Oct 17, 2017

அனுப்புவதற்கு முன்பாக...

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. ‘பணம் அனுப்ப வேண்டும்..உங்களைப் பற்றி தேடிப் பார்த்தேன் பின்வரும் கட்டுரை கண்ணில்பட்டது’ என்கிற மாதிரியான மின்னஞ்சல் அது. அந்த வலைத்தளத்தில் இப்படி எழுதியிருந்தார்கள்-

Of late, having heavily impressed by Nisaptham Blogger's writings about his charity work, I thought of sending meager amount to his charity Nisaptham Trust. Unfortunately, when I sent that in March, it was not a pleasant experience. I had to randomly follow him through email and WhatsApp to get PAN of Nisaptham Trust; he shared that PAN details after 3-months.

When I try filing returns yesterday, it was another shock; apart from PAN, I also need to furnish the charity address. I quickly searched through Google and there were no results about the address; I can only find its bank account details. Google's autocomplete suggestions hinted the possibility of such queries by others though. One option is to contact the charity and get the address; but I had no hope on its speedy response. So, I had to dig nisaptham.com for about 3 hours and found the charity address hidden in some scanned photos.

எப்பவோ எழுதப்பட்ட பதிவு இது. அவர் பிரச்சினை அவருக்கு. என்னுடைய தவறுதான். இன்னும் எத்தனை பேர் இப்படியெல்லாம் திட்டியிருக்கிறார்களோ தெரியவில்லை. இப்படியான விஷயங்கள் கண்ணுக்குத் தென்படும்போதுதான் நாம் சிலவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடிகிறது. 

மின்னஞ்சலை எழுதியவருக்கு பதில் அனுப்பும் போது ஒன்றைக் குறிப்பிட்டு எழுதினேன். ‘தயவு செய்து நிசப்தம் தளத்தைத் தொடர்ந்து வாசியுங்கள். செயல்பாடுகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நிசப்தம் எப்படிச் செய்யப்படுகிறது எனத் தெளிவாகப் புரிந்த பிறகு மட்டுமே நன்கொடையை அனுப்பவும்’ என்று எழுதினேன். 

கடந்த காலத்தில் சென்னை மற்றும் கடலூரில் வெள்ளம் வந்த போது நிசப்தம் பற்றியும் என்னைப் பற்றியும் எதுவுமே தெரியாதவர்கள் கூட பணம் அனுப்பி வைத்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் ‘இதுவும் ஒரு என்.ஜி.ஓ’ என்கிற மனநிலையில்தான் அணுகினார்கள். முரட்டுத்தனமான கேள்விகளை எதிர்கொள்ளவும் நேர்ந்தது. ‘பணம் கொடுக்கிறோம்ல’ என்கிற தொனியிலான கேள்விகள் அவை. அப்படித்தான் இருக்கும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

வெள்ளச் சமயத்தில் மாநிலமே உணர்ச்சிவசப்பட்டிருந்தது. எப்படியாவது நம் பங்களிப்பைச் செய்துவிட வேண்டும் என்று பணம் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருக்கும். ‘இவன் சரியான ஆளா?’ என்று கேட்பார்கள். அது இயல்புதானே? இப்பொழுது அப்படியான சூழல் இல்லை. இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். நன்கொடையளிக்கும் போது எந்தக் காரியங்களைச் செய்கிறார்கள், எப்படிச் செலவு செய்கிறார்கள், யார் நிர்வகிக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்தவர்கள் மட்டுமே நன்கொடை அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

இரண்டாவது- எந்தவொரு குழுவினரிடமிருந்தும் பணம் வாங்க வேண்டியதில்லை. குழுவில் ஒருவர் நிசப்தம் பற்றித் தெரிந்தவராக இருப்பார். இன்னொருவருக்குத் தெரியாது. அவர் நம்மை அதட்டுவார். அதை இன்னொருவருக்காக பணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

அமெரிக்காவிலிருந்து பணம் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஆரம்பகட்டம் அது. அந்தத் தொகைக்கு என்ன வேலையைச் செய்தீர்கள் என்று ரசீது வேண்டும் என்று கேட்டார்கள். பணத்தை வாங்கி வேறு தொகையுடன் சேர்த்து சில காரியங்களைச் செய்கிறோம். ‘இதுக்கு மட்டும் ரசீது கொடுங்க’ என்று கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும் என்று குழப்பம் வராமல் இல்லை. இரண்டு மூன்று முறை கேட்டார்கள். விட்டுவிட்டார்கள். எனக்கு இன்னமும் உறுத்தலாகத்தான் இருக்கிறது.

நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. 

நிசப்தம் என்.ஜி.ஓ இல்லை. என்.ஜி.ஓக்களில் நிர்வாகத்திற்கென தனியாள் இருப்பார். ரசீது கொடுப்பதிலிருந்து கணக்கு வழக்கைப் பார்ப்பது வரைக்கும் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார். இங்கு அப்படியில்லை. பணியாளர் ஒருவரை நியமித்து வருடம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிற தொகையில் இரண்டு மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தைக் கட்டிவிட முடியும் என உறுதியாக நம்புகிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் நாமே பார்த்துக் கொள்ளலாம் எனச் செய்வதும் கூட. நன்கொடையாக வருகிற பணம் பயனாளிகளுக்கு மட்டும்தான். வேறு எந்தக் காரியத்துக்கும் பயன்படுத்துகிற திட்டமில்லை. பயன்படுத்தப் போவதுமில்லை. 

ரசீது கேட்பது நன்கொடையளித்தவர்களின் உரிமை. சில சமயங்களில் ‘ரசீது தேவையா?’ என்று பதிவு எழுதி ரசீது அனுப்புவதற்கான காலத்தையும் கூட ஒதுக்கி வைத்ததெல்லாம் நினைவில் வந்து போகிறது. அப்பொழுது யாருமே கேட்டதாக நினைவில் இல்லை. பதிவை எழுதியவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்த காலத்தைத் தேடிப் பார்த்தேன். அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சமயம். நிசப்தத்தில் அவ்வப்போது அதையெல்லாம் எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக நம்மை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். இன்றைக்கு இல்லையென்றால் இன்னொரு நாள் ரசீது வந்துவிடும் என்று நினைப்பார்கள். அப்படிப் புரிந்து கொண்ட வட்டத்தில் இருப்பவர்கள் அளிக்கும் நன்கொடை மட்டுமே போதுமானது.  அது ஒரு வகையில் ஆசுவாசமானது. சிறு வட்டமாகவே இருக்கட்டும். 

கோடிகளில் புரளும் அறக்கட்டளையை நிர்வகிக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. சமீபத்தில் கூட ஒரு பன்னாட்டு நிறுவனத்திலிருந்து பேசினார்கள். வெளிநாட்டு உதவியை நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் வசதியை நிசப்தம் அறக்கட்டளைக்கு அமைத்துக்  கொள்ளுங்கள் பெருந்தொகையை அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். அது அவசியமில்லை எனத் தோன்றியது. யார் பணம் அனுப்பினாலும் அவர்கள் நம்மைத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். சுவிஸ்ஸிலிருந்தும், சவுதியிலிருந்தும் நம்மைத் தெரியாதவர்கள் பணம் அனுப்ப வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலாகிவிடும். இருப்பது போலவே இருக்கட்டும். வருகிற தொகை மட்டும் வரட்டும். நம்மால் முடிந்தவர்களுக்கு- மாதம் இரண்டு பேர்களைக் கை கொடுத்துத் தூக்கிவிட்டால் போதும். அப்படி இயங்குவதுதான் சரியானதும் கூட. 

5 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

எத்தனை லேசுப்பட்டக் காரியமில்லை இது.

உங்கள் குடும்பத்தாருக்கு நிறையவே நன்றி சொல்லனும்

vijay said...

YES U R RIGHT
KEEP IT UP

செய்வன திருந்தச் செய்

Thirumalai Kandasami said...

தனியார் அறக்கட்டளை நன்கொடைக்கு, 80 G பிரிவின் கீழ் 50% வரை வரிவிலக்கு பெற்றுக்கொள்ளலாம்.

* பத்தாயிரம் ரூபாய்க்கு, 30% வருமான வரி வரம்பில் உள்ளவர்க்கு வரி - 3,000 ரூபாய்
* பத்தாயிரம் ரூபாயை நன்கொடைக்கு அளிப்பதால், 30% வருமான வரி வரம்பில் உள்ளவர்க்கு வரி - 1,500 ரூபாய் (1,500 ரூபாய் வரி குறைகிறது ).
80 G பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற ரசீது அவசியம்.

தனிப்பட்ட எனது கருத்து - ரசீது கொடுக்க காலதாமதமானது ஒரு சிறு தவறு தான். அதை ஏற்றுக்கொண்டு வரும் காலங்களில் அதை நிவர்த்தி செய்ய நாம் முயற்சிக்கலாம். மறைமுகமாக ரசீது கேட்டவரை சாட வேண்டாம். மேலும் வரிவிலக்கு பெறுவதற்கான தகவல்களை ஒரு தனி பதிவிட்டால் அனைவருக்கும் பயனளிக்கும்.

ரசீது கொடுக்க, சில ஆலோசனைகள் :-

* Upload Bank statement as an Excel in Google drive(monthly).(hide sensitive info if required, requested by sender or etc)
* Add one or two columns in the end of excel to keep track of Receipt flag(Y,N). If Y, Receipt Number in the next column.(to avoid multiple receipts for a single beneficiary )
* Particular subject for receipt requests ( i.e Receipt request) and flag it or forward it to another mail/user.(assume receipt incharge , I'm willing to volunteer this).
* Receipt incharge will verify and send details to Mani anna in weekend as digest mail. Mani anna will review and send receipts to the donator.
* We will put a reminder post once in every three months (quarter basis) to invite/close all requests.


vic said...

ரசிதுக்கு மட்டுமில்லை இதர பல சில வேலைகளில் வாசகர்களை பங்கெடுக்க வைக்கலாம் காசு வாங்காமல் உதவி செய்ய நண்பர்கள் இருக்கிறார்கள். `ஏம்பா சேக்காளி உங்ககிட்ட 10,000 நன்கொடையா கேட்டேன். ஒருத்தருக் ரசிது போகலை ? சாரிபா இப்ப பாக்கிறேன். இது ஒரு வகை ஆளுமை பிற்காலத்தில் மோடி சீட்ல இருக்கிறப்போ தேவை.

சேக்காளி said...

// `ஏம்பா சேக்காளி உங்ககிட்ட 10,000 நன்கொடையா கேட்டேன். ஒருத்தருக் ரசிது போகலை ?//
தினமும் குறைந்தது 2 மணி நேரம் வலையில் கிடக்கிறேன்.தலை(வா.ம) வழி வகைகளை சொல்லி செய்யச் சொன்னால் நிச்சயம் செய்கிறேன்.எனது இருப்பு இந்தியாவில் அல்ல.
வேறென்ன செய்யணும் vic ?
மனக்குரல் : அடே(ய்) சேக்காளி உன்னை வச்சு காமெடி பண்ணுறாங்கடா.