Nov 10, 2017

லட்சுமியக்கா

‘பஸ்ல உரசினாலே படுக்கைக்கு வந்துடுவான்னு நினைக்கிறானுங்க...சில்லரைப் பசங்க’ என்று வந்தும் வராமலும் லட்சுமியக்கா பேசிய போது லாவண்யாவுக்கு சிரிப்பு வந்தது. 

லட்சுமியக்கா இப்படித்தான் பேசுவார். அக்கம்பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று கூட யோசிக்காமல் மனதுக்குள் எதையும் வைத்துக் கொள்ளாததுதான் அக்காவுக்கு பலமும் பலவீனமும். அப்படித்தான் லாவண்யா நினைத்துக் கொண்டிருக்கிறாள். இருவரும் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்கிறார்கள். அக்காவுக்கு பொம்மனஹள்ளியில் வீடு. இன்னமும் மெட்ரோ வசதி இல்லை. வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். ரயில் ஓட இன்னமும் நான்கைந்து வருடங்கள் ஆகக் கூடும். அங்கிருந்து இரண்டாவது சிக்னல்தான் கூட்லு கேட். லட்சுமியக்கா சில சமயங்களில் பேருந்துகளில் வருவார். பல நாட்கள் வெக்குடு வெக்குடு என்று வேகமான நடைதான். 

இன்று பேருந்தில் வந்திருக்கிறார் போலிருக்கிறது.

அக்காவுக்கு ஒரு குழந்தை. கணவன் தவறி இரண்டு வருடங்கள் ஆகிறது. அவன் இருக்கும் போது கூட அக்காவின் சம்பாத்தியம்தான் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்தது. இளவயதுக் குடிகாரன். ஈரல் வெந்து போனது. நாரயண ஹிருதயாலயாவில் சேர்த்திருந்தார்கள். தனது பதினேழு வயதிலிருந்து வேலைக்குச் சென்று சேர்த்து வைத்த நகையெல்லாம் வைத்தியத்தில்தான் கரைந்தது. கடைசியில் அவன் இறந்த போது ஒரு பாரம் குறைந்தது போல இருந்தது. 

அவ்வப்பொழுது ‘ஊருக்கே போய்டலாம்ல’ என்று யாராவது கேட்டுவிடுகிறார்கள். லட்சுமியக்காவுக்கு அதில் விருப்பமில்லை. இங்கே பதினேழாயிரம் சம்பளம். மூன்றாயிரம் ரூபாய் வாடகைக்குப் போய்விடுகிறது. மிச்சமிருக்கும் தொகை சரியாக இருக்கிறது. ஊரில் இவ்வளவு சம்பளம் தர மாட்டார்கள். பெண் குழந்தை. நான்காம் வகுப்பு படிக்கிறாள். கன்னட மீடியத்தில் படிக்கும் அவளை இனி மாற்றுவதும் சரியாக இருக்காது. எல்லாவற்றையும் யோசித்துவிட்டு ‘இங்கேயே இருந்துக்கலாம்’ என்று முடிவு செய்துவிட்டார்.

ஊர் வாய் சும்மா இருப்பதில்லை. ‘டவுன்ல இருந்து பழகிட்டு இங்க வந்து அவளுக்கு இருக்க முடியுமா?’ என்பது நாகரிகமான வசை. அதற்கு மேல் இன்ன பிற வசவுகளும் கிசுகிசுக்களும் நிறைய. மாமியார் உயிரோடுதான் இருக்கிறார். ஒரு முறை ஊரில் இப்படிப் பேசுவதாகக் கோடு காட்டினார். லட்சுமிக்கு சங்கடமில்லாமல் இல்லை. ஊருக்குப் போனால் மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? ‘புருஷன் இல்லாதவ..டவுன்ல இருந்து எல்லாத்தையும் பழகினவ...’ எல்லாமும்தான் பேசுவார்கள். உடல் இச்சை குறித்தான ஆசைகளைப் புதைத்துக் கொண்டு வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பவள் என்றுதானே பெண்களை நினைக்கிறார்கள்? அதுவும் அவள் துணையில்லாதவள் என்று முடிவே செய்துவிடுகிறார்கள். 

இன்றைக்குப் பேருந்தில் வந்த போது எவனோ உரசியிருக்கிறான். ‘இதுக்கெல்லாமா டென்ஷன் ஆவீங்க..வேலையைப் பாருங்கக்கா’என்றாள். லட்சுமி பதில் எதுவும் சொல்லவில்லை.

இந்தப் பெருநகரத்தில் பல லட்சம் ஆண்களும் பெண்களுமாக சம்பாத்தியத்திற்காகக் கால்களில் சக்கரங்களைக் கட்டியபடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஊர்க்காரன், எந்த மொழி பேசுகிறவள், எங்கேயிருந்து வருகிறான், எங்கே செல்கிறாள் என்று எதுவும் தெரியாது. தீராத பாலியல் வேட்கைகளையும் வறண்ட காம இச்சைகளையும் எந்த உடலிலாவது இறக்கிவிட எத்தனிக்கும் கண்களும் உடல்களுமாக அலையும் உயிர்களால்தான் இந்த நகரமே உயிர்ப்பித்துத் திரிகிறதோ என்று தோன்றாமல் இருந்ததில்லை. 

‘அடுத்தவனின் பொண்டாட்டிய அடையுற ஆசை இங்க அத்தனை ஆம்பளைகளுக்கும் இருக்குமா என்ன?’ என்று லட்சுமியக்கா கேட்க லாவண்யாவுக்கு அப்பொழுதும் சிரிப்புதான். 

‘எதுக்கு சிரிக்கிற?’. 

‘அப்போ பொம்பளைங்களுக்கு?’ என்று லாவண்யா கேட்டாள். அவள் தன்னைச் சீண்டுகிறாள் என்று தெரியும். அவளிடம் வாயைக் கொடுத்தால் இப்படித்தான் சீண்டுவாள். 

லட்சுமியக்கா வேலையில் மும்முரம் காட்டினாள். ஏதோவொரு வங்கிக்குச் செல்ல வேண்டிய புத்தகம் அச்சாகியிருந்தது. இருவருக்கும் அதை அடுக்கி வைக்கிற வேலை. நேற்றே பாதியை முடித்திருந்தார்கள். இன்றைக்கும் அதைத்தான் தொடர வேண்டும். இவர்கள் இருவரும் பேசிக் கொள்வது அடுத்தவர்களுக்குக் கேட்காது. கிசுகிசுத்துக் கொள்வார்கள்.

‘ஓசி வண்டி கிடைச்சா ஏறிடுவாங்கக்கா’ என்றாள். லட்சுமிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 

ஆனந்த் ஒன்பது மணிக்குத்தான் வந்து சேர்ந்தான். அச்சகத்தின் பொறுப்பு அவன் வசம்தான். முதலாளி எப்பொழுதாவது அச்சகத்துக்கு வருவார். வரவு செலவு விவரங்களை மாலையில் வீடு திரும்பும் போது முதலாளியிடம் ஆனந்த் ஒப்படைத்துவிடுவான்.

‘என்ன ஆனந்த்..இவ்வளவு லேட்?’ லாவண்யா விசாரித்தாள். அவள் அவனிடம் நன்றாகப் பேசுவாள். 

‘கூட்லு கேட்ல மாட்டிட்டேன்’ என்றான். அங்கு மட்டும் போக்குவரத்து நெரிசல் ஆனால் ஒரு மணி நேரம் கூட இழுத்துவிடும். மூவரையும் தவிரம் இன்னமும் இரண்டு பேர்கள் அச்சகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும்பாலும் ஆர்டர் வாங்கி வருவது, டெலிவரி கொடுப்பது மாதிரியான பணிகள். நல்ல இலாபத்தில் ஓடுகிற அச்சகம் அது.

லாவண்யா லட்சுமியிடம் ‘மாட்டிக்கிச்சாம்’ என்றாள் மெதுவாக. லட்சுமி சிரிக்கவும் ஆனந்த் பார்த்துவிட்டான்.

‘நீ என்ன சொல்லியிருப்பேன்னு எனக்குத் தெரியும்’ என்றான். அதற்கும் லட்சுமி சிரித்தாள்.

தசரா போனஸ் பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருந்தார்கள். அதில் இரண்டாயிரம் ரூபாயை ஆனந்த் வாங்கியிருந்தான். அவன் குடும்பச் சூழல் அப்படி. முதல் குழந்தை அடிக்கடி நைந்து போகும். நந்தினி டாக்டரிடம்தான் காட்டுகிறார்கள். ஒவ்வொரு முறையும் முந்நூறு ரூபாய். ஆரம்பத்தில் நூறு ரூபாய்தான் வாங்கிக் கொண்டிருந்தார். இப்பொழுது தனியாகக் கட்டிடம் பிடித்து இரண்டு பெண்களை உதவிக்கு நியமித்து என்று அவருக்கும் செலவு அதிகம். மாதம் இரண்டு முறையாவது மருத்துவரிடம் தூக்கிச் செல்கிறார்கள். வாடகை, குழந்தைக்குப் பால், வீட்டுச் செலவு என்று திணறுகிறான்.

கடன் வாங்கியிருந்த பணத்தில் ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு ‘அடுத்த மாசம் இன்னொரு ஆயிரத்தைக் கொடுத்துடுறேன்’ என்றான். 

லட்சுமி ‘மெதுவா கொடு..ஒண்ணும் அவசரமில்ல’ என்று சொல்லியபடியே பைக்குள் வைத்துக் கொண்டாள்.

‘ரொம்ப கஷ்டமா இருக்குது...வீட்டுக்குப் போனாவே மனசு பூரா பாரம்தான் நெறையுது..புருஷன் பொண்டாட்டியா வாழறதைவிடவும் அப்பா அம்மாவா மட்டும்தான் வாழ்ந்துட்டு இருக்கோம்’ என்றான். அவன் எல்லாவற்றையும் இவர்களிடம்தான் பகிர்ந்து கொள்கிறான். அவனது சுமைதாங்கிகளாக இவர்கள் இருந்தார்கள். ‘அக்கா அவன் பொண்டாட்டியத் தொடவே இல்லங்குறான்.. உன்கிட்ட அடிபோடுறான்’ என்றாள் லாவண்யா. 

லட்சுமி அச்சாகியிருந்தவற்றை அடுக்கி வைப்பதில் மும்முரமாக இருந்தாள். லாவண்யா சொல்வதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதைப் போல பாவனைகளைச் செய்தாள்.

‘வம்பைக் கொண்டு வந்து சேர்க்காம படுக்கைக்கு வரும் பொண்ணுங்களைக் கழுகுக் கண்ணுக தேடிட்டே இருக்குதுன்னு சொல்லுவியே அக்கா’ என்று அவள் தொடர்ந்த போது ‘ச்சீ..நீ வேற..வேலையைப் பாருடி’ என்று லட்சுமி அதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். 

சில கணங்களுக்குப் பிறகு ‘அவன் கூப்பிட்டா என்ன சொல்லுவ?’ என்றாள்.

‘இவ்வளவு நாளா பேசிட்டு இருக்கோம்..எவன் எப்படின்னு நமக்குத் தெரியாதா?’ என்று லட்சுமி பதில் கேள்வி கேட்டது அவளுக்குப் புரியவில்லை. 

‘கூப்பிட்டா வீட்டுக்கு வந்து தலைமுடியை விரிச்சுட்டு கூட படுத்துடுவான்னு நினைக்கிற அளவுக்கு அவன் முட்டாள் இல்ல’ என்றார் லட்சுமியக்கா.

லாவண்யா ‘படம் பார்த்தியாக்கா?’ என்றாள். லட்சுமியக்கா சிரித்தார்.

‘அவன் பாவம்டி...வயசுக்கு மீறுன பாரம் அவனுக்கு...’

‘யாரைச் சொல்லுறக்கா? கதிரா?’ 

‘த்தூ...ஆனந்தைச் சொல்லுறேன்...ஆம்பளைதானே? அவனுக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். உடம்பு மேல ஆசை..பொம்பளை மேல ஆசை..ஆனா ஆசை இருக்கிறவன் பூரா எந்தப் பொம்பளையையும் படுக்கைக்கு கூப்பிடலாம்ன்னு திரியறதில்ல...பேசறதே கூட பாதி பாரத்தை எறக்கி வெச்சுடும்..அவன் பேசட்டும் விடு...எல்லாக் காலத்துலேயும் ஆம்பளைகிட்ட பொம்பளையும் பொம்பளைகிட்ட ஆம்பளையும் பேசிட்டுத்தான் இருந்தாங்க..எல்லாத்தையும்’

லாவண்யா லட்சுமியக்காவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘தனியா இருக்கிற பொம்பளை கூப்பிட்ட இழுப்புக்கு வருவான்னு நினைக்கிறான் பாரு...அவனை செருப்பால அடிக்கணும்..காலை விரிக்கிறதுலதான் சுதந்திரம் இருக்குதுன்னு நினைச்சுக்கிறானுக..கண்டவன் கூட படுத்தா காமம் தீர்ந்துடும்ன்னு முடிவு பண்ணுறானுக....அயோக்கியப்பசங்க’

லாவண்யா அதற்குமேல் பேசவில்லை. லட்சுமியக்காவும் பேசவில்லை. பெண்கள் தாம் பேசுவதை பாதியோடு நிறுத்திக் கொள்கிறார்கள். பிற பெண்கள் அதைப் புரிந்து கொள்ளுகிற அளவுக்கு ஆண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

‘அப்போ அவன் உன்னைக் கூப்பிட்டா என்ன சொல்லுவ?’ மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.

கத்தரியை எடுத்துக் காட்டி கத்தரித்துவிடுவேன் என்பது போல லட்சுமியக்கா சைகை செய்தார். ‘பாவம்..ஒண்ணே ஒண்ணு’ என்று சொல்லிவிட்டு  லாவண்யா புரை ஏறும்படி சிரித்தாள்.

இவர்கள் சிரிப்பதைப் பார்த்த ஆனந்த் ‘இப்போ என்ன பேசுனீங்க?’ என்றான். 

‘ஒண்ணுமில்ல..அடுக்கி மட்டும் வெச்சா போதுமா..கத்தரிக்கணுமான்னு கேட்டேன்’ என்றாள். பொய் சொல்கிறார்கள் என்று ஆனந்துக்கும் புரிந்தது. மூவருமாகச் சிரித்தார்கள். 

15 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Sir where you are getting this kind of stories .its really super sir. This story touched my heart

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

மின்னலா,உண்மையா மணி.
வாழ்க வளமுடன்

Vaa.Manikandan said...

//where you are getting this kind of stories// நல்ல கேள்வி. எங்க ஆயா மொடக்குள்ள போட்டு ஒளிச்சு வெச்சுட்டு செத்து போய்டுச்சுங்க...அங்க இருந்து எடுத்துட்டு வர்றேன்...

Anonymous said...

is this way of your reply to lakshmi short film??,, g8

Ram said...

மணி, தப்பா நினைச்சுக்காதீங்க. இதெல்லாம் விட்டுப்புட்டு, உங்களுக்கு அருமையாக வசப்படும் நகைச்சுவை கதைகளை எழுதலாமே?

சுப. இராமநாதன்

Vaa.Manikandan said...

இதை விட்டுடலாம், அதை விட்டுடலாம்ன்னு நினைக்கத் தொடங்கினால் ஒரே குட்டை மட்டும்தான் கைவசம் இருக்கும். அதனதன் போக்கில் போகட்டும்..போக விடுங்க ராம்!

thiru said...

//...காலை விரிக்கிறதுலதான் சுதந்திரம் இருக்குதுன்னு நினைச்சுக்கிறானுக..கண்டவன் கூட படுத்தா காமம் தீர்ந்துடும்ன்னு முடிவு பண்ணுறானுக....///

This is the gist

Sathya said...

Nice... After reading the FB status about the short film... Really heart touching... By the way you have not used any poetic lines..

சேக்காளி said...

// எங்க ஆயா //
வேர் கிழவி???

சேக்காளி said...

//அப்போ அவன் உன்னைக் கூப்பிட்டா என்ன சொல்லுவ?’//
லாவண்யா விடம் இந்த கேள்வி கேட்கப் பட்டால் பதில் என்ன வாக இருக்கும்?

கண்ணன் கரிகாலன் said...

காம உரையாடலே கிட்டத்தட்ட சுகிக்கும் இன்பத்தைத்​ தந்துவிடுகிறது. பேசிச் சிரிப்பதே பாதி பாரங்களை இறக்கி வைத்து விடுகிறது.
அப்பட்டமாக பாலியல் கல்வி, காட்சி சுதந்திரம் தரும் மேல் நாடுகளில் பாலியல் சார்ந்த குற்றங்களும் ,பாலியல் நோய்களும் குறைவே.
Human beings are by nature polygamous. They are compelled​ to practice monogamy for social reasons and fear of legal consequences.

Umesh Srinivasan said...

லட்சுமி குறும்படம் போல எல்லா ஆணுக்கும் இப்படியொரு one night stand அமையாதான்னு ஒரு ஏக்கம் இருக்கும், வெளியே சொல்லிக் கொள்வதில்லை யாரும். இதுதான் நிதர்சனம்.

சேதுபதி said...

லக்ஷ்மி குறும்படம் தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.. உங்கள் பதிவை படிக்கும்போது...

அன்பே சிவம் said...

எங்காயா! காசியம்மான்னு தெரியும்.
'மொடக்கு'? அப்டின்னா என்ன இது வரைக்கும் கேள்விப்படாத வார்த்தை.

Anonymous said...

தலைவரே... முடிஞ்சா ஒரு பாலியல் வறட்சியினை பேசும் full fledged erotica எழுதுங்க. உங்க மனிதம் பேசுகின்ற (பெண்ணியமல்ல) பாத்திரங்கள் கதை முழுக்க வியாபித்து இருக்க... இடையிடையே 'களுக்' என்று குறும்பான நகைச்சுவையோடு ஒரு கில்பஜக் ஜங் கதையினை விரைவில் எதிர்பார்க்கிறேன்.