Dec 1, 2017

பருந்துகளிடமிருந்து தப்பிக்கத் தெரியாத நாட்டுக்கோழிகள்

இடைநாளில் ஊருக்குச் செல்வது அரிது. புதன்கிழமை முடிய வேண்டிய காரியம் வியாழக்கிழமைக்குத் தள்ளிப் போய்விட்டது. பையைத் தூக்கிக் கொண்டு புதன்கிழமை காலையிலேயே இறங்கியிருந்தேன். ‘சார் ஒரு நாள் கைவசம் இருக்கு..ஏதாவதொரு பள்ளிக் கூடத்துக்கு போலாமா?’ என்றேன். உருப்படியான ஒரு காரியமாக இருக்கும். அரசு தாமஸ் ஒரு பள்ளியில் பேசிவிட்டு ‘போகலாம்’ என்றார். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே ஐம்பது பேர்கள் இருப்பார்கள். கிராமப்புற பள்ளி. ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் ஆசிரியர்களும் ஊர்க்காரர்களும் வருந்தக் கூடும்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். எந்தத் தேதியில் முழு ஆண்டுத் தேர்வு தொடங்கி எப்பொழுது நிறைவடைகிறது என்கிற விவரம் கூட மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கமாக மாணவர்களுக்கு நடத்தும் பயிலரங்குகளுக்காக ஐந்தாறு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலா பத்து அல்லது பதினைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பச் சொல்வோம். அந்தந்தப் பள்ளிகளில் மிகச் சிறப்பான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். பற்ற வைத்தால் பிடித்துக் கொள்கிற கற்பூரமாக அவர்கள் தெரிவார்கள்.  அரசுப்பள்ளி மாணவர்கள் அட்டகாசம் என்று நினைப்புதான் மனது முழுக்கவும்.

‘இந்த முறை ஒரே ஸ்கூல்ல இருக்கிற எல்லா பசங்ககிட்டயும் பேசுங்க...அப்பத்தான் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்’ என்றார் அரசு தாமஸ். அப்படித்தான் இந்தப் பள்ளிக்குச் சென்றோம். தொண்டைத் தண்ணீர் வற்றிப் போனது. கடுமையான மனவேதனை உண்டாக்கக் கூடிய அனுபவம் அது. கடைசியில் ‘என்ன இப்படி இருக்கிறாங்க?’ என்றாகிவிட்டது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்குமான மிகப்பெரிய வித்தியாசம் என்பது இதுதான். பல பள்ளிகளிலும் மாணவர்களுக்கு Strategy என்பதே இல்லை. எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்கிற நுணுக்கம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். ஏனோதானோ என்கிற மனநிலை.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கையுண்டு. எதிர்கொள்ளும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஓர் ஆசிரியர் சொன்னார். ‘அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ நீங்கள் சந்திக்கும் ஆசிரியர்கள் அப்படியானவர்களாக இருக்கிறார்கள்’ என்றும் ‘அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் வரைக்கும் ஆசிரியராவதற்காக நிறைய வேலை செய்கிறார்கள். வேலை கிடைத்தவுடன் பெரும்பாலானவர்கள் வேலையே செய்வதில்லை’ என்றார். அது உண்மைதான் போலிருக்கிறது. இத்தகைய பள்ளிக்கூடங்களைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னமும் பாடங்களை முடிக்காமல் வைத்திருக்கிறார்கள். இவ்வளவு அசமந்தமாக இருக்க வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளில் பாடங்களை முடித்து கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டன். ஒவ்வொரு மாணவனும் பாடங்களை முழுமையாக இரண்டு அல்லது மூன்று முறை படித்துத் தேர்வு எழுதிவிட்டார்கள். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப் பாடங்களைக் கூட ஒரு முறை முழுமையாக படித்து முடிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளும் போது வருத்தமாகத்தானே இருக்கும்?

தேர்வுக்கு இன்னமும் தொண்ணூறு நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனும் இந்நேரம்  ஒரு கால அட்டவணையைத் தயாரித்து வைத்திருக்க வேண்டும். தினசரி எவ்வளவு நேரம் படிக்கப் போகிறோம், எந்தப் பாடத்தை எந்தத் தேதியில் படிக்கப் போகிறோம் என்கிற அந்தப் பட்டியல் அவர்களின் பெரும் சுமையைக் குறைக்கும். மாணவர்களே தயாரித்துக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆசிரியர்கள்தான் கற்றுத் தர வேண்டும். தனியார் பள்ளிகளில் தினசரி குறிப்பிட்ட பாடத்தைப் படித்து வரச் சொல்கிறார்கள். மாணவர்கள் அவர்கள் சொல்வதைப் பின்பற்றினால் போதும். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களாகவேதான் படிக்கிறார்கள். அவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்கிற அளவுக்காவது ஆசிரியர்கள்தான் உதவ வேண்டும்.

‘எவ்வளவு நேரம் படிக்கிறீங்க?’ என்ற கேள்விக்குக் கூட தெளிவான பதிலைச் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்- பெரும்பாலான மாணவர்கள். ‘ஏதோ’ படிக்கிறார்கள். அவ்வளவுதான். எந்தத் திட்டமிடலும் அவர்களிடமில்லை. அப்போதைக்கு மனதில் தோன்றும் புத்தகத்தை எடுத்துப் படிக்கிறார்கள். அதைத் தவிர தொலைக்காட்சி பார்க்கிறார்கள், பாட்டுக் கேட்கிறார்கள். விளையாடுகிறார்கள். செல்போனில் எதையாவது செய்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட அர்ப்பணிப்புடன் படிப்பதில்லை என்பதைத் தெரிந்து கொள்ளும் போது வருத்தமாகத்தானே இருக்கும்? 

மாணவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? அவர்களுக்குப் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வின் முக்கியத்துவமே தெரியவில்லை என்றால் ஆசிரியர்களைத்தானே குறை சொல்ல வேண்டும்?

அரசாங்கம் பள்ளிக் கல்விக்காகக் கோடிகளைக் கொட்டுகிறது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கேட்பதில் பலனில்லை.  சுரண்டுகிறவர்கள் அவர்கள். ஆனால் ஆசிரியர்களைக் கேட்கலாம். இந்த வருடம் குறைந்தபட்ச சம்பள உயர்வு என்பதே தொண்ணூற்றைந்து சதவீத ஆசிரியர்களுக்கு மாதம் எட்டாயிரம் ரூபாயைத் தாண்டியிருக்கிறது. சம்பளம் வாங்கட்டும். அதைத்தானே அனைவரும் எதிர்பார்க்கிறோம்? ஆனால் அதற்கேற்ற உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டாத ஆசிரியர்களிடம் கேள்வி கேட்பதில் என்ன தவறு? அனைத்து ஆசிரியர்களையும் குறை சொல்லவில்லை. ஆனால் குப்பையைவிட மோசமான ஆசிரியர்கள் நிறைய இருக்கிறார்கள். பள்ளிகளை நோக்கியும் மாணவர்களைத் தேடியும் செல்லும் போது நேரடியாக உணர முடிகிறது.

சோத்து மூட்டையைத் தூக்கிக் கொண்டு பள்ளிகளுக்கு வந்து கடனே என்று கடைசி நாள் வரைக்கும் பாடங்களை நடத்துகிறேன் என்று ராவிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ‘வாங்குகிற சம்பளத்துக்காகவாவது வேலை செய்ய மாட்டார்களா?’ என்று சலிப்பில்லாமல் இல்லை. ஒரு நாளைக்கு பத்து நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்கிப் பேசினால் போதும். பனிரெண்டாம் வகுப்பின் பாடங்களைப் படிக்கிற முறை, படித்து முடித்த பிறகு இருக்கக் கூடிய வாய்ப்புகள், எந்தப் பாடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்கிற அடிப்படையான விஷயங்களையாவது மாணவர்களுக்குச் சொல்லித் தரட்டும். 

ஒரு விடைத்தாளைத் திருத்த இவ்வளவு ரூபாய் என்று ஆசிரியர்களுக்குக் கொடுக்கிறார்கள். ‘எப்படி விடை எழுதியிருந்தால் நல்ல மதிப்பெண்ணை நான் வழங்குவேன்’ என்ற அளவிலாவது ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசியிருக்க வேண்டாமா? தேர்வு எழுதுவதற்கான நுட்பங்கள் கூட மாணவர்களிடம் இல்லை.

கொடுமை.

எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. இப்படித்தான் நிலவரம் இருக்கிறது.

‘அக்னிக்குஞ்சொன்றைக் கண்டேன்’ என்பது போல சிறு நெருப்புப் பொறியை உரசி வீசினால் போதும். ஐம்பது மாணவர்கள் படிக்கும் பள்ளியில் பத்து மாணவர்களாவது மேலே எழுவார்கள். அதைக் கூடச் செய்யாத ஆசிரியர்களைப் பார்க்கும் போது எரிச்சல் வராமல் என்ன செய்யும்?  

அரசுப்பள்ளிகளையோ அல்லது அந்தக் குறிப்பிட்ட பள்ளியையோ சிறுமைப்படுத்துவதற்காக எழுதவில்லை. கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கும் இந்தக் கல்விச்சூழலில் அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு பள்ளிகளும் ஆசிரியர்களும் நுட்பங்களைச் சொல்லித் தராவிட்டால் போட்டிச் சுழலில் நாம் காணாமல் போய்விடுவோம். 

நாமக்கல்லிலும் அந்தியூரிலும் வித்யாலயாக்களில் ப்ராய்லர் கோழிகளைத்தான் வளர்க்கிறார்கள் என்று கிண்டலடித்தால் மட்டும் போதாது. நாம் வளர்க்கும் நாட்டுக் கோழிக் குஞ்சுகளுக்கு பருந்துகளிடம் தப்பிப்பதற்கான உபாயங்கள் என்ன என்பதையாவது தாய்க்கோழிகள் சொல்லித் தர வேண்டும். அதைக் கூடச் செய்யவில்லையென்றால் ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே அருகதையற்றவர்கள் ஆகிப் போவீர்கள்!

12 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

/"ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் ஆசிரியர்களும் ஊர்க்காரர்களும் வருந்தக் கூடும்."/
அவர்கள் வருந்தி மட்டும் என்ன
கிழிக்க போகிறார்கள். இவ்வளவு கேவலமாக இருக்கும் ஆசிரியர்கள் எதற்கு.

சேக்காளி said...

// பனிரெண்டாம் வகுப்பின் பாடங்களைப் படிக்கிற முறை, படித்து முடித்த பிறகு இருக்கக் கூடிய வாய்ப்புகள், எந்தப் பாடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்கிற அடிப்படையான விஷயங்களையாவது மாணவர்களுக்குச் சொல்லித் தரட்டும்//
இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என அவர்களுக்கே தெரியாது. காரணம், "தெரியாது" என்பதற்காக அவர்களுக்கு சம்பளக் குறைப்போ, வேலை நீக்கமோ செய்ய முடியாது.
எனவே தெரிந்து கொள்ள அவர்கள் விரும்ப வில்லை.

Anonymous said...

இப்ப ஒரு அரசு பள்ளி ஆசிரியர் வந்து
"நாங்க நல்லாத்தான் நடத்துறோம்,
பசங்க இல்லேன்னா அவங்க அப்பா அம்மா மேல தான் தப்பு ..
எங்க பேச்சுக்கு மரியாதை கொடுப்பது இல்ல "
அப்புடின்னு சொல்லுவாங்க பாருங்களேன் ..
(ரமணா விஜயகாந்த் ஸ்டலில் படிக்கவும்)

கண்ணன் கரிகாலன் said...

அமைச்சரிலிருந்து முதல்வர் வரை யாரும் திருட்டுச் செல்வம் சேர்க்க வெட்கப்படுவதில்லை.

லட்சங்களில் அரசாங்க சம்பளம் வாங்குகிற அதிகாரிகள் அவர்களின் சேவை வேண்டுவோரிடம் கை நீட்டி பிச்சை எடுக்கத் தயங்குவதில்லை.

பணம் வாங்க, செய்தி போட, போடாமல் இருக்க கவர் வாங்காத, விபச்சார ஊடகத்தினர் இங்கு சொற்பம்.

இப்படியான சமூகம் உருவாக்கும்​ ஆசியப் பெருமக்கள் மட்டும் வேறு எப்படி அய்யா இருப்பார்கள்.


Anonymous said...

Please don't waster your energy in reaching to the 10/+2 students/teachers.
No offence for current 10/+2 students/teachers - most of the time, a quick plan doesn't work steady.

Please focus on the next gen students - 7/8 - enrich them and you can see the difference when they reach 10/12.

Slow and Steady wins the race. Best wishes.

கண்ணன் கரிகாலன் said...

ப்ளஸ் டூ முடித்து வேலை செய்யவருவோருக்கு பிழையின்றி தமிழில் எழுத, படிக்கத் தெரியவில்லை.
ப்ளஸ் டூ முடித்து nurse training முடித்தவருக்கு மருந்தின் ஆங்கிலப் பெயர் படிக்கத் தெரியவில்லை.
கல்லூரிப் படிப்பை முடித்து பணிக்கு வருபவருக்கு Englishல் letter.... dictate செய்தால் எழுதத் தெரியாது.
இலவச டிவி மிக்ஸி போல இலவச மதிப்பெண் வழங்கி 95 சதம் தேர்வு பெற்றனர் என்று அறிவிக்கிறார்கள்​. அதனால் என்ன பயன் என்று தான் தெரியவில்லை.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் கல்வி நிலை இதுதான்.

அன்பே சிவம் said...

ம்ஹூம் நான் படிக்கின்ற காலத்தில் (அரசு பள்ளியில் தான்) ஒரு விபத்து போல என்னை ஒருவரிடம் சேர்த்து விட்டார்கள். அவர் என் அப்பாவுக்கு ஆசிரியராய் இருந்தவராம்😭, மாநில கவர்னரிடம் நல்லாசிரியர் வி.ருதெல்லாம் பெற்றர் ஓய்வு பெற்றும் அற்பணிப்போடு தன் வீட்டிலேயே பிள்ளைகளுக்கு சொல்லித்த ருவதி

அன்பே சிவம் said...

ஆனந்தம் கொள்பவர். (மஹா கஞ்சர் கவனிக்க) ஆனால் கல்விக்கட்டம் மாதம் ₹ 1 தான் பெறுவார். அவரிடம் பயில வருபவன் யாராக இருந்தாலும் அடிப்படை ஆரம்ப கல்வி முடிக்க வேண்டும். 10 ஆவது +2 என்றெல்லாம் பம்மாத்து விட முடியாது. அடிப்படையை புரிய வைத்து விட்டால் அவர்களாவே படிப்பில் ஆர்வம் கொள்வார்கள் எஎன்ற கொள்கை உடையவர்.சொக்கலிங்க பாகவதருக்கு பட்டி டிங்கரிங் பார்த்தால் அவர்தான் எங்க மொத்து வாத்தியார். அவர் தந்த வேகத்தில் 4ம் வகுப்பு போகின்ற வயசில் எல்லா வார இதழ்களையும் தினசரிகளையும் ஒரே மூச்சில் படிப்போம். கிட்டத்தட்ட குருகுல வாசம் போன்ற காலமது.

அன்பே சிவம் said...

மாணவர்கள் மேல் அக்கறையுள்ள,
ஓய்வு பெற்ற, ஆசிரியர்களை தங்கள் பணியில் உடன் சேர்த்தால் உங்கள் சிரமம் கொஞ்சம் குறையுமே.

Anonymous said...

Please consider anbe sivam suggestion.

Anonymous said...

I think the problem is not just within 11th and 12th grade pupils as the other anonymous suggested. The root cause of all these problems start from 1st grade itself and also its influenced heavily by the society. Science and Technology has made us educated people more and more lazy. But it made these non-privileged people brainless. They just don't know there is something called brain and you can use that to think to solve issues at your hand.

Most people are taught about what to think. But what you need to teach kids is actually how to think. You are actually doing that exact same thing to these students. So, it will definitely help them. But if the students are prepared this way from 1st grade onward, you could see tremendous change in 12 years from now. I agree that you need to help all these students now but also start from scratch for the students at the beginning level.

I am also sure that educating the teachers on how to educate their students is another way to approach this problem. Would they listen to you? Is it possible to make them attend some training? God only knows. The problem is multi faced and you cannot just look at one side to solve it. An entire society has given up on public education. Unless everyone in the society understands that all the children in the country deserves real education, we cannot eradicate these problems completely. Most people in power do not even understand this.

When someone with good life looks at a poor person, he/she doesn't feel that the poor person also deserve a better life like themselves. A very few people feel that way and its getting worse day by day. Everyone thinks their family comes first and then everything else.

We as a human being have a mind and we don't know how to control it for the betterment. The mind thinks only selfish things. A very few people like you conquered that selfish thinking mentality and started doing good stuff like this. Its your nature. You won't think any other way. But similarly, there are a lot of people who think only in selfish way and they can't come out of that. There is no plan or any methods by any one to teach all these things to everyone. There used to be some thing called "civics" as a subject in schools long time ago. Where are those nowadays?

In my opinion, we humans are a big evolutionary mistake. God did not create us. We have to come to an understanding about how to co-operate among ourselves to lead a peaceful life. Science and Technology alone is not going to help us. In my opinion, Stephen Hawking is a brilliant fool who says wrong things about how we should give up on earth and go inter-stellar. But human greed will destroy the entire universe too! Since there is no God, humans could become more than the God if Time permits.

I appreciate what you give back to the community. Everyone above the age of 50 should quit their job and do full-time the stuff you do part-time. Then all the problems will get solved. But no one is ready for that sacrifice!



Anonymous said...

For your information:
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=41902&cat=1