Nov 20, 2017

தீர்வு இல்லாத பிரச்சினைகள்..

பிரபுவை முன்பு எப்பொழுதோ பார்த்த நினைவு இருக்கிறது. ஆனால் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. கடந்த வாரம் சந்தித்த போதுதான் சொன்னார்கள். இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இரண்டாவது அறுவை. அவருக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும். திருமணமாகிக் குட்டிப்பையன் இருக்கிறான். அவனுக்கு தாலசீமியா. உடலில் ரத்தச் சிவப்பணு உற்பத்தியாகாது. அவ்வப்பொழுது ரத்தத்தை உடலில் ஏற்றி உயிர்காத்து வருகிறார்கள். 

பிரபுவின் அப்பா ‘அப்பனுக்கும் மகனுக்கும் ஒரே சமயத்துல நோவு’ என்றார். பிரபுவின் அம்மாவும் மனைவியும் அழுதார்கள். முதலில் அப்பனைக் காப்பாற்றுவோம் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். வட்டிக்குக் கடன், அரசு உதவி என்று கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் காலனியைச் சார்ந்த நாடோடிக் குடும்பம் அது. அந்தக் காலனியில் கிட்டத்தட்ட முந்நூறு குடும்பங்கள் உண்டு.

கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக காலனி மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம். ஜிம்னாஸ்டிக் உதவி, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி, அவர்களைக் கல்லூரியில் சேர்ப்பது, கல்லூரியில் படிக்கும் அந்த மாணவர்களுக்கு அடுத்த கட்ட முயற்சிகளுக்கான வழிமுறைகளைக் கற்றுத் தருவது மாதிரியான பணிகள். ஆனால் அவர்களின் சமூகத்தில் இருக்கும் அடிப்படையான ஒரு பிரச்சினையை இவ்வளவு நாட்களாக எப்படியோ கவனிக்கவில்லை.

அந்தக் காலனியில் ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மாலைக்கண் நோய். பிரபுவின் குழந்தைக்கு தாலசீமியா. இவை தவிர முழுமையான வெண்மை நிறம் அடைதல் மாதிரியான பிரச்சினைகள் நிறையப் பேருக்கு உண்டு. பத்தாயிரத்தில் ஒருவருக்கும் லட்சத்தில் ஒருவருக்குமாக இருக்கக் கூடிய நோய்கள் ஐநூறு பேர்களில் இரண்டு பேருக்கும் மூன்று பேர்களுக்குமாக இருக்கிறது. 

ஒரு மாணவனுக்கு பனிரெண்டாம் வகுப்பில் பயிற்சியளித்து அவனுக்குக் கல்லூரியில் கட்டணம் செலுத்தி வாரம் ஒரு முறை அலைபேசியில் அழைத்துப் பேசச் சொல்லி அவன் பேசிக் கொண்டிருக்கிறான். அவனது அக்காவுக்கும் அண்ணனுக்கும் மாலைக்கண் நோய் என்பதை அவன் சொன்னதில்லை. சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு உருவாகவே இல்லை. ஒதுங்கி வாழும் எளிய மனிதர்களின் இத்தகைய விவகாரங்கள் தெரியவே வருவதில்லை.

அந்தக் காலனியிலேயே அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருத்தி இருக்கிறாள். அட்டகாசமாகப் படிக்கக் கூடியவள் என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தக் காலனிக்கு அது பெரிய விஷயம். 

‘உங்க காலனியில் பி.ஈ படிச்ச பசங்க இருக்காங்களா?’ என்று கேட்ட போதுதான் தெரிந்தது படித்தாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி அந்தக் காலனியில் இருக்கும் ஒரு ஆணைத்தான் திருமணம் செய்து வைப்பார்கள். 

இப்படி ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கும் போது பிரபுவின் குழந்தைக்கும் தாலசீமியா பிரச்சினை வித்தியாசமாகத் தெரிந்தது. மாணவர்களிடம் முன்பு பேசியதெல்லாம் நினைவில் வந்து உறுத்தியது. எல்லாவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு மிக எளிமையான பிரச்சினை. அந்த முந்நூறு குடும்பங்களில்தான் பெண் கொடுத்து பெண் எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட அத்தனை பேருமே நெருங்கிய சொந்தம். வெளியிலிருந்து எந்தவிதமான உறவும் தொடர்பும் இல்லை. மரபணு பிரச்சினைக்கு அடிநாதம் இது. அதனால்தான் அந்தக் காலனியில் இவ்வளவு மரபணு சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. 

அந்த மக்களிடம் இதுபற்றி விரிவாகப் பேச வேண்டும் எனத் தோன்றியது. ஊர்த்தலைவரிடம் ‘உங்க காலனிக்கு ரெண்டு டாக்டர்களைக் கூட்டிட்டு வர்றோம்’ என்று சொல்லிவிட்டுச் சனிக்கிழமையன்று சென்றிருந்தோம். இத்தகைய பிரச்சினைகளை நாம் விளக்குவதைவிடவும் மருத்துவர்கள் விளக்குவதுதான் சரியாக இருக்கும். மருத்துவர் கார்த்திகேயன் குழந்தைகள் நல மருத்துவர். சனிக்கிழமையும் வெளிநோயாளிகளைப் பார்ப்பார். எப்படிக் கேட்பது என்று தயக்கமாகத்தான் இருந்தது. 

‘ஒரு நாள்தான? சொல்லிட்டு வந்துடுறேன்’ என்று வேலையைவிட்டுவிட்டு வந்து விளக்கினார். அந்த மக்கள் படிப்பறிவற்றவர்கள். மிகச் சாமானியர்கள். ‘ஜெனிடிக் பிரச்சினையை அவர்களுக்கு புரியற மாதிரி எப்படி விளக்குவார்?’ என்ற சந்தேகமில்லாமல் இல்லை. ஆனால் மிக எளிமையாக விளக்கினார். மக்கள் புரிந்து கொண்டு தங்களுக்குள் நிறையப் பேசினார்கள். மருத்துவர் சத்தியசுந்தரியும் வந்திருந்தார். அவர் தம் பங்குக்கு விளக்கினார். அரசு தாமஸூம் கார்த்திகேயனும் உடனிருந்தார்கள். 

காலங்காலமாக ஊர் ஊராகச் சென்று கழைக் கூத்தாடிக் கொண்டிருந்த குடும்பங்கள் அவை. இந்தத் தலைமுறையில்தான் ஒரேயிடத்தில் வீடு கட்டிக் குடியிருக்கிறார்கள். ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தெருக்களைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள், கழிப்பறைகள் கட்டியிருக்கிறார்கள். ஊர் பொதுக்கூட்டம் நடத்தி ஒழுங்கு மீறல்களைத் தடுக்கிறார்கள். ஆனால் இப்படியொரு பிரச்சினை இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு மட்டுமில்லை வேறு யாரும் கூட கவனித்ததில்லை.

மருத்துவர் விளக்கி முடித்த பிறகு ‘இப்படியொரு பிரச்சினை இருக்குன்னுதான் எங்களால சொல்ல முடியும்..ஆனா எப்படி அதை சரி செய்யலாம்ன்னு நீங்கதான் யோசிக்கணும்’ என்றோம். அவர்களுக்குள் பேசினார்கள். இவர்களைப் போன்றதொரு கழைக் கூத்தாடும் இன்னொரு நாடோடி கூட்டம் மகாராஷ்டிராவில் இருக்கிறதாம். ‘அங்க பொண்ணுக் கொடுத்தா அவ்வளவு தூரம் போய் எப்படிப் பார்க்கிறதுன்னு எங்க ஆளுங்க நினைப்பாங்க’ என்றார்கள். அவர்களின் தரப்பிலிருந்து அது நியாயமானதுதான். அதே போலத்தான் மஹாராஷ்டிராவில் இருக்கும் குழுவும் நினைக்கக் கூடும். அவர்களின் இடத்தில் நாம் இருந்து பார்த்தாலும் கூட அப்படித்தான் தோன்றும்.

உண்மையிலேயே இதற்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை. தனிமனிதர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்பது வேறு. ஒரு காலனிக்கே இருக்கும் சமூகம் சார்ந்த இந்தப் பிரச்சினை வேறு. மிகச் சிக்கலானதாகவும் தெரிகிறது. குழப்பமானதாகவும் இருக்கிறது.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அவ்வளவு தூரம் போய் எப்படிப் பார்க்கிறது//

தங்க நாற்கர சாலைகள்,
வருடத்திற்கு ஐந்தாறு விண்வெளி ஓடங்கள்.
என 2020ல் வல்லரசு ஆன பின்பாவது அவ்வளவு தூரம் போய் பார்க்க வழி கிடைக்கட்டும்.

Vinoth Subramanian said...

Is this the real reason? There are many communities go with these kinds of marriages. I don't know what to say.

Anonymous said...

I don't think that its 100% true. When initial humans were born, they always married like these people only. But we still evolved up to this level. I think bad genes also get passed more when marrying closely. As long as they don't marry immediate cousins, they should be fine!