Oct 5, 2017

குவிப்பு

நகைச்சுவைக்காகச் சொல்வார்கள். பெங்களூரில் ஒரு கல்லை வீசுங்கள். அது ஒன்று நாய் மீது விழும் அல்லது சாப்ட்வேர்காரன் மீது விழும். அத்தனை நாய்களும் மென்பொருள் ஆட்களும் வசிக்கிறார்கள். பதினைந்து கிலோமீட்டர் தொலைவைக் கடக்க ஒன்றரை மணி நேரம் பிடிக்கிறது. அதுவும் மழை பெய்துவிட்டால் கேட்கவே வேண்டியதில்லை. ‘இந்த ஊர்ல வந்து சிக்கிட்டோமே’ என்றிருக்கும். பெங்களூரு மட்டும்தானா? ஜனநெருக்கம், வாகனப் பெருக்கம் என்று பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. 

சென்னையும் மும்பையும் கூட அப்படித்தான். புகை, இரைச்சல், அவசரம், அதீதமான செலவு என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்குச் சென்றுவிட வேண்டும். இவற்றுக்குள் சிக்கி நாம் கசங்கிப் போனால் தொலைகிறது. நமக்குப் பிறந்ததைத் தவிர குழந்தைகள் வேறு என்ன பாவம் செய்தார்கள்? ஊர் மாறிவிடலாம் என்றால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே கோயமுத்தூர் பக்கம் போய்விடலாம் என்று வறட்டுத்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். அங்கு நிறுவனங்கள் வெகு குறைவு. எனக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தில் வேலை இல்லை. ‘புதுசுன்னாலும் பரவாயில்ல..படிச்சுக்கிறேன்’ என்று சொல்வதற்கும் வாய்ப்பு எதுவும் உருவாகவில்லை. எனக்கு மட்டுமில்லை- பல்லாயிரக்கணக்கானவர்களை சுட்டிக்காட்ட முடியும். 

வாய்ப்புகளை பரவலாக்கினால்தான் வளர்ச்சி பரவலாகும். நானும் நீங்களும் நினைத்தால் துரும்பு கூட அசையாது. அரசாங்கம் நினைக்க வேண்டும். கோவையில் நான்கைந்து பெரு நிறுவனங்கள், மதுரையில் நான்கைந்து, போலவே திருச்சியில் இன்னும் சில எனப் பரவலாக்கினால் எதற்கு எல்லோரும் சென்னையிலும் பெங்களூரிலுமே குவியப் போகிறார்கள்? கரூரைச் சார்ந்தவன் திருச்சியிலும், தேனிக்காரன் மதுரையிலும், ஈரோட்டுக்காரன் கோவையிலுமே இருந்துவிடப் போகிறான். 

தொலைநோக்குடன் கூடிய அமைச்சரும் முதலமைச்சரும் தேவையாக இருக்கிறார்கள். நிறுவனங்களை அழைத்துப் பேசி ‘ஏம்ப்பா..அந்த ஊரில் ஒரு கிளையை ஆரம்பிங்களே...உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?’ என்று கேட்பதற்கு மனமும் அறிவும் இருக்கிற ஆட்சியாளர்கள் வேண்டும்.‘அந்த ஊர்களில் வசதி வாய்ப்புகள் இல்லை’ என்று நிறுவனங்கள் சொல்லக் கூடும். என்ன பெரிய வசதி? இண்டர்நெட்தான் பிரச்சினை. தடையில்லாத மின்சாரம், வேகமான இணைய வசதி என்பவை அடிப்படையான தேவைகள். சாலை வசதிகள் நன்றாகவே இருக்கின்றன. கோவையிலும் மதுரையிலும் விமானப் போக்குவரத்தும் இருக்கின்றன. அவர்கள் கேட்கும் அடிப்படையான வசதிகளைச் செய்து கொடுத்தால் ‘தகுதியான ஆட்கள் சிக்குவதில்லை’ என்பார்கள். பெங்களூரிலும் சென்னையிலும் இருப்பவர்கள் வந்தாலே போதும். இது சாத்தியமேயில்லாத செயல் இல்லை. 

நிறுவனங்களுக்கும் கூட பரவலாக்கல் என்பது வசதிதான். செலவு மிச்சமாகும். பெங்களூரில் கொடுக்க வேண்டிய வாடகையில் பாதியைக் கொடுத்தால் போதும்.

ஒவ்வொரு நகரத்திலும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி வீணடிக்கப்படுகிற மனித நேரங்கள் (Man-hours) மட்டுமே கோடிக்கணக்கான மணி நேரங்களைத் தாண்டும். ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டிச் செல்வது போலச் சென்று அலுவலகத்தில் அமர்ந்தால் அந்தக் களைப்பு தீரவே அரை மணி நேரமாகிறது. அதே கடல்களையும் மலைகளையும் தாண்டி வீடு திரும்பினால் அடித்துப் போட்ட களைப்பு. சிக்னல்களில் வீணடிக்கப்படுகிற பெட்ரோலும் டீசலும் எத்தனை லட்சம் லிட்டர்கள்? மெட்ரோ அமைக்கவும், சாலைகளை விரிவாக்கவும் வெட்டப்படுகின்ற மரங்களின் எண்ணிக்கை, எகிறும் நிலத்தின் விலை, நெரிசலின் காரணமாக பெருகுகிற குற்றச் செயல்கள்- பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

நிறுவனத்துக்குள் வேலை செய்கிறவர்களை விடுங்கள். ஒரு நிறுவனம் தொடங்கப்படுமானால் பரமாரிப்பு, பாதுகாப்பு, வாகன ஓட்டிகள், கேண்டீன்காரர்கள், சுற்றிலும் கடை நடத்துகிறவர்கள் என்று எத்தனை ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்?

எல்லோரையும் ஒரே நகரத்திலேயே குவிக்காமல் பல ஊர்களையும் வளர்ச்சியடையச் செய்யலாம். இப்பொழுது நாம் சந்தித்துக் கொண்டிருப்பது வளர்ச்சியில்லை. வீக்கம். பரவலாக்கம் என்பதுதான் சகல தரப்பினருக்கும் சரியானது. சுற்றுச்சூழல், குடிநீர் பிரச்சினை, ஒரே நகரத்துக்கு அதிக மின்சாரம் தர வேண்டிய அழுத்தம் என பல பிரச்சினைகளுக்கும் இதுதான் தீர்வு. மனித நெருக்கம் அதிகமாகும் போது மனிதர்களின் உளவியல் மாற்றங்கள் கணிக்க முடியாதது. வன்மம், கோபம், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என கண்களுக்குத் தெரியாத பிரச்சினைகளையெல்லாம் ஊதிப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறோம்.

ஐடி நிறுவனங்கள் என்று மட்டுமில்லை- ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் சென்னைக்கு அருகில் இருப்பதற்கான காரணம் என துறைமுகத்தைச் சொல்வார்கள். தூத்துகுடி மாதிரியான நகரத்தை மாற்றி யோசிக்கலாம். ஒரு நகரத்தில் இவ்வளவு தொழிற்சாலைகள்தான் இருக்க வேண்டும் என்கிற கணக்கு வைத்துக் கொண்டால் போதும். எண்ணிக்கை எல்லையைத் தொடும் போது இன்னொரு இடத்தைக் காட்டினால் எந்த நகரமும் நசுங்கிச் சின்னாபின்னமாகாது. 

அரசாங்கங்கள்தான் மாறிக் கொண்டேயிருக்கின்றன. தொழில் பரவலாக்கம், நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை எந்த அரசாங்கமும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

அப்படியே அரசாங்கம் தொடங்கினாலும் உள்ளூர் பெரிய மனிதர்கள் செய்கிற அழிச்சாட்டியங்கள் இருக்கின்றனவே! கோவையில் செல்வாக்கு மிக்க ஒரு குடும்பம் தடை போட்டதாகச் சொல்வார்கள். ‘எங்கூர்ல ஐடி பார்க்குன்னு வந்துச்சுன்னா அது நாங்கதான் கட்டோணும்’ என்றார்களாம். அது இன்னொரு சாதிப்பிரிவினருக்கு எரிச்சல் தர இவர்களின் சண்டைக் கச்சேரியில் கோயமுத்தூரை கைவிட்டுவிட்டார்கள். பாஷ் மற்றும் சிடிஎஸ் தவிர பெரிய நிறுவனங்கள் எதுவுமில்லை. விப்ரோ துக்கினியூண்டு செயல்படுகிறது. பெரோட் என்றொரு நிறுவனம் இருந்தது. இப்பொழுது கடையை வைத்திருக்கிறார்களா அல்லது மூடிவிட்டார்களா என்று தெரியவில்லை. மதுரையில் ஐடி பார்க் ஆரம்பித்துவிடப் போவதாகச் சொன்னார்கள். அரசியல் காரணங்களால் விட்டுவிட்டார்கள். திருச்சியில் ஏன் தொடங்கவில்லை என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மட்டுமில்லை. கர்நாடகாவிலும் பெங்களூரில் மட்டும்தான் வீக்கம். மைசூரில் பெரிய அளவில் விரிவாக்கம் பெறவில்லை. அந்த விதத்தில் கேரளா பரவாயில்லை. திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய ஊர்களில் ஐடி பார்க்குகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படியேதான் போய்க் கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. தி இந்து, விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகைய விவாதங்களை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றால் சிறப்பாக இருக்கும். தொலைக்காட்சிகளிலும் இது குறித்தல்லாம் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் இதற்கான முன்னெடுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்கிற அழுத்தத்தைத் உருவாக்கினால் அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நல்ல காரியமாக அது இருக்கும். இல்லையென்றால் விழி பிதுங்கித்தான் போவோம்.

9 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//தொலைநோக்குடன் கூடிய அமைச்சரும் முதலமைச்சரும் தேவையாக இருக்கிறார்கள்//
சுற்றியிருப்பவர்கள் அந்த தேவை நிறைவேறாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.

Anonymous said...

Thought provoking...it would be nice to have IT parks in Trichy, Covai, Madurai so that people like me can move to native place :)

இரா.கதிர்வேல் said...

சார் இந்த கட்டுரையில் நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும்போது இதெல்லாம் நடந்துவிடக்கூடாதா என மனதில் ஆசைகள் எழுகிறது. ஆனால் எப்போது சாத்தியமென்று தெரியவில்லை.

கோயம்பேடிலிருந்து - வடபழனி - அசோக்பில்லர்- கிண்டி வழியாக வேளச்சேரி செல்வதற்கு 1.5 மணி நேரம் ஆகிறது சார். கொடூரமான போக்குவரத்து நெரிசல். மழை பெய்துவிட்டால் சொல்லவே வேண்டாம் மூன்று மணி நேரம் கூட ஆகும்.

ஆசையாக இருக்கிறது சார். IT companies திருச்சியிலும், மதுரையில் வந்துவிட்டால் என்னைப்போன்று தஞ்சாவூர் மாவட்டக்காரர்கள் திருச்சிக்கு வேலைக்குச் செல்லலாம் சார்.

கமல்ஹாசன் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது போல் புதிய தமிழ்நாட்டிலாவது நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் நிறைவேறுமானு பார்க்கலாம்.

காலத்திற்கேற்ப சரியான கட்டுரையை கச்சிதமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

Jaypon , Canada said...

ஆஹா கட்டுரையை படித்ததும் எனக்கு நப்பாசை. இது சாத்தியப்பட்டால் நானும் ஓடிவந்திடுவேன் கோவைக்கு. நம்இமூர் மண்ணுக்கு ஈடாகுமா எதுவும்? 40கிமீ வெறும் 25 நிமிடத்தில் கடந்திடுவேன் காரில். டிராஃபிக் எதாவது விபத்தினால் என்றால் 40நிமிடம்.

யுவராணி தமிழரசன் said...

மிகவும் எதார்த்தமான பதிவு சார். பலருடைய கனவும் கூட. பலர் குடும்பத்தை நம்ம ஊரில் விட்டுவிட்டு அங்கு தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மாறுதல் நிச்சயம் வேண்டும்.

Asok said...

எல்லா ஊர்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே போகிறது, திருச்சியில் 15 வருடத்துக்கு முன்பு, போக்குவரத்து நெரிசலே இல்லை, இப்போது நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. அதனால உள்ளூருக்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துவிட வேண்டாம். இதற்கு நாம் சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகளை பார்க்க வேண்டும். எல்லோரும் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் பொது போக்குவரத்தை அதிகப்படுத்தி, மற்ற வாகனங்களின் வரியை அதிகப்படுத்த வேண்டும். அதற்காக பயண நேரம் குறைந்து விடும் என்று நினைக்க வேண்டாம், ஆனால் பயணம் சுமையாக இருக்காது.

Anonymous said...

தொழில் மற்றும் அரசு சேவைப் பரவலாக்கத்தை நாம் தமிழர் ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் முதன்மைப்படுத்தியுள்ளார்கள்.

Fazel Ismail said...

திருநெல்வேலி கங்கைகொண்டான் IT பார்க் கிடப்பிலேயே இருக்கிறது. 25 ஏக்கர் நிலத்தில் SYNTEL என்கிற IT கம்பெனி 2013ல் அடிக்கல் நாட்டியது. இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை அல்லது வரவிடப்படவில்லை. நிர்வாக சீர்கேட்டினால் நல்ல வாய்ப்புகள் இழக்கப்படுகிறது.

https://timesofindia.indiatimes.com/city/madurai/tied-in-red-tape-graft-us-tech-majors-2-5-lakh-sqft-tirunelveli-project-yet-to-boot/articleshow/58588585.cms

Anonymous said...

மணி அண்ணா, எங்க கம்பெனிக்கு எங்க ஊர் பக்கம் கிளை இருக்கு. அங்கேயே வேலை பாக்குறேங்கிறது சந்தோசம். #zoho

https://zohoworkinsights.com/building-business-software-from-bang-in-the-middle-of-nowhere-3d56b2b1dcba

https://www.forbes.com/forbes/welcome/?toURL=https://www.forbes.com/sites/anuraghunathan/2017/02/28/from-silion-valley-to-sylvan-tenkasi-cloud-company-zoho-takes-high-tech-jobs-to-indian-hinterlands/

அனிபா.