சனிக்கிழமை ஒரே நாள்தான் விடுமுறை. அதுவும் கூட விடுமுறை இல்லை. சொல்லாமல் அடித்துக் கொண்ட கட். காரைக்கால் பெங்களூரிலிருந்து நானூறு கிலோமீட்டரைத் தாண்டும். போகும் போது பாண்டிச்சேரி- சிதம்பரம்-காரைக்கால் என்று சென்று சேர்ந்திருந்தேன். காரைக்காலில் அரசலாறு என்றொரு ஆறு ஓடுகிறது. அதன் கரையோரம் ஒரு பொதுப்பணித்துறையின் விருந்தினர் விடுதி. அங்கு அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். இரவுகளில் பயணம் செய்தால் நம்மையும் மீறிய ஒரு அசதி இருக்கும். தண்ணீரைத் திருகி விட்டு தலை மீது ஊற்றும்படியாக ஐந்து நிமிடங்கள் நின்றுவிட வேண்டும். அது புத்துணர்ச்சியைக் கொடுத்துவிடும். குளித்து அறையைப் பூட்டி சாவியைத் திரும்பக் கொடுத்துவிட்டு அரசலாறு வழியாகவே நடந்தால் நதி கடலைச் சேரும் இடம் வரைக்கும் செல்லலாம். அப்படித்தான் சுற்றிக் கொண்டிருந்தேன்.
பேராசிரியர் ராதாகிருஷ்ணன் கொச்சியிலிருந்து வந்திருந்தார். நாங்கள் இருவரும்தான் பயிற்சியாளர்கள். ராதாகிருஷ்ணன் மென்பொருள் துறையில் பணியாற்றியவர். இப்பொழுது கொச்சியிலிருக்கும் மேலாண்மைக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்திருக்கிறார். ஒவ்வொரு பயிற்சிக்கும் கைக்காசைச் செலவு செய்து கொண்டுதான் வருகிறார். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத மனிதர். இப்படியானவர்களே நம்மிடம் வந்து சேர்கிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தாலும் இவர்களையும் சேர்த்து அலைகழிக்கிறோமோ என்று துளி வருத்தமில்லாமல் இல்லை.
சில நூறு வருடங்களுக்கு முன்பாக காரைக்கால் நகரத்தை பிரெஞ்சுக்காரர்கள் விலை கொடுத்து வாங்கி அதைத் தங்களின் ஆளுகையின் கீழாகக் கொண்டு வந்துவிட்டார்கள். இன்னமும் நகரத்தில் பழமை அப்படியேதான் இருக்கிறது. பழங்கால ஓட்டுவீடுகள், பெரும் தூண்கள் என்று அழியாமல் காத்திருக்கிறார்கள். புதுச்சேரி அரசாங்கத்தின் ஸ்கார்ப்பியோ ஒன்றை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அரசாங்க கல்வியியல் கல்லூரியில்- பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி- செய்திருந்தார்கள்.
கடந்த சில மாதங்களாகவே இந்நிகழ்வுக்கான திட்டமிடல்களைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்த வருடத்தின் முதல் நிகழ்வு இது. சரியாக அமைந்துவிட்டால் அடுத்தடுத்து பல பள்ளிகளில் நடத்திவிட முடியும். ஆட்சியர் அட்டகாசமான மனிதர். ‘இதை அவர்கிட்ட சொல்லிடுங்க; அதை இவர்கிட்ட சொல்லிடுங்க’ என்றெல்லாம் கை நீட்டவில்லை. ஒவ்வொரு முறையும் அவரிடம் நேரடியாகப் பேச முடியும். காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தார்கள். சற்றேறக்குறைய எண்பது மாணவர்கள். ‘நன்றாகப் படிக்கும் மாணவர்கள், கொஞ்சம் வீக்..பற்றவைத்தால் பிடித்துக் கொள்வான், தான் கற்றதை பிற மாணவர்களுக்குச் சொல்லித் தரக் கூடிய மாணவ/மாணவி’ என்ற கலவையில் தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தோம். புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் துணை இயக்குநர் அதையெல்லாம் பொறுப்பெடுத்துச் செய்து கொண்டிருந்தார்.
காலையில் ஒன்பதரை மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்கினோம். மாணவர்களைக் கலந்து அமரச் செய்வது முதற்காரியம். ஒரு வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் ஒரே பள்ளி மாணவர்களாக இருக்கக் கூடாது. அவர்கள் கலந்து அமர்ந்த பிறகு ஒரு விளையாட்டு. Desert Survival Program என்று பெயர். ஒரு பாலைவனம். அங்கேயொரு விபத்து நிகழ்கிறது. கையில் பதினைந்து பொருட்கள் இருக்கின்றன. தம்மைக் காப்பாற்ற ஒரு குழு வந்து கொண்டிருக்கிறது. அதுவரைக்கும் உயிர் பிழைக்க எது மிக முக்கியமான பொருள், எது முக்கியமற்ற பொருள் என்று வகைமைப்படுத்த வேண்டும். இதை ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாகச் செய்ய வேண்டும். இதே வகைமைப்படுத்தலை மதியம் உணவுக்குப் பிறகு அணியாகச் சேர்ந்து செய்ய வேண்டும். இரண்டிலும் வித்தியாசம் இருக்கும். ஒருவன் தலைவனாக உருவாகியிருப்பான். அவன் சொன்னதைத்தான் பிற நால்வரும் செய்திருப்பார்கள். ‘ஏன் அவன் தலைவனாக உருவெடுக்கிறான்’ என்று புரிந்து கொள்ளும்படியாக பேராசிரியர் பேசுவார். Leadership quality என்பது பற்றியும் அதற்குத் தேவையான Values, Passion என்பது பற்றியெல்லாம் விரிவாகச் சொல்லித் தருவது ஒரு பகுதி.
அதன் பிறகு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிக் கூடம், இயற்கை, நாடு ஆகியவற்றிடமிருந்து பிறந்ததிலிருந்து நாம் என்ன பெற்றுக் கொண்டோம், இதுவரை என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம் என்பது இன்னொரு பகுதி. இது ஒரு வகையிலான சுய அறிதல் (Self realization). மாணவர்கள் மேடையில் வந்து பேசினார்கள். ஒரு பெண் தனது அம்மா அப்பாவிடம் அன்பையும் உயிரையும் பெற்றுக் கொண்டதாக எழுதியிருந்தாள். அவர்களுக்கு எதையுமே திருப்பிக் கொடுக்கவில்லை என்று ஒரு கோடிட்டிருந்தாள். ‘ஏம்மா?’ என்று கேட்ட போது குழந்தையாக இருக்கும் போதே இருவரும் இறந்துவிட்டதாகச் சொன்னாள். ராதாகிருஷ்ணன் பெற்றோர்களின் சிறப்பைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவள் உடைந்து அழுது கொண்டிருந்தாள். விதவிதமான மாணவர்கள். விதவிதமான உணர்வுகள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஆட்சியரிடம் ‘கருத்தரங்கில் ஒரு மணி நேரம் நீங்க பயிற்சியளிக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தேன். பதினேழு வயதில் இருக்கும் மாணவர்களுக்கு ஆட்சியர் நேரடியாகத் தங்களிடம் பேசுகிறார் என்பது மிகப்பெரிய உத்வேகம். ஆட்சியர் கேசவன் மிக எளிய மனிதர். கலெக்டர் அலுவலக ஊழியர்களும் அதைத்தான் சொன்னார்கள். ‘பைக் எடுங்க’ என்று சொல்லி பின்னால் அமர்ந்தபடியே ஊருக்குள் சுற்று வருவாராம். மாணவர்களிடையே மிகச் சாதாரணமாகப் பேசினார். சாத்தான்குளத்துப் பக்கம் கிராமத்துப் பள்ளியில் படித்ததிலிருந்து அங்கேயே பி.எஸ்.சி வரைக்கும் படித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ல் தேர்வாகி நான்கைந்து வருடங்கள் சென்னையில் எந்த இலக்குமில்லாமல் சுற்றிவிட்டு யாரோ ஒருவரின் அறிவுரையின் பேரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார் செய்யத் தொடங்கி ஒரு வருடம் கடுமையான உழைப்புக்குப் பிறகு தேர்வில் வெற்றியடைந்தது பற்றி இயல்பான பேச்சு மொழியில் பேசினார். அவருடன் மாணவர்கள் உரையாடினார்கள். பூஸ்ட் குடித்த உற்சாகம் அவர்களுக்கு. அத்துடன் காலை நேரப் பயிற்சி நிறைவடைந்தது.
மாணவர்கள் அத்தனை பேருக்கும் வடை, பாயசத்துடன் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மதியத்திற்கு மேல் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள், படிப்பதற்கான கால அட்டவணை தயாரித்தல், நேர மேலாண்மை, தேர்வுகளை அணுகும் முறை, தேர்வுகளை எப்படி எழுதுவது என்பதையெல்லாம் இரண்டு மணி நேரங்களுக்கு நான் பேசினேன். இதெல்லாம் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்காத exposure. பயிற்சியளிக்கும் போது நாம் சரியாகத் திட்டமிட்டு அவர்கள் சலிப்படைந்துவிடாமல் சொல்லிக் கொடுத்துவிட்டால் போதும். பிடித்துக் கொள்வார்கள். கடந்த ஆண்டு அனுபவத்திலிருந்து நிறையச் சுட்டிக் காட்ட முடியும். அசாருதீன், பவித்ரா என்று ஜொலித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை அதிகரித்துவிட வேண்டும் என்பதுதான் இலக்கு.
மாணவர்களிடம் கருத்துக்களை எழுதி வாங்கினோம். அவர்களுக்கு மிகப் பிடித்திருந்தது.
பயிற்சி முடித்த பிறகு அந்தக் காலத்து பிரெஞ்சு கட்டிடத்தில் இயங்கும் ஆட்சியரின் அலுவகலத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆட்சியரிடம் பேசிக் கொண்டிருந்தோம். ‘இனி நான் என்ன செய்யணும்?’ என்றார். ‘கொஞ்சம் ஃபாலோ-அப் செஞ்சுக்குங்க சார்..தேவைப்பட்டால் ஜனவரியில் இன்னொரு முறை வருகிறோம்’ என்று சொல்லியிருக்கிறேன். அவர் கட்டாயம் செய்வார். அப்படியான கலெக்டர் அவர். அன்றைய தினம் புதுவை முதல்வர் நாராயணசாமியின் நிகழ்ச்சி ஒன்று காரைக்காலில் நடைபெற்றது. ஆட்சியர் முதல்வரை வரவேற்பதற்குத் அதற்குத் தயாரானார். எங்களை ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளர் பாலு திருநள்ளாறு அழைத்துச் சென்றார். ஸ்பெஷல் தரிசனம். ரஞ்சனி பிரான்ஸில் இருக்கிறார். அவர் தனது தம்பியிடம் சொல்லி நடேசன் கடை அல்வாவும் குளோப்ஜாமூனும் ஒரு பெரிய பெட்டி வாங்கிக் கொடுத்து அனுப்பியிருந்தார். யோகேஷ் மயிலாடுதுறைக்காரர். காலையிலிருந்தே கருத்தரங்கில் இருந்தார். மாலையில் பைக்கில் ஏற்றிக் கொண்டு திருக்கடையூர் வரைக்கும் கொண்டு வந்துவிட்டார். இடையில் தரங்கம்பாடியில் டேனிஷ்கோட்டைக்குச் சென்றோம். அது போர்த்துக்கீசியர்களின் கோட்டை.
திருக்கடையூரிலிருந்து சிதம்பரம் வரைக்கும் ஒரு பேருந்து அங்கேயிருந்து சேலம் வரைக்கும் ஒரு பேருந்து. சேலத்திலிருந்து பெங்களூருவுக்கு இன்னொரு பேருந்து. அலைச்சல்தான். ஆனால் எவ்வளவு பெரிய சந்தோஷமும் திருப்தியும் இது?
11 எதிர் சப்தங்கள்:
Super bro.No words to say.Not only students,We also learned lot of the things from your article. Keep up the good work.
��������������������������������
��������������������������������
Arumai vaalthukal.
வாழ்த்துக்கள் மணி , நாங்கள் படித்த காலத்தில் இப்படியொரு மணி எங்களுக்கு கிடைக்க வில்லையே
உங்கள் பணிகளை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஓய்வின்றி அதிகமாக பயணம் செய்கிறீர்கள் உங்கள் உடல்நலத்திலும் ஒரு கவனம் இருக்கட்டும். வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
இவை போன்ற பயிற்சிகள் எல்லா மாணவர்களுக்கும் கிடைக்க அரசுகள் முயற்சிக்க வேண்டும்.
// பாலு திருநள்ளாறு அழைத்துச் சென்றார். ஸ்பெஷல் தரிசனம். //
உங்க ஸ்பெசல் தரிசனத்துக்கு சனீசுவரன் கிட்ட இருந்து எவ்வளவு கட்டணம் வசூல் பண்ணுனீங்களோ அதுக்கான ரசீதை அனுப்பி வச்சிருமய்யா.
இல்லே ன்னா, "ஏன் டா சேக்காளி! எனக்கு (சனீசு) ரசீது வரலை ங்கறத மணிகிட்ட இன்னும் ஞாபகப் படுத்தல ?" ன்னு என்னை வச்சி செஞ்சிரப் போறாரு.
ரசீதுல ஜிஎஸ்டி எவ்வளவு ன்னு குறிப்பிட மறந்துராதீங்க.
ஓகே வா vic?
இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை அதிகரித்துவிட வேண்டும் என்பதுதான் இலக்கு.
KATTAYAM THIS YEAR THE NOS WILL INCREASE MANY MANY TIMES.
மாணவர்கள் உற்சாகம்.உற்ற துணை YAGA NEENGAL
THANGAL 'KATTRATHAI' SHARE SEYDHA
பேராசிரியர் ராதாகிருஷ்ணன் / ஆட்சியர் கேசவன்
ALL PUT TOGETHER YOU WILL VERY VERY EASILY EXCEED LAST YEARS NO.
நல்லோர் ஆசியுடன் VETTRY PERA மாணவர்கALUKKU வாழ்த்துக்கள்.
IT IS A HAPPY COINCIDENCE THAT THE பயிற்சி பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி- L
NADANTHU ULLADHU.
A GREAT MAN WHO REALLY CARED FOR RURAL CHILDREN'S EDUCATION/UPLIFTMENT.
HIS SOUL WILL ALSO BLESS THE STUDENTS.
WITH BEST WISHES,
ANBUDAN,
M.NAGESWARAN.
ya ya
அருமை. வாழ்த்துக்கள்
Thanks a lot Mani.For conducting this programme in my town for the upliftment of the school children.The only thing i regret was that i was not home during your programme.Else i would had done everything to make this event even better.
Post a Comment