இரண்டு நாட்களாக நிறையப் பேர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். பேசுகிறவர்களிடமெல்லாம் கேட்பது ஒன்றேயொன்றுதான் ‘நீட் தேர்வுக்கான பாடங்களையும் மாதிரி வினாத்தாளையும் தமிழில் தேடிக் கொண்டிருக்கிறோம். கிடைக்குமா?’. மாணவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். சற்றேறக்குறைய இருபத்தைந்து மாணவர்கள். அத்தனை பேரும் கிராமப்புற அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கிற மாணவர்கள். சாதாரண மாணவர்கள் இல்லை. 481 மதிப்பெண்களை எடுத்துவிட்டு தனியார் பள்ளியின் கொத்துதலிலிருந்து தப்பித்து அரசுப்பள்ளியிலேயே படிக்கும் எஸ்.சி பிரிவைச் சார்ந்த மாணவன். 450 மதிப்பெண்களை எடுத்திருக்கும் பழங்குடியின மாணவன். 450, 460 என்று வாங்கியிருக்கும் மாணவிகள். சற்றே கவனம் செலுத்தினால் போதும். மருத்துவர் ஆகிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் கொண்டவர்கள். அத்தனை பேரும் சமூகத்தின் அடித்தட்டு மாணவர்கள்.
மாதக் கணக்கில் அலைந்து திரிந்து பொறுக்கியெடுத்திருக்கிறோம். பின்னால் நிறையப் பேரின் உழைப்பு இருக்கிறது. ஆசிரியர்களுக்குப் புரிய வைத்து, மாணவர்களுக்குப் புரிய வைத்து.....உண்மையிலேயே சொல்கிறேன். சாதாரணக் காரியமில்லை. அரசுப்பள்ளி மாணவர்களிடம் பேசச் சென்றாலே ‘ஆள் புடிக்க வந்திருக்காங்க’ என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களும், வியாபாரிகளும் வேட்டையாடுகிற களம் அரசுப்பள்ளிகளாகத்தான் இருக்கின்றன.
‘ப்ளஸ் டூ தேர்வு முடிஞ்ச உடனே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தங்க வெச்சு சாப்பாடு போட்டு ஆசிரியர்களை நியமித்து முப்பது நாட்களுக்கு படிக்க வைக்க எவ்வளவு செலவாகும்’ என்று விசாரித்தால் ‘ஆகுற செலவு ஆகட்டும்..இதெல்லாம் நல்ல முயற்சி...எவ்வளவு ஆனாலும் தயங்காத’ என்று உற்சாகமூட்டுகிறவர்கள்தான் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறார்கள். மாணவர்களும் தயார்; நாங்களும் தயார். ஆனால் பாடம் தமிழில் இல்லை என்கிற மிகப்பெரிய தடைக்கல்தான் குறுக்கேயிருக்கிறது. அதை எப்படிப் புரட்டிப் போடுவது என்றுதான் தெரியவில்லை.
‘ப்ளஸ் டூ தேர்வு முடிஞ்ச உடனே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தங்க வெச்சு சாப்பாடு போட்டு ஆசிரியர்களை நியமித்து முப்பது நாட்களுக்கு படிக்க வைக்க எவ்வளவு செலவாகும்’ என்று விசாரித்தால் ‘ஆகுற செலவு ஆகட்டும்..இதெல்லாம் நல்ல முயற்சி...எவ்வளவு ஆனாலும் தயங்காத’ என்று உற்சாகமூட்டுகிறவர்கள்தான் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறார்கள். மாணவர்களும் தயார்; நாங்களும் தயார். ஆனால் பாடம் தமிழில் இல்லை என்கிற மிகப்பெரிய தடைக்கல்தான் குறுக்கேயிருக்கிறது. அதை எப்படிப் புரட்டிப் போடுவது என்றுதான் தெரியவில்லை.
நிசப்தம் அறக்கட்டளைக்கு மட்டும் இந்தப் பிரச்சினையில்லை. தமிழகத்தில் எந்தத் தமிழ் வழிக்கல்வி மாணவனுக்கும் இதுதான் ஆகப்பெரிய பிரச்சினை. அந்தியூரிலும் நாமக்கல்லிலும் செயல்படுகிற தனியார் பள்ளிகளிலும் கூட தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புத்தகங்களை வைத்துத்தான் நீட் பாடம் நடத்துகிறார்களாம். பாடம் நடத்துவதோடு என்றால் பரவாயில்லை. அதன் பிறகு அந்த மாணவர்கள் சுயமாகப் படிக்க வேண்டுமானால் என்ன செய்வார்கள்? புத்தகங்கள் இல்லை.
அரசு வழி தேட வேண்டிய காரியம் இது.
நவம்பர் பாதியில் இருக்கிறோம். இந்நேரம் ஒவ்வொரு பாடத்திலும் வினாக்களின் தொகுப்புகளையாவது கொடுத்திருக்க வேண்டாமா? ஒரு பாடத்திற்கு ஆயிரம் வினாக்களாவது தேவை. ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஆளுக்கு நூறு கேள்விகளை மொழிபெயர்த்துத் தரச் சொல்லியிருந்தால் இந்நேரம் ஏகப்பட்ட வினாக்கள் நமக்குக் கிடைத்திருக்கும். அரசாங்கத்திடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதெல்லாம் இது ஒன்றைத்தான். தயவு செய்து இனிமேலாவது துரிதமாகச் செயல்படுங்கள். இந்தப் பணியைத் ஆசிரியர்களைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ‘அணுக்கரு பிளவை வினை’ என்றொரு சொல் வேதியியல் புத்தகத்தில் இருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் தெரியாத ஒரு ஆள் இதை மொழி பெயர்க்கும் போது புத்தகத்தில் இருக்கும் சொல்லுக்கு பதிலாக வேறொரு சொல்லைப் பயன்படுத்தி மொழி பெயர்த்துவிடக் கூடும். அது மாணவர்களுக்கு மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிடும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. எந்தெந்தப் பாடங்களிலிருந்து கேள்விகளைக் கேட்பார்கள் என்று கூடத் தெரியவில்லை. ஊதிப் பெரிதாக்கிச் சொல்லவில்லை. சத்தியமான நிதர்சனம் இது. கல்வித்துறை மிக மெத்தனமாக இருக்கிறது. தமிழில் மாதிரி வினாக்கள் என்று தேடிப் பார்த்தால் அது ஆனந்த விகடன் கொடுத்திருக்கும் மாதிரி வினாத்தாள் மட்டும்தான். விகடனுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். ஆனால் அது நீட் தேர்வின் வினாக்களோடு ஒப்பிட்டால் இருநூறு சதவீதம் எளிமையானவை.
தமிழின் மாதிரி வினாக்கள் பெரும்பாலும் நேரடியானவையாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு வினாவைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஒரு ஒளியின் அலைநீளம் நான்கு மடங்காகக் குறைந்தால் அதன் சிதறல் அளவு
1.16 மடங்கு அதிகரிக்கும்
2.16 மடங்கு குறையும்
3.256 மடங்கு அதிகரிக்கும்
4.256 மடங்கு குறையும்
இப்படியான நேரடி வினாக்கள் நீட் தேர்வில் இல்லை. நீட் வினாக்கள் யோசிக்கச் செய்பனவையாகவும், சுற்றி வளைத்து கணக்கிட வேண்டியதாகவும் இருக்கின்றன. உதாரணமாகக் கீழே இருக்கும் வினா. பார்த்தவரையிலும் எளிமையான வினாக்களில் இது ஒன்று.
A gas is allowed to expand in a well insulated container against a constant external pressure of 2.5 atm from an initial volume of 2.50 L to a final volume of 4.50 L. The change in internal energy delta U of the gas in joules will be
(1) 1136.25 J
(2) –500 J
(3) –505 J
(4) +505 J
தமிழ்நாட்டு பாடநூலைப் படித்தாலே நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்று சொல்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இந்த வேறுபாட்டைத்தான். கேட்கப்படும் வினாக்களில் இருக்கும் சிக்கல்களையும் சூட்சமங்களையும் புரிந்து கொள்கிற அளவுக்கு நம்முடைய மாணவர்கள் தயார்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு ‘இப்படியெல்லாம் கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என்பதைச் சொல்லித் தந்துவிட்டால் போதும். அதையே நாம் செய்யவில்லை என்பதுதான் வருத்தத்தைத் தருகிறது.
ஏப்ரல் மாதத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல் எழுப்புவதில் அர்த்தமில்லை. எத்தனை ஆயிரம் பேர்களுக்கு இந்தச் சிக்கல் பற்றித் தெரியும் எனத் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பிரச்சினையின் அடிநாதம் தெரிய வேண்டும். தமிழ்வழிக்கல்வி மாணாக்கர் எவ்வளவு பெரும் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும். இந்தச் சூழல் தொடருமானால் இந்த வருடமும் அரசுப்பள்ளி மாணவன் யாரும் நீட் தேர்வில் வெற்றியடைய முடியாது.
அனைவரிடமும் ஒரு கோரிக்கை.
நீட் தேர்வுக்கான பாடங்களும் மாதிரி வினாக்களும் தமிழில் இருப்பின் தெரியப்படுத்தவும். விலை கொடுத்தாவது பெற்றுக் கொள்கிறோம். மாணவர்களுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். ப்ளீஸ்!
2 எதிர் சப்தங்கள்:
√
கட்டுரையை படித்த பிறகு, இந்த ஆண்டும் தமிழ் வழிக் கல்வி மாணவர்களின் நிலைமை என்ன ஆகுமோ என்ற வருத்தம் மட்டுமே மேலோங்குகிறது. தமிழில் நீட் தேர்வுக்கான பாடங்கள் - வழிகாட்டிகள் கிடைத்தல் அரிது என்பதையும் உணர வைத்தது. அதற்கான தங்களது முன்னெடுப்புகள் - முயற்சிகள் - பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள்...!
Post a Comment