிருக்கிறது. எங்கள் லே-அவுட்டில் குடியிருப்பவரின் குழந்தைதான் அடி வாங்கிய குழந்தை. குழந்தையின் அம்மா சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். ‘அந்தப் பையனோட வயசுக்கும் கோபத்துக்கும் சம்பந்தமே இல்லைங்க’என்றார்.
காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆசிரியர் யாராவது அடித்திருந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம். அடித்தவனும் குழந்தைதான். சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டியதில்லை. பள்ளியிலேயே மனநல மருத்துவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அந்தச் சிறுவனுக்கு தகுந்த வழிகாட்டலைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
ஐந்தாறு நாட்களுக்கு முன்பாக ஒரு செய்தி வந்திருந்தது. டெல்லியில் நான்கரை வயதுச் சிறுவன் தனது வகுப்பில் உடன்படிக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான். வகுப்பறையில் வைத்தே எல்லை மீறியிருக்கிறான். விரல்களையும் கூரான பென்சிலையும் பயன்படுத்தியிருக்கிறான். அவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்றே புரியவில்லை. அந்தப் பெண் குழந்தைக்கு புண் ஏற்பட்டு வலி உண்டான பிறகு அழத்தொடங்கிய பிறகு அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்கள் நேரடியாக காவல்துறையில் புகார் அளித்துவிட்டார்கள். தவறிழைத்த குழந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவனது பெற்றோரை அழைத்துப் பேசியிருப்பார்கள். அவர்கள் இதனை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையின் உச்சபட்சக் கொடூரம் அவர்களுக்கு. நான்கரை வயது என்றால் அதிகபட்சம் யு.கே.ஜி படித்துக் கொண்டிருக்கக் கூடும்.
பெங்களூரில் ஒரு மனோவியல் மருத்துவர் இருக்கிறார். ஜெயநகரில் ஒரு மருத்துவமனையில் அவரைச் சந்திக்கலாம். வெகு பிரபலம். அவரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. குழந்தைகளின் மனோவியல் பற்றித்தான் பேச விரும்பினேன். ‘குழந்தைக்கு உடம்புல ஒரு பிரச்சினைன்னா பெத்தவங்க பதறிடுறாங்க’ என்றார். வாஸ்தவம்தான். ‘ஆனால் மனசுல இருக்கிற பிரச்சினைகளைக் கண்டுக்கிறதே இல்லை’ என்றார். கண்டு கொள்வதே இல்லை என்பதைவிட உளவியல் சம்பந்தப்பட்ட புரிதல்கள் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதுதான் நிஜம்.
பெரியவர்களின் மனம் சார்ந்த பிரச்சினைகளைக் கூட ‘இவங்களுக்கு ரொம்பக் கோபம் வருது’ என்று பேசிவிட்டுத் தாண்டிவிடுகிறோம். வயதானால் கோபம் வரத்தான் செய்யும் என்கிற அளவுக்குத்தான் நம்முடைய புரிதல் இருக்கிறது. ஏன் கோபப்படுகிறார்கள், எதனால் அவர்களுக்குப் பசிப்பதில்லை, ஏன் உறக்கம் கெடுகிறது என்பதையெல்லாம் அலசத் தொடங்கினால்தான் என்னவோ சிக்கல் இருக்கிறது எனத் தெரிகிறது. நிகழ்ந்த சம்பவங்கள், துக்கம், தனிமை, உடலியல் பிரச்சினைகள் என்று என்னவோ ஒரு காரணம் ஒளிந்திருக்கும். தெரிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் மிகச் சாதாரணமாகக் கையாளக் கூடியதாக இருக்கக் கூடும். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்கள் கோபத்தை நம் மீது காட்ட, நாம் அவர்கள் மீது காட்ட என தினசரி பிரச்சினைகள்தான்.
உடல் ரீதியிலான சிக்கல்கள்தான் நம்மைப் பொறுத்தவரைக்கும் சிக்கல்கள். உளவியல் சிக்கல்களுக்கு நாம் வெவ்வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். கோவக்காரன், அடங்காமாரி, முரடன் என்பது மாதிரியான பெயர்கள். அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. உளவியல் சிக்கல்களில் பெரும்பாலானவை தீர்க்கக் கூடியவை. ‘இப்படியான அறிகுறிகள் தெரிகின்றன...உளவியல் காரணமாக இருக்கக் கூடுமோ?’ என்று ஆலோசனை கேட்பதற்கு சரியான நண்பர்கள் இருந்தால் போதும். மோப்பம் பிடித்து சரியான வல்லுநர்களை அணுகித் தீர்த்துவிடலாம். கண்டு கொள்ளாமலே விடுவதுதான் பல பிரச்சினைகள் தீர்க்கவே முடியாதவையாகிவிடுகின்றன.
பெரியவர்களுக்கே இந்த நிலைமைதான் என்றால் குழந்தைகள் பற்றிக் கேட்க வேண்டுமா? ‘முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள உனக்கென்னடா கோபம்?’ என்று நம் ஈகோவைத்தான் காட்டுவோம். ‘ரெண்டு சாத்து சாத்துனா வழிக்கு வந்துடுவான்’ என்று நினைக்கத் தோன்றும். நம் கோபத்துக்கும் மிரட்டலுக்கும் குழந்தை நிச்சயமாக பயந்துவிடும். ஆனால் அது உள்ளுக்குள் தேங்கிவிடும். அப்படித் தேங்குகிற கோபமும், வன்மமும், பாலியல் இச்சைகளும் சரியான வடிகால் இல்லாமல் அவர்களை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றன.
‘எனக்கு உளவியல் ரீதியில் எந்தப் பிரச்சினையுமே இல்லை’ என்று நாம் நம்புவதே கூட உளவியல் பிரச்சினைதான் என்றார் மருத்துவர். எல்லோரிடமும் ஏதேனும் சிக்கல் இருக்கக் கூடும். 100% முழுமை என்பதெல்லாம் எதிலும் இல்லை. நம் உடலில் இருக்கும் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது போல உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு அடுத்தவர்களின் உதவி தேவைப்படுவதில்லை. தமது கட்டுப்பாட்டை மீறி நோய்மை பெருகும் போது வல்லுநர்களின் உதவி தேவைப்படுகிறது.
குழந்தைகளுக்கு தம்முடைய உள்ளம் சார்ந்த பிரச்சினைகளைப் பிரித்து உணரத் தெரிவதில்லை. டிவியை நிறுத்து என்றால் கோபம் வருகிறது. மொபைலில் விளையாடாதே என்றால் கோபம் வருகிறது. கோபம் தவறில்லை. ஆனால் அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதைப் பழக்க வேண்டும். ‘எம்பையனுக்கு கோபம் ஜாஸ்தி’ என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் விளைவுகளை மோசமாக்குகின்றன. பெற்றவர்கள் அதைச் சொல்லித் தரவில்லையென்றால் இந்தச் சமூகம் சொல்லித் தந்துவிடும். நாம் கோபத்தைக் காட்டினால் தெருவில் போகிறவன் திருப்பி நம்மிடம் காட்டுவான் என்பது குழந்தைகளுக்கு வெகு சீக்கிரம் புரிந்துவிடும். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் தனிமையில் வளர்கின்றன. அவர்களின் நட்புவட்டம் மிகச் சுருங்கியது. அத்தகைய குழந்தைகளுக்கு பெற்றவர்களும் சொல்லித் தராமல் தெருவும் சொல்லித் தராவிட்டால் அவர்களது உளவியல் சிக்கல்கள் வெவ்வேறு பரிமாணங்களை அடைகின்றன.
Anger Management in Kids என்பது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான களம். நாம் பெரிதும் கண்டுகொள்ளாத ஏரியா.
பசியில் இருக்கும் போது கோபம் வரும். அதனால் முடிந்தவரைக்கும் பசி வராமல் பார்த்துக் கொள். கோபம் வந்தால் பேச்சைக் குறைத்துவிடு, கோபம் வரும் போது பிடித்த வேலையில் கவனத்தை திசை மாற்று, யாரிடமும் முகத்துக் நேராகக் கோபத்தைக் காட்ட வேண்டாம் என்பதெல்லாம் கூட கோப மேலாண்மையின் சில அம்சங்கள்தான். சொல்லிக் கொடுத்துவிட்டால் நம்மைவிடவும் குழந்தைகளால் கோபத்தைக் கையாள முடியும். வெள்ளைக்காரர்களில் கோபத்தை முகத்தில் அறைந்தாற் போலக் காட்டுகிறவர்கள் வெகு குறைவு. நாசூக்குத் தன்மை அவர்களிடம் உண்டு. நாம் அப்படியில்லை. ஓங்கி அறைந்துவிடுகிறோம். கைகளால் அல்லது சொற்களால். எல்லாமும் பழக்கம்தானே!
3 எதிர் சப்தங்கள்:
// ஆலோசனை கேட்பதற்கு சரியான நண்பர்கள் இருந்தால் போதும்.//
அட பிரச்னைகளை காது கொடுத்து அமைதியான முறையில் கேட்டாலே போதும்.நிறைய பேருக்கு பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும்.
ஆனால் நம்பி பிரச்னைகளை பகிரும் அளவிற்கு நண்பர்கள் அமைவது தான் வரம்.
Being practical, not critical to all small activities, being true to kids if not atleast lie them are most important. 25 years back, I faced the same while travelling as escort in a school van wherein, a student slapped his friend, upon inquiry it was learnt, the latter asked the former in Hindi "did ur father too lie on ur mom every day". They were 2nd std then. The idea of a kid is ZOOMED too big to grownups whimsies and fancies. In both cases of ur article represent what they learnt at home rather than any psychology disorder. Trust me, children replicates and nothing of their own.
மனோதத்துவ நிபுணர் அலைபேசி எண் தரமுடியுமா?
Post a Comment