Oct 3, 2017

கேள்விக்கென்ன பதில்

பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தமிழக அரசியல் சூழ்நிலையையும், புதிய கவர்னர் நியமனத்தையும் இணைத்து பார்க்கக் கூடாது. புதிய கவர்னர் நியமனம் தமிழக அரசியல் சூழ்நிலையில், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’ என்று கூறியிருப்பது எதை குறிக்கிறது?

இணைத்துப் பார்க்க வேண்டுமா இல்லையா என்று நமக்குத் தெரியாதா என்ன? பேசுவது அரசியல்வாதிகளின் பணி. எதையாவது பேசிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் பேசுவதையெல்லாம் கவனித்து பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நம்முடைய நேரம் வீணாகிவிடும். அரசியல்வாதிகளே அவர்களுக்குள்ளாக அடித்துக் கொள்வார்கள். நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுதான் நல்லது. 

நீங்கள் நிசப்தத்தில் எழுதியபிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கார்ல்மார்க்ஸ் குறித்தான உரையை பார்த்தேன்.எனக்கு அதுவரை ‘மூலதனத்தை’ உலகிற்கு வழங்கியவர் கார்ல்மார்க்ஸ் என்பது மட்டும்தான் தெரியும். நீங்கள் குறிப்பிட்டதுபோல எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மிக அருமையாக பேசியிருந்தார் (இரண்டுமணி நேரத்தில் ஒரே ஒருமுறை மட்டும் சற்று உணர்ச்சிவசப்பட்டபோது தண்ணீரால் தொண்டையை நனைத்தார்). கார்ல்மார்க்ஸ் மிக கடுமையான பொருளாதார சூழல்களை தாண்டித்தான் ஒரு மாபெரும் சிந்தனையாளராக உருவெடுத்துள்ளார் ஆனால் ‘தன் மனைவி பிள்ளைகளை கூட சரிவர கவனிக்காமல் இருந்திருக்கிறார்’ என்பது சற்று நெருடலாக இருக்கிறதே?

ஒவ்வொரு சாதனையாளரும் தமது லட்சியத்திற்காக ஏதேனுமொன்றை சமரசம் செய்தாக வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அந்தச் சமரசமில்லாமல் சாதனையாளராக உருவெடுத்தால் நல்லதுதான். ஆனால் எல்லோருக்கும் சாத்தியமில்லை.

என்றைக்காவது, இவருக்கு ஏன் உதவினோம் என்று தோன்றியதுண்டா?

தோன்றியிருக்கிறது. ஆனால் அதை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பதும் நல்லதில்லை. பொதுவெளியில் சொல்வதும் பண்பு இல்லை

நம்பிக்கையின் வெளிச்சக் கீற்றை தூண்டி விடுபவர்களிடம் இயல்பாக பேசியிருப்பீர்கள். அவர்களின் அரசியல் பார்வை எப்படி இருக்கிறது?

அவர்களிடம் பேசுவதற்கு உண்மையிலேயே அரசியல் தாண்டி நிறைய இருக்கின்றன. கல்வி, சமூகம் என்பதெல்லாம் குறித்துத்தான் அதிகம் பேசுகிறோம். அத்தகைய பேச்சுதான் செயல்வடிவம் பெறும். அரசியல் பேசுவது மிக அரிது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ' ஹிந்தி மொழியை ஆங்கிலத்திர்கு மாற்றாக அலுவல் ரீதியான தொடர்புமொழியாக அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மொழிப்பற்று தவறில்லை ஆனால் ஹிந்தியை மட்டும் இந்தியாவின் முதன்மையான அரசாங்க தொடர்புமொழியாக மாற்ற முயல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கடைந்தெடுத்த மொழியியல் தீவிரவாதம்.  

ஆசிரியர் சங்கம் ஏன் நீட் பற்றி போராடவில்லை?

ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளில் ‘நீட்’டும் ஒன்றாக இருந்தது. இருந்து மட்டும் என்ன பலன்? போராட்டத்தைத்தான் சாதுர்யமாக ஒடுக்கிவிட்டார்களே. இப்பொழுதெல்லாம் எந்தச் சங்கத்தை எப்படி வளைக்க வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். 

அடிக்கடி புத்தக வெளியீடு, கதை விவாதம் என்று சென்னைக்குப் போய் பிரபல நடிகையுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிறீர்களாமே?

ஏதாவது பத்திரிக்கை அல்லது டிவியில் கிசுகிசுவாக வந்தால் உடனடியாகத் தெரியப்படுத்தவும். ஊருக்குள் பந்தா செய்து கொள்ள உதவும்.

Sarahah வில் வந்த கேள்விகள்.

5 எதிர் சப்தங்கள்:

Venky said...

Mani, why not to give prize for the last questioner?

Anonymous said...

Suggestion: Your answers may be in such a way to publish as a separate book in future..like sujatha's

Selvaraj said...



‘கடைந்தெடுத்த மொழியியல் தீவிரவாதம்’ நறுக்கென்ற மூன்று வார்த்தைகள். மணி அண்ணாவுக்கு ஒரு Income Tax Raid Parcel

‘லட்சியத்திற்காக ஏதேனுமொன்றை சமரசம் செய்தாக வேண்டிய கட்டாயம் உருவாகிறது’. நிதர்சனமான உண்மை

கடைசி கேள்விக்கான பதில் 'இது அந்த பிரபல நடிகைக்கு தெரியுமா?

Anonymous said...

There is an intelligent with you, to skip an intelligent question asked in sarahah. One day it will disturb your intelligent.

Vaa.Manikandan said...

எந்தக் கேள்வியையும் தவிர்ப்பதில்லை. வந்திருக்கிற கேள்விகளில் Random ஆக ஆறு அல்லது ஏழு கேள்விகளுக்கு பதில் எழுதுகிறேன். சில கேள்விகள் இருக்கின்றன- Aryan invasion theory, நவோதயா பள்ளிகள் பற்றிய கருத்து போன்றவை சில உதாரணங்கள். குறைந்தபட்சமான தரவுகளையாவது எடுத்துக் கொண்டு முடிவுக்கு வர வேண்டும் என்பதால் மெதுவாக பதில் எழுதிக் கொள்ளலாம் என விட்டு வைத்திருக்கிறேன். ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் - இன்று வரை 244 கேள்விகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே வாரத்தில் பதில் எழுத வேண்டும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் பதில்களை வைத்திருப்பதற்கு நான் என்ன ஆல் இன் ஆல் அழகுராஜாவா சார்?