Oct 16, 2017

கேள்வி பதில்கள்

ஞான செருக்கு அவசியமா வேண்டாமா?

சொற்பமான ஆயுளும் அற்பமான வாழ்வும்தான் மனிதப் பிறவி. இதில் ஞானச் செருக்கு மட்டுமில்லை எந்தச் செருக்குமே அவசியமில்லை.

கிராம முன்னேற்றத்திற்காக சில வருடங்களுக்கு முன் விகடன் பத்திரிகையில் இருந்து பணம் கொடுப்பதாக சொன்னார்களே பணம் வந்ததா?

மறதிதான் எல்லோருக்கும் நல்லது.

நீதிமன்றங்களின் தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

மனிதர்கள் ஒவ்வொருவருமே விமர்சனம் செய்யப்படுவதற்குத் தகுதியானவர்கள்தான். விமர்சனங்களில் சில கட்டுப்பாடுகள் அவசியம். இல்லையென்றால் ஆளாளுக்கு நீதி எழுதப் புறப்பட்டுவிடுவார்கள். அது மொத்த அமைப்பையும் சீர்குலைக்கவல்லது.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இன்று (07.10.2017) தனது இணையதளத்தில் வாசகர் ஒருவரின் குழந்தையிலக்கியம் குறித்தான ஒரு கேள்விக்கு ‘வா. மணிகண்டன் பள்ளிகளுக்கு நூலகம் வைக்க அவருடைய அமைப்பாகிய நிசப்தம் வழியாக உதவுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஜெமோ அவர்களுக்கு என் மீது அன்பு உண்டு. ஆத்மார்த்தமான அன்பு அது. நான் மிக மதிக்கும் ஆளுமை அவர். அவர் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது சந்தோஷமாகத்தான் இருக்கும்.

தமிழக மக்கள் டெங்கு காய்ச்சலில் மரணமடைந்துகொண்டிருக்கும்போது தமிழக முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவில் குட்டிக்கதை சொல்லிக்கொண்டிருக்கிறாரே?

மணிக்கணக்கில் ரம்பம் போடாமல் குட்டிக்கதையோடு நிறுத்திக் கொள்கிறாரே என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

"கடைந்தெடுத்த மொழியியல் தீவிரவாதம்" என்ற பதிலுக்கு எதிர்வினை இருந்ததா?

அவர்களே கண்டுகொள்ளவில்லையென்றாலும் எடுத்துக் கொடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!

சில காலமாக ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. கவிதையின் நோக்கம் உணர்வுகளை வெளிப்படுத்தவா இல்லை மொழியின் காதலா?

மொழியின் காதல் மட்டும் இருந்தால் கவிதை தட்டையாக இருக்கும். உணர்வுகளை வெளிப்படுத்துவதுதான் கவிதைக்கான ஆன்மா.

கவின் எழுதிய ‘யக்கர் உடுக்குறி’ என்னும் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை-

இறுதிச் சடங்கிலிருந்து
யாருமறியாமல் 
ஒரே ஒரு பூவிதழை மட்டும் எடுத்து
சட்டைப்பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டேன்
குரூரத்தின் புன்னகை நிரம்பிய
அக்கூட்டத்திலிருந்து விடுபட்டு வீடு திரும்புகிறேன்
அவ்விதழ் என்னில் கரைந்து மீண்டும் துளிர்த்து
காது வழியே கிளையை நீட்டுகிறது
சொல்லச் சொல்லக் கேட்காமல்
பக்கத்து வீட்டுச் சிறுமி
ஒரு வாதினை உடைத்துக் கொண்டு ஓடுகிறாள்
இதோ நான் அவளை துரத்திக் கொண்டு ஓடுகிறேன்.

Sarahahவில் கேட்கப்பட்டவை.

1 எதிர் சப்தங்கள்:

Selvaraj said...

அவர்களே கண்டுகொள்ளவில்லையென்றாலும் எடுத்துக் கொடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! சும்மா கொளுத்தி போடுவோம் !

நீங்கள் குறிப்பிட்ட்து போல நீதிமன்ற தீர்ப்புக்கள் மீது ஒரு வித கட்டுப்பாட்டுடன் விமர்சிப்பது தவறில்லை. ஆனால் தீர்ப்பை விமர்சித்தாலே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப்படுமென்று நீதிமன்றமே பொதுமக்களை எச்சரிப்பது நம்மை போன்ற ஜனநாயக நாட்டிற்கு சற்றும் ஏற்புடையதில்லை