Oct 16, 2017

பவுடர் பூசிக்க கண்ணு

சென்னை கோயம்பேட்டில் கன கூட்டம். தகர டப்பாக்களுக்கு பச்சை நிறம் பூசி பேருந்துகள் என்ற பெயரோடு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தொலைதூரப் பேருந்துகளில் மனசாட்சியே இல்லாமல் சொகுசுப் பேருந்து என்று எழுதியும் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சொகுசுவுக்கும் அர்த்தமில்லை. கொசுவுக்கும் அர்த்தமில்லை. பேருந்து நிலையத்து வாசலில் இருந்தே பதாகைகளில் அமைச்சர்கள் கும்பிடு போட்டபடி இருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தவரைக்கும் எந்த அமைச்சரின் முகமாவது வெளியில் தெரிந்ததா? இன்றைக்கு இவர்கள் செய்கிற பந்தா இருக்கிறதே!

ராமலிங்க ரெட்டி என்றொரு அமைச்சர் இருக்கிறார். கர்நாடகாவில் உள்துறை அமைச்சர். ‘கர்நாடகாவில் கன்னடனைத் தவிர வேறு யாராச்சும் பதவிக்கு வர முடியுமா?’ என்று இங்குதான் கத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் வீடு இருக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ சதீஷ் ரெட்டியில் தொடங்கி பெங்களூருவில் மேயராகியிருக்கும் தமிழரான சம்பத் வரைக்கும் ஏகப்பட்ட பேர்களைக் காட்ட முடியும். அதை விடுங்கள். சதீஷ் ரெட்டி தனது காரை அவரே ஓட்டிக் கொண்டு சர்வசாதாரணமாக இருப்பார். ராமலிங்க ரெட்டியை கடந்த வாரத்தில் கோரமங்களாவில் ஒரு நாள் பார்த்தேன். சமீபத்திய மழையில் கோரமங்களா சாலைகள் நாசமாகிக் கிடக்கின்றன. அந்தச் சாலையில் அவருடைய வாகனம் மட்டும் வருகிறது. முன்பின் எந்த அல்லக்கைகளும் இல்லை. காவல்துறையின் வண்டி கூட இல்லை. எனக்கு என்ன போக்குவரத்து நெரிசலோ அதே போக்குவரத்து நெரிசல்தான் அவருக்கும். இத்தனைக்கும் காவல்துறை அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பெங்களூரு நகருக்கு பொறுப்பு மந்திரியும் அவர்தான். ஒரு சைரன் இல்லை. சலசலப்பு இல்லை. கன்னட அரசியல்வாதிகள் யோக்கியவான்கள் என்று சொல்லவில்லை. குறைந்தபட்சமான நாகரிகமும் பக்குவமும் அவர்களுக்கு இருக்கிறது. எங்கே அடக்கி வாசிக்க வேண்டும் என்கிற மேம்பட்ட தன்மை இருக்கிறது. கேரளாவில் இன்னமும் சிறப்பு என்பார்கள்.

சனிக்கிழமை இரவு கோயம்பேட்டில் ஒரு நடத்துநருடன் பேசிக் கொண்டிருந்தேன். திருப்பூர் செல்கிற வண்டி அது. ‘சார் சித்தோட்டுல நிறுத்துவீங்களா?’ என்றால் ‘பை-பாஸில்தான் நிறுத்துவேன்’ என்கிறார். கூட்டம் அதிகம் என்பதால் படு கிராக்கி அவருக்கு. ‘இந்த டப்பா வண்டியை வெச்சுட்டு இவ்வளவு லோலாயமா சார்?’ என்று கேட்கக் கேட்க அத்துறையில் பணியாற்றும் உதவிப் பொறியாளர் ஒருவர் வந்துவிட்டார். பெயரைச் சொன்னால் அவருக்கு வில்லங்கம் வந்துவிடக் கூடும். 

‘நீங்கதானே?’ என்று அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். 

‘ஊருக்குப் போகோணும்’ என்றேன்.

‘கொஞ்ச நேரம் பொறுங்க...நல்ல பஸ்ஸா வரும்..ஏத்திவிடுறேன் இருங்க’ என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன கதைகள் கொடுமையின் உச்சம். தீபாவளியின் சிறப்புப்பணி என்று அனுப்பி வைத்திருக்கிறாரக்ள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் கணக்கு. பதினான்கு மணி நேரத்துக்கும் மேலாக நின்று கொண்டிருக்கிறார்கள். எங்கேயோ ஓர் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அவரது சித்தப்பா பையன் கடந்த வருடம் பதினேழு லட்ச ரூபாய் கொடுத்து வேலை வாங்கியது வரைக்கும் கதை கதையாகச் சொன்னார். தீபாவளியை முடித்துவிட்டு வந்து சொல்லச் சொல்லியிருக்கிறேன். பதினோரு மணிக்கு அவர் சொன்னது போலவே நல்லதொரு பேருந்து வந்து சேர்ந்தது. ‘அதிசயமா இருக்கு’ என்றேன். ‘எங்களுக்கே அதிசயம்தான்’ என்றவர் நடத்துநரிடம் சொல்லி முன்வரிசையில் இடம் வாங்கிக் கொடுத்துவிட்டார். இத்தகைய வாகனங்களை வைத்துக் கொண்டு, ஊழியர்களைப் பிழிந்து எடுத்து- வழியெங்கும் பதாகைகள்தான். 

மக்கள் சோப்பு அதிகம் பயன்படுத்தியதால் நொய்யலில் நுரை அதிகம் என்று பேசியவர் எங்கள் மாவட்டத்துக்காரர் என்பதில் எனக்கு அலாதி இன்பம். நம்மைச் சுற்றி இத்தனை பெரிய அறிவாளிகள் இருந்தால் நம் அறிவும் தானே வளரும் என்கிற நம்பிக்கைதான். ஆனால் அவர் கொஞ்சம் பரவாயில்லை. அவரது தொகுதில் இவ்வளவு விளம்பரங்கள் இல்லை.  இன்னோர் அமைச்சர் இருக்கிறார். போர்வெல் பம்ப்பைத் திறந்து வைப்பதற்குக் கூட பதாகை வைக்கிறார்கள். இந்த முறை ‘சிசிடிவி கேமராவைத் திறந்து வைக்க வரும் அமைச்சர் அவர்களே வருக’ என்று பதாகையை வைத்திருக்கிறார்கள். பொய்யெல்லாம் சொல்லவில்லை. சத்தியமாகத்தான். சிரிப்பு வருமா? வராதா? கல்வி வள்ளலே என்கிறார்கள். செந்தமிழே என்கிறார்கள். வாழும் மகாத்மாவை விட்டு வைத்திருக்கும் வரைக்கும் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

ஈரலும் சிறுநீரகமும் சீரழிந்து கொண்டிருக்கும் போது முகத்துக்கு க்ரீமும் பவுடரும் பூசுவது மாதிரிதான் இது. ஒவ்வொரு துறையாக சீழ் பிடித்துக் கொண்டிருக்க ப்ளக்ஸ் பலகைகளினாலேயே ஆட்சி நடத்திவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். முடங்கிக் கிடந்தாலும் விளம்பரம் செய்கிறார்கள். இந்தக் கலாச்சாரம் வெகு தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மாவட்டத்துக்கு மாவட்டம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாக் கூட்டங்களைக் கோடிகளில் செலவு செய்து பிரமாண்டமாக்கிக் காட்டுவதை அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சேலம், கருப்பூரில் நடந்த நூற்றாண்டு விழா நிகழ்வுக்கு மகுடஞ்சாவடி வரைக்கும் கொடிகளைக் கட்டியிருந்தார்கள். இரண்டு ஊர்களுக்கும் எவ்வளவு தூரம் என்று கூகிளைக் கேட்டால் சொல்லிவிடும். ஜெயலலிதா இருந்தவரையில் அமைச்சர்கள் அமுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அது எவ்வளவு நல்லது என்று இப்பொழுதுதான் புரிகிறது. தான் மிகச் சாதாரணமாகச் சுற்றிக் கொண்டிருந்த அதே சாலைகளில் சைரன் ஒலிக்க பத்து பதினைந்து வண்டிகளில் பவனி வருகிறார்கள். கெத்து காட்டுகிறார்களாம். அடங்கொக்கமக்கா என்றிருக்கிறது. 

தொகுதிக்கு ஒரு அரசுக் கல்லூரி தொடங்கிவிடுகிறார்கள். இடம்  கூட ஒதுக்கீடு செய்வதில்லை. கட்டிடம் எதுவுமில்லை. ஏதேனும் பள்ளியில் இரண்டு அறைகளைப் பிடித்து ‘இங்கு கல்லூரி செயல்படுகிறது’ என்று அறிவித்துவிடுகிறார்கள். அதற்கு ‘அரசுக் கல்லூரி கொண்டு வந்த கல்விச் செம்மலுக்கு பாராட்டுவிழா’ என்று விளம்பரப்பவுடர் பூசிவிடுகிறார்கள். வடிவேலு கிணறைக் காணாமல் தேடுவது போல கல்லூரியைத் தேட வேண்டியிருக்கிறது. ராமஜெயம் கொலையாளிகளைப் பற்றித் துப்புக் கொடுத்தால் இரண்டு லட்ச ரூபாய் சன்மானம் அளிக்கிறார்களாம். அதே போல ‘இந்தந்த ஊர்களில் அரசுக் கல்லூரிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும்’ என்று அறிவித்தால் புண்ணியமாகப் போகும்.

ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், வருவாய்த்துறை, மின்வாரியத்தைச் சார்ந்தவர்கள் என்று யாரிடம் வேண்டுமானாலும் பேசிப் பார்க்கலாம். கண்ணீர் விடாத குறைதான். இதையெல்லாம் பேசினால் தேவையில்லாத பகைமைதான். ஏற்கனவே யாரோ ஒரு ஸ்லீப்பர் செல் போட்டுக் கொடுத்துவிடுகிறது. என்னவோ செய்துவிட்டுப் போகட்டும் என்று அமைதியாக இருந்து கொள்ள வேண்டும். சமீபமாக முதலும் இரண்டும் அடித்துக் கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் பிட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள். மாகாளியம்மன் காத்து அருளட்டும்.

10 எதிர் சப்தங்கள்:

Selvaraj said...

“ஈரலும் சிறுநீரகமும் சீரழிந்து கொண்டிருக்கும் போது முகத்துக்கு க்ரீமும் பவுடரும் பூசுவது மாதிரிதான் இது” கோபமும் வேதனையும் ஒருங்கே கலந்த வார்த்தைகள்.தமிழக அரசின் செயல்பாடுகளை ஒரு வரியில் சொல்லிவிட்டீர்கள்.

எங்கள் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக ஓடும் பேருந்துகளை பார்த்தீர்களானால் தமிழ்நாட்டில் ஓடும் வேறு எல்லா பேருந்துகளும் சொகுசு பேருந்து என்று நினைக்க தோன்றும் ம்ம்ம் என்ன செய்ய எங்கள் மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த அமைச்சர்களையும் கட்சிக்காரர்களையும் எப்படி வைக்கவேண்டுமோ அப்படித்தானே வைத்திருந்திருக்கிறார் இல்லையென்றால் 'எம்ஜிஆர் " ஆன்மா பேசியது என்று சொல்லி ஜெயலலிதா அவர்களையே பதவியை விட்டு தூக்கி எறிந்தாலும் எறிந்திருப்பார்கள்.

கண்ணன் கரிகாலன் said...

காமராசர் காலம் வரை நம் தமிழக அரசியலும் எளிமையாகவே இருந்தது. இது போன்ற அரசியல் ஆடம்பரங்களை ஆரம்பித்து வைத்து இன்றைய நிலைக்கு வித்திட்டவர் 5முறை முதல்வர் பதவியை வகித்த கலைஞரே.
குறுநில மன்னர்கள் போல ஆடம்பரங்களும் அடித்துப் பிடுங்கும் அமைச்சர்களும் திமுக ஆட்சியில் இதைவிட அதிகமாக அல்லவா இருந்தது.

அடுத்த ஆட்சி வந்தால் தமிழ்நாட்டு அரசியல் நிலை உடனே மாறிவிடும் என்பது கனவே.

அன்பே சிவம் said...

வாராது வந்த மாமணிகள் வந்ததால்தான், வறண்டு கிடந்த பாலாற்றில் வெள்ளம் கரை புரளுது. இதக்காணப் பொறுக்கலையா?. உமக்கு.

கண்ணன் கரிகாலன் said...

காமராசர் காலம் வரை நம் தமிழக அரசியலும் எளிமையாகவே இருந்தது. இது போன்ற அரசியல் ஆடம்பரங்களை ஆரம்பித்து வைத்து இன்றைய நிலைக்கு வித்திட்டவர் 5முறை முதல்வர் பதவியை வகித்த கலைஞரே.
குறுநில மன்னர்கள் போல ஆடம்பரங்களும் அடித்துப் பிடுங்கும் அமைச்சர்களும் திமுக ஆட்சியில் இதைவிட அதிகமாக அல்லவா இருந்தது.

அடுத்த ஆட்சி வந்தால் தமிழ்நாட்டு அரசியல் நிலை உடனே மாறிவிடும் என்பது கனவே.

சேக்காளி said...

// யாரோ ஒரு ஸ்லீப்பர் செல் போட்டுக் கொடுத்துவிடுகிறது. //
என்னை(ய) சொல்லலியே.

சேக்காளி said...

//ஈரலும் சிறுநீரகமும் சீரழிந்து கொண்டிருக்கும் போது முகத்துக்கு க்ரீமும் பவுடரும் பூசுவது மாதிரி//
துட்டு இருந்தா(ல்) ஈரலையும், சிறுநீரகத்தையும் மாத்திரலாம், ஆனா மொகத்த மாத்த முடியாது ன்னு
எங்கூரு எம் எல் ஏ சொல்லச் சொன்னாரு.

”தளிர் சுரேஷ்” said...

எத்தனைநாளுக்கு தொடரப்போகிறது இவர்களின் ஆர்பாட்டம்! அதையும் பார்ப்பொம்!இத்தகைய வேட்பாளர்களை தேர்வு செய்த மக்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்!

Anonymous said...

அப்ப ஜெயலலிதா இருந்த வரைக்கும் பஸ்கள் எல்லாம் மிக நன்றாக இருந்தன. இந்த ஒரு வருசத்தில் தான் பஸ்கள் உடைந்து விட்டனவா? இந்த நிலைமைக்கு ஜெவும் மிக முக்கிய காரணம் தான் என்பது தான் நிதர்சனம். அடக்கி வைக்கப் பட்ட அல்லக் கைகள் இப்ப ஆட்டம் போடுவது இயற்கையான ஒன்றுதான்! ஜெவின் அடிமை ஆட்சியின் அடுத்த கட்டம் தான் இது!

கொமுரு said...

மொத்தமாக 22000 பஸ்கள் உள்ளதாம் இதில் 17000 பஸ்கள் ,(அதாவது 6 லட்சம் கி.மீ அல்லது 6 வருடம் தாண்டினால் ஒரு பஸ் தனது தகுதியை இழந்து விடும் என்பது மோட்டார் விதி )தனது தகுதியை இழந்து உள்ளதாக படித்தேன். இது உண்மையா பொய்யா என்பதை தகவல்கள் அறிந்து சொன்னால் நல்லது நமது தலையெழுத்து என்ன செய்வது?

சேக்காளி said...

தளிர் சுரேஷ் சொன்னதை முழுக்க முழுக்க ஆதரிக்கிறேன்.