Oct 4, 2017

சுடர்

சுடர் என்றொரு அமைப்பு இருக்கிறது. சத்தமில்லாமல் சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று- கர்நாடகா-தமிழ்நாட்டை ஒட்டிய மலைப்பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டறிகிறார்கள். பிறகு அந்தக் குழந்தைகள் குறித்தான விவரங்களை அரசுக்குத் தெரிவிக்கிறார்கள். அரசானது அந்தப் பகுதிகளில் பள்ளிகளைத் தொடங்குவதற்கான அனுமதியளிக்கிறது. ஆசிரியர்கள் நியமனம், பள்ளி நடத்துவதற்கான கட்டிடம் என நிர்வாகத்தை இந்த அமைப்பு பார்த்துக் கொள்கிறது. ஆசிரியர்களுக்கான சம்பளம், குழந்தைகளுக்கு மதிய உணவு, சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு கொடுத்துவிடுகிறது. மலைப்பகுதிகளில் மட்டும் இப்படிக் கிட்டத்தட்ட பத்துப் பள்ளிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுடர் நடராசன் குறித்து முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். அறிமுகம் இல்லை. அவர்தான் சுடர் அமைப்பின் நிர்வாகி. சமீபத்தில் சத்தியமங்கலத்தில் நகர்ப்புறக் குழந்தைகளுக்கான ஒரு நூலகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். மாலை நேரத்தில் அக்கம்பக்கத்துக் குழந்தைகள் வந்து படிக்கிறார்கள். கணினி ஒன்றில் குழந்தைகளுக்கான சலனப்படங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அதில் அறிவியல் சோதனைகள், தலைவர்களைப் பற்றிய படங்கள் என நிறைய இருக்கின்றன. அவற்றைத் தவிர குழந்தைகளுக்கான பாடல்கள், ஆட்டம்பாட்டம் என உற்சாகமாக இருக்கிறார்கள். நூலகத்தைத் திறந்து வைக்க அழைத்திருந்தார்கள். உள்ளே நுழைந்தவுடன் குழந்தைகள் காகிதத்தில் செய்த குல்லா ஒன்றைக் கொடுத்தார்கள். 


மலையில் இருக்கும் ஆசிரியர்களும் நூலகத் திறப்புக்கு வந்திருந்தார்கள். ஆசிரியர்களுடன் பேச நேரம் கிடைத்தது. பெரும்பாலானவர்கள் எம்.ஏ, எம்.எட் என்று முதுகலைப் படிப்பை படித்திருக்கிறார்கள். மாதம் ஆறாயிரம் ரூபாயைச் சம்பளமாக அரசு வழங்குகிறது. பெரும்பாலானவர்கள் சமவெளிப்பகுதியிலிருந்து மேலே சென்றிருக்கிறார்கள். சமவெளியிலேயே பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்க முடியும். ‘எதனால் அவ்வளவு தூரத்தில் வேலைக்கு போறீங்க?’ என்று கேட்டிருக்கக் கூடாது. கேட்டேன். பெரும்பாலானவர்கள் சேவை நோக்கத்தில்தான் அங்கே வேலையில் இருக்கிறார்கள்.  மின்வசதி கூட சரியாக இல்லாத கிராமங்கள் அவை. அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒதுக்குப்புறங்கள் அவை. இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் என்பதெல்லாம் சாத்தியமில்லை. சேவை நோக்கம் இல்லையெனில் வேறு யார் செல்வார்கள்?

மலைப்பகுதி வீடு

வேளாண்மைக் கல்விஐந்து பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தங்கிக் கொண்டு உணவு சமைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு ஐந்து பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் வேறோர் இடத்தில் தங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிகளுக்குமிடையில் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவு. ‘வண்டி வெச்சிருக்கீங்களா?’ என்றேன். இல்லை. ஆசிரியர்கள் நடந்துதான் செல்கிறார்கள். இரவில் ஒரு பள்ளியில் உறங்கி விடிந்தவுடன் மாணவர்கள் வருவதற்குள் தத்தம் பள்ளிகளுக்குச் சென்று வகுப்பறைகளைத் தயார் செய்து வைக்கிறார்கள். அரசுப்பள்ளிகளின் பாடத்திட்டம்தான். படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு இருக்கிறது. சில மாணவர்கள் மேனிலைப்பள்ளியைத் தாண்டியிருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் கல்லூரிக்கும் சென்றிருக்கிறார்கள்.

‘ஒரு நாள் ஸ்கூலுக்கு வாங்க’ என்று ஆசிரியர்கள் அழைத்தார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமையே அவர்களுடன் சென்று தங்கியிருக்க வேண்டும். குமணன் தமது குடும்பத்தோடு சென்று மலைக்கிராமத்தில் தங்குவதாகவும் நீயும் வர வேண்டும் என அழைத்திருந்தார். பிரேசில் வேலை பிழிந்து எடுக்கிறது. சனிக்கிழமை வரைக்கும் அலுவலகத்தில் மாரடித்துக் கொண்டிருந்தேன். இன்னொரு சமயம் நிச்சயமாகச் செல்ல வேண்டும். நவம்பர் அல்லது டிசம்பரில் இரண்டு நாட்கள் அந்தப் பள்ளியிலேயே தங்குகிற எண்ணமிருக்கிறது. இந்தப் பள்ளிகளைத் தவிர ஆசனூரில் ஒரு மேனிலைப்பள்ளி இருக்கிறது. அதுவும் மலைதான். அதே போல பர்கூரிலும் இன்னொரு மேனிலைப்பள்ளி இருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் நலப்பள்ளியில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் இந்த மேனிலைப்பள்ளிகளுக்குத்தான் செல்கிறார்கள்.சத்தியமங்கலம் நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் போது ‘நாம் நடத்துகிற நிகழ்ச்சிகளை மேலே இருக்கும் மாணவர்களுக்கு செய்ய வேண்டும்’ என்று ஆசிரியர் அரசு தாமசு சொன்னார். அவர் சொல்வது நூறு சதவீதம் சரி. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிலரங்கை அந்த இரண்டு பள்ளிகளிலும் நடத்த வேண்டும். மாணவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களைக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும். நிறைய இருக்கிறது.

சுடர் நடராசன் மாதிரியானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும் போதுதான் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்பதையெல்லாம் தெளிவாக்கிக் கொள்ள முடிகிறது. கொங்காடையிலும் குன்றியிலும் விளாங்கோம்பையிலும் வெளியுலக வெளிச்சமே தெரியாத பல நூறு குழந்தைகள் இருக்கிறார்கள். பள்ளிவாசமே இல்லாமல் கூலி வேலைக்குச் சென்றவர்களை அழைத்து வந்து பள்ளியில் அமர வைத்துப் பாடம் சொல்லித் தருகிறார்கள். மகத்தான பணி. அவர்களை மெட்ரிகுலேஷன் பள்ளிகளுடன் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வார்கள்?

உதவி செய்யப்பட வேண்டியர்கள் நாம் ஒரு தரப்பை நினைத்திருப்போம். அவர்களைவிடவும் அதிகமான உதவி தேவைப்படுகிறவர்கள் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். இதெல்லாம் ஆரம்பத்தில் தெரியவில்லை. மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கிளைகளையும் கனிகளையும் மடும் பார்த்துக் கொண்டிருந்தால் அடிவேர்கள் எதிர்கொள்ளும் இருள் நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. கீழே- இன்னமும் கீழே என்று சமூகத்தின் அடி வரைக்கும் செல்வதற்கு களங்கள் மாறி மாறிச் சென்று கொண்டிருக்கும் போதுதான் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. Under-Privileged என்ற சொல்லுக்கான பொருள் நாம் நினைத்துக் கொண்டிருப்பதைவிடவும் பன்மடங்கு அர்த்தம் பொதிந்தது.

7 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

உண்மைதான். அடிமட்டத்தில் இருப்போர்கள் ஏராளம். அவர்களை கண்டறிந்து உதவி செய்து மேலேற்றுவது மகத்தான பணி. வாழ்த்துகள்.!

Anonymous said...

//வேளாண்மைக் கல்வி//
அத்தியாவசியமான ஒன்று.

//மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கிளைகளையும் கனிகளையும் மடும் பார்த்துக் கொண்டிருந்தால் அடிவேர்கள் எதிர்கொள்ளும் இருள் நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.//
உங்கள் முயற்சியால் மேலே செல்பவர்கள் இந்த சமுதாயதிற்க்கு மீண்டும் உதவும் எண்ணங்களை பெற களம் ஏற்படுத்தி கொடுங்கள்.

Jaypon , Canada said...

அருமை. வாழ்த்துக்கள் முயற்சி மெய்ப்பட.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//மாதம் ஆறாயிரம் ரூபாயைச் சம்பளமாக அரசு வழங்குகிறது. பெரும்பாலானவர்கள் சமவெளிப்பகுதியிலிருந்து மேலே சென்றிருக்கிறார்கள். சமவெளியிலேயே பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்க முடியும். ‘எதனால் அவ்வளவு தூரத்தில் வேலைக்கு போறீங்க?’ என்று கேட்டிருக்கக் கூடாது. கேட்டேன். பெரும்பாலானவர்கள் சேவை நோக்கத்தில்தான் அங்கே வேலையில் இருக்கிறார்கள்.//
இதை உண்மையாகத்தான் இருக்கும் நம்புகிறீர்களா.
தற்காலிகமாக பணி செய்பவர்கள் நிரந்தரமாக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கைதான். இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது. இப்போது CPS க்காக போராட்டம் நடத்தியவர்கள் எல்லாம் இது போல் தற்கலிகமாக 3000 மற்றும் 4000 க்கு ஒப்பந்த அடிப்படையில் நிய்மிக்கப் பட்டவர்கள்தான்.விதி விலக்காக யாரேனும் இருக்கலாம். அவர்களை குறை கூறுவதற்காக இதை சொல்லவில்லை. அந்த நோக்கத்துடன் பணி செய்தாலும் தவறில்லை. அதை வெளிப்படையாக சொல்வதும் தவறில்லை

Asok said...

"SUDAR" volunteers and those teachers are really great, they are the example for others. If they need any financial assistance, we can do.
We always comparing the Matericulation/CBSE students. why dont we go to those schools and educate them about these differences and how they can help to other people. I am sure there should be some students they can change their goal after they complete their studies.

சமுத்ரன் said...

ஆழமா யோசிச்சா... அவர்கள் பாட்டுக்கு மலை மேல அழகா ஒரு வீடுகட்டி, இயற்கை சூழ சந்தோசமா வாழ்ந்துட்டிருந்தாங்க. படிப்பு - மார்க்கு - டிகிரி - வேலை - சம்பளம் னு கீழ கூட்டிட்டுவந்து இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ள தள்ளி கொடுமைப்படுத்தப் போறோம்.

Unknown said...

Under-Privileged என்ற சொல்லுக்கான பொருள் நாம் நினைத்துக் கொண்டிருப்பதைவிடவும் பன்மடங்கு அர்த்தம் பொதிந்தது. ----200% True