Oct 23, 2017

குழந்தைகளைத் திட்டுங்கள்

‘குழந்தையைத் திட்டவே மாட்டேன்’ என்று சொல்கிறவரா நீங்கள்? அப்படியெனில் நீங்கள்தான் வாசிக்க வேண்டும்.

சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே ஓர் உணவகம் இருக்கிறது. ஸ்ரீதர் வாண்டையாரின் உணவகம். ‘அங்க வர முடியுமா?’ என்றார் சிதம்பரத்து நண்பர். இப்பொழுது ஐரோப்பிய தேசமொன்றில் மனோவியல் ஆலோசகராக இருக்கிறார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிக்கட்டை. ‘நீங்க பெங்களூரு திரும்பும் போது தகவல் சொல்லுங்க’ என்று செய்தி அனுப்பியிருந்தார். குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். பேருந்து நிலையத்தில் வந்து காத்திருந்தார். இரவு எட்டு மணிவாக்கில் சந்தித்துப் பேசினோம். கையில் கத்தையாக செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அந்தக் கோப்பினைக் கையில் கொடுத்தார். குழந்தைகளின் தற்கொலை பற்றிய செய்தித் துண்டுகள் அவை.

எப்பொழுதாவது இந்தியா வந்து போகிறார். ‘தற்கால இந்தியக் குழந்தைகளின் மனநிலை’ குறித்து ஓர் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறாராம். அதற்கு தோதாகக் கடந்த சில நாட்களாகச் சேகரித்த செய்திகள் அவை. நீலத் திமிங்கல விளையாட்டுத் தற்கொலைகளை அவர் பொருட்படுத்தவில்லை. ‘அது உங்களைத் தற்கொலை செய்ய வைக்கத் திட்டமிட்டு, வற்புறுத்தித் தூண்டுகிறது’ என்று சொல்லி அவற்றைத் தவிர்த்திருக்கிறார். மிகச் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஏன் தற்கொலை முடிவெடுக்கிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பான செய்தி ஒன்றைக் காட்டினார். டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வுக்காக தெருவைச் சுத்தம் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான். பனிரெண்டு வயதுப் பையன். ‘ஏண்டா உனக்கு ஏதாச்சும் காய்ச்சல் வந்துட்டா என்னடா பண்ணுறது?’ என்று ஏதோ சொல்லி அம்மா திட்ட அறைக்குள் தூக்குப் போட்டுக் கொண்டான்.

இப்படி பல செய்திகள் இருந்தன. மனம் பாரமாக இருந்தது. அவற்றை மூடி வைத்துவிட்டு சில வினாடிகள் அமர்ந்திருந்தேன்.

‘என்ன சொல்லுறீங்க?’ என்று கேட்டார். அமைதியாக இருந்தேன். மிக நுணுக்கமான விஷயம் இது. குழந்தைகளின் தற்கொலை என்பது அங்குமிங்குமாக கண்களில் பட்டிருக்கும். பொருட்படுத்தியதாக நினைவில்லை.

பதினைந்து முதல் இருபத்தொன்பது வயது வரையிலானவர்கள் இந்தியாவில்தான் மிக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். தண்ணீரைக் குடித்துவிட்டு ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு தடிச்ச தோல் இல்லை’ என்றார். எதைச் சொன்னாலும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பெரியவர்கள்தான் முக்கியக் காரணம் என்றார். வாஸ்தவமான சொல். குழந்தைகளைத் திட்டுவதில்லை என்பதை பல பெற்றோர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. நானும் கூட அப்படித்தான். ஏதேனும் ஒரு காரணத்துக்காகத் திட்டும் போது- திட்டக் கூட வேண்டியதில்லை- கோமாளி, முட்டாள் என்று ஏதேனும் கேளிச் சொல்லைப் பயன்படுத்தினால் கூட பொலபொலவென்று கண்ணீர் வந்துவிடும் மகனுக்கு. 

‘இவன் என்ன இப்படி இருக்கான்?’ என்று அவ்வப்போது யோசித்திருக்கிறேன். ஆனால் தீர்வு குறித்துச் சிந்தித்ததில்லை.

மனோவியல் நிபுணர் ‘உங்க தலைமுறையில் இப்படி இருந்தீங்களா?’ என்றார். இல்லை. அம்மா கடுமையாகத் திட்டுவார். ஆசிரியர் அடிப்பார். அப்பா எப்பொழுதாவதுதான் அடிப்பார் ஆனால் செமத்தியான வணக்காக இருக்கும். அடி வாங்குவதும் வசைச்சொற்களைக் கேட்பதும் சலித்துப் போய்விடும். எப்படி ஏய்ப்பது, அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி, வசவுக்கு வாய்தா வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்தெல்லாம்தான் மனம் கணக்குப் போடும். Too sensitive என்றெல்லாம் இருந்ததேயில்லை. உண்மையாக அழுததைக் காட்டிலும் அடி வாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக பாவனையாக அழுததுதான் அதிகம்.

இன்றைய குழந்தைகள் அப்படியில்லை. மனிதர்களுடன் உரையாடுவதை விடவும் திரைகளுடன்தான் அதிகம் உரையாடுகிறார்கள். கணினித்திரை, அலைபேசித் திரை, தொலைக்காட்சித்திரை எதுவும் குழந்தைகளுக்கு மனிதர்களின் மனங்களைச் சொல்லித் தருவதில்லை. அவை குழந்தைகளை மேலும் மேலும் ரத்தமும் சதையுமான மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன. சக குழந்தைகளுடன் விளையாடுவதும் சண்டையிடுவதும் வெகு அரிது. பள்ளிகளிலும் கண்டிப்புகள் இருப்பதில்லை. அம்மா அப்பாவும் செல்லம் என்ற பெயரிலும் தடித்த சொற்களைப் பயன்படுத்துவதில்லை.

நண்பர், தனது செய்திச் சேகரிப்புகளைச் சுட்டிக் காட்டி ‘இந்த மொத்தச் செய்திகளுக்கும் ஆதாரப்புள்ளின்னு இதைத்தான் சொல்வேன்’ என்றார். அவர் மிக இலாகவமாகவும் நிதானமாகவும் பேசினார். என்ன இருந்தாலும் மனோவியல் நிபுணர். அவர் பேசுவதை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. Too sensitive to everything என்பது நல்லதில்லை. கோபமும் வசவும் மனிதர்களுக்குரிய குணங்கள். அதைக் குறைந்தபட்ச அளவிலாவது குழந்தைகளிடம் காட்டுவதும், அவர்களைத் திட்டுவதும், வசவுகளுக்கு அவர்களைப் பழக்குவதும் தவறில்லை என்பது அவரது வாதம். வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் போது ஒரு முறை அழைத்துப் பார்த்தால் குழந்தைகளின் கவனம் நம் பக்கம் திரும்பவில்லையெனில் ‘டேய்’ என்று சற்றே அதட்டுவதில் தவறொன்றுமில்லை. நமக்கே அது கடினமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கும் அந்த அதட்டலை ஏற்றுக் கொள்வது கடினம்தான். முதல் ஒன்றிரண்டு முறை அழுவார்கள். சுணங்குவார்கள். அது பிரச்சினையில்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை அவர்களுக்குப் பழகிவிடும். நம்முடைய கோபத்தை நாம் மறைத்துக் கொண்டு குழந்தைகளிடம் எப்பொழுதுமே காட்டாமல் இருந்துவிட்டு நம்மையும் மீறி ஏதேனும் தருணத்தில் கொட்டிவிடும் போது அந்தப் பிஞ்சுகளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.

பதின்பருவத்துக் குழந்தைகள்தான்  (Teen age) தற்கொலை என்ற உச்சகட்ட முடிவுகளை அதிகம் எடுக்கிறார்கள். அவர்களது வயது அப்படி. தம்மைப் பெரியவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். சென்சிடிவ்வாக வளர்ந்து நிற்கும் அவர்களால் அம்மாவும் அப்பாவும் திட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவசரப்பட்டுவிடுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே ‘அம்மா திட்டுவாங்க’ ‘அப்பா திட்டுவாங்க’ என்ற மனநிலையை உருவாக்காமல் விட்டுவிடுவது பெற்றோரின் முக்கியமான தவறாக இருக்கிறது. அப்படிக் குழந்தைகளை உருவாக்குவதும் கூட ஒரு வகையிலான அவர்களின் மன அழுத்த மேலாண்மைதான். 

‘யோசிச்சுப் பாருங்க’ என்றார். 

அவர் சுட்டிக்காட்டியது மிக முக்கியமான விஷயமாகத் தெரிந்தது. இப்படியொரு கோணத்தில் யோசித்ததில்லை. உணவை முடித்துவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகும் இதுதான் மனதுக்குள் உலாத்திக் கொண்டிருந்தது. 

நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

6 எதிர் சப்தங்கள்:

பத்மநாபன் said...

கண்டிப்பதற்கும் செல்லம் கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் பெரும்பான்மையானோர் இருக்கிறார்கள். உங்கள் கட்டுரை இதையும் அலசியிருக்கலாம்... இது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

ராமுடு said...

True Mani.. When we tease kids (for fun) - some dont try to understand the meaning / some get hurt easily.. In our days, we used to return with another tease. After reading this post, punishing kids on & off for mistakes is not a bad thing. We are doing that.. But many parents trie to show off.

RG said...

சரியான தருணத்தில் விவாதிக்க வேண்டிய விடயத்தினை கையில் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். இது குறித்த மேலும் பல கோணங்களில் அலசல்களையும் இத் துறை சார்ந்த அறிஞர்களின் கருத்துக்களையும் அவ்வப்போது பதிவிடுங்கள்.

Kannan said...

உங்களின் சில கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அம்மாதிரி கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

சேக்காளி said...

Kannan said
//உங்களின் சில கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்//
ஏம்ய்யா ஏன்?.நல்லாத்தானே போய்ட்டு இருக்கு.
எனக்கு இங்குலீசுல எல்லாம் கமெண்டு எழுத வராது.

vic said...

கண்ணா தமிழ்ல வா.மணி முகுந்த் அம்மா ன்னு சிலபேர்தான் இப்பிடி எழுதுராங்க நீங்க வேணும்னா அனுமதி வாங்கி ஆங்கிலத்தில பிரஞ்சில டொச்சில எனக்காக டச்சில எல்லாம் மொழிபெயர்த்து போடுங்க