Nov 17, 2017

லார்டு லபக்தாஸ்

‘என்னைத் தெரியுதா?’ ஃபோனில் இப்படிக் கேட்டால் என்ன பதிலைச் சொல்வது. 

‘தெரியலைங்களே’ என்று சொல்லிவிட்டால் ‘என்னையவே தெரியலைன்னுட்டல்ல’ என்று கலாய்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

‘சொல்லுங்க’ என்று பட்டும்படாமல் சொல்லித் தப்பித்துக் கொள்வதுதான் வாடிக்கை.

‘தியானேஸ்வரன் பேசறேன்...ஆவடியிலிருந்து..என்னைத் தெரியுதா?’- மறுபடியும் அதே கேள்வி.

‘சொல்லுங்க சார்’

‘ஒரு பதினஞ்சு ரூபா வேணும்’

அதுக்கு எதுக்குய்யா ஆவடியிலிருந்து பேசற என்று நினைத்துக் கொண்டேன்.

‘நாளைக்குக் கிடைக்குமா?’ என்றார்.

‘சார் எனக்கு நீங்க யாருன்னு ஞாபகம் வரல..என்ன சொல்லுறீங்கன்னு புரியல’

‘நாம முன்னாடி பேசியிருக்கோமே?’ - ஒருவேளை ஏதாவது அறக்கட்டளை சம்பந்தமாகப் பேசியிருக்கக் கூடும்.

‘சொல்லுங்க சார்’

‘ஒரு கம்பெனியில அன்-அக்கவுண்டட்ல பதினஞ்சு ரூவா வேணும்ன்னு கேட்குறாங்க’

அது சரி. நமக்கென வந்து வாய்க்கிறது பாருங்கள்.

‘சார் கம்பெனிக்கெல்லாம் பணம் தர்றதில்ல’

‘அது அப்புறம் பேசிக்கலாம்...பதினஞ்சு ரூவா இருக்குதுல்ல’ 

‘என்னது அப்புறம் பேசிக்கலாமா?’ - கார்டூனிஸ்ட் பாலாவிடம் ஒரு பெண் ‘நான் உங்க ரசிகை பேசுறேன்’ என்று பேசித்தான் தூண்டில் வீசினாராம். பாலா அலர்ட் ஆகிவிட்டார். அவரைவிடவும் நாம் அலெர்ட் அல்லவா? ஒருவேளை அருண் ஜெட்லி ஆள் அனுப்பியிருப்பாரோ? அந்தளவுக்கு நாம் லாயக்கில்லையே!

குழப்பமாகிவிட்டது. பதினஞ்சு என்றால் ஆயிரமா, லட்சமா? 

‘பதினஞ்சு இருக்குல்ல?’

‘முப்பதுக்கு பக்கமா இருக்கு சார்...மாசமாசம் அக்கவுண்ட் போடுறேனே..நீங்க பார்க்குறதில்லையா?’

‘முப்பதா?’ - இப்பொழுது அந்த ஆள் குழம்பிவிட்டார்.

‘சார் ஒரு கம்பெனி’- மீண்டும் ஆரம்பித்தார்

‘அதான் சார் சொன்னேனே.. கம்பெனிக்குத் தர்றதில்லை.’ - இது நான்.

‘அட இருங்க சார் முடிச்சுக்குறேன்’ கடுப்பாகிவிட்டார் போல. மிரட்டுகிறார். நிச்சயமாக அருண் ஜெட்லி ஆள்தான்.

‘பெரிய பார்ட்டி சார்...நானூறு ரூவா டர்ன் ஓவர்’

‘நானூறு ரூபாயெல்லாம் பெரிய டர்ன் ஓவரா சார்? பிச்சை கீது எடுப்பாரோ?’ என்று தொண்டை வரைக்கும் வந்துவிட்டது. வாயைத் திறந்து கேட்டால் ஆள் வைத்து அடித்துவிடுவார்கள்.

‘நானூறுன்னா சார்?’

‘சி தான்’

‘அடங்கொண்ணிமலையா...நானூறு கோடியா?’ என்று மனதுக்குள் நினைத்துவிட்டு ‘சொல்லுங்க சொல்லுங்க’ என்றேன். இந்த ரேஞ்சில் நம்மிடம் பேசுவதே பெரிய விஷயம்.

‘அர்ஜெண்ட்டா பதினஞ்சு ரூபா வேணுங்கிறாங்க’

‘இதுவும் சி ஆ சார்?’

‘ஆமா சார்..அன்- அக்கவுண்ட்ல வேணுமாம்...பதினஞ்சு நாள்ல உங்களுக்கு வந்துடும்..இண்டரஸ்ட் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’என்றார்.

‘சார் முடிச்சுட்டீங்களா?’

‘முடிச்சுட்டேன்...இருக்குதா உங்ககிட்ட?’

‘பதினஞ்சு சி ஆ சார்?’

‘யெஸ்’

‘என் நெம்பர் உங்களுக்கு யார் கொடுத்தாங்க?’

‘தெரியல..பைனான்ஸ்ன்னு சேவ் செஞ்சு வெச்சிருக்கேன்’

கந்துவட்டி பார்ட்டி என்று நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது. என் பைனான்ஸ் நிலைமை அவருக்கு எப்படித் தெரியும்? 

‘நீங்க வேற சார்... நான் சாதாரண ஆள் சார்’

‘நீங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?’

‘நான் பெங்களூர்ல இருக்கேன் சார்’

‘ஏதாச்சும் ஏற்பாடு செய்ய முடியுமா?’ - இந்த ஆள் உண்மையாகவே பேசுகிறாரா அல்லது கலாய்க்கிறாரா?

‘சார் என் பேரு என்னன்னு சேவ் செஞ்சு வெச்சிருக்கீங்க?’

‘மணிகண்டன் ஃபைனான்ஸ்ன்னு’

யாரோ கோர்த்துவிட்டிருக்கிறார்கள்.  ‘ப்ளீஸ் டெலீட் செஞ்சுடுங்க சார்’

இது மட்டுமில்லை. இப்படி வாரம் இரண்டு அழைப்புகளாவது வருகின்றன. 

ஹெச்.ஐ.விக்கு மருந்து கிடைக்குமா என்று கூடக் கேட்டிருக்கிறார்கள். நம்பமாட்டீர்கள். 

முந்தாநாள் இரவு 11.49க்கு ஒரு அழைப்பு. அடித்துப் பிடித்து எடுத்தால் ‘கவுன்சிலிங்க்கு வரச் சொல்லியிருந்தீங்களாமா’ என்றார். 

‘எந்தக் கவுன்சிலிங்குக்கு? நீங்க எங்க இருந்து பேசறீங்க?’

‘மதுரையில இருந்து சார்..எப்போ வரட்டும்’ என்றார்.

‘உங்களுக்கு யாருங்க நெம்பர் கொடுத்தது?’

‘ உங்க ஃப்ரெண்ட் மணிகண்டன்தான்..’

‘மணிகண்டனா? நான் தான் மணிகண்டன்.. நீங்க யாருகிட்டங்க பேசணும்’

‘மணிகண்டன்கிட்டத்தான்’

‘அவர் எங்க இருக்காரு?’

‘நீங்கதான சார் அந்த மணிகண்டன்?’

‘சார் இப்படியே பேசுனீங்கன்னா நான் தான் கவுன்சிலிங்குக்குப் போகணும்’ என்று துண்டித்தேன். திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்தார். 

வேணி ‘ஏங்க ஃபோனை சுவிட்ச் ஆஃப் செஞ்சுடுறீங்க?’ என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். லார்டு லபக்தாஸாக இருப்பதன் பிரச்சினை அவளுக்கு எப்படித் தெரியும்.

12 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

இது நல்லா இருக்கே...அடிக்கடி எழுதுங்க ☺

Anonymous said...

I can not stop laughing lol

Selvaraj said...

நானூறு ரூவா டர்ன் ஓவர் 'பிச்சை கீது எடுப்பாரோ' ஹாஹாஹாஹாஹாஹா செம

Anonymous said...

அண்ணண் வீட்டுக்கு ஐ டி வந்துடுச்சு ..

வைரத்தை வண்டில டாஷ்போர்டல வெச்சுட்டேன் ..
பத்திரம் எல்லாத்தையும் மாடி தண்ணி தொட்டில போட்டுட்டேன் ..
பணத்தை ரகசிய லாக்கர்ல பதுக்கிட்டேன் ..

உங்க கிட்ட ஆபீசர் ஏதும் கேட்டா "நோ கேஷ் .. ஒன்லி paytm ன்னு" சொல்லிடுங்க ..

Anonymous said...

பாஸ்.. போற போக்க பார்த்தா உங்கள சசி குடும்பத்தின் பினாமினு சொல்லுவாங்க!! நீங்க வேற அடிக்கடி பார்ப்பன அக்ரகாரா போய்ட்டு வர்றீங்க :)

சேக்காளி said...

//‘மணிகண்டன் ஃபைனான்ஸ்ன்னு’//
எனக்கும் கொஞ்சம் உதவுமய்யா. மாசாமாசம் டான் ன்னு வட்டிய கட்டிருதேன்.

அன்பே சிவம் said...

அந்த எரநூறு ஓவாவ மொதல்ல அந்த பார்டிக்கு பைசல் பண்ணுற வழியப் பாரும்.

அன்பே சிவம் said...

டெலிட்லாம் செய்ய வேணாம்,

இப்படி வேனும்னா எடிட் பண்ணிக்கட்டும்.

மணி'கஞ்ச'ர் பைணான்ஸ். 😍

Anonymous said...

//‘என்னைத் தெரியுதா?’ ஃபோனில் இப்படிக் கேட்டால் என்ன பதிலைச் சொல்வது.//

“கடனை வாங்கிட்டு கம்பி நீட்டிட்டியே, உன்னை எப்படி மறக்கமுடியும்னு சொல்லுங்க”

சேக்காளி said...

//அந்த எரநூறு ஓவாவ மொதல்ல அந்த பார்டிக்கு பைசல் பண்ணுற வழியப் பாரும்//
லக்ஷ்மி குறும்படத்துக்கு பெறவு அந்த "எரனூறு ஓவா" மேட்டரு ட்ரெண்ட் ஆவப் போவுது போல

Sakthivel Viru said...

வடிவேல் பாணியிலே நீங்கெல்லாம் எங்கிருந்துந்துடா கெளம்பி வாறீங்கனு கேக்க தோணுது .....ஆபிஸிலேயே சிரிச்சு எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க போங்க ....

Anonymous said...

/////////// வேணி ‘ஏங்க ஃபோனை சுவிட்ச் ஆஃப் செஞ்சுடுறீங்க?’ என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறாள்.////////////.... உங்கள் மனைவியார் ஒரு கட்டுரை எழுதும்போது " .... மணி " ................................... என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறா 'ன் ' '' .....என்று எழுதினால் " ..?.... " ர் " விகுதியை பயன்படுத்த முயலுங்கள்..